Showing posts with label துணுக்ஸ். Show all posts
Showing posts with label துணுக்ஸ். Show all posts

November 30, 2019

புள்ளிகள்:துணுக்குகள்!

30 செகண்ட் ட்யூன், சம்பாதித்தது....அம்மாடி!
JEOPARDY,அமெரிக்காவின் மிகப் பிரபலமான வினாடி வினா நிகழ்ச்சி . இதில் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் டாலர்கள் என்று பரிசாக அளிக்கப்படுகிறது,  இந்த அரைமணி நேர நிகழ்ச்சியில் ஒரு லட்சம் டாலர்களை  வென்றவர்கள் பலர் உண்டு. 
    இந்த நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன்   30 வினாடி ட்யூன் ஒன்று போடப்படுகிறது .1964’ல்   இருந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அந்த டியூன் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. இந்த ட்யூனைப் போட்ட கிரிஃப்ஃபின் எனும் இசை அமைப்பாளருக்கு   ராயல்டியாக  70 லட்சம் டாலர் கிடைத்ததாக சில வருஷங்களுக்கு முன்பு அவரே சொல்லி இருக்கிறர். இன்றும் அந்த நிகழ்ச்சியில் இந்த  ட்யூனுக்கக  ராயல்டி தொகை அவருடைய பேரனுக்கு(?) போகக்கூடும்! 
ரூஸ்வெல்ட்டிற்கு ஓட்டு போடாததன் காரணம்!
அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் 'டெமாக்ரடிக்' கட்சியை சேர்ந்தவர் முதல் முதலாக   1933’ல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்து 1937’ல் இரண்டாவது தடவையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941’ம் வருஷம் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட்ட அவர், தனது நெருங்கிய நண்பரான தனது பேட்டைவாசி முதியவரைச் சந்தித்து, தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டார்.
அவரிடம்  “அதிபர் தேர்தல் வருகிறது. நீங்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்” என்று கேட்டார் ரூஸ்வெல்ட். அந்த முதியவர்  “வழக்கம்போல் நான் ’ரிபப்ளிகன்’   கட்சிக்குத் தான் போட்டு போட போகிறேன்” என்றார். ரூஸ்வெல்ட்டிற்குக் கொஞ்சம் ஷாக். அவரிடம்  “சரி,  மூன்றாவது தடவை நான் நிற்பதால் நீங்கள் அப்படி தீர்மானித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

August 02, 2019

தினமணி கதிர் துணுக்கு - 50 வருட பழசு!

 வேலூர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் திரு கதிர் (ஆனந்த்) இவர் திமுக பிரமுகர் திரு துரை முருகன் அவர்களின் மகன். ஆகவே அவரை திரு டி. எம். கதிர் (D.M.Kadir அல்லது D.M.K.) என்றும் குறிப்பிடலாம்!

பல வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு துணுக்கை, தினமணி கதிரில் நான் எழுதியது நினைவுக்கு வந்தது. அதை இங்கே தருகிறேன்.


1967 வாக்கில் நான் டெல்லியில் இருந்தேன் அப்போது தினமணி கதிரில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்த சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி என்ற நிறுவனத்தில் தான் தினமணி கதிர் கிடைக்கும். அங்கு போய் ஒவ்வொரு வாரமும் தினமணி கதிர் வாங்குவது வழக்கம். அங்கு எந்தப் பத்திரிகை வாங்கினாலும் ரசீது போட்டு தான் கொடுப்பார்கள்.


ஒரு தரம் நான் தினமணி கதிரை எடுத்துக்கொண்டு, ரசீது போடுபவரிடம் கொடுத்தேன் அவர் ஆங்கிலத்தில் D.M.K - 0.50 (?) என்று எழுதி ரசீது போட்டுக் கொடுத்தார். (வழக்கமாக DINAMANI KADIR என்றுதான் ரசீதில் எழுதுவார்கள்.)


