எக்கச்சக்கமாக விலையேறி இருக்கிறதே என்று கூட லட்சியம் பண்ணாமல் யாரோ அரை கிலோ மிளகாய்ப் பொடியை (குண்டூர் ரகம்) அவர் கண்களில் அப்பியது போல இருந்தது. எழுத்தாளர் ஏகாம்பரத்துக்கு! அவருடைய கண் எரிச்சலுக்குக் காரணம் கஞ்சன்-க்டிவிடிஸோ அல்லது வள்ளல் க்டிவிடிஸோ அல்ல. அவருக்கு எதிரே இருந்த பேப்பரில் வந்திருந்த ஒரு சின்னச் செய்தி.
"பிரபல எழுத்தாளர் "மைதா"வின் புதிய நாவல் வெளியீட்டு விழா, ஓட்டல் கீதா கார்டனில் நடைபெற்றது. மாண்புமிகு. உயர்திரு, மேதகு, வணக்கத்துக்குரிய, தவத்திரு என்று பல புள்ளிகள் "மைதா"வின் எழுத்து வன்மையை வன்மையாகப் புகழ்ந்து பாடியிருந்தார்கள் --- தம்புரா சுருதிகூட இல்லாமல்!
இதைப் படிக்கப் படிக்க, அவருக்குப் படிப்படியாக எரிச்சல் அதிகமாகியது!
மயிலாப்பூர் தாமோதரன் என்னும் "மைதா' சிறந்த எழுத்தாளர். நான்கு வருஷத்துக்கு முன் இவருடைய முதல் கதை பிரசுரமாயிற்று. ஆனால் பத்து வருஷமாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஏகாம்பரத்தை விட, அவருக்குப் பிரபலம் ஏற்பட்டுவிட்டது. எங்கே பார்த்தாலும் மைதாவின் கதைகளுக்கு வரவேற்பு.
ஏகாம்பரம் தம்முடைய எட்டுக் கதைகள் திரும்பி வந்தால் கூட வருத்தப்பட மாட்டார். ஆனால்
"மைதா"வின் கதை ஒரு பத்திரிகையில் வந்து விட்டால் அவ்வளவுதான். மிதந்து கொண்டிருக்கும் கப்பலையும் கவிழ்த்து விட்டு, கன்னத்தில் கையுடன் உட்கார்ந்து விடுவார்.