Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

May 15, 2019

இதுதாண்டா கவர்ன்மென்ட்!

இருபது வருஷ சப்ளை
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.
 டில்லியில் தபால் துறை அலுவலகத்தில்  சர்வ தேச பார்சல் அக்கவுண்டிங்க் செக் ஷனில் இந்த வரவு-செலவு கணக்குகள், சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். (இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

          இந்த கணக்கு முறை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை.  இதில்  “இங்கிலாந்து - இந்தியா” கணக்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து சார்பாகவும் நாமே கணக்குத் தயாரிக்க வேண்டும். சுமார் 20, 30 நாடுகளுக்குப் போகும் பார்சல்கள் எல்லாம்  லண்டன் வழியாகப் போகும்; லண்டன் வழியாக வரும்  (பிரிட்டிஷ் காலத்தில் அவர்கள் செய்த வழிமுறை.) 

சுதந்திரம் வந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மாதிரி பல்வேறு  நாடுகளிலிருந்து வரும் பார்சல்கள் லண்டன் வழியாக வரும். 
இதன் காரணமாக  இந்தியா - லண்டன் பார்சல் கணக்கு தயாரிக்கப்படும் படிவம் மிகப் பெரியதாக இருக்கும். பெரியது என்றால் நம்பமாட்டீர்கள்,  கிட்டத்தட்ட இரண்டு அடிக்கு மூன்றடி இருக்கும். சற்று தடிமனான காகிதத்தில் இருக்கும். காலப் போக்கில் பெரும்பாலான நாடுகள் காணாமல் போய்விட்டன அல்லது பெயரை மாற்றிக் கொண்டன. அல்லது நேரடியாகக் கணக்குகளை அனுப்பத் தொடங்கி விட்டன.
இந்த 'பிரிட்டன்- இந்தியா' கணக்கு மாதா மாதம் தயாரிக்கப்பட வேண்டும். நான்கு காபிகள் தயாரிக்க வேண்டும்.   அதுவும் ஒரே ஒரு நபர் செய்யும் வேலை. ஆக வருஷத்திற்கு 48 பாரங்கள் மட்டுமே  தேவைப்படும். 1950, 60  வாக்கில் எப்போதோ, என்ன அடிப்படையிலோ 1,000  பாரம் அச்சடித்து விட்டதால் (20 வருஷ சப்ளை!)  தீரவே இல்லை. ரிகார்ட் ரூமில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த   கட்டுகளில் அடியில் இருந்த கட்டுகள் அப்பளமாகப் போய் விட்டன.
புதிதாக, கச்சிதமாக,  சரியான தகவல்களுடன் அச்சடிக்கலாமென்றால், கையில் இருப்பது தீரும் என்றே தோன்றவில்லை. 
இந்த சமயத்தில் 1970 வாக்கில் ஒரு நாள்  ஒரு  சுற்றறிக்கை வந்தது.   எல்லா டிபார்ட்மெண்டும்  தேவையில்லாத பழைய ஃபைல்கள், ரிஜிஸ்டர்கள், பில் பண்டில்களை மூன்று நாட்களுக்குள் களைந்து விடவேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தார்கள்.  அப்பளமாகிப் போன இந்த FORMS  பண்டில்கள் உட்பட பல பழைய ரிகார்டுகளை அக்கவுன்ட்ஸ் ஆபீசர்  களைந்து விட்டார்.   ‘அப்பாடா’ என்று எல்லாரும் மூச்சு விட்டோம்.
       அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து, ஸ்டோர் செக் ஷனிலிருந்து ஒரு டெலிபோன் வந்தது. அதிர்ச்சிக் குண்டைப்  போட்டார்கள்.  எந்த படிவத்தைக் களைந்துவிட்டு ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டோமோ, அதே படிவம் ஆயிரம் காபி அச்சகத்திலிருந்து வந்திருந்தது! நாங்கள் கேட்காமலேயே அச்சடித்து அனுப்பி இருந்தார்கள். அடுத்த இருபது வருஷ சப்ளை!!!

April 15, 2017

ஒரு வரியில் நெகிழ்த்தி விட்டார்...

