Showing posts with label டியர் ரீடர். Show all posts
Showing posts with label டியர் ரீடர். Show all posts

June 17, 2010

உமி பிளஸ் அவல்

அன்புடையீர்...!

வணக்கம்.
1. உமி பிளஸ் அவல்
என் பதிவுகளில் தப்பித் தவறி சிற்சில நல்ல பகுதிகளை நான் தெரிந்தோ தெரியாமலேயோ போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளைப் பாராட்டிப் பின்னூட்டம் போடுகிறீர்கள். மிக்க நன்றி.
             நகைச்சுவையிலும் பல அபூர்வ உண்மைகளும் வாழ்க்கைக்கு உதவக்கூடிய பாடங்களும்  உள்ளன. என் பதிவுகளில் நல்ல நகைச்சுவை இருக்கும். (இது பற்றி கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்தி!) மனதை தொடக்கூடிய, மனிதனை உயர்த்தக்கூடிய விஷயங்களும் இருக்கும்.
உங்கள் மனதைத் தொட்ட, நெகிழச் செய்த அல்லது எண்ணங்களை மேம்படுத்த செய்த பதிவுகளை நீங்கள் படித்தால் மட்டும் போதாது. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள். இப்படி நல்ல விஷயங்களைச் சொன்னால் அவர்களுக்கு வேறு எந்த நல்ல புத்திமதிகளையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இம்மாதிரி சின்னச் சின்ன சம்பவங்கள், கருத்துக்கள் அவர்கள் மனதில் அவர்களை யறியாமலேயே பதிந்து அவர்களிடம் உன்னதப் பண்புகளைத் தானாகவே வளர்க்கும்.
             இது ஏதோ ஒப்புக்குக் கூறும் யோசனை அல்ல. என் பேத்திக்கு இது மாதிரி எத்தனையோ விஷயங்களையும் பொன்மொழிகளையும் கூறி வருகிறேன். அவை   அவளை - வயது 12 - பல விதத்திலும் அழகாகச் செதுக்கி வருவதைப் பார்க்கிறேன். பல பண்புகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே அல்லது நிர்ப்பந்தப்படுத்தாமலேயே அவளுக்குள்ளே விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன்.
      இதை ஜம்பப் புகழ்ச்சியாகக் கருதாதீர்கள்.
     என் பதிவுகளில் உமி அதிகமிருக்கும். எப்போதாவது அவல் கிடைக்கக் கூடும். அதை ரசித்து, ருசித்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள்.
அடுத்து ....

April 14, 2010

அன்புடையீர்...

வணக்கம். 

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
என் பிளாக்கிற்கு வந்து, நான் எழுதியவகளைப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றி,.
 நான ஒரு விளம்பரக் கம்பெனியில் கிரியேட்டிவ்  டிபார்ட்மெண்டில் 50-வது வயதில் வேலைக்குச் சேர்ந்தபோது அவர்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.  ஐம்பது வயதிற்குப்  பிறகு கற்பனைத் திறன் குறைந்து போய்விடுமே, இவரை வேலைக்கு எடுத்துக்கொள்வது  ‘ரிஸ்க்’தானோ என்று யோசித்தார்  கிரியேட்டிவ்  டைரக்டர் டெனிஸ் ஜோசஃப்.  ஆனால் சுமார் பத்து வருஷங்களுக்குப் பிறகு, ஒரு நாள் அவரிடம் “  டெனிஸ்.. நான் அடுத்த வாரம் ரிடயர் ஆகிறேன்” என்றேன்.
“ அப்படியா?...நத்திங்க் டூயிங்... என்ன கதையாக இருக்கிறது? ஒரு வருஷம் எக்ஸ்டென்ஷன் தரச் சொல்லி இப்பவே மேனே ஜிங்  டைரக்டருக்கு லெட்டர் எழுதறேன் ” என்றார். அவருடைய  கடிதத்திற்கு மறு நாளே பம்பாயிலிருந்து எம்.டி ஃபேக்ஸில்  . உத்தரவை அனுப்பிவிட்டார். இதில் முக்கியமானது டெனிஸ் அனுப்பிய கடிதத்தில் இருந்த ஒரு வாசகம்தான்.”  "Age cannot wither him nor custom stale his spelndor"  என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ஆரம்பித்து. ” The quotation implies that he has a lot more years in his Tamil head than his "sixty" shown on his birth certificate."  என்று எழுதி இருந்தார். (டெனிஸ் விளம்பர உலகில் ஒரு  பெரிய விருதான : COPYWRITER OF THE YEAR:"  விருதை அதற்கு இரண்டு வருஷத்திற்கு முன்புதான் வென்ற ஜீனியஸ்.)

இந்த தாளிப்பு பிளாக்கை  ஆரம்பிக்கும் போது நான் சற்று பயந்தது உண்மைதான்.. பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இதைப் படிக்கக்கூடும்,.ஆகவே அவர்களிடம் பாஸ் மார்க்காவது வாங்க முயற்சி பண்ண்வேண்டுமே என்ற கவலை தொத்திகொண்டது.
பரவாயில்லை. இந்த நாலு மாதத்தில் டிஸ்டிங்க்‌ஷன் கிடைத்ததா இல்லயா என்பது முக்கியமில்லை, ஃபெயில் ஆகவில்லை என்பதே முக்கியம்! டெனிஸ் ஜோசஃப் எழுதிய மாதிரி. இந்த தலையில் கொஞ்சம் சரக்கு இருக்கிறது போலும்!
ஆண்டவனுக்கு நன்றி.
பின்னூட்டம் போட்டுப் பாராட்டியவர்களுக்கு நன்றி.
அதை விட “ என்னய்யா போர் அடிக்கிறீங்க” என்று எழுதாமல் இருந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கு கூடுதல் நன்றி.
மீண்டும் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

March 17, 2010

அன்புள்ள நண்பர்களுக்கு

        இந்த பிளாக்கைத் துவங்கி 100 நாள் ஆகிறது.  ஓரளவு உங்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். உடல் சிரமம் பாராது டைப் செய்து, படத்தைச் சேர்த்து  போஸ்டிங்க் போட்டு வருகிறேன்.

இதில் பிரசுரிக்கப்படும் எல்லாம் உங்களுக்கு ஓ.கே.வா என்று எனக்குத் தெரியவில்லை. நல்ல போஸ்டிங்கோ அறுவை போஸ்டிங்கோ என்னைப் பொருத்தவரை வேலையின் அளவு ஒன்றேதான்.  உங்கள் பின்னூட்டங்களில் அன்பு கூர்ந்து உங்கள்  கருத்துகளைத் தெரிவியுங்கள். இது தான் நீங்கள் எனக்கு செய்யக்கூடிய உதவி.

எழுத ஏராளமாக விஷயங்கள் உள்ளன. நிறைய நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகள் எழுதி வைத்துள்ளேன்.. எனக்குத் தெரிந்தவைகளைப் பலருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆசையினால் இதைச் செய்து வருகிறேன்.

-- கடுகு