பித்துக்குளி முருகதாஸ் இன்று காலமானார். அற்புதமான பாடகர். குரல் வளம் மட்டுமல்ல; ஹார்மோனியத்தில் புகுந்து விளையாடும் விரல் வளமும் கொண்ட இசைக் கலைஞர்.
முன்பு எழுதிய பதிவை மீள்பதிவாகப் போடுகிறேன்’
பித்துக்குளி முருகதாஸும் நானும்
ஐம்பதுகளில் கொத்தவால் சாவடி, பூக்கடை
பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி சமயங்களில் இரவு
ஒன்பது மணிக்கு மேல் நடு வீதியில் போடப்பட்ட சுமாரான மேடையில் இசைக்
கச்சேரிகள் நடைபெறும். அதில் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பக்தி பாடல்
நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது.. தரையில் தான் உட்கார்ந்து கச்சேரிகளைக்
கேட்கவேண்டும். அந்த கூட்டத்தில் நான் நிச்சயமாக இருப்பேன். ஒரு பக்கமாக
நின்று கொண்டே கூட இரவு12, 1 மணி வரை கச்சேரிகளைக் கேட்பேன்
முருகதாஸின் பயங்கர அபிமானி. வார்த்தைத் தெளிவு, உச்சரிப்பு சுத்தம்,
அலட்டல் இல்லாத சங்கீதம் ஆகியவை காரணமாக தமிழ் மொழியின் அழகும், பாடல்களின்
சிறப்பும் முருகதாஸின் குரலும் என்னை எங்கோ கொண்டு போய்விடும். பாரதி
விழாக்களில் பித்துக்குளி பாடாமல் இருக்க மாட்டார்.
பின்னால் டேப் ரிகார்டர்கள் வந்ததும், நிறைய ரிகார்ட் பண்ணி வைத்துக்
கொண்டு கேட்டேன். திருப்புகழ், கந்தர் அனுபூதி, ஊத்துக்காடு, மகாகவி பாரதி
ஆகியவர்களின் பாடல்களை எனக்கு அறிமுகப் படுதியவர் பித்துக்குளிதான்.
பிறகு நான் டில்லிக்குப் போய் விட்டேன். டில்லிக்கு பல சமயம் அவர்
வந்திருக்கிறர். ( ஏன், யூ.என். ஐ. கேன்டீனுக்குக்கூட வந்திருக்கிறார்.)