Showing posts with label அன்புள்ள டில்லி. Show all posts
Showing posts with label அன்புள்ள டில்லி. Show all posts

August 25, 2019

படமும் ( கோர்ட்) நோட்டீஸும்!

அறுபது, எழுபதுகளில் டில்லியில் நான் இருந்த போது, ராமகிருஷ்ணபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டியின் துணைத் தலைவராக இருந்தேன்சங்க நிகழ்ச்சிகளை   நிறைய நடத்தி வந்தோம் 
அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களை காலைக் காட்சிகளாகத் திரையிடுவோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சங்கத்திற்கு நல்ல வருமானமும் இருந்தது. அந்த காலகட்டத்தில் கலாகேந்திரா நிறைய படங்களை எடுத்துக் கொண்டிருந்தது.
    திரைப்படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா' கோவிந்தராஜன் என் நண்பர். எங்க ஊர்க்காரர். அவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நான் சென்னை ஜி பி -வில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
 எதிர்நீச்சல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டம் அதுஎதிர்நீச்சல் படத்தை ஒரு காட்சி டெல்லியில்  நாங்கள் திரையிட விரும்புகிறோம்  என்று தெரிவித்தேன்.   படத்தை கொடுத்து உதவ வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். அவரும் ஒப்புக் கொண்டார்..
எங்கள்  சொசைட்டி திரைப்படத்தை விளம்பரப்படுத்தி, டிக்கெட்டுகள் அச்சடித்து  மளமளவென்று விற்பனை செய்யத்  தொடங்கி விட்டது.
 “படத்தின் பிரின்ட்டை உங்களுக்குச் சேர்ப்பது என்னுடைய பொறுப்பு என்று கோவிந்தராஜன் சொல்லியிருந்தார். ஆகவே கவலையில்லாமல் இருந்தேன்.

April 08, 2010

அன்புள்ள டில்லி - 18

ஸ்ரீதருடன் ஜலந்தருக்கு
டைரக்டர் ஸ்ரீதர் என் நண்பர் மட்டுமல்ல. நானும் அவருக்கு நண்பர். ’ஸ்ரீதரும் நானும்’ கட்டுரையில் விரிவாக எழுதி இருக்கிறேன்.)

 ஸ்ரீதர் ஒரு சமயம் டில்லி வந்திருந்தார். அவர் தயாரித்து வந்த ஹிந்திப் பட பிஸினஸ் விஷயமாக ஜலந்தர் போக வேண்டியிருந்தது. நானும் அவரும் ஒரு  காரில் சென்றோம்,  மறுதினம் மாலைதான் திரும்பினோம். . இதில் வேடிக்கை என்னவென்றால் காரில் போகும்போது பேசியது போதாது என்று, ஜலந்தர் ஹோட்டல் அறையில் இரவு முழுதும் பல விஷயங்களை விடாமல் பேசித் தீர்த்தோம்.
நாங்கள் சென்றது பயங்கர டிசம்பர் குளிரின் போது. பல வருஷங்களாக டில்லியில் இருந்த எனக்கே குளிர் கடுமையாக இருந்தது. ஸ்ரீதருக்கு? நம்ப மாட்டீர்கள். இரவு ஷர்ட்டைக் கழற்றிவிட்டார். போதாதற்கு மின் விசிறியையும் சுழல விட்டார்.நான் குளிரில் மரவட்டை மாதிரி சுருண்டு விட்டேன்.
ஸ்ரீதர் என்னிடம் சொன்ன விஷயங்களைக் கிசுகிசுவாக எழுத ஆரம்பித்தால், பல நூறு துணுக்குகளை எழுத முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜலந்தரில் ஸ்ரீதரைச் சந்தித்த சில பஞ்சாபி டிஸ்ட்ரிப்யூட்டர்கள், தமிழ் நடிகர், நடிகைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த விவரங்களுக்கு முன் இவை ஒன்றுமே இல்லை. அத்துடன் பல படத் தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள், டெக்னீஷியன்கள் ஆகியவர்களைப் பற்றியும் நிறையத் தெரிந்து வைத்திருந்தார்கள். லேட்டஸ்டாக இருந்தார்கள். பேச்சில் லட்சங்கள்தான் அதிகம் அடிபட்டன.
ஸ்ரீதருக்கு அவர்கள் காட்டிய மரியாதையைப் பார்த்து அசந்து போய்விட்டேன். ஸ்ரீதரே நேரே வந்து விட்டதால் காரியம் பத்து நிமிஷத்தில் முடிந்து விட்டது. என்னையும் ஒரு வி.ஐ.பி.யாக கருதி உபசரித்தார்கள்!
பிரியா விடை
டில்லியில் உள்ள ஒரு விளம்பர எஜன்ஸிக்கு ஒரு தமிழ் எழுத்தாளர் முழு நேர காபிரைட்டராகப் பணியாற்றத் தேவை என்று அறிந்து என்னைப் பற்றி குறிப்புகளை அனுப்பினேன். கதை, கட்டுரை எழுதும் போது தோன்றும் கற்பனைகளை விட, என்னைப் பற்றி சுயப் பிரதாபம் அடித்துக் கொண்டபோது பெருக்கெடுத்த கற்பனைகள் பல மடங்கு அதிகமானவை! ( வலைப்பூவைப் படித்துவரும் உங்களுக்கு நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.)
அந்த ஏஜன்ஸிகாரர்கள் அதில் உள்ளவற்றைப் படித்து நம்பினார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இந்த ஆசாமி கற்பனை வளம் உள்ளவன் என்று தெரிந்து கொண்டார்கள். சுயப்பிரதாபம் என்பதும் ஒரு விளம்பரம தானே!  ஆகவே பேட்டிக்குக் கூப்பிட்டார்கள்.