அந்த ரசீதைப் பார்த்தபோது ஒரு துணுக்கு எனக்கு அதில் கிடைத்தது. சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சியைப் பொதுவாக டெல்லியில் சி. என். ஏ. என்று குறிப்பிடுவது வழக்கம். C.N.A என்றால் அறிஞர் அண்ணாவையும் குறிக்கும் அல்லவா? “அறிஞர் அண்ணாவிடம் இருந்து D.M.K.யை வாங்கினேன்” என்கிற மாதிரி ஒரு துணுக்கை எழுதி அனுப்பினேன். ரசீதின் படத்துடன் அது கதிரில் பிரசுரம் ஆயிற்று!

December 08, 2018

துணுக்கு சுனாமி!


சாரணர் இயக்கம்
 சாரணர் இயக்கமான ‘ஸ்கவுட்’ 1907’  ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பேடன் பவல் Baden Powell என்பவர். அந்த இயக்கத்தின் கோட்பாடு மிகவும் பிரபலமானது அது Be Prepared’. இதைப்பற்றி பேடன் பவல் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். "சாரணர்களின் கொள்கையை என்னுடைய பெயரின்  முதல் எழுத்துகளை வைத்து உருவாக்கினேன்" என்று 1908-ல் அவர் எழுதிய SCOUTING FOR BOYS என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்

 இரண்டு பேரும் பட்டினி
 நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஒரு உணவு விடுதியின் பெயர்: EAT HERE. உணவு விடுதியின் பெயரை பெரிய போர்டில் எழுதிவிட்டு, அதன் கீழே அவர்கள் எழுதி இருப்பது இதுதான்: “இல்லையென்றால் நாம் இருவரும்  பட்டினிதான்!”

 ஒப்புதல் வாக்குமூலம்
அமெரிக்க வெளி உறவு அமைச்சராக 1972-74’ம்ஆண்டுகளில் இருந்தவர் ஹென்றி கிஸ்ஸிஞ்ஜர்.  அவர் மிகவும் திறமைசாலியாக இருந்தால்   வெகுவிரைவில் பிரபலமானவராக ஆகிவிட்டார்.
அவர் எழுதிய சுயசரித்திர புத்தகத்தின் தலைப்பு: YEARS OF UPHEAVAL. அதன் முன்னுரையில் அவர் எழுதியுள்ள ஒரு வரி கவனத்திற்கு உரியது: “ இந்தப் புத்தகத்தில் என்னைப் பற்றி ஒளிவு மறைவு எதுவும் இல்லாமல், எதையும் மறைக்காமல் எழுதியுள்ளேன். நான் செய்த முதல் தவறை 850’ம் பக்கத்தில் எழுதி 
இருக்கிறேன்.”
 இந்த புத்தகத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன், அவர் என்ன தப்பு செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க!

 சாய்ஸில் விடலாமா?
இங்கிலாந்தின் பிரபல  தத்துவ ஞானியாக விளங்கியவர்   பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ( BERTRAND RUSSELL). 1950ம் வருஷம் நோபல் பரிசு பெற்றவர். 
அவர் சொன்ன ஒரு குறும்பு வாசகம்:  “பத்துக் கட்டளைகளை பரீட்சை கேள்வித்தாள் மாதிரி கருத வேண்டும். பத்தில் ஏதாவது ஆறு கட்டளைகளை முயற்சி செய்தால் போதும்.”
  பரீட்சையில் சாய்ஸில் விடுவது போலவா, ரஸ்ஸல் அவர்களே?

October 30, 2018

துணுக்குப் பேரணி


  அம்மாடி, கேட்லாக்
           எழுபதுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் டில்லி தாரியாகஞ்ச்                       நடைபாதை கடைகளுக்கு படையெடுப்பது என் வழக்கம். அங்கு பல, அற்புதமான, அரிய ஆங்கில புத்தகங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.
     
புத்தகம் மட்டுமல்ல, அயல்நாட்டு ஃபேஷன் பத்திரிகைகள், அமெரிக்கSEARS  கேட்லாக் போன்றவைகளும் (அயல் நாட்டு தூதரகங்கள் பழைய பேப்பர் கடையில் போட்டவை!)  இங்கு கிடைக்கும். அதை வாங்கி நம் உள்ளூர் தையல்காரர்கள் புதுவிதமான டிரஸ்களைத் தைப்பார்கள். பர்னிச்சர் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமான மேஜை, நாற்காலி என்று தயாரிப்பதற்கு ஐடியா கிடைக்கும்.
    கேட்லாக்  பயங்கரக் கனமாக இருக்கும். (1975-ம் வருஷ SEARS  கேட்லாக் 1491 பக்கங்கள்!). (பழைய  கேட்லாக்குகள் இப்போதும் கிடைக்கின்றன. E-book - 1969- ம் வருஷ SEARS  விளையாட்டு பொம்மைகள் கேட்லாக் விலை 150 டாலர்!

