July 23, 2016

ஐஸக் நியூட்டன்


தெரிந்த பெயர்; தெரியாத விவரங்கள்
ஐஸக் நியூட்டன் (1643-1727)


ஐஸக் நியூட்டனின் பெயரைத் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். துரதிர்ஷ்டம், அவரைப்பற்றி பலருக்கு   வேறு எதுவும் தெரியாது. சிலருக்கு ‘பூமியின் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தவர்’ என்று மட்டும் தெரியும்.
மனித சமுதாயத்திற்கு அவர் அளித்துள்ள சேவையை மிஞ்ச இதுவரை எந்த விஞ்ஞானியும் தோன்றவில்லை.
ஏதோ ஆப்பிள் மரத்தடியில் சோம்பேறியாக உட்கார்ந்திருந்தபோது ஆப்பிள் விழுந்ததைப் பார்த்து பூமியின் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்தார் என்று மட்டும் சொல்வது அவருடைய பெயருக்கு நாம் இழுக்கு செய்வதற்கு சமம்.
Image result for apple fruitவான சாஸ்திரம், Integral Calculus, நியூட்டனின் விதிகள், கணிதம், (Optics), (Physics) ஆகிய பல துறைகளுக்கு அஸ்திவாரம் அமைத்துத் தந்தவர். இன்றைய விஞ்ஞானத்திற்கும் அடித்தளம் அவர் கண்டுபிடித்தவை ஆகும். 
எளிமையும் அடக்கமும் உடைய இந்த உலக மகா விஞ்ஞானி ஒரு சமயம் கூறிய வாசகம்,   24 காரட் தங்கத்தால் பொன் எழுத்துகளாகப் பொறிக்கத் தக்கவை.
“மற்றவர்களைவிட சற்று அதிக தொலைவு என்னால் பார்க்கமுடிந்தது என்றால், அதற்குக் காரணம் பல மாபெரும் அறிவாளிகளின் தோள்கள் மீது நின்றுகொண்டு தொலைதூரம் பார்த்ததால்தான்” (“If I have seen further, it is by standing on the shoulders of giants!”)

இங்கிலாந்தின் புகழ் பெற்ற Westminster Abbey-யில் அவரது கல்லறை உள்ளது. அந்த Abbey-யில் புதைக்கப்பட்ட முதல் விஞ்ஞானி இவர்தான் என்ற கௌரவத்திற்கு உரியவர். அவருடைய கல்லறையில் எழுதப்பட்ட வாசகத்தை எழுதியவர், பிரபல கவிஞர் அலெக்சாண்டர் போப்.

“இயற்கையும் இயற்கையின் விதிகளும் இரவின் இருளில் ஒளிந்து கிடந்தன; கடவுள் சொன்னார்: ‘நியூட்டன் வருகை புரியட்டும்’.  எல்லாம் ஒளிமயமாயிற்று.”
(1727 மார்ச் 20-ஆம் தேதி எழுதப்பட்டது)

சர். டேவிட் ப்ரூஸ்டர் என்பவர் 1855-ல் எழுதிய “நியூட்டனின் வாழ்க்கை நினைவுகள், கட்டுரைகள், கண்டுபிடிப்புகள்” என்ற  புத்தகத்திலிருந்து சில மறக்க முடியாத வாசகங்களைப் பாருங்கள்.
“உலகிற்கு நான் என்ன மாதிரி தோற்றம் அளிக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் பையனைப் போன்றவனாகத்தான் இருக்கிறேன். அவ்வப்போது விளையாட்டை நிறுத்திவிட்டு, ஒரு வழுவழுப்பான கூழாங்கல்லையோ அழகான கிளிஞ்சலையோ கண்டுபிடிப்பவனாக இருக்கிறேன். எனக்கு முன்னே உண்மை என்னும் பெரிய கடல் இருக்கிறது. கண்டு பிடிக்க வேண்டிய அந்தக்  கடலில் நிறைந்திருக்கிற பல உண்மைகளை !”
அவ்வப்போது தனக்குத் தோன்றுவதை சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைப்பார். அப்படி எழுதப்பட்ட ஒரு குறிப்பில்  அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சத்தை ஒரு வரியில் எழுதியுள்ளார்: “பிளாட்டோ என் நண்பர்; அரிஸ்டாட்டில் என் நண்பர்; ஆனால் என் உயிர்த் தோழன், உண்மை என்பதுதான்!”