April 01, 2010

அன்புள்ள டில்லி- 17

அன்புள்ள டில்லி கணேஷ்
    டில்லியில் பல சங்கங்கள் உள்ளன அவைகளில் நான்கு அமெச்சூர் நாடகக் குழுக்களும் உள்ளன. (இருந்தன என்று சொல்வதும் சரியாக இருக்குமோ?) இந்த நான்கு குழுவினருக்கும் நான் நாடகம் எழுதிக் கொடுத்தேன். அதன் காரணமாகவும் வேறு பல காரணங்களாலும்  இந்த நாடக மன்றங்கள் இப்போது செயலிழந்து உள்ளன. வருஷத்திற்கு ஓரிரு நாடகம் கூடப் போடுவதில்லை. இப்படிப்பட்ட குரூப்களில் இருந்த கணேசன் என்ற இளைஞர் நல்ல திறமைசாலி. நகைச்சுவை உணர்வும், விரைவில் எல்லாரையும் கவர்ந்துவிடும் சாமர்த்தியமும் இருந்தது. பேச்சில் நகைச்சுவை சரளமாகப் பொழியும். அவர் என் நண்பர்.
        ஒரு சமயம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஆர். கே. புரம் கழகத்தின் ஆண்டு விழாவிற்குப் போயிருந்தேன். தலைவரோ வேறு யாரோ வரத் தாமதமாகவே, அரை மணி நேரம் ஏதாவது புரோகிராம் நடத்தித் தரும்படி என்னைக் கேட்டார்கள். நான் பெரிய கில்லாடி என்பதால் அல்ல. ஆளில்லா டில்லிப் பட்டணத்தில் என்னைப் போல் பல இலுப்பைப் பூக்கள் உண்டு.
    விண்வெளிப் பயணக் கதாகாலட்சேபத்தை நடத்தலாம் என்று தீர்மானித்தேன். பின் பாட்டு பாடவும், "ஆமாம் சாமி' என்று சொல்லவும் சில துணை நடிகர்கள் தேவை. ரிகர்சல் எதுவுமில்லாமல் எப்படி நடத்துவது? சங்கக் காரியதரிசியோ பரபரத்தார். கணேசனிடம் சரியாக மூன்று நிமிஷத்தில் கதையைச் சொன்னேன். அவர்தான் முக்கிய பின்பாட்டுக்காரர்.. சுமாராக பாடக்கூடியவர், "சமாளிக்கலாம்' என்று சொன்னார். மேடை ஏறிவிட்டோம்.
அடுத்த அரைமணி நேரம் ஒரே தமாஷாகக் கதை நடந்தது. எங்களுக்கே ஆச்சரியம், ஒரு ரிகர்சல் கூட இல்லாமல் நடத்தும் கதா காலட்சேபத்திற்கு  இவ்வளவு வரவேற்பா என்று!  கதையை எழுதியவன் நான் என்பதால் எனக்கு ரிகர்சல் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணேசனுக்கு?   உண்மையான திறமைசாலியாகவும் கற்பனைத் திறனும் உள்ளவரகவும் இருந்ததால்  அவர் வெளுத்துக் கட்டி விட்டார்.
இந்த கணேசன் தான் டில்லி கணேஷ்  என்று பின்னால் பிரபலமடைந்து தமிழ்த் திரை உலகில்  கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பவர். கொஞ்சம் டில்லி கணேஷைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன்.
டிண்டா மாமி
டில்லியில் இருந்த போது கணேசன் பேச்சலர். எதோ ஒரு மெஸ்ஸில் சாப்பாடு. அது போரடிக்கும் போதெல்லாம் என் வீட்டிற்கு வருவார். கூட ஒரு நண்பரையும் அழைத்து வருவார். வீட்டிற்குள்ளே வந்ததும் முதல் காரியமாகத் தன் நண்பருடன் ஒரு சின்ன நாடகம் நடத்துவார்.
"எண்டா அவஸ்தைப்படறே? இப்போதுதானே உள்ளே நுழையறோம். அதுக்குள்ளே சாப்பிடறீங்களான்னா மாமி கேட்பாங்க? ஐந்து நிமிஷம்  பொறுத்தால் தட்டு போடுவாங்க. சும்மா இருடா...... சார், இவன் சரியான காய்ஞ்ச கிராக்கி'' என்பார். அவர்களுக்குச் சாப்பாடு பண்ணி போடுவோம். சில சமயம், நாங்கள் சாப்பிட்டு எல்லாவற்றையும் காலி பண்ணிய பிறகு வருவார். "அதுக்கென்ன மாமி அவசரம்? அரை மணியிலே சட்புட்டுன்னு ஒரு வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி பண்ணி அப்பளம் பொரிச்சுட மாட்டீங்களா? உங்க சாமர்த்தியம் யாருக்கு வரும்?'' என்று சொல்வார். கமலாவும் இந்த ஐஸிற்கு மயங்கி சமையல் பண்ணிவிடுவாள்.

March 26, 2010

அன்புள்ள டில்லி- 16

ஆவி உலகத் தொடர்பு பற்றிய விஷயங்களில் எனக்குப் பல
வருஷங்களாக ஆர்வம் உண்டு. பல புத்தகங்களைப் படித்தவுடன் சில பரிசோதனைகளையும் செய்துள்ளேன்.  (”ஆவிகளும் நானும்” கட்டுரை பின்னால் எழுதுகிறேன்.)டில்லிக்குச் சென்ற பிறகு இதற்கெல்லாம் அவகாசம் இல்லை. அங்கு வேறு பல விஷயங்களில் என் கவனம் சென்றது.
இந்தச் சமயத்தில் டில்லிப் பெண்மணி (தமிழர்தான்) ஒருவர் இந்த  ஈ.எஸ்.பி (EXTRA SENSORY PERCEPTION). சக்தி வாய்ந்தவராக இருப்பது தெரிந்தது     இதற்கிடையே பீட்டர் ஹர்க்கஸ் என்பவரது வாழ்க்கை வரலாற்றை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. இவர் அபார ஈ.எஸ்.பி. சக்தி கொண்டவர். இந்த புத்தகத்தின் சுருக்கத்தை தினமணி கதிரில் எழுதினேன். அதனால் பழைய ஆர்வம் மறுபடியும் தொத்திக் கொண்டது.
 டில்லிப் பெண்மணி உண்மையிலேயே தாம் ஒரு அசாதாரண சக்தி கொண்டவர் என்பதைப் புலப்படுத்தினார்.இவருடைய ஈ.எஸ்.பி. சக்தி மூலமாகப் பலரது பிரச்னைகளுக்குப் பதில் கிடைத்தது. பரிகாரங்கள் சொல்லப்பட்டன. பலர் பலன் கண்டனர், பத்திரிகை வாசகர்களுக்கு ஏன் உதவி செய்யக் கூடாது என்ற எண்ணத்தில், தினமணி கதிரில் "மீடியம் பதில்கள்' என்ற பகுதியை எழுத ஆரம்பித்தேன். வாசகர்களின் பிரச்னைகளுக்கு மீடியத்திடமிருந்து பதில் பெற்றுப் பிரசுரிக்கப்பட்டது

March 20, 2010

அன்புள்ள டில்லி- 15

ஒரு சமயம் சோ டில்லிக்குத் தன் நாடகக் குழுவினருடன் வந்திருந்தார். அவரைப் போய்ப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.  துக்ளக் பத்திகையை ஆரம்பிக்கு முன்பு அவர் வந்திருந்தார்.
பத்திரிகை நிருபர் கூட்டம் ஒன்றை நடத்தினார். போயிருந்தேன். அங்கு  அவரிடம் "எந்தக் கேள்விக்கும் தயாரா?' என்று கேட்டு அதற்கு, அவரும் "சரி' என்று சொன்ன பிறகு பல சங்கடமான கேள்விகளைக் கேட்டேன்: அவரைக் காரசாரமான கேள்விகளையும் கேட்டேன்.. சோவும் சளைக்காமல் பதில் சொன்னார். கூட இருந்த நிருபர்கள் எனக்கும் அவருக்கும் எதோ சச்சரவு தான் வந்துவிட்டது என்று எண்ணி, பைத்தியக்காரத்தனமாக சமாதானம் (!) செய்ய முயன்றார்கள். "யு ஹேவ் வன் தி பேட்டல்; பட் லாஸ்ட் தி வார்'' என்று இங்கிலீஷில் கூறினார்கள். சோவோ, "ஸார், அவர் கேட்பதைக் கேட்கட்டும்'' என்று அமைதியாகச் சொன்னார். அதன் பிறகு பேட்டிக் கட்டுரையை எழுதினேன். தினமணி கதிரில் "சோவுடன் ஒரு மோதல்' என்ற தலைப்பில் என் கட்டுரை வெளியாயிற்று
. (அதே வாரம் குமுதம் இதழ், சோ எழுதிய "மோதாமல் ஒரு நாளும் இருக்க மாட்டேன்'  என்ற தலைப்பில், இலவச இணைப்பு ஒன்றைத் தந்தது. என் "மோதல்' கட்டுரையைப்  பார்த்து விட்டு ஒரு பிரபல பத்திரிகாசிரியர், "இந்தப் பேட்டி, தி இண்டர்வியூ ஆஃப் தி இயர்' என்று மனதாரப் பாராட்டினார்.
(இந்த கட்டுரையைத் தேடிப் பிடிக்கப் பார்க்கிறேன். அகப்பட்டால் பின்னால் வெளியிடுகிறேன்.)
(சோ அப்போது மொட்டை இல்லை: நான் அவ்வளவு வழுக்கை இல்லை. நேருக்கு வெயிஸ்ட் கோட் போல, சோவுக்கு மொட்டையையும், எனக்கு வழுக்கையையும் கோபுலு டிரேட் மார்க ஆக்கி விட்டார்!)
அண்ணாவின் மீசை
அண்ணா ராஜ்ய சபை உறுப்பினராக இருந்த சமயம் (என்று நினைப்பு). அப்போது  அண்ணா,  ஜப்பான் முதலிய வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று திரும்பினார். வெளிநாட்டு அனுபவங்களைக் கேட்டு எழுத அவரைப் பார்க்கப் போனேன். திரு. செழியனின் புதுடில்லி இல்லத்தில் அண்ணா இருந்தார். சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் போய் வந்த விவரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த போது, '' இந்தப் பயணத்தில் போது எனக்கு ஒரே ஒரு சங்கடம்தான் எற்பட்டது. அது செல்ஃப் ஷேவிங். பழக்கமே இல்லாத காரணத்தால் அவதிப்பட்டேன். முக்கியமாக என் மீசை விஷயம்தான் ரொம்பத் தொல்லையாகப் போய்விட்டது. வலது பக்கம் அதிகமாக இருப்பதாகத் தோன்ற, இடது பக்க மீசையைச் சிறிது வெட்டினால் அது பெரிதாகவும் வலது சின்னதாகவும்ஆகிவிடும். கடைசியில் எனன் செய்தேன் தெரியுமா? மீசையையே எடுத்து விட்டேன்'' என்றார். மீசை இல்லாத அண்ணாவைப் படம் பிடித்துப் பத்திரிகைக்கு அனுப்பினேன்.