இரட்டையர்கள், ஆனால் விரோதிகள்.
     உலகின் மிகப் பிரபல இரட்டையர்கள் பல வருஷங்களுக்கு முன்பு சையாம்  நாட்டில் ( இன்றைய தாய்லாந்தில்)   1811-ம் ஆண்டு பிறந்த இரட்டையர்கள். 
அவர்கள் தனித்தனியாக, இரண்டு பேராக பிறக்கவில்லை. விலாப்பகுதி சதை அவர்களை ஒட்ட வைத்து இருந்தது. CHANG-ENG ஒட்டிய உடலுடன் வளர்ந்தார்கள்.  1829 -ம் ஆண்டு அவர்கள் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார்கள். பல கண்காட்சிகளில் கலந்து கொண்டு நிறைய பணம் சம்பாதித்தார்கள்.
1874’ம் ஆண்டு, ஒரு மணி  நேர இடைவெளியில் இரண்டு பேரும் காலமானார்கள்! 
பி.கு: காலமாவதற்கு சில வருஷங்களுக்கு முன்பு அவர்களுக்குள்
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரோதிகளாக ஆகிவிட்டார்களாம்!

மூடுக்கு ஏற்ற கலர்
     பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட்டிற்கு ஒரு விசித்திர வழக்கம் இருந்தது. அவருக்கு பிடித்த எழுத்தாளரான DORIAN GRAY  எழுதிய புத்தகத்தை ஒன்பது காபிகள் வாங்கி, ஒவ்வொரு புத்தகத்தையயும் ஒவ்வொரு வித கலரில் பைண்ட் செய்து வைத்துக் கொண்டார். 
“எதற்கு ஒரே புத்தகம் ஒன்பது காபிகள். அவற்றை ஒன்பது கலரில் வைத்திருக்கிறீர்களே?என்று கேட்பவர்களுக்கு “ஆமாம்.. என் மூடுக்கு தகுந்த கலர் அட்டை போட்ட காபியை எடுத்துப் படிக்க விரும்புவதே காரணம் என்பார்.

   பிரிட்டீஷ் மியுசியமில் உள்ள புத்தகங்கள் எல்லாம் கலர் அட்டை போட்ட புத்தகங்களாக இருக்கும் என்கிறது ஒரு தகவல். சரித்திரம் சம்பந்தமான புத்தகங்கள்-சிவப்பு, Theological  புத்தகங்கள் – நீலம் கவிதைகள் – மஞ்சள், Natural History  பச்சை என்று வைத்திருக்கிறார்களாம்.

ஆசிரியர் சாவி சொன்னது
     சாவி சொல்வார். “சிறுகதை போட்டியில் எனக்கு நம்பிக்கையில்லை. ஐம்பதாயிரம் லட்சம் என்று பரிசுத் தொகை வைத்தால், சிறப்பான கதை எழுதுவார்கள் என்று கருதுவது தவறு. 

July 15, 2017

குட்டித் துணுக்குகள்

என் பழைய நோட்டுப்புத்தகங்களில் கிடைத்த குட்டித் துணுக்குகள்.

