December 20, 2011

சுவைகளில் நான் நகைச்சுவை -புதிய கீதை - பாகம்1

முன்னுரை
உலகில் உள்ள 732 கோடியே 76 லட்சத்து 13 ஆயிரத்து 768 ஜீவராசிகளில் -இந்தக் கணக்குத் தவறு என்று சொல்பவர்களுக்கு ஒரு விண்ணப்பம். வேண்டுமானால் நீங்களே எண்ணிப் பாருங்கள்! - இத்தனை ஜீவராசிகளில் சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் ஒருத்தன்தான். (யாரது அங்கே... ஆரம்பிச்சுட்டாரய்யா... ஆரம்பிச்சுட்டாரய்யா... என்று சொல்வது? அவரைக் கழுவிலே ஏற்றுங்கள்.)
நகைச்சுவை உணர்வைப் பற்றி பல மேதைகள் நிறைய கூறி இருக்கிறார்கள்.
மகாத்மா காந்தியின் பொன்மொழி மிகவும் பிரபலமானது. அது இங்கு தனியாகக் கொட்டை எழுத்தில் தரப்பட்டுள்ளது.
(எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்ச்சி இல்லாதிருந்தால் எப்போதோ நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.
-மகாத்மா காந்தி.)
நகைச்சுவை என்னும் வலை உள்ள இடத்தில் கவலையெனும் கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது.

*உடலுக்கும் உள்ளத்திற்கும் சிறந்த டானிக் நகைச்சுவை. மனச் சோர்வையும், மாற்ற வல்லது. வியாபாரிகளுக்கு அது மூலதனம். மக்களின் வாழ்க்கைச் சுமைகளை லேசாக ஆக்கக் கூடியது. மன அமைதிக்கும் நிறைவுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் விரைவுப் பாதை.  .-கிரின்பில் க்ளெய்ஸர்.

*பகுத்தறிவும் நகைச்சுவை உணர்வும் வேறுபட்டவை அல்ல. அவைகள் செல்லும் வேகம்தான் வேறு வேறு. குதித்துத் 
துள்ளியாடும் பகுத்தறிவு தான் நகைச்சுவை. -வில்லியம் ஜேம்ஸ்.
*நகைச்சுவை மனித குலத்திற்குக் கிடைத்த மாபெரும் உரம்! -மார்க் ட்வெய்ன்.
*வாழ்க்கை என்றும் கம்பி மீது தடுமாறாமல் நடந்து செல்வதற்கு உதவுவது நகைச்சுவை என்னும் கம்புதான். -வில்லியம் ஆர்தர் மார்ட்.

நகைச்சுவையில் எத்தனையோ வகைகள் உண்டு. அச்சில் வரும் நகைச்சுவையை பேச்சில் கூறுவது எளிதல்ல. அதுவும் படங்களுடன் வரும் நகைச்சுவையை படத்தைப் பார்த்தபடியே படித்தால்தான் அவை சிரிப்பு உண்டாக்கும். (ஆனால் பல பத்திரிகைகளில் படங்களுடன் வரும் ஜோக்குகளில் படம் ஒன்றும், ஜோக்குகளுக்கு உதவுவதில்லை. ஜோக்கில் வரும் வசனங்களில் படங்கள்தான் நகைச்சுவையை மிளிரச் செய்ய வேண்டும்.)
பேசும் போது கூறும் நகைச்சுவையில் பஞ்ச் லைன்தான் முக்கியம். ஜோக்ஸை விட ஜோக்கைச் சொல்வதில்தான் இருக்கிறது சூட்சுமம். பேசும்போது சரளமாகச் சொல்வதற்குப் பயிற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ அப்போது தான் தோன்றிய ஜோக் மாதிரி சொன்னால் சிறப்பு அதிகம்.
ஜோக்கில் எல்லாம் புதிய ஜோக்தான்.  .
 
2009 ஆண்டில் உலகின் மிகச் சிறந்த (!)  10 ஜோக்குகளை  ரீடர்ஸ் டைஜஸ்ட் (அமெரிக்கப் பதிப்பில்) மே 2009 இதழில் போட்டிருந்தார்கள். எல்லாமே பழைய ஜோக்குகளாகத்தான் எனக்கு  இருந்தன. காரணம் நான் ஆயிரக்கணக்கான ஜோக்குகளைப் படித்திருப்பதுடன் பலவற்றை நினைவிலும் வைத்திருக்கிறேன். அந்த ஜோக்கைப் படிக்காதவர்களுக்கும், படித்து மறந்து போயிருப்பவர்களுக்கும் அது புதிய ஜோக்காகத்தன் இருக்கும். 

ஆகவே, எல்லாரும் தாங்கள் படித்த ஜோக்குகளை மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு, உற்சாகமாகச் சொல்ல வேண்டியது அவசியம். அது மட்டுமல்ல, சொல்லும் போது நீங்களே ரசித்துக் கொண்டு சொல்ல வேண்டும். முதன்முதலாகச் சொல்வது போல் ரசனையுடன் சொல்வது அவசியம். ஐயோ, இந்த ஜோக்கை இதற்கு முன் பலர் படித்திருப்பார்கள் அல்லது கேட்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் ஜோக் சரளமாக சொல்ல வராது. ஜோக்கை விட இந்த நினைவுதான் உங்கள் மனதில் இருக்கும்.
*************
இப்போது சில புதிய ஜோக்குகள்!
*************
*வாக்கிங் போய்க் கொண்டிருந்த ஒருவர், ஒரு வீட்டு வாசலில் இருந்த அறிவிப்பைப் பார்த்தார். பேசும் நாய் விற்பனைக்குஎன்று எழுதி இருந்தது.
வியப்பு தாளவில்லை. உள்ளே போய் விசாரித்தார். நாயைக் கொண்டு வந்தார் அதன் சொந்தக்காரர்.
ஜிம்மி... உன்னைப் பற்றி இவருக்குச் சொல்”  என்றார்.
 ”அது பெரிய கதை. நான் இராக் யுத்தத்தின் போது இரண்டு வருஷம் உளவாளியாக இருந்தேன். பிறகு ஆல்ப்ஸ் மலையில் கேன்டீன் நடத்தினேன். இப்போது வயதாகி விட்டதால் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு பத்திரிகைகளைப் படிக்கிறேன்.”
அப்படியா... கிரேட்! ஆமாம் சார். இவ்வளவு திறமை உள்ள நாயை ஏன் விற்கிறீர்கள்?” என்று கேட்டார்.
திறமையா? மண்ணாங்கட்டி! சரியான சோற்றுத் தடியன். வாயைத் திறந்தால் பொய்தான். அவன் சொன்ன மாதிரி எதையும் செய்யவில்லை என்றார்.
* * *