March 15, 2010

அன்புள்ள டில்லி -14

திரைப்படத் தயாரிப்பாளர் கலாகேந்திரா' கோவிந்தராஜன் என் நண்பர். அவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டு "எதிர் நீச்சல்' படம் போடுவதற்கு ஏற்பாடு செய்தேன். விளம்பரப்படுத்தி டிக்கெட்டுகள் மளமளவென்று விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். "படம் பிரிண்ட் உங்களிடம் சேர்ப்பது என் பொறுப்பு'' என்று அவர் என்னிடம் கூறி இருந்ததால், கவலை இல்லாமல் இருந்தேன்.
ஆனால் ஒரு ஆசாமி ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். அவர், அந்தப் படத்தின் டில்லி டிஸ்ட்ரிப்யூடர். தன் தொழிலில் மண்ணைப் போடுபவர்களைச் சும்மா விடக் கூடாது என்று தீர்மானித்தார். சங்கத்தின் நிர்வாகிகள் யார் யார் என்று கண்டுபிடித்து, வக்கீலை வைத்து, கோர்ட்டில் அவரது உரிமைகள் மீறப்படுவதாக மனு கொடுத்து சம்மன் "சர்வ்' செய்ய எற்பாடு செய்து விட்டார்.
சங்க நிர்வாகிகள் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள். எப்படியாவது பணம்  செலவு செய்தாவது, சம்மனை இவர்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று  கங்கணம் கட்டிகொண்டார்,
இதன் காரணமாக டிஸ்ட்ரிப்யூடர் அமீனாவிற்கு "காப்பி செலவு', டாக்ஸி வசதி எல்லாம் கொடுத்து சம்மன் "சர்வ்' செய்து விட்டார் .
நல்ல காலம், சங்கத்தில் எனக்கு எவ்விதப் பொறுப்பும் இல்லாமல் இருக்கவே எனக்குச் ச்ம்மன் வரவில்லை. (பொறுப்பில்லாத ஆசாமியாக இருப்பதிலும் நன்மை இருக்கிறதைக் கவனியுங்கள்!)
ஆனால் சம்மன் பெற்றவர்கள் யாவரும் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்குத் தைரியம் கொடுப்பதற்காக (?)  நானும் டில்லி கோர்ட்டுக்குச் சென்றேன்.
தலைநகரில் உள்ள கோர்ட்! உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சிதான் எற்பட்டது. ஒரு மேஜையில் நீதிபதி. சுற்றிலும் ஒரே சள சள கூட்டம். பீடிப் புகை, வாக்குவாதங்கள். அழுக்குச் சுவர்கள். தள்ளாடும் நாற்காலிகள். மேஜைகள். பெயிண்டையே பார்த்தறியாத கதவுகள். ஜன்னல்கள். எதிர்க் கட்சி வக்கீல் எதோ உருதுவில் ஜட்ஜ் (மாஜிஸ்டிரேட்டோ?) அவர்களிடம் சொன்னார். அவர் எங்களைப் பார்த்து இந்தியில் கேட்டார்.  எங்களில் ஒருவர், "யுவர் ஹானர்...'' என்று ஆரம்பித்து இங்கிலீஷில் பதில் சொன்னார். மாஜிஸ்டிரேட்டோ, "ஹான்ஜி, போலியே'' என்று இந்தியில் சொன்னார்.

March 10, 2010

அன்புள்ள டில்லி - 13

அகில இந்திய வானொலி நிலையம், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், அரசு விளம்பர இலாகா, நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்றவைகள் (காசு அதிகம் தராவிட்டாலும்) மொழி பெயர்ப்பு வேலை தருவதை அறிந்தேன். அங்கெல்லாம் ’வேண்டியவர்’களுக்குத்தான் சான்ஸ்! உங்களுக்குத் தமிழ் மொழியை விட அங்குள்ள சிலரை அதிகம் தெரிந்திருக்க வேண்டும். அல்லது  நீங்கள் பிரதி உபகாரம் செய்யும் நிலையில் இருக்க வேண்டும்.  என்னிடம் இந்த இரண்டும் இல்லை.
இங்கேயே எழுத வேண்டும்
நான் வானொலி நிலையத்தில் மொழிபெயர்ப்பாளனாக நுழைந்ததும் ஒரு சுவையான அனுபவம்.
வெளிநாட்டு தமிழ் ஒலிபரப்பு நிறைய இலாகாவில் மொழிபெயர்ப்புப் பணிக்கு பலருக்கு வாய்ப்பும் பணமும் தரப்படுகிறது என்று எனக்குத் தற்செயலாகத் தெரிந்தது.  இந்தப் பணிகளில் ஈடுபட்டு கொஞ்சம் பணம் பண்ணிக்கொண்டிருப்பவர்கள் வெளியில் அதைப்பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள்.
வீர்மானி என்ற ஒரு சிந்தி மொழியாளர்தான் வானொலி நிலையத்தில் தமிழ் புரோகிராம் எக்ஸிகியூடிவ்வாக இருந்தார். . ஒரு நாள் அவருக்குப் போன் செய்தேன். ” நான்  தமிழ் எழுத்தாளன். பலருக்கு மொழிபெயர்ப்பு வேலை நீங்கள் தருகிறீர்கள்.  எனக்கும் வாய்ப்பு தரக்கூடாதா?” என்று கேட்டேன்.
         "உங்களுக்கு எதற்கு சான்ஸ் தர வேண்டும்?  நீங்கள் எந்த விதத்தில் ஸ்பெஷல்?'' என்று அவர் கேட்டார். "” ஸ்பெஷல் இல்லை. என் மொழிபெயர்ப்புத் திறனை டெஸ்ட் செய்து பாருங்கள். சரியில்லை என்றால் நான் எதுவும் கேட்க முடியாது. நன்றாக இருக்கிறது என்றால் ஏன் எனக்கும் வாய்ப்பு தரக் கூடாது?'' என்று கேட்டேன்.
"என் எதிரிலேயே மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும். தயாரா?'' என்றார்.
சவாலை எற்றுக் கொண்டு போனேன். திரு வீர்மானியை சந்த்திதேன். “டைரக்டரைப் பார்க்கலாம் வாருங்கள்” என்றார். ஒற்றை நாடியாக இருந்த அந்த தமிழ் அதிகாரியிடம் என்னை  அழைத்துச் சென்றார். (அவர்தான் கவிஞர்  துறைவன் என்பது பின்னால் தெரிந்தது.)
ஒரு ஆங்கில உரையைத் தந்தார். அங்கேயே உட்கார்ந்து எழுதினேன். சரியாக 35 நிமிடங்களில் முடித்தேன். திரு துறைவனுக்குச் சிறிது ஆச்சரியம். “ இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டீர்களா?”  என்று கேட்டபடியே, என் மொழிபெயர்ப்பை வார்த்தைக்கு வார்த்தை சரி பார்த்தார்.  ஒரே ஒரு வார்த்தையை மாற்றச் சொன்னார்.

March 02, 2010

அன்புள்ள டில்லி - 12

பணம் புரளும் டில்லி
இந்தியாவின் தலைநகர் என்பதால் டில்லியில் பிழைப்பதற்கு எராளமான வழிகள் உள்ளன. இங்குள்ள அரசாங்கக் கட்டிடங்களுக்கு (பல மாடிகள் கொண்டவை) வெள்ளை அடித்தே கோடீசுவரனாகிவிட முடியும். குண்டூசி சப்ளை செய்து பணக்காரனாக ஆக முடியும். டில்லி காண்டிராக்டர்களின் சொர்க்கம். லைசென்ஸ், பர்மிட் முதலியன வழங்கும் அலுவலகங்கள் பல இருப்பதால் இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் வருபவர்கள் எராளம். இதனாலும் இவர்கள் தரும் "காபி செலவு"களினாலும் பணப் புழக்கம் எராளம். தரகர்கள் வளமாக வாழும் பூமி இது.
பார்ட்டிகள் நிறைந்த டில்லி
            டில்லியில் விருந்துகளுக்குப் பஞ்சமே இல்லை. தூ தரகங்கள் அவ்வப்போது தேர்ந்தெடுத்து அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று அழைப்பு விடுப்பார்கள். "உண்டறியாதன உண்டேன்' என்று கூறும் அளவிற்குக் கிடைக்கும். சில சமயம் பரிசுப் பொருள்களும் தரப்படும். அத்துடன் சைக்ளோஸ்டைல் செய்யப்பட்ட பத்திரிகைக் குறிப்பு எதாவது தருவார்கள். "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற வாசகத்தை மறக்காத நிருபர்கள், தங்களிடம் தரப்பட்ட குறிப்பைப் பத்திரிகையில் பிரசுரித்து விடுவார்கள்.
இன்ன எம்பஸியில் பார்ட்டி என்று தகவல் கிடைத்தாலே போதும், அழையாத விருந்தாளிகளாகப் போகிறவர்களும் உண்டு.
ஒரு சமயம் ராஷ்டிரபதி பவன் டீ பார்ட்டிக்கு எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது. என் மனைவி கமலாவுடன் சென்றேன். (கமலா இதற்காகப் புது பட்டுப் புடவை வாங்கிக் கொண்ட விவரங்கள் எல்லாம் இங்கு அனாவசியம்) சின்னப் பொதுக் கூட்டம் மாதிரி கூட்டம். எல்லாரும் ஹாலில் நின்று கொண்டிருந்தோம். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாததால் பல பேருக்கு யாருடன் பேசுவது என்று தெரியவில்லை. அவரவர் தங்கள் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

February 24, 2010

அன்புள்ள டில்லி - 11

எழுத்தாளர் தி. ஜானகிராமன் எவ்வளவுக்கெவ்வளவு திறமை வாய்ந்த  எழுத்தாளரோ அவ்வளவு எளிமை மிக்கவர். அலட்டல் இல்லாதவர். 'இலக்கியப் பத்திரிகைகள் அவரைச் சொந்தம் கொண்டாடினாலும், அந்த ஒரு சின்ன வட்டத்திற்குள் அகப்பட்டுக்  கொள்ளவில்லை.
அவர் டில்லியில் ஆல் இண்டியா ரேடியோவில் பணியாற்றி வந்தார். அவரது அலுவலகமும் என் ஆபீசும் எதிர் எதிர் கட்டடம். யு.என்.ஐ. கான்டீனில் இடைவேளைகளில் அவருடன் எத்தனையோ முறை அளவளாவியுள்ளேன். அவர் எல்லா  பத்திரிகைகளையும் விடாமல் படிப்பவர் அல்ல. ஆனால் படிப்பவைகளை ரசித்துப் படிப்பார்.
ஒரு சமயம் "மோனா"விற்கு  மாத நாவல் ஒன்றை எழுதித் தரும்படி "சாவி' கேட்டிருந்தார். நாவலை வாங்கி அனுப்புவது என் பொறுப்பாக இருந்தது. நான் தினமும் அவரைச் சந்தித்து 10,15 பக்கங்கள் என்று வாங்கி விமான மூலம் அனுப்பி வந்தேன்.
"சார், உங்கள் நாவல் எத்தனை பக்கம் வரும்?'' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு வியப்பை அளித்தது மட்டுமல்ல, ஒரு அரிய பாடத்தையும் போதித்தது.
"நான் கதாபாத்திரங்களை நன்கு தீர்மானித்து விடுவேன். அதன் பிறகு, கதை என் கையில் இல்லை. பாத்திரங்கள் கையில் உள்ளது. ஆகவே கதையை எத்தனை பக்கங்கள் எடுத்துச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்'' என்றார்.
 ( ஒரு இடைச் செறுகல். பின்னால் நான் ஒரு நாவல் எழுதும்போது அவர் சொன்னபடி கேரகடர்களைத் துல்லியமாக  மனதில் உருவாக்கிக் கொண்டேன். அடுத்து கதையை 16  அத்தியாயங்கள் என்று  நிர்ணயித்து, அந்தந்த அத்தியாயத்தின் கதையை ஒன்றிரண்டு வரிகளில் எழுதினேன். தி.ஜா, சொன்னதை பின்பற்றி எழுதினேன். இரண்டே நாளில் 60 பக்க நாவலை எழுதினேன். அந்த  நாவல் பற்றி இன்னும் பல விவரங்கள் உள்ளன. பின்னால் பார்க்கலாம்.)
 \           சரி, தி ஜா.வின்  நாவலுக்கு வருவோம். ஒரு 29’ம் தேதி கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார். முதல் தேதிக்குள் புத்தகத்தை அச்சடித்து நாலைந்து பிரதிகளை விமான மூலம் ஆசிரியர் சாவி  எனக்கு அனுப்ப, அவற்றை தி.ஜா.விடம் கொடுத்தேன். "அட, ரொம்ப வேகமான் வேலையாக இருக்கிறதே. பாவம், உங்களை மிகவும் சிரமப்படுத்தி விட்டேன்'' என்றார்.
பதிலுக்கு நான் அவரை சிரமப்படுத்திய விஷயத்தைச் சொல்லுகிறேன்.