உங்களுக்கு வெட்கமில்லை..?
அந்தக் காலத்தில்அதாவது எழுபதுகளில்அமெரிக்காவிலிருந்து ஒரு புத்தகம் வரவழைக்க வேண்டு மென்றால்பிரம்மபிரயத்தனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்நியச் செலாவணி சுலபமாகக் கிடைக்காது (டாலர் = ரூ.5 என்று   இருந்த காலம்).நான்பல அமெரிக்க எழுத்தாளர்களின்முக்கியமாக நகைச்சுவை எழுத்தாளர்களின்  விசிறி.
ஒரு சமயம் JACK PAAR என்ற காமெடியன் எழுதிய புத்தகம்,  தாரியா கஞ்ஜ் நடைபாதையில் கிடைத்தது. புத்தகம் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஜேக் பார் எழுதிய மற்ற புத்தகங்களையும் படிக்க விரும்பினேன். டில்லி  புத்தகக் கடைகள் எதிலும் கிடைக்கவில்லை.திடீரென்று ஒரு யோசனை வந்தது. அமெரிக்கன் லைப்ரரிக்குச் சென்றுஜேக் பாரின் வீட்டு முகவரியைத் தேடிக் கண்டு பிடித்தேன். அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். "நான் உங்களுடைய விசிறி. உங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்க விரும்புகிறேன். உங்கள் புத்தகத்தை எனக்கு அனுப்பினால் நன்றி உடையவனாக இருப்பேன். பழைய  புத்தகமாக  இருந்தாலும் சரி'' என்று எழுதினேன்
.

April 27, 2017

துணுக்குத் தோரணம்

 TIME வீடு  மாறிய போது...

சமீபத்தில்  பிரபல "டைம்' வார  இதழ் தனது அலுவலகத்தைக்  காலி செய்துவிட்டு, நியூயார்க்கிலேயே வேறு ஒரு கட்டடத்திற்கு இடம் பெயர்ந்தது. 
எத்தனையோ வருஷங்களாகக் குடி இருந்த பழைய கட்டடத்தைக் காலிசெய்யும்போதுபத்திரிகையின் பழைய ஆவணங்களையும் புகைப்படங்களையும் நியூயார்க்  Historical Society -க்குக் கொடுத்துவிட்டது. ஆவணங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட 70 லட்சம்! பழைய கட்டடத்தின்  ஓரம்  ஒரு தூண் அருகில் TIME CAPSULE பல வருடங்களுக்கு முன்பு புதைத்து வைத்திருந்தார்கள். அதை  அப்படியே  விட்டு விட்டார்களாம்.  1959இல் டைம் இதழின் ஆசிரியரால்  நிராகரிக்கப்பட்ட கட்டுரைகளை  சிவப்பு பென்சிலால் "X' போடுவாராம். அந்தப் பென்சிலைக்கூட அந்த TIME CAPSULE-இல் வைத்திருக்கிறார்களாம்!

ஆக்ஸ்போர்ட் அகராதி.  
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி2015-ம் வருடத்தின்  புதிய  ஆங்கில வார்த்தையாகக்  
குறிப்பிட்டு இருப்பது: மோஜி ஈமோஜி. கம்ப்யூட்டர் "ஸ்மைலி போன்றது  அகராதியில்  சேர்க்கப்பட்டு ள்ளதாம்.  இந்த  ஈமோஜி அனைத்து உலக மொழிகளையெல்லாம் கடந்தது  என்று குப்பிட்டு  இருக்கிறார்கள்.
அகாதா    கிறிஸ்டி
அகாதா  கிறிஸ்டி  எழுதியுள்ள  துப்பறியும்  நாவல்கள்  95.  உலகில் 105 மொழிகளில்  இவரது  புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.  

May 20, 2014

அஞ்சறைப் பெட்டி


படித்தது, பார்த்தது, ரசித்தது, 
                   சிரித்தது, கேட்டது, திரித்தது 
                           என்று சில குட்டித் துணுக்குகள்!

1.சில பதிவுகளுக்கு முன்பு GONE WITH THE WIND புத்தகத்தைப் பற்றி குட்டித் துணுக்குப் போட்டிருந்தேன். அதே தகவல் இரண்டு நாளுக்கு முன்பு வெளியான  READER'S DIGEST  பத்திரிகையில் வெளியாகி உள்ளது!
சுட்டி: : GONE WITH THE WIND

2. மணற்கொள்ளை என்பது ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளிச் செல்வதைக் குறிக்கும்.  ஜமைக்காவில் ஒரு பகுதியில்    பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம்.  அதற்காக மணலை வாங்கி மலையாக குவித்து வைத்திருந்தது. அதிலிருந்து 500 டிரக் மணல்  திருடு போய்விட்டதாம்! (ஆதாரம்: TIME).