 Mr.GIMPEL
 இவர் ஒரு மென்பொருள் நிபுணர். இவருடன் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை  இங்கு தருகிறேன்.
         *                               *                          *
என்னைப் பார்த்து யாரும் "நீ ஓரு பைத்தியம்' என்று சொல்ல முடியாது. நான் பைத்தியம்தான். ஆனால் 'ஒரு பைத்தியம்' அல்ல! பலவித விஷயங்களில் எனக்கு, -- நாகரிகமாகச் சொன்னால் --ஆர்வம் உண்டு. சாதாரண நடைமுறையில் 'பைத்தியம்' என்றும் கூறலாம். அப்படிப்பட்ட பல விஷயங்களில் ஒன்று : முப்பரிமாணப் படங்கள்  எனும் 3-டி படங்கள்!
1995-வாக்கில் "விகடனி'ல் ஸ்டீரியோகிராம் என்ற வகை 3-D படங்களைத் தொடர்ந்து பிரசுரித்து வந்தார்கள். கம்ப்யூட்டர் மென்பொருளை உபயோகித்து, நிறைய திறமையை  உபயோகித்து அத்தகைய படங்களை உருவாக்க பயிற்சியும் நேரமும் தேவை. அந்த மாதிரிப் படங்களை  3-D யாகப்  பார்க்க ஒருவிதமாக Cross Eyed (?) முறையில் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். இப்படிப் பார்க்கும் வித்தை ஒரு நிமிஷத்திலும்  வந்துவிடக்கூடும் அல்லது பல மாதங்கள் முயற்சித்தாலும் வராமலும் இருக்கும்!
அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த வித்தை எளிதில் வந்துவிட்டது. அதனால் ஸ்டீரியோகிராம் படங்களை இரவு பகலாகக் கம்ப்யூட்டரில் உருவாக்க ஆரம்பித்தேன். திமிங்கிலம், ஆடு, மாடு, கரடி, பறவை, கட்டடங்கள், படகு, மரங்கள், மலர்கள், பாம்பு என்று துவங்கி, பிள்ளையார், நடனமங்கை, ஓட்டப்பந்தய வீரர், படகோட்டி, நடராஜர், தட்சிணாமூர்த்தி என்று முன்னேறினேன்.
ஸ்டீரியோகிராமிற்கு அடுத்த கட்டம் ANAGLYPH 3-D படங்கள் வந்தன. இந்தப் படங்களைப் பார்க்க கலர் கண்ணாடி தேவைப்படும். கண்ணாடி போட்டுப் பார்த்தால் 3-D படம் சூப்பராகத்  தெரியும். நம்ப மாட்டீர்கள், டஜன் கணக்கில் இந்த டைப் படங்களைப் போட்டுப் பழகினேன்.
            ஒரு மாதிரி 3-D பித்து ஓய்ந்து விட்டது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு வகை  3-D படங்கள் வர ஆரம்பித்தன.

ஒரே படத்தில் இரண்டு உருவங்கள். உதாரணமாக படத்தை ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் பிள்ளையார் தெரிவார்; வேறு ஒரு கோணத் திலிருந்து பார்த்தால் முருகப் பெருமான் தெரிவார். இந்தப் படங்கள   LENTICULAR  என்பார்கள்.       இப்படி பல ஜோடிப் படங்களை உருவாக்கி, அச்சடித்து சைனா பஜாரில் விற்கிறார்கள். உங்களில் பலர்  இந்தப் படங்களை வாங்கி யிருப்பீர்கள்
இப்படிப்பட்ட "2-in-1'   3-D படங்களை உருவாக்குவதற்கு நிறைய பயிற்சி தேவை; தேர்ச்சி தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்குரிய கம்ப்யூட்டர் மென் பொருள்கள்  தேவை!  இன்டர்நெட்டில் பல இலவச மென்பொருள்கள் இருந்தன. அவை யாவும் முதல், இரண்டு, மூன்றாம் ஸ்டெப் வரை செல்ல உதவும். அதற்கு அடுத்து மேலே போனால்தான், படம் முழுமையடையும். அந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்காது என்பதுடன் விலையும் சற்று அதிகம்! சும்மா விளையாடிப் பார்ப்பதற்கு, செலவு செய்ய மனம் வரவில்லை