February 19, 2010

அன்புள்ள டில்லி-- 10

ஒரு நாள் விடிகாலைப் பொழுது. டெலிபோன் மணி அடித்தது. சென்னையிலிருந்து டைரக்டர் பாலசந்தர்தான் பேசினார்.
"ஹலோ, ஒரு சந்தோஷமான சமாசாரம். நம்ப படம் 'வறுமையின் நிறம் சிவப்பி'ற்கு தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்திருக்கிறது. இப்போதுதான் பேப்பரைப் பார்த்தேன். சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள முதன்முதலில் உங்களுக்குத்தான் போன் பண்ணுகிறேன். படம் டில்லியில் தயாரிக்கப்பட்ட போது நீங்கள் செய்த உதவிகளை...'' (என் தற்பெருமையைத் தவிர்க்க மீதி வார்த்தைகளை இங்கு தரவில்லை!)
இதே ’நம்ப’ படம் ’வறுமையின் நிறம் சிவப்பு' பின்னால் பெரிய துயரத்தையும் தரப்போகிறது என்று அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.
இதை இந்தியில் எடுக்க மறுபடியும் கே.பி., கமல் அண்ட் கோ டில்லி வந்தனர். டில்லியில் சில நாள் படம் எடுத்து விட்டு சிம்லா போய்த் திரும்பினார்கள். பாலசந்தர், கமல் முதலானோர் விமானத்தில் வந்து, சென்னைக்கு சென்று விட்டனர். படப்பிடிப்புக் குழுவினர் பஸ்ஸில் டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள்.  இமாசல் பிரதேஷில்ஒரு பெரிய பள்ளத்தில்  பஸ்  விழ, எட்டு பேர் அனாமதேய மலைப் பாதையில் இறந்து போனார்கள். செய்தி அறிந்ததும் பாலசந்தர் மறுநாளே டில்லிக்கு பறந்து வந்து சண்டிகாருக்குச் சென்றார். காயமடைந்தவர்கள் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.  சென்னைக்குப் பயணம் செல்லக் கூடிய நிலையில் உள்ளவர்கள் எல்லாரையும் டீலக்ஸ் பஸ் ஒன்றில் ஏற்றி  டில்லிக்கு அனுப்பினார். இவர் விமானத்தில் டில்லிக்கு வந்தார். 
எல்லோருக்கும் விமான டிக்கட்
டில்லியிருந்து செய்ய வேண்டிய எற்பாடுகளை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்து, தமிழ்நாடு ஹவுஸிற்கு அழைத்துப் போனேன். "சார், யூனிட் எல்லோருக்கும் விமான் டிக்கட் வாங்க வேண்டும். யூனிட் மொத்த பேரையும் விமானத்தில் அழைத்துப் போகப் போகிறேன்'' என்றார்.
இறந்து போனவர்களின் உறவினர்களை விமானத்தில் அழைத்து வந்திருந்தார். இந்த வகையிலும் ட்ரங்க் கால், ஓட்டல் செலவு, டாக்ஸி செலவு என்று பல ஆயிரங்கள் செலவாகி இருந்தது.
"எல்லோரையும் விமானத்தில் அழைத்துக் கொண்டு போனால் செலவு பல ஆயிரம் ஆகுமே!'' என்று கேட்டேன்.
"தெரியும். தயாரிப்பாளர் தலையில் இந்தச் செலவைக் கட்டப் போவதில்லை. நானே 25000 ரூபாய் திரட்டி எடுத்து வந்திருக்கிறேன். சந்தோஷமான சமயத்திலும் சரி, சங்கடமான சமயத்திலும் சரி, அவரவர் தங்கள் குடும்பத்தினருடன் இருக்கத்தான் விரும்புவார்கள். நம்ப மாட்டீர்கள். சண்டிகர் போனதும், "எல்லாரும் விமானம் மூலம் சென்னைக்குப் போகிறோம்' என்று நான் அறிவித்ததும், பாதிப் பேருக்குக் காயங்களின் வலி மறைந்துவிட்டது. எத்தனை முகமலர்ச்சி'' என்றார்

February 11, 2010

அன்புள்ள டில்லி - 9

பிரபல பத்திரிகையின் ஆசிரியர் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்; பெரிய நிறுவனத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை. ஆகவே அவர் பணம் கேட்டவுடன் கொடுக்கத்தான் தோன்றியது. கொடுத்தேன். அதே சமயம் சங்கடத்தை விலை கொடுத்து வாங்கினேன்.
சென்னை திரும்பியதும், அவர் என்னை மறந்து விட்டார். சுமார் மூன்று
மாதங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டுக் கடிதம் போட்டேன். பதில் இல்லை. அப்புறம் போன் பண்ணினேன். டில்லியிலிருந்து போன் என்றால் "இல்லை' என்று சொல்ல அந்த போனுக்கே பழக்கப்படுத்தி விட்டாரோ என்னவோ, சுலபமாக அகப்படவில்லை. சக பத்திரிகை ஒன்றிலிருந்து பேசுவதாகப் பொய்சொன்ன போது  போனில் அகப்பட்டார். "அடேடே பணம்தானே! ஏழாம் தேதி அனுப்பி விடுகிறேன்'' என்றார். (அவர் சொன்ன தினத்தின் தேதி எட்டு!)
நானும் பொறுமையாக இருந்து, பிறகு பல தடவை போன் செய்தேன். (டில்லி-சென்னை எஸ்.டி.டி. வாழ்க!) ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையாகச் சொன்னார். (எழுத்தாளராயிற்றே, கற்பனை இல்லாமல் இருக்குமா?)
சென்னை நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவரும் பில் கலெக்டர் மாதிரி சென்று வசூல் செய்ய முயற்சி செய்தார். ஆனால் பணம் என்னவோ வரவில்லை.
சுமார் எட்டு மாதங்கள் போய்விட்டது. அப்புறம் ஒரு நாள் போனில் அகப்பட்டார். அவர் சொன்னார். "உங்கள் பணம் டிராஃப்ட் வாங்கி அனுப்பி விட்டேன். நேற்று அனுப்பினேன். உங்களுக்கு ஓரிரு நாளில் வந்து விடும்... அப்படி வராவிட்டால் (!!), தபாலில் தொலைந்து போனால் (!!!) சொல்லுங்கள். உடனே ட்யூப்ளிகேட் வாங்கி அனுப்பி விடுகிறேன்'' என்றார். இப்படி இவர் சொன்னபோதே  அப்பன் குதிருக்குள் இல்லை என்று அவர் சொல்கிறார் என்று தெரிந்து விட்டது.. டிராஃப்ட் ’எதிர்பார்த்தபடி' வரவில்லை.

இரண்டு மாதம் கழித்து சென்னை வந்தேன். அவர் அலுவலகத்திற்குப் போனேன். என்னை பார்த்தும் அவருக்கு ‘ஷாக்’!

