குளுகுளுவென்று முழுதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அமெரிக்கன் லைப்ரரிக்குள் செல்லும் போது சிவாவுக்கு எப்போதும் கிளுகிளுவென்று இருக்கும். காரணம், அந்த லைப்ரரியில் பணியாற்றும் பல அழகிய பெண்களில் ஒருத்தி அவனது மனத்தைக் கவர்ந்தவள். அதாவது, அவனுக்கு அவள் மேல் ஒரு "இது!' இத்தனைக்கும் அவளுடன் பேசியது கூடக் கிடையாது. அந்தப் புத்தகசாலைக்கு வரும் பல புத்தகப் புழுக்களில் அவனும் ஒரு புழு - அவனைப் பொறுத்தவரை.

அவளது கவனத்தைக் கவருவதற்கு அவன் பல முயற்சிகள் செய்திருக்கிறான். அவள் ரெஃபரன்ஸ் டெஸ்க்கில் இருக்கும் போது வேண்டுமென்றே 'எஸ்கொயர் ஏப்ரல் 74 இஷ்யூ வேண்டுமே' என்பான். அல்லது ' வில்லியம் ஹாஸ்லிட் அப்ச்ன்' என்ற அமெரிக்க எழுத்தாளரின் விலாசத்தைக் கண்டுபிடித்துத் தரமுடியுமா?'' என்று கேட்பான்! இதுமாதிரி எத்தனையோ விசாரணைக்கள் வருவது சகஜமாதலால், அவள் பதில் சொல்லி விட்டுப் போவாளே தவிர, அவனை இரண்டாம் தடவையாகத் திரும்பிப் பார்த்ததில்லை.
இரண்டடி இடைவெளியில் அவளை நெருக்கமாகப் பார்க்க -அதாவது அவள் புத்தகத்தின் டிக்கட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது - அவளைக் கண்களால் ரசிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி வேறு உள்ளத்தில் ஊறியது."ஐ யம் சாரி... டூர் போய்விட்டேன். அதனால்தான் லேட்டாகிவிட்டது...'' என்று குழைந்து கொண்டே சொன்னான், புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது.
"தட் ஈஸ் ஆல்ரைட்... டூர் போகும் முன்பு புத்தகம் திருப்பிதர வேண்டிய தேதியைப் பார்த்துக் கொடுத்து விட்டுப் போவது நல்லது.''
அவனது லைப்ரரி டிக்கட்டைக் கொடுத்துவிட்டு, புத்தகங்களை அடுக்கும் வேலையில் அவள் ஈடுபட்டாள்.
"எந்த ஊருக்கு டூர்? என்ன வேலை உங்களுக்கு?' என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருந்தான் சிவா. ஆனால் அவள் கேட்டால் தானே!
லைப்ரரியில் அரைமணி நேரம் இருந்துவிட்டு ஒரு பிரம்மாண்டமான புத்தகத்தை எடுத்தான். அதன் தலைப்பு கூட அவனுக்குப் புரியவில்லை. சும்மா அவளை "இம்ப்ரெஸ்' செய்வதற்காகத்தான்! கவுண்ட்டரில் அவன் போன போது, அவள் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள்.