March 08, 2017

வளர்ப்புக் குழந்தை

குழந்தைகளைத் தத்தெடுத்துத் கொள்வது சமீப வருடங்களில் அதிகரித்துவிட்டது. இது ஒரு நல்ல மாற்றம்தான். சுமார் 15 வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்தபோது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கோவாபரேடிவ் நர்சரி பள்ளியில் என் பேத்தியைச் சேர்த்தோம். அந்தப் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவை.
தாங்கள், பெற்றோர்களால் ஒதுக்கப்பட்டு வேறு ஒரு கணவன், மனைவியால் தத்து எடுக்கப்பட்டவர்கள் என்பதை                          அக்குழந்தைகள்   உணரும்போது  தாழ்வு மனப்பான்மையோ, அதிர்ச்சியோ வருத்தமோ ஏற்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது வளர்ப்புக் குழந்தைகள் எந்த விதத்திலும் மட்டமானவர்கள் அல்ல என்பதை பள்ளிக்கூடத்தில் பலவிதத்திலும் அறிவுறுத்தி வருவதைப் பார்த்தேன்.
            ஒருநாள் டீச்சர் குழந்தைகளிடம் “இன்றைக்கு நீங்கள் உங்கம்மாவைப் பற்றிச் சொல்லுங்கள். நன்றாகச் சொல்பவர்களுக்குப் பரிசு உண்டு” என்று சொன்னார்,
            சில குழந்தைகள் தாங்கள் தத்தெடுக்கப்பட்டதாகக் கம்பீரமாகக் கூறினாலும் ஒரு குழந்தை சொன்னதை மறக்க முடியாது. அவள் பெயர் லிடியா. அவள் கம்பீரமாக எழுந்து நின்று சொன்னாள்: “நான் ஒரு அனாதை விடுதியில் இருந்தேன். ஒரு நாள் எங்களைப் பார்க்க  சிலர் வந்தனர். என்னை ஒரு தம்பதி சுட்டிக்காட்டி “இவளை நாங்கள் தத்து எடுத்துக்கொள்ள விரும்புகிறோம்” என்றார்கள். ஏன் தெரியுமா? Because I was the best child!” (ஏனென்றால் எல்லாரையும்விடச் சிறந்த குழந்தையாக இருந்தேன்”) என்று சொல்லி மார்தட்டிக் கொண்டாள். இதைக் கேட்டு டீச்சரே உருகிப் போய்விட்டார்!
   *                         *

September 25, 2014

நெகிழ்ந்து போனேன் -2.

அவர்  என் உறவினர். ஆனால் அவர் ஓய்வு பெற்று சென்னைக்கு  வந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் அவரை முதல் முறையாகச் சந்தித்தேன்.அவர் கல கல ஆசாமி. என் எழுத்திற்கு ரசிகர். நகைச்சுவைப் பிரியர்.   அவ்வப்போது நீலாங்கரை வந்து  என்னை சந்தித்து அரட்டை அடிப்பார்.

அவர் பிள்ளை, பெண்கள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றனர். அதனால் காடாறு மாதம்; நாடாறு மாதம் என்று இருந்தார்.

இப்படி இரண்டு, மூன்று வருஷங்கள் பழகி  இருப்போம்.

அவர் திடீரென்று நோய்வாய்ப் பட்டார். மருத்துவரைப் பார்க்க  அடையாறு வருவார். அப்போது சில சமயம் நீலாங்கரைக்கு வந்து  என்னுடன் அரட்டை அடித்து விட்டுப் போவார்.

“நோயினால் வலி ஏற்படும்போது உங்கள் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன். அந்த சமயத்தில் வலி தெரியாது”என்பார்.  என் மேல் உள்ள அன்பால் அப்படிச் சொல்கிறார் என்று  அதை எடுத்துக் கொள்வேன்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்த சமயம், அவருடைய  நோய் உக்கிரம் அடைந்ததன் காரணமாக அவர் காலமானார்.

எனக்கு உடனே  செய்தி வந்தது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு என் ஆறுதலை தெரிவிப்பதற்கு அவருடைய மகனுக்குப் போன் செய்தேன், (வெளிநாட்டில் உலகப் பிரபல கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவன்.)