February 07, 2010

அன்புள்ள டில்லி -- 8

கரண் சிங்கின் திறமை
டில்லியில் இருந்த போது, எம்.பி.க்களுடன் ஒரு சில அமைச்சர்களைத் தனிமையில் சந்தித்து இருக்கிறேன். அப்படி நான் சந்தித்த அமைச்சர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர் டாக்டர் கரண் சிங்.
தமிழர்கள் நடத்தும் கலை, கலாசார, இலக்கிய விழாக்களில் இவர் அதிகம் பங்கு கொள்வார். (அதாவது அவரைப் பங்கு கொள்ளச் சொல்வார்கள்.) அழகாக உரையாற்றுவார். ஜபர்தஸ்து எதுவும்  இருக்காது. அமைச்சராக இருந்த போதும் பலரை அவர் கவர்ந்தார்.
         ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்.. இது என் சொந்த அனுபவம்.  ஒரு சமயம் நான் ஒரு துக்ககரமான சூழ்நிலையில் டில்லியிலிருந்து அஸ்ஸாமில் உள்ள ஜோர்ஹட் நகருக்கு விமானத்தில் போக வேண்டியிருந்தது. ராணுவ டாக்டரான என் சிறிய சகோதரன் (26) சென்ற விமானம் அஸ்ஸாம்- சீனா எல்லையில் எதிரி குண்டுகளுக்கு பலி ஆனது. முன் தினம் பங்களாதேஷ் போர் முடிந்திருந்தது..ஈமக் கடன்கள் செய்ய நான் போக வேண்டியிருந்தது          
பதினைந்து நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலகத்தா விமான சேவை அன்று தான் துவங்கி இருந்தது. ஆகவே கல்கத்தா விமானத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை. ,உயர் ராணுவ அதிகாரிகளின் சிபாரிசில் டிக்கெட் கிடைத்தது. விமானம் கிளம்பப் பத்து நிமிஷத்திற்கு முன்புதான் விமான நிலையத்திற்குப் போக முடிந்தது. செக்-இன் பண்ணும் போது. பெட்டியை விமானத்திற்கு அவசரமாக அனுப்பும்படிச் சொல்லிவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி விமானத்தை அடைந்தேன். (அந்த காலத்தில் விமானத்தின் கீழே எல்லா பெட்டிகளும் சேர்த்து  வைக்கப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் பெட்டிகளை அடையாளம் காட்டிய பிறகுதான்  விமானத்திற்குள் ஏற்றுவார்கள். பாதுகாப்புக்காக இப்படி ஒரு ஏற்பாடு. விமானத்தில் ஏறியதும், நான் ”பெட்டி ஏறிவிட்டதா என்று தெரியவில்லயே. நான் அடையாளம் காட்டவில்லையே” என்று டிராபிக் அசிஸ்டென்டிடம் சொன்னேன். . "அதெல்லாம் வந்திருக்கும். இப்போது செக் பண்ண நேரமில்லை. சீட்டில் உட்காருங்கள்'' என்றார்.
"எப்படி சார் வந்திருக்கும்? நானே ஓடி வந்திருக்கிறேன். பெட்டியை உங்கள் ஆட்கள்தானே கொண்டு வர வேண்டும்?''
"சார் வீணாக விவாதம் செய்யாதீர்கள். பைலட் விமானத்தைக் கிளப்ப அவசரப்படுத்துகிறார்'' என்றார். அந்தச் சமயம் பைலட்டும் வந்து, "இனிமேல் டிலே பண்ண முடியாது'' என்றார். டிராபிக் அதிகாரி, "சார்..பெட்டி, கிட்டி என்று தகராறு பண்ணினால், உங்களை இறக்கிவிட்டு பிளேனைக் கிளப்பி விடுவோம்'' என்றார்.
"என்னப்பா, டிக்கெட் வாங்காதவன் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள? என் தம்பி ஒரு ஃப்லைட் லெஃப்டினென்ட். டாக்டர். இந்த யுத்தத்தில் செத்து விட்டான். அவனுக்கு ஈமக்கடன்கள் செய்யப் போகிறேன். உங்களுக்கு இரக்கமே கிடையாதா? பெட்டி, துணிமணி இல்லாமல், முன்பின் தெரியாத ஊரில் நான் என்ன செய்வேன்?'' என்று கதறினேன்.

January 28, 2010

அன்புள்ள டில்லி-7

ரீல் இல்லை; ரியல் தான்!
வாராவாரம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள், பேட்டிகள் எழுத வேண்டும் என்ற உத்வேகத்துடன் நான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். டில்லிக்குச் சென்ற சில மாதங்கள் கழித்துப் பத்திரிகையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். குமுதம் பத்திரிகை எனக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தது. என் கட்டுரைகள் இல்லாத இதழே இல்லை என்று சொல்லும் அளவுக்கு.  சில சமயம் 3,4  கட்டுரைகள் கூட வந்துள்ளன. பத்திகையில் பெயர் வருவதனால் மிக்க மன நிறைவும், வாராவாரம் வரும் செக்குகளால் ஓரளவு பர்ஸ் நிறைவும் எற்பட்டது.  எழுதுவதற்கு மிகுந்த ஊக்கம் அளித்தவள்  என் மனைவிதான். அவள், ‘வீட்டுக்கவலைகளை எல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றாள். உண்மையிலேயே அவள் எல்லாவற்றையும் நிர்வகித்து வந்தாள். பேனாவையும் பேப்பரையும் எடுத்தால் போதும். வீட்டில் ரேடியோகூட போடமாட்டாள். அப்போது நான் இருந்தது உண்மையிலேயே ஒரு குட்டி போர்ஷன். ஒன்றே கால் அறை. அந்தக் கால் அறையில் சமையல்;. இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. அந்த அரை அறையில் என்னை சந்திக்க வந்தவர்களை எண்ணிப் பார்க்கும்போது!  சாவி, நடிகர் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் சுஜாதா, பலரால் எளிதில் சந்திக்கவே முடியாத நிதி அமைச்சக (பட்ஜெட்)செயலர், பல பாராளுமன்ற உறுப்பினர்கள்.
அப்புறம்.... சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. இன்று இந்தியாவின் நம்பர்-1 கம்பெனியாக இருக்கும் நிறுவனத்தின் அன்றைய முதன்மை அதிகாரி. (கம்பெனியின் பெயரைச் சொன்னால், “போய்யா, ரீலுக்கும் அளவு உண்டு” என்பீர்கள். ஆகவே தவிர்க்கிறேன்.) இன்னும் பலர்.

புத்தகங்கள் படிப்பது, கட்டுரைகள், பேட்டிகள் எழுதுவது, ஆபீசுக்கு போவது இடைவேளையில் பிரிட்டிஷ், அமெரிக்க லைப்ரரிகளுக்கு போகவேண்டியது- இது தான் என் அன்றாட வேலை. என் மனவிக்குத்  தினதந்தி நிருபர் வேலை கிடைத்ததால், வீட்டு வேலையுடன் அந்த வேலையையும் அவள் கவனித்துக் கொண்டாள்.
ராணுவ தளபதிக்குக் கடிதம்
நானும் சுறுசுறுப்பாக வாராவாரம் எதாவது கட்டுரை எழுதி அனுப்பிக்
கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு பத்திரிகையில் ஒரு சின்ன செய்தி கண்ணில் பட்டது. மத்தியப் பிரதேசத்தில் தமிழர்கள் நிறைந்த ராணுவ பட்டாலியனில் ராணுவத் தளபதி தமிழில் பேசினார் என்று இருந்தது. ராணுவத் தளபதி வங்காளக்காரர் அவர் தமிழில் பேசினாரா? ஆகா, சுவையான கட்டுரைக்கு விஷயம் கிடைத்து விட்டது!  தளபதியைச் சந்தித்து விவரங்களைக் கேட்க  எண்ணினேன்.
எப்படி அவரைப் பார்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே ஒரு இன்லண்ட் லெட்டரில் அவர் பெயருக்கே ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டேன். அப்படி எழுதக்கூடாது என்று எனக்குத் தெரியாது. அப்போது நான் விவரம் தெரியாத இளைஞன். (இப்போது விவரம் தெரியாத முதியவன்!)

