ரஜினி படியளக்கிறார்!
எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. என் நண்பரான நிருபர் நச்சு திடீரென்று வந்து, ‘‘இந்தாப்பா. நான் உன்னிடம் வாங்கின கடன் 500 ரூபாய்’’ என்று சொல்லி ஒரு பளபள நோட்டைக் கொடுத்தான்.
‘‘பணமா? உனக்கு நான் எப்ப கொடுத்தேன்? மறந்தே விட்டது’’ என்றேன்.
‘‘நீ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மூன்று வருஷத்துக்கு முன்னே வாங்கினது. இடையில் நம்ம நிருபர் வேலையில் ஒண்ணும் ‘ஓஹோ’ என்று பணம் பார்க்க முடியவில்லை. இப்பதான் தொழில் சூடுபிடித்து இருக்கிறது.’’
‘‘எப்படியப்பா?’’
‘‘எல்லாம் ரஜினிதான் படியளக்கிறார். சூப்பர் ஸ்டார்தான்...’’
‘‘புரியலையே...’’
‘‘இப்போ ‘சிவாஜி’ பட வேலையில் இறங்கி இருக்கிறார். இல்லையா? பத்திரிகைகளுக்கு எக்ஸ்க்ளூஸிவ் செய்திகள் தந்து நாலு காசு பாக்கறேன்...’’
‘‘அப்பாடி! பெரிய ஆளெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியா? வெரிகுட்!’’
‘‘குட்டும் இல்லை, மட்டும் இல்லை... இதோபார், சில எக்ஸ்க்ளூஸிவ் செய்திகள்...’’ என்று சொல்லி சில கட்டுரைகளைக் கொடுத்தான். ‘‘படிச்சுப் பாரு...’’ என்றான். படிக்கப் படிக்க எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. அவன் தந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
சிவாஜி படத்தில் சிவாஜியாக ரஜினி
சிவாஜியாக ரஜினி நடிக்கும் ஒரு குட்டி மேடை நாடகத்தை சிவாஜி படத்தில் இணைக்க ரகசியத் திட்டம் உள்ளதாம். இதற்கு சிவாஜியின் வம்சத்தினரிடம் அனுமதி பெற மகாராஷ்டிராவுக்கு ராமு, சோமு, குப்பு என்று மூன்று பேர் கொண்ட ஒரு பெரும்படையையே(!) அனுப்பியிருக்கிறார்கள். சிவாஜியின் வம்சத்தினர் அமெரிக்காவில் இருப்பதாகவும் கூறப்படுவதால் அங்கும் ஒருத்தரை அனுப்பக் கூடும்.
ரஜினியின் குழந்தையாக நடிக்க ஒரு அழகான சிறுமியைத் தேர்வு செய்து இருக்கிறார்கள். மூன்றாம் வகுப்பில் படிக்கும் மனஸ்வினியை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்த நம் நிருபரிடம் அவள் எதுவும் கூறமாட்டேன் என்று கூறிவிட்டாள். கதையைப் பற்றியோ அவளுடைய கதாபாத்திரத்தைப் பற்றியோ கூற மறுத்துவிட்டாள். கடைசியில் ஒன்று மட்டும் சொன்னாள். ‘‘நான் ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினி படங்களை என் ஸ்கூல் நோட் புத்தகங்களில் ஒட்டி டீச்சரிடம் திட்டுகூட வாங்கி இருக்கிறேன். 20, 25 வருஷமாக ரஜினியின் பயங்கர விசிறி. இப்போது அவருடன் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு இறைவன் கொடுத்த வரம்’’ என்றார். ‘‘அதிருக்கட்டும்... உங்கள் வயது என்ன?’’ என்று நம் நிருபர் கேட்டதற்கு, ‘‘பெண்களின் வயதைக் கேட்பது அநாகரீகம்’’ என்று ஒரு போடு போட்டாள்.