அவனிடம் “ உங்கப்பா காலமானது மிகவும் துயரத்தைக் கொடுத்தது. உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை....” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே--
அவன் இடைமறித்து....
“ இல்லை....உங்கள் ஆறுதல் எங்கள் துயரத்தைச் சிறிதளவு குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை... நானே உங்களுக்குப் போன் செய்து ஒரு தகவலைச் சொல்ல நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பாவைத் தகனம் செய்த பிறகு சாம்பலை எங்கு கரைக்கலாம், அந்த இடமா, இந்த இடமா  என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. நீலாங்கரை பீச் என்று தீர்மானித்தோம். அப்பாவிற்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று உங்கள் வீட்டிற்குப் போய் உரையாடுவதுதான். ஆகவே உங்கள் வீடு இருக்கும் நீலாங்கரைக் கடலில் சாம்பலைக் கரைத்து விட்டு வந்தோம். உங்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போன மாதிரி அவருடை ஆத்மாவிற்கு மன நிறைவு ஏற்படும் என்று நாங்கள் எண்ணினோம்” என்றான்.

அப்படி அவன்  துக்கத்துடன் சொன்னபோது அவன் அழவில்லை.
என் கண்கள் கலங்கின.
இப்போது இதை எழுதும்போதும்!


சிறு குறிப்பு-1: சென்ற பதிவில் போடுவதற்குத் திட்டமிட்டிருந்தேன். தனிப் பதிவாகப் போடுவதுதான்  அவருக்கு நான் செய்யக்கூடிய அஞ்சலி என்று கருதி, தனியாக வெளியிடுகிறேன்.
சிறு குறிப்பு-2: இந்தப் பதிவை அவரது மகனின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.

September 17, 2014

நெகிழ்ந்து போனேன்;

 பல வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்தபோது நடந்த நிகழ்ச்சி.
அப்போது மிசூரி மாநிலத்தில் இருந்த  ST LOUIS  என்ற நகருக்குச் சென்று என் மைத்துனியின் பெண்ணுக்குக் கலியாணம் நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்று கொண்டிருந்தேன். கலியாணத்திற்கு முதல் நாள் பகல், NEWARK-கிலிருந்து   MEMPHIS போய், அங்கு விமானம் மாறி ST LOUIS போகவேண்டும்.பகல் இரண்டு மணிக்கு NEWARK விமான நிலையம் போனோம்.

சில நிமிடங்கள் கழித்து பயங்கர புயல் காற்று வீசத் தொடங்கியது. அதனால் விமானம் புறப்படத்  தாமதம் ஆகும் என்று அறிவித்தார்கள். “ முக்கால் மணிக்கு மேல் தாமதம் ஆகிவிட்டால் MEMPHIS விமானத்தைப் பிடிக்க முடியாது என்பதால்  பதைபதைப்புடன் காத்திருந்தோம். அரை மணிக்குப் பிறகு விமானம் புறப்பட்டது. MEMPHIS அடைந்ததும்  அவசரம் அவசரமாக இறங்கி வேகமாகப் போனோம்.  “ST LOUIS போகும் விமானத்தில் ஏற எந்த கேட்டிற்குப் போக வேண்டும்” என்று கேட்டோம். 32- மாதிரி ஒரு எண்ணைச் சொன்னார்கள். நாங்கள் இறங்கியது 4-ம் எண் கேட்.   அடப் பாவமே. அவ்வளவு தூரம் பெட்டியைத் தூக்கி கொண்டு பத்து நிமிஷத்தில் எப்படி   போகப் போகிறோம் என்ற திகிலுடன் வேகமாக நடந்தோம். ஒரு நிமிஷம் கூட நடந்திருக்க மாட்டோம்,  என் மனவிக்கும் எனக்கும் மூச்சு வாங்கியது. முதல் தடவை தனியாக அமெரிக்காவில் பயணம் செய்கிறோம். விமானத்தைத் தவறவிட்டால் அடுத்து எப்போது விமானம் என்றும் தெரியாது. ஒருக்கால் மறுநாள் காலையில் தான் விமானம் என்றால் என்ன செய்வது? ராத்திரி எங்கு தங்குவது? சாப்பிடுவது?” என்று கலவரம் தனி டிராக்கில் போய்க் கொண்டிருந்தது. 
அப்போது நாங்கள் வந்த விமானத்தில் வந்த ஒரு அமெரிக்கர் எங்களிடம் வந்து. “ உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுகிறேன்.. பெட்டியை நான் எடுத்து வருகிறேன். உங்கள் மனைவி நிதானமாக வரட்டும். நாம் சற்று வேகமாகப் போய், அந்த கேட்டில் இருக்கும் பணியாளர்களிடம் “விமானத்தை சில நிமிடங்கள் காத்திருக்க வையுங்கள்” என்று கேட்டுக் கொள்ளலாம்” என்றார்.
 (அவருக்கு 40,45 வயது இருக்கலாம். ஒரு கம்பெனியின் உயர் அதிகாரி மாதிரி இருந்தார்.)
 நாங்கள் இருவரும் கேட்டிற்குப் போனோம். “ ஸாரி, விமானம் நகர்ந்து விட்டது, டேக்-ஆஃபிற்கு ” என்று சொல்லி விட்டார்கள்.