January 20, 2010

அன்புள்ள டில்லி - 6

ஹேமமாலினிக்கு டைரக் ஷன்
ராஜ்கபூரின் படத்தில்ஹேமமாலினி  நடிக்க ஆரம்பித்திருந்த சமயம் ஹேமமாலினி டில்லி வாழ் மதராஸிப் பெண்மணி என்பதால் அவரைப் பற்றி எழுத நினைத்தேன்.  போட்டோ கட்டுரை எழுத , அவரை சந்திக்க ஏதாவது சந்தர்ப்பம் வர்ரதா என்று காத்திருந்தேன்  கரோல்பாக்கில்  அவர் வீடு இருந்ததால் அங்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தேன். அந்த சமயம் டில்லியில் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்த ஹேமா வந்திருந்தார்.
அவருடைய அம்மாவிடம் பேசினேன். மறு நாள் மாலை வரச் சொன்னார். அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்
      கரோல்பாக்கில் ஒரு சின்ன போர்ஷனில்,கயிற்றுக் கட்டில், தட்டுமுட்டுச்  சாமான்கள் நிறைந்த  அறையில் சந்தித்தேன். பொங்கல் சம்பந்தமாகப் புகைப்படத் தொகுப்பு ஒன்றுக்காகப் படங்கள் எடுக்க விரும்புவதாகச் சொன்னேன்.
ஹேமாவின் அம்மா, "அதற்கென்ன எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரி டிரஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார்.
"கிராமத்துப் பெண்மணியாக டிரஸ் பண்ணுங்கள். கட்டம் போட்ட புடவை, சற்று கணுக்காலுக்கு மேலே வரும்படி கொசுவம் வைத்துக் கட்டுங்கள்'' என்றேன்.
"ஓ! கட்டம் போட்ட புடவையா?'' என்று கேட்டு விட்டு ஒரு நிமிஷம் தயங்கினார். "சரி ஒரு மணி நேரத்தில் டிரஸ், மேக்கப் எல்லாம் தயார்
பண்ணுகிறேன்'' என்றார் ஹேமாவின் அம்மா.
நானும், "காமிராவிற்கு பிலிம் வாங்கிக் கொண்டு அரைமணியில் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
பிலிம் வாங்கிக் கொண்டு போன போது ஹேமாவை ஒரு அசல் கிராமத்துக் குடியானவப் பெண்ணாக அலங்கரித்து இருந்தார் அம்மா. இதற்கென்று புதிதாக ஒரு புடவை வாங்கியிருந்தார். ஹேமா பின்னால் பிரபல ஸ்டாராக உருவானார் என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று அவரது தாயாரின் கவனிப்பு.. பாருங்களேன், நான் முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளனாக இருந்தும், அக்கறையுடன் படம் எடுக்க உதவி புரிந்தார். ஹேமா அவர்களும் மெல்லிய புன்னகை புரிந்தபடியே, பல்வேறு நடன‘போஸ்’ களை  மிகவும் அழகாகக் கொடுத்தார்

January 14, 2010

அன்புள்ள டில்லி - 5


கண்டேன் சாந்தி தேவியை
எம்.பி.யும் நானும் ஸ்கூட்டரை டெலிவரி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். பளபளவென்று இருந்த ஸ்கூட்டரைப் பார்க்கப் பார்க்க, முகம் தெரியாத ஒருவர் மேல் எனக்குப் பொறாமை எற்பட்டது. அவர்தானே இந்த ஸ்கூட்டரை அனுபவிக்கப் போகிறார்!
வீட்டிற்குள் போனதும் எம்.பி. என்ன செய்தார் தெரியுமா? ஸ்கூட்டர் சாவிகளை எடுத்து, "இந்தாங்க சாவி. வண்டி உங்களுக்குத்தான்'' என்றார். இதைக் கேட்டதும் எனக்குப் புல்லரித்தது. கண்கள் குளமாயின. (சும்மா, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி எழுத வேண்டியது ஒரு மாமூல். உண்மையில் சாவிகளைப் பெற்றுக் கொண்ட போது மனதில் திடீர் குஷி எற்பட்டது.)
"கறுப்பில்' அதிக விலை போகும் ஸ்கூட்டரை, தன் பணத்தைப் போட்டு வாங்கிக் கொடுத்தவர் திரு. தெய்வீகன்.
கிருஷ்ணன் செய்தது என்ன?
என் நண்பர் பி.என். கிருஷ்ணன் என்பவரிடமும் புது ஸ்கூட்டர் அலாட்மென்ட் வந்தால் கொடுக்க முடியுமா என்று ஒரு சமயம் கேட்டிருந்தேன். அவர் ஸ்கூட்டருக்காக புக் பண்ணியிருந்தார் ஆனால் நகர நெரிசலில் போவது  நம்ம்மால் ஆகாது, நான் ஸ்கூட்டரை வாங்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தார்.

January 06, 2010

அன்புள்ள டில்லி - 4

அருமையான அமைச்சர்
மறுநாள் பாதுகாப்பு துணை அமைச்சரின் வீட்டிற்குப் போய் அவரைப் பார்த்தேன். மனுவைப் படித்துப் பார்த்தார். அடுத்த நிமிஷமே - ஆம்  அடுத் த நிமிஷமே-- "ஓ.கே. உங்கள் சகோதரரை ராணுவப்பணியிலிருந்து விடுவித்து விட உத்தரவு போடுகிறேன்.'' என்று சொன்னார்.  கை குலுக்கி எனக்கு விடை கொடுத்தார். அமைச்சர் உத்தரவு போட்டாலும் அதை செயல் படுத்த  அரசு அதிகாரிகள் எத்தனை முட்டுக்கட்டைகள் போடுவார்களோ என்று யோசித்துக் கொண்டே விடை பெற்றேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அடுத்த மூன்றாவது தினம் புனாவிற்கு ஒரு  ராணுவ உத்தரவு ஒயர்லெஸ்ஸில்  சென்றது: "அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக்கவும். ரிலீஸ் உத்தரவு பின்னால் வருகிறது.''
             ரிலீஸ் உத்தரவு கிடைத்து விட்ட செய்தியை என் சகோதரர் தெரிவித்ததும், நன்றி தெரிவிக்க திரு சவானைப் பார்க்கச் சென்றேன். நிறைய பழம்,  அவருடைய 3 வயது பேத்திக்கு பிஸ்கட் என்று வாங்கி கொண்டு போனேன்! ஆனால் அவர் ஒரு பழம் கூட வாங்கிக் கொள்ளவில்லை. "உங்கள் சகோதரருடைய கேஸ் லட்சத்தில் ஒன்று. இம்மாதிரியான உண்மையான, நியாயமான கோரிக்கையை எற்காவிட்டால் நான் மந்திரியாக இருக்க லாயக்கில்லாதவன். மேலும் நீங்கள் வாதித்த விதமும் என்னைக் கவர்ந்து விட்டது. பெஸ்ட் ஆப் லக்'' என்று சொன்னார்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவது என்றால் சுலபமில்லை. பென்ஷன் பேப்பர்கள் பல இடங்களுக்குப் போய் வர மூன்று மாதமாவது ஆகும். என் சகோதரர் விஷயத்திலும் அப்படியே மூன்று மாதம் ஆயிற்று.  அதுவரை அவர் டியூட்டியில் இருந்ததாகக் கருதி முழுச் சம்பளமும் கொடுத்தார்கள்.
என் சகோதரர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தனது 45 வது வயதில் டாக்டர் ஆனார். அவரது வாழ்க்கை லட்சிய்ம் பூர்த்தி  ஆயிற்று. எல்லாம் அமைச்சர் டி.ஆர்.சவானின் உதவியால்!  மறக்க முடியாத மந்திரி டி.ஆர்.சவான்.

January 01, 2010

அன்புள்ள டில்லி --3


           அந்தப் பெண் எம்.பி. எங்களைக் காலி செய்யச் சொன்னது ஏன் என்பதைச் சொல்வதற்கு முன்  வேறு ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அந்தப் பெண் எம்.பி.யின் வீட்டுக்கு வந்த பல பிரமுகர்களில் ஒருவர், ஒரு மகாராஷ்டிர மாநில எம்.பி.  தன்னுடைய தமிழ் மாஸ்டர்ஜி என்று என்னை செல்வி அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  அவருடன் நான் ஆங்கிலத்தில் உரையாடுவது உண்டு.. என்னுடைய ஆங்கிலப் புலமை அவரைக் கவர்ந்து விட்டது. ஆகவே ஒரு நாள், "எனக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர முடியுமா?'' என்று கேட்டார்.
அவர் மகாராஷ்டிராவில் ஒரு மிகப் பெரிய பிரமுகர். எதிர்க் கட்சியின் தலைவராக இருந்தவர், அசெம்பிளியில் பின்னால் காங்கிரஸிற்கு வந்தார். இவரது மாப்பிள்ளை சில வருடங்கள் கழித்து பம்பாய் முதலமைச்சர் ஆனார்.
அவருக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர ஒத்துக் கொண்டேன். தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாடல், டிக்டேஷன் போன்று பாடங்கள். அவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் நிறையத் தவறுகள் ஏற்பட்டு விடும். அவருடைய வீக் பாயிண்டுகளைக் கண்டுபிடித்து அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தேன். என் மேல் அபார மதிப்பும் பிடிப்பும் எற்பட்டு விட்டது.