கிறிஸ்துமஸ் தினத்தன்று (1642-ஆம் ஆண்டு) நியூட்டன் பிறந்தார். அவர் பிறந்தபோது, எழுதப்படிக்கத் தெரியாத சாதாரண விவசாயியான அவர் தந்தை காலமாகி விட்டிருந்தார். நியூட்டனின் அம்மா  அவருடைய தாத்தா, பாட்டியிடம் நியூட்டனைக் கொடுத்துவிட்டு, வேறு ஒருவருடன் வாழ ஊரைவிட்டே போய்விட்டார்.
பன்னிரண்டாம் வயதில் நியூட்டனை ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்தார் அவரது தாத்தா. ஆனால் நியூட்டனின் பதினாறாவது வயதிலேயே,  அவருடைய அம்மா  தனது இரண்டாவது கணவனை இழந்து விட்டார். அதனால் படிப்பை நிறுத்தச் செய்தார். சொந்த கிராமத்திற்கு அழைத்துப் போய் விவசாயம் செய்ய வைத்தார். நியூட்டனுக்கு அதில் சிறிதும் ஈடுபாடு இல்லை. இந்த சமயம்,  அவர் சில ஆண்டுகளே படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், நியூட்டனின் அம்மாவிடம் பேசி, நியூட்டனை மறுபடியும் பள்ளிக்கூடம் அனுப்பும்படி செய்தார். 1661-ல் – அதாவது தனது 19-வது வயதில் அவர் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்தார்.

அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் அடிக்கடி ‘ப்ளேக்’ நோய் பரவி, பலரைப் பலி வாங்கும். 1665-ல் ப்ளேக் நோய் பரவ ஆரம்பித்ததன் காரணமாக கேம்பிரிட்ஜ் கல்லூரியை மூடிவிட்டார்கள். நியூட்டனும் தன் கிராமத்திற்குத் திரும்பி வந்துவிட்டார். அந்த சமயத்தில்தான் தன் வீட்டு ஆப்பிள் மரத்திலிருந்து பழம் விழுவதைப் பார்த்து, அதைப் பற்றி சிந்தித்தபோது, அவருக்குப் புவி ஈர்ப்பு பற்றிய முதல் பொறி தட்டியது. (இன்றும் அந்த ஆப்பிள் மரம் நியூட்டனின் கிராம வீட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள்!)
நியூட்டன் பின்னால் கேம்பிரிட்ஜிலேயே  பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அடுத்த 30 வருஷம் அவர் அங்கு பணியாற்றினாலும் அவருக்கு அந்த வேலையில் சிறிதும் ஈடுபாடு இல்லை. அவர் மனமெல்லாம் ஆராய்ச்சிகளிலேயே இருந்தது.

1689-90 ஆண்டுகளில் கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலை சார்பாக, பிரிட்டிஷ் பார்லிமென்ட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
(பார்லிமென்ட்டில் அவர் ஒரே ஒரு தரம்தான் பேசியதாகக் கூறுகிறார்கள். சரி, அவர் என்ன பேசினாராம்? “ஒரே குளிராக இருக்கிறது. பார்லிமென்ட் ஜன்னலை  மூடும்படிக் கேட்டுக்கொள்கிறேன்” என்பதுதானாம். இதைக் கேலியாகப் பலர்  எழுதுகிறார்கள். அந்த மேதைக்கு இழுக்கு செய்பவர்கள் அறிவிலிகள்!)