June 16, 2013

இரண்டு கடிதங்கள்


இரண்டு கடிதங்கள்

1. புத்தகம்  எழுதிய கடிதம்

அமெரிக்காவில் பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. எல்லாம் ஆன்-லைன் விற்பனைதான். சில  நிறுவனங்கள் 10 லட்சம், 15 லட்சம் என்ற அளவில் புத்தகங்களை வைத்துள்ளன.  ஆன்-லைனில் பார்த்துத் தேடி, புத்தகங்களுக்கு ஆர்டர் செய்யலாம்.  ABE books,Amazon, Alibiris, Half.com, Powell Books, Strand Books, Better World Books என்று பல நிறுவனங்கள் உள்ளன!.
 20, 30 வருஷ பழைய புத்தகங்களாக இருந்தாலும் புதுக்கருக்கு அழியாத புத்தகங்கள் கூட 1 டாலர், 2 டாலருக்குக் கிடைக்கும்.  சில புத்தகங்கள்  ஒரு சென் ட் விலயில் கூட கிடைக்கும்! தபால் கட்டணம் தான் 3, 4 டாலர் இருக்கும்.

 Better World Books என்ற கம்பெனியில் 3, 4 டாலர் விலையில்  புத்தகங்கள் வாங்கலாம். அவர்கள் தபால் கட்டணம் வசூலிப்பதில்லை.  உலகின் எந்த முகவரிக்கும்   தங்கள் செலவில் அனுப்பி வைக்கிறார்கள்.

June 10, 2013

தப்பு பண்ணிட்டேன்


1954 டிசம்பர்   நாலாம் தேதி சனிக்கிழமையன்று நான் ஒரு  தப்பு பண்ணிவிட்டேன். 50 வருஷம் ஆகியும் அந்தத் தப்பு என்னை வருத்தப்படச் செய்து கொண்டிருக்கிறது! இதோ விவரமாகச் சொல்கிறேன்.
சென்னை ஜி.பி.ஓவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அதுவும் ஜி.பி.ஓ. ரிக்ரியேஷன் கிளப்பின் கமிட்டி உறுப்பினர்,  கலைவிழா அமைப்பாளர் என்று சில பதவிகளை என்னுடன் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த காலம்.
4-ம் தேதி ஜி.பி.ஓ விளையாட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  மாநிலக் கல்லூரி மைதானத்தில் பந்தயங்கள் முதலியன பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவித்து இருந்தார்கள். பகல் இரண்டு மணிக்கே விளயாட்டு விழாவிற்குப் போகலாம் என்றும்  ஆபீஸில் அறிவித்து விட்டார்கள்.
எனக்கு ஸ்போர்ட்ஸில் ஈடுபாடு கிடையாது என்பதால் மைதானத்திற்குப் போக ஆர்வமில்லை. ஆனால் மைதானத்திற்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடையாறு காந்திநகர் போகத் திட்டமிட்டேன்.
கல்கி அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்ற தகவல் வந்ததால்,  அவரைப்  பார்க்க  அடையாறு  போகலாம் என்று எண்ணி கிளம்பினேன். அந்த சமயம் பார்த்து, கிளப் காரியதரிசி. “எங்கேப்பா கிளம்பிட்டே... இரு, ஒண்ணா போகலாம்: என்றார்.
” இல்லைப்பா.. அடையாறு போய் கல்கி அவர்களைப் பார்த்துவிட்டு நேரே மைதானத்திற்கு வந்து விடுகிறேன்; என்றேன்.
“அடையாறு போய்விட்டு வருவதற்குள் போட்டிகள் எல்லாம் முடிந்துவிடும்.  நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. லீவுதான். அதனால் நாளைக்குப் போய் பார்த்துக் கொள்...” என்றார்
போதாதற்கு “ நீ  வந்து உற்சாக மூட்டினால்தான் களை கட்டும்” என்று நண்பர்கள் ‘பூ’ சுற்றிவிட்டார்கள். நானும் என் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ‘சரி’ என்று அவர்களுடன் மைதானத்திற்குச் சென்றேன்.