டெய்லி ரேட்
சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். "கொஞ்சம் பணம் தேவையாக இருக்கிறது'' என்றேன்.
"அடேடே, உங்களுக்கு பீஸ் கொடுக்கவே மறந்து விட்டேனே... முன்னேயே ஏன் கேட்கக் கூடாது?'' என்று சொல்லிக் கொண்டே தன் ப்ரீஃப் கேஸைத் திறந்தார். அதிலிருந்து ஒரு டைரியை எடுத்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தார். சுமார் ஐந்து நிமிஷம் என் பொறுமையைச் சோதித்து விட்டுச் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ஷாக் அடித்தது!

December 25, 2009

திக்குத் தெரியாத டில்லியிலே!


டில்லிக்குப் போன முதல் தினம் குளிர் நடுக்கியது. சாயங்காலம் நாலு மணிக்குச் சூரியன் போர்த்திக் கொண்டு ஓடிவிட்டதால், குளிர் ஒருபடி அதிகமாயிற்று. எழு மணிக்குச் சாப்பிட்டு விட்டு, படுக்கைக்குள் புகுந்தேன். எவ்வளவு போர்த்திக் கொண்டாலும் குளிர் எப்படியோ உள்ளே புகுந்து வந்து தாக்கியது. (இப்படி மனிதர்களைத் தொல்லைப்படுத்தும்   வித்தையை டில்லி குளிருக்குக் கற்றுக் கொடுத்த குரு, சைதாப்பேட்டை கொசுவாகத்தான் இருக்க வேண்டும்!)

குளிர் காரணமாகத் தூக்கம் வரவில்லை. வெளியே வீதியில் சந்தடி அடங்கவில்லை. இந்தக் குளிரில்  வீட்டிற்கு வெளியே போகிறவர்களுக்கு இருப்பது எருமைத் தோலா (டில்லி எருமை) என்று எண்ணிக் கொண்டே ஒரு மாதிரி தூங்கிப் போனேன்.
காலையில் கண் விழித்த போது எனக்கு இரண்டு ஆச்சரியங்கள்! எப்போது நான் மரவட்டை ஆனேன்?

ஆமாம். குளிரில் ஒரு ஸ்பிரிங் போன்று சுருண்டு இருந்தேன். மணியைப் பார்த்தேன். ஒன்பதரை."என்னப்பா இவ்வளவு நாழியாகி விட்டதா? சூரிய வெளிச்சமே வரவில்லையே?'' என்றேன்.வாரி சுருட்டிக் கொண்டு  எழுந்து. கொதிக்கும் வெந்நீரில் குளித்தேன். "வெந்நீர் பட்ட இடமெல்லாம் ஜில்லென்று இருந்ததடி' என்று பாரதியார் பாணியில் எழுதலாம். 

December 17, 2009

அன்புள்ள டில்லி- ஒரு சின்ன முன்னுரை

.    சென்னை ஜி.பி. ஓ.வின்  LIFE AND PART- டாக நான் இருந்த சமயம் - வருஷம் 1962- என் உயர் அதிகாரி என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்: டில்லிக்கு டெபுடேஷனில் அனுப்ப உன் பெயரைச் சிபாரிசு செய்திருக்கிறேன்.”     ’’:என்னது. டில்லியா? என்னால் சமாளிக்க முடியுமா? ” என்ற பயம் தோன்றவில்லை. காரணம், அன்று நான் இளங்கன்று.
   டில்லிக்கு வந்தேன். சுமார் 21 வருஷம் கழித்து அரசாங்க வேலையை உதறி விட்டுச் சென்னைக்கு வந்தேன்.
    டில்லியில் 21 வருடங்களில் எனக்குக் கிடைத்தவை ஏராளமான அனுபவங்கள், அரிய அறிமுகங்கள், நட்புகள், சில ஏமாற்றங்கள், பல புதிய பாடங்கள். இவை யாவும் என்னைச் செதுக்கி, செம்மைப்படுத்தி சில உயரங்களைத் தொடவைத்தன என்பது உண்மை.
    அந்த 21 வருட வாழ்க்கையை ‘சாவி’ இதழில் தொடர் கட்டுரையாக எழுதினேன் .இப்போது படித்தபோதும் அவை சுவையாக இருப்பதுபோல் (!) தோன்றியது. அதிலிருந்து பிட்டு பிட்டு இங்கு  வைக்க நினைத்து இருக்கிறேன். வெல்லப் பிட்டு மாதிரி சுவையாக இருக்கும் என்றும் நம்புகிறேன். ((நம்பிக்கைத்தானே வாழ்க்கை என்று எழுதப் போவதில்லை!!)


அன்புள்ள டில்லி! ---1 அகஸ்தியன்

1962’ம் வருஷம் டிசம்பர் மாதம் 10’ம் தேதி ஜி.டி.யில் நான் டில்லிக்குப் பயணமானேன் (டிக்கட் 35 ரூபாய்). 1984’ம் வருஷம் டிசம்பர் மாதம் 10’ந் தேதி ஜி.டி.யில் சென்னைக்குப் பயணமானேன்  (டிக்கட் முதல் வகுப்புக்கு 450 ரூபாய்). டில்லிக்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்கு வந்துவிட்டேன். அரசாங்கப் பணியிலிருந்து முன்னதாக ஓய்வு பெற்று -- அவர்கள் துரத்துவதற்கு முன்பு நாமாக ஓய்வு பெறுவது நல்லதாயிற்றே - வந்துவிட்டேன். இந்த இடைப்பட்ட 21 வருஷங்களில் டில்லியில் ஏனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலதரப்பட்டவை. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பெரிய புள்ளிகள் சிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் ஏதோ அரசாங்க ரகசியங்களையோ கிசுகிசுக்களையோ சொல்லப் போகிறேன் எனறு-÷ ஏதிர்பார்க்காதீர்கள். இவை ஓரளவு எனக்குத் தெரியும் என்றாலும், கூறப் போவதில்லை. பின்னால் எப்போதாவது ஏன் சுயசரிதையில்--(ஆமாம்! சொல்லவில்லை என்று பின்னால் கோபித்துக் கொள்ளாதீர்கள். இப்போதே எச்சரித்து விட்டேன். அப்படியொரு அறுவை உங்களைத் தாக்கக் கூடும்!)--எழுதுவேன்.

சூட் போட்ட போர்ட்டர்
அந்த பயங்கரக் குளிர்காலை வேளையில் டில்லியில் முதன் முதலில் கம்பளி ஸ்வெட்டரோ, போர்வையோ இல்லாமல் வெறும் வேட்டி சட்டையுடன் இறங்கியபோது பல் கிடுகிடு ஏன்று நடுங்கியது. தடபுடலாகக்  கோட்டும் ஸ்வெட்டரும் பாண்ட்டும் போட்ட  ஒரு சர்தார்  போர்ட்டர் அனாயாசமாக ஏன் பெட்டிகளைத் தூக்கி வெளியே கொண்டு வைத்தார். ஒரு ரூபாய் நோட்டை நீட்டினேன். (அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் நோட்டும் இருந்தது. அதற்கு மதிப்பும் இருந்தது.) அவர் என்னவோ சொன்னார். புரியவில்லை. ஆனால் பார்த்த பார்வை புரிந்தது!. நான் பேசாமல் 5  ரூபாயைக் கொடுத்தேன்.