1705ல் அவருக்கு, ஆன் மகாராணி ‘சர்’ பட்டம் வழங்கினார். நியூட்டன் 1727-ஆம் ஆண்டு (அவரது 84-வது வயதில்) காலமானார்.
நியூட்டன் திருமணம் செய்து கொள்ளவில்லை.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!


!

6 comments:

  1. உங்கள் இடுகைக்கு நன்றி. இவரை எப்போதும் சர் ஐசக் நியூட்டன் ('நீங்கள் சி.வி.ராமன் என்று எழுதியதையும் எப்போதும் நாங்கல் சர்சிவி ராமன் என்றுதான் நினைவுகூர்வோம்) என்றுதான் நினைவில் வரும். நான் டவர் ஆஃப் லண்டன் போயிருந்தபோது, பிரிட்டிஷ் நாணயங்கள் பகுதியில், ஐசக் நியூட்டனைப் பற்றி சிறப்பாகப் போட்டிருந்தனர் (பிரிட்டிஷ் பவுண்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் மின்ட்) Newton was appointed as Warden of the mint in 1696 at the start of recoinage. Due to his love of maths, he devised the most efficient method to produce coins, which included, how long a team of men could work the screw press without tiring. அவருடைய வழியினால், 2.5 மில்லியன் பவுண்டு சில்வர், 3 வருடங்களில் உற்பத்திசெய்யப்பட்டது. 1699ல் அவர் மின்ட்டின் (தங்கசாலை?) தலைவர் ஆனார். இந்தப் பதவி அவர் இறக்கும் வரையில் அவரிடம் இருந்தது.

    விஞ்ஞானிகள், மேதைகள் அவர்களது அதீத அறிவுக்காக மதிக்கப்படுகின்றனர். அவர்கள் மற்றவர்கள்போல் சாதாரண மனிதர்கள் இல்லை (ஐன்ஸ்டீன், நியூட்டன் போன்று).

    To test the honesty of Mint officials, trial plates made of gold and silver were distributed to the mint, treasury, Goldsmith's company. Samples of metal from the plates were regularly compared with the coins made at the mint. If they were not identical, mint's master (நியூட்டன் வகித்த பதவி) was in trouble.

    ReplyDelete
    Replies
    1. நியூட்டன்,சி.வி.ராமன் ஆகியவர்களின் பெயர்களுடன் ‘சர்’ போட்டால்தான் முழுமை பெரும். ( திரு.வி.க. வின் ‘திரு’ போல!
      உஙள் விரிவான பின்னூட்டம் பதிவைவிட சுவை மிக்கது! நன்றி- கடுகு

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    அருமையானதொரு கட்டுரை.

    பின்னூட்டத்திலும் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது மகிழ்ச்சி.

    இப்போதெல்லாம் புகழ் பெற்றவர்களை விமரிசனம் செய்வது ஒரு ட்ரெண்ட் ஆகி இருப்பது வருத்தத்தை உண்டு பண்ணுகிறது.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தனித்துவத்தினால் பெயரும் புகழும் அடைகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கர்வமும் இருப்பதில்லை.

    அவர்களைப் பற்றிய செய்திகள், படிப்பவர்களின் மனதில் நல்ல எண்ண அலைகளை உருவாக்குகின்றன.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    திரு வி.க.வின் ‘திரு’ மனதில் பதிந்து விட்டது.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  4. கருத்து சொல்லவோ விமர்சனம் செய்யவோ எந்த தகுதியும் வேண்டாம்.
    தகுதி இல்லை என்பதையே ஒரு தகுதியாகப் பலர் கருதுகிறார்கள்! - கடுகு

    ReplyDelete
  5. நியூட்டனின் கண்டுபிடிப்புகளுக்கு முக்கிய உந்துதல் அவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்ததுதான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!