மறுநாள் காலை ஏழு மணி ரேடியோ தமிழ்ச்  செய்தியில்  ‘ கல்கி அவர்கள் காலமாகி விட்டார்’ என்ற செய்தி வந்தது.  எனக்கு அளவில்லாத   துயரம்.  முன் தினம் அவர் வீட்டுக்குப் போக இருந்த திட்டத்தைக் கைவிட்ட முட்டாள்தனம்  அதை மேலும் அதிகமாக்கியது.

பின்னால் ஒரு தகவல் தெரிந்தது. கல்கி அவர்கள் காலமாவதற்கு முன் தினம் “ எனக்கு செங்கல்பட்டு பாலாறு தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருக்கிறது” என்று சொன்னராம், உடனே திரு சதாசிவம் அவர்கள், ஒரு திருகு மூடி போட்ட குடத்தை வாங்கி வரச் சொன்னாராம்.  மறு நாள் காலை ( 5ம் தேதி)  திரு வரதப்பனை ( திருமதி சரோஜினி வரதப்பனின் கணவர்) செங்கற்பட்டிற்கு அனுப்பினார்.  துரதிர்ஷ்டம், திரு வரதப்பன் தண்ணீருடன் வருவதற்குள் கல்கி அவர்கள் காலமாகி விட்டார். எங்கள் ஊர் தண்ணீரும் என்னைப் போல்  கொடுத்து வைக்கவில்லை.

முன் தினம் அவரைப் பார்க்கப் போகாத என் தப்பு இன்னும் என்னை வருத்தப்படச்செய்து கொண்டிருக்கிறது. 

May 14, 2011

நாம் ஒன்று நினைக்க... - கடுகு

ஒரு விளம்பரக் கம்பெனியில் நான் பணியாற்றினேன் என்று அடிக்கடி பெருமை அடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.. இந்தப் பதிவு ஒரு விளம்பரம் பற்றிய சுவையான விவரம்.

சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு நடந்தது.
ஒரு குளிர் பானத்திற்கு வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும், சற்று நகைச்சுவையுடனும் விளம்பரம் எடுக்க வேண்டி இருந்தது. ஒரு மாதிரி யோசித்து எங்கள் ஐடியாவை குளிர்பான நிறுவனத்திற்குக் கொடுத்தோம். அவர்களுக்கும் பிடித்திருந்தது. அதில் சில செகண்டுகளுக்கு அனிமேஷனும் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பம்பாய்க்குப் போனால்தான் படம் எடுக்க முடியும். சவுண்ட் ரிகார்டிங், அனிமேஷன் என்று எல்லாம் அங்கு நடத்துவதுதான் வசதி.

அந்தப் படத்திற்கு ஒரு பெண் மாடல் தேவைப்பட்டார். புதுமுகமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, பல மாடல் ஏஜன்சிகளைத் தொடர்பு கொண்டு, பல போட்டோ ஆல்பங்களைப் பார்த்து ஒரு அழகான மாடலைத் தேர்ந்தெடுத்தோம்.
படமும் எடுத்தோம். எல்லாரும் ஆஹா, ஓஹோ என்று கூறினார்கள். குளிர்பான கம்பெனிக்காரர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
விளம்பரப் படம் வெளியாயிற்று.
வெளியான சில நாட்களுக்குப் பிறகு அந்தப் படம் எவ்வளவு தூரம் மக்கள் மனதில் பதிந்திருக்கிறது; அந்த குளிர்பானத்தின் பெயரை எவ்ளவவு பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று அறிய பல ஊர்களில் கண்டறியும் பணியை ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.
அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்:” படத்தில் வந்த மாடல் மிகவும் அழகாக இருக்கிறார் என்று ஒருத்தர் விடாமல் சொன்னார்கள். ஆனால் நூற்றுக்கு இருபத்து ஐந்து பேர்களால்தான் அந்தக் குளிர்பானத்தின் பெயரைக் கூற முடிந்தது. திரும்பத் திரும்ப அந்த பெண் மாடலைப் பற்றித்தான் சொன்னார்கள்.”
இந்த அறிக்கையைப் பார்த்து எங்கள் நிறுவனம் மிகவும் நொந்து போய் விட்டது.
இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், பல விளம்பர ஏஜன்சிகள் அந்த
மாடல் பெண் பற்றிய விவரங்களை எங்களிடமே கேட்டார்கள். அவர் ஒரு ஸ்டார் ஆகிவிட்டார்!

