முன்குறிப்பு:
சில வருஷங்களுக்கு முன்பு கல்கியிலிருந்து ஒரு கதை வேண்டுமென்று ஒரு கடிதம் வந்தது. அத்துடன் தலைப்பு: எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற தலைப்பிற்கு ஏற்ற கதை வேண்டும் என்றும் எழுதி இருந்தார்கள். ஆப்போது எழுதி அனுப்பிய கதையை இங்கு தருகிறேன்.--------------------------------------
"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்."
இந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார் ஜோதிடப்புலி, ஆரூட சிங்கம், நியூமராலஜி நரி, கைரேகை கரடியான மூலைக்கொத்தளம் மன்னாரு ஜோதிடர்.
அவருக்கு முன்பு பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த அஷ்டபுஜத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
நூற்றியொரு ரூபாய் கொடுத்து ஆரூடம் கேட்க வந்திருந்தார். ஒரு வாக்கியம் மட்டும் சொல்லிவிட்டுச் சும்மா இருக்கிறாரோ ஜோதிடர் என்று யோசித்தபடியே இருக்க, ஜோதிடரின் ஒரு சிஷ்யகோடி, "அவ்வளவுதான்! இனிமேல் ஒண்ணும் வாக்குலே வராது. சுவாமி மௌனத்தில் போய்விட்டார்" என்றார்.
ஆறு மாதம் காத்திருந்து அப்பாயிண்மென்ட் வாங்கி, சிபாரிசு பிடித்து நூற்றியொரு ரூபாய் கொடுத்து- அல்லது அழுது - ஜோதிடம் கேட்க வந்தால் ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டால் எப்படி? அட்சர லட்சம் என்பது மாதிரி அல்லவா இருக்கிறது!
திடீரென்று அஷ்டபுஜத்துக்குச் சந்தேகம் வந்தது. `எட்டுக்கு மேல் வேண்டாம்' என்று சொன்னாரா, ஏட்டுக்கு மேல் வேண்டாம் என்று சொன்னாரா என்று சந்தேகம் தோன்றியது. காரணம் அஷ்டபுஜம் சாதாரண கான்ஸ்டபிள். அதுவும் கொத்தவால் சாவடி, சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் இல்லாமல்-- `வறண்ட' பிரதேசமான பெசன்ட் நகர் பகுதியில் டியூட்டி! விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா? சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா? -புரியவில்லை.
வீட்டுக்கு வந்தார். சடாரென்று அவர் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. வீட்டு நம்பர் ஒன்பது! ஆகா! எட்டுக்கு மேல் உள்ள நம்பர் வீடு... அதனால்தான் நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ!