Showing posts with label சுலப சமையல். Show all posts
Showing posts with label சுலப சமையல். Show all posts

August 18, 2010

சுலப சமையல்: மைசூர்ப்பாகு செய்வது எப்படி? - கடுகு

 வணக்கம்..இங்கு தரப்பட்டுள்ள குறிப்பைப் பார்த்து மைசூர்ப்பாகு செய்து உங்கள் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்!

கணவரிடம் முதலில் சொல்லவேண்டியது:
“இதோ பாருங்கள். நான் மைசூர்ப்பாகு செய்யப் போகிறேன். உங்கள் புத்திர காமேஷ்டிகளை எல்லாம் அரை மணி நேரம் பார்த்துக் கொண்டிருங்கள்” என்று  சொல்லுங்கள்.

பிறகு மேல் பரணில் இருக்கும் அலுமினிய டப்பாவைச் சிரமப்பட்டு கீழே இறக்கித் திறவுங்கள். அது சீயக்காய் பொடி டப்பாவாக  இருக்கும், அதைத் தூக்கி வைத்து விட்டு பிளாஸ்டிக் டப்பாவை எடுக்கவும். “ஏய்..ராஜி, சமையல் அறைக்கு யாரும் வரக்கூடாது. வந்தால் முதுகுத் தோலை உரித்து விடுவேன்” என்று கதவருகில் நிற்கும் ராஜியைப் பார்த்துக் கத்துங்கள்.

பழைய நியூஸ் பேப்பரைப் பிரித்துப் போட்டுக் கடலை மாவைச் சலிக்க...,,,  ஒரு நிமிஷம்..இருங்கள்  .  “அடே ராம்ஜி! போய் மாடி வீட்டு மாமியிடமிருந்து மாவு சல்லடை வாங்கி வா” என்று சொல்லவும். இதற்கிடையில் வனஸ்பதி டப்பாவில் நெய் குறைவாக இருப்பதைப் பார்க்கவும்.
“உங்களைத் தானே? கோடிக் கடைக்குப் போய்  அரைக் கிலோ வனஸ்பதி வாங்கி வாருங்கள்” என்று கணவரிடம் ஆர்டர் கொடுக்கவும்.