February 07, 2011

திடீரென்று வந்தார்! -கடுகு

பெரிய விளம்பர நிறுவனங்களில் ஆண்டுதோறும்   இரண்டு மூன்று நாள் கிரியேட்டிவ் துறை, விளம்பர சேவைத் துறை, ஆடியோ-வீடியோ துறை, ஆர்ட் டைரக்டர்கள், காபி ரைட்டர்கள் எல்லாரையும் இரண்டு அல்லது மூன்று நாள் ஒரு கருத்தரங்கம் மற்றும் விவாதக் கூட்டம் என்று ஒரு பெரிய ஓட்டலில் நடத்துவார்கள்.
அந்த ஆண்டு விளம்பர நிறுவனம் வெளியிட்ட முக்கிய விளம்பரங்கள் பற்றியும், மக்களிடம் அந்த விளம்பரங்கள் பெற்ற பாதிப்புகளையும், வெற்றி தோல்விகளையும் விளக்குவார்கள். விளக்கிய பிறகு கேள்வி பதில்கள் நிகழ்ச்சியும் இருக்கும். தயவு தாட்சண்யமின்றி கடுமையான விமர்சனங்கள், கேள்விகள் எல்லாம் இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் உரையை அபாரமாகத் தயாரித்துக் கொண்டு வருவார்கள். நிறைய `சிலைட்'கள் தயார் பண்ணி அவற்றைப் போட்டுக் காட்டி உரை நிகழ்த்துவார்கள். மிக மிகச் சுவையான உரைகளாகவும், ஒருவரை ஒருவர் மிஞ்சும் உரைகளாகவும் இருக்கும்.
ஒட்டுமொத்தமாக அந்த ஆண்டு கம்பெனி கையாண்ட விளம்பரங்களைப் பற்றி ஒரு விரிவான, ஆழமான பார்வை அனைவருக்கும் கிடைக்கும். எங்கு குறைபாடு உள்ளது, எதைச் சரியாகச் செய்யவில்லை, ஏன் ஒரு குறிப்பிட்ட விளம்பரம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை, அதே மாதிரி ஏன் வேறு ஒரு விளம்பரம் எதிர்பார்த்ததை விட ஓஹோ என்று சாதித்தது என்பதெல்லாம் அலசப்படும்.

