July 22, 2019

"அம்மாவின் கேள்விகள்”

ராபர்ட் ஃபுல்ஜும் ஒரு பிரபல அமெரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் மிகவும் சிறப்பானவை. நேரில் பேசுவது போல் இருக்கும் அவர் நடை.  
அவரது புத்தகங்கள் கிட்டதட்ட 10 பத்து லட்சம் காபிகள்  அச்சாகி உள்ளன. 27 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இது விக்கிப்பீடியா தரும் தகவல்.

அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு: WHAT ON EARTH HAVE I DONE?  “நான் ஏன் பிறந்தேன்?” என்கிற மாதிரி இது ஒரு சுயவிசாரக் கேள்வி மட்டுமல்ல; நம்மையெல்லாம் சிந்திக்கச் செய்யும் கேள்வி.
  “அம்மாவின் கேள்விகள்”  என்ற தலைப்பில் வர்  இந்த புத்தகத்தை பற்றி முதல் கட்டுரையாக எழுதியுள்ளார் அதைப் படித்து ரசித்தேன். எனக்கு தெரிந்த அளவில் அல்லது புரிந்த அளவில் தமிழ்ப் படுத்தி தருகிறேன்.
                                                                         *     *           *
"அம்மாவின் கேள்விகள்”
சியாட்டில் நகரில் என் வீடு ஒரு சிறுவர் பள்ளிக்கு எதிரில் உள்ளது, மரச்சட்டங்களால்  பள்ளிக்கு வேலி போட்டு இருக்கிறார்கள். சற்று உயரமான வேலி. அதனால்  பள்ளியில் நடப்பதை என் வீட்டிலிருந்து பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகளின் ஆட்டம், பாட்டம்,  கூச்சல் எல்லாம் தெளிவாகக் கேட்கும்.

ஒரு நாள் நான் வீட்டிற்கு முன் பக்க வராந்தாவில் நின்று கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காரில் கொண்டு வந்து, விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.  ஒரு கார் கதவு திறக்கும் ஓசையும், அதைத் தொடர்ந்து   ‘தபால்’ என்று கதவை மூடும் ஓசையும் கேட்டது.  ஒரு அம்மா சற்று எரிச்சலுடன் இரைவதும் கேட்டது: “ஏய் BILLY, என்னடா செஞ்சு தொலைச்சே?” என்று  கத்துவது கேட்டது. “ ஒன்றுமில்லை, அம்மா”  என்கிற மாதிரி, சிறிது அழுகையைக் கலந்து பதில் சொன்னது குழந்தை.

 சரி, குழந்தை என்னதான் செய்து விட்டது? அந்த பில்லி, ஆப்பிள் ஜூஸ் பாட்டிலைத் திறந்து காருக்குள் கொட்டி விட்டதா? அம்மா கட்டிக்கொடுத்த இடைவேளை உணவு டப்பாவைத் திறந்து, சால்லேட் எடுத்தபோது டப்பா  காருக்குள் கவிழ்ந்து கொட்டிவிட்டதா?   அல்லது காரிலேயே வாயில் எடுத்து விட்டதா? டப்பாவில் இருந்த  முள்கரண்டியை எடுத்து, காரின் முன் சீட்டில் பச்சை குத்துவது போல் குருவி, மீன், பட்டாம்பூச்சி என்று  வரைந்திருந்ததா? அல்லது சிவப்பு  ‘மார்க்கர்’ பேனாவால் கார் சீட்டின் மேலே போடப்பட்டிருந்த எம்பிராய்டரி அலங்காரத் துணியில் கோலம் போட்டு இருந்ததா?  தெரியவில்லை.