மூன்றாம் நாள் முடிவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் பரிசளிப்பு விழா என்று கோலாகலமான பல நிகழ்ச்சிகள் நடக்கும்.
பூஸ்ட் விளம்பரங்களைக் கையாண்ட விளம்பர டீம் ஒரு ஆண்டு பரிசு பெற்ற சுவையான சம்பவத்தைக் கூறுகிறேன்.
பூஸ்ட் விளம்பரங்களில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் இடம் பெற்றிருந்த கால கட்டம் அது. பத்திரிகை, டி.வி., ரேடியோ விளம்பரங்களில் `பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' (BOOST IS THE SECRET OF MY ENERGY)  என்று சொல்வார்.
அந்த ஆண்டு `பூஸ்ட்' விளம்பரங்களில் நிறையப் புதுமைகள் புகுத்தி எல்லா ஊடகங்களிலும் எங்கள் நிறுவனம் அதகளம் செய்திருந்தது.
வருடாந்திரக் கூட்டத்தில் பூஸ்ட் விளம்பரங்களைக் கையாண்டவர் - திருமதி திரிபாதி- மிகவும் உற்சாகத்துடன் அவரும், அவர் உதவியாளைகளும்  என்னென்ன விவாதித்தார்கள், என்ன செய்தோம் என்றெல்லாம்  விவரங்களுடன், கூறினார்.  வீடியோ, ஸ்லைட்கள் மூலம் திரையில் விளக்கப் படங்களைப் போட்டு உரை நிகழ்த்தினார். கடைசியில் பூஸ்ட் விளம்பரப் பாடல் போட்டார்.
ஆனால் பாடல் முடிந்ததும் கபில்தேவ் வசனம் வரவேண்டிய சமயத்தில் திருமதி திரிபாதி ஹாலில் உள்ள  எல்லா விளக்குகளையும் அணைக்கும்படி  ரகசியமாக  ஏற்பாடு  செய்திருந்தார். சட்டடென்று விளக்குகள் அணைந்தன. ஒரு சில  செகண்டுக்குப் பிறகு விளக்குகள் மீண்டும் வந்தபோது ஆச்சரியமான விஷயம் நடந்தது.
திரைக்கு முன் கபில்தேவ் - ஆம், கபில் தேவ் அவர்களே!- நின்று கொண்டு, ``பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி'' என்று உற்சாகமாகச் சொன்னார்.
கை தட்டலும், விஸிலும் பறந்தன். ஹோட்டலே குலுங்கியிருக்கும்.
அந்த ஆண்டு திருமதி திரிபாதிக்குப் பரிசு கிடைத்தது!
இதில் ருசிகரமான விஷயம் என்னவென்றால், கபில்தேவ் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஹோட்டலில் திரைக்குப் பின்னால் இருந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் திரைக்கு முன் தோன்ற வேண்டிய தருணத்திற்கு இரண்டு செகண்டுக்கு முன் தகவல் அனுப்பி, விளக்கு அணைக்கப்பட்டவுடன் இருட்டில் தட்டுத் தடுமாறி திரைக்குப் பின்னால் வந்து, விளக்குப் போட்டதும் `சட்'டென்று வேளியே வந்து, `பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி' என்று கம்பீரமாகச் சொன்னார்.

அக்கா என்று அழைத்தார்! - கடுகு


சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். சீக்கிரமே சென்று விட்டதால் டாக்டர் வந்திருக்கவில்லை. ஆகவே சும்மா வெளியில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது சுமார் 50 வயதுள்ள பெண்மணி அங்கு வராந்தாக்களைப் பெருக்க வந்தார். இஸ்திரி போட்ட நூல் புடவை, நெற்றியில் விபூதிக் கீற்று, தலையில் பூ.

அவர் பெருக்கிக் கொண்டிருக்கும் போது மருத்துவமனையின் உள்ளே இருந்து ஒரு பெண் 20, 22 இருக்கும், வந்தார்.
அவர் ஜூனியர் டாக்டராக இருக்க வேண்டும் கொஞ்சம் காகிதத்தைச் சுருட்டி வைத்திருந்தார். அதை வெளியே பாதையில் போட்டபடியே பெருக்கிக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து, ``அக்கா... இந்தக் குப்பையையும் பெருக்கி எடுத்துக்கிட்டுப் போயிடுங்க'' என்றார்.
ஒரு கணம் நான் அசந்து போய் விட்டேன்.
அக்கா!
ஒரு ஜூனியர் டாக்டர், வேலைக்காரியை அக்கா என்றும், `எடுத்துப் போயிடுங்க' என்று மரியாதையாகவும் கூறியதைக் கேட்டு சிலிர்த்துப் போய் விட்டேன்.
வேலைக்காரி என்றால் ஒருமையில் தான் அழைப்பார்கள். `நீ, வா, போ, செய்' என்றுதான் உத்தரவு போடுவார்கள்.
அந்த ஜூனியர் டாக்டரின் பண்பு என்னை உறையச் செய்தது.
நிச்சயம் அந்த ஜூனியர் டாக்டர் சிறந்த மனிதநேயம் கொண்ட டாக்டராகவும் சேவை மனப்பான்மையுடன் மருத்துவத் தொழிலைச் செய்பவராகவும் மிளிர்வார் என்று எனக்குத் தோன்றியது.