3. அமெரிக்காவின்  தெற்கு கரோலினா மாநிலத்தின்   கடல் பகுதியில் 1857’ம் ஆண்டு ஒரு கப்பல் மூழ்கி விட்டது. இப்போது  வெகு ஆழத்தில் அது கண்டு பிடிக்கப்பட்டது. அதில்  சுமார் 3600 சவரன் தங்கம் கிடைத்தது. (ஆதாரம்: TIME).

4. சோனி நிறுவனம் பற்றி இரண்டு தகவல்கள்.

**. நிதி நிலமை அவ்வளவு திருப்திகரமாக இல்லயாம். அதனால் 5000 ஊழியர் களுக்கு  ‘டாட்டா’  கொடுக்கத்  திட்டமாம்.

**சோனியின் புதிய காசெட் டேப் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது அதில் என்ன விசேஷமாம்? (அதன் கொள்ளளவு 185 டெராபைட்.) கிட்டத்தட்ட  60 மில்லியன் (அதாவது 6 கோடி) பாடல்கள் அதில் பிடிக்குமாம். ஒரு செகண்ட் கூட விடாமல் கேட்டால் கூட 100 வருஷம் தேவைப்படும்! (ஆதாரம்: டைம் இதழ்)

5. ஒபாமா சொன்னது
சில வாரங்களுக்கு முன்பு  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிபர் ஒபாமா   ஒரு  உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன தகவல்: நாலு  நிமிஷத்திற்கு  ஒன்று என்ற கணக்கில் நாட்டில் பல வீடுகள் ஸோலார் பேனல்கள்  வீடுகளாக  மாறி வருகின்றன.

March 07, 2014

பாப்கார்ன்

#  குடி போதையில் வாகனம் ஓட்டாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சொந்த வாகனம் இல்லாதவர்கள்!

# காதலுக்குக் கண் இல்லை; கலியாணம் ஆன பிறகு தான் கண் தெரிய ஆரம்பிக்கிறது!

# எத்தனையோ  வருஷங்களாக விலை ஏறாமல் இருப்பவைகளில் ஒன்று: பத்து பைசா தபால் தலை.

#  விறகு அடுப்பைப்  பார்த்து, கரி அடுப்பைப் பார்த்து, மரத்தூள் அடுப்பைப்  பார்த்து, நூதன் ஸ்டவ் அடுப்பைப்  பார்த்து, காஸ் அடுப்பைப் பார்த்து, இண்டக் ஷன் அடுப்பைப்  பார்த்த தலைமுறை என்னுடையது!

# அன்னம், புறா, மயில், கிளி ஆகிய பறவைகளைக் காதலர்கள் தூது விட்ட காலம் போய் இப்போது ஈ விடு தூதுதான் கொடிகட்டி பறக்கிறது.-- ஈ (மெயில்)

# இப்போதெல்லாம் சில பொதுக் குழு கூட்டங்கள்  மதுக் குழு கூட்டமாகி விடுகின்றன.

#காதலியாக உள்ளவரை  தேவதை; கலியாணம் ஆகிவிட்டதும் ‘தே’ மறைந்து விடுகிறது.

October 20, 2013

காலம் மாறிப் போச்சு

நான் 1962-ல் - அதாவது 50 வருஷத்திற்கு முன்பு- டில்லிக்கு மாற்றாலாகிப் போனபோது அங்குள்ள பல விஷயங்கள் எனக்குப் புதுமையாகப் பட்டன. அவற்றைத் தொகுத்து ‘அரே டில்லிவாலா- என்று ஒரு கட்டுரையை எழுதி குமுதத்திற்கு அனுப்பினேன். அது குமுதத்தில் இரண்டு பக்கக் கட்டுரையாகப் பிரசுரம் ஆயிற்று. (எழுத்துத்  துறையில் நான் காலை வைத்ததற்கு அதுவே பிள்ளயார் சுழி போட்டது).
அந்த டில்லிப் புதுமைகள் பல இன்று காணாமல் போய்விட்டன.
சிலவற்றைப் பார்ப்போம்.
 நடமாடும் இஸ்திரி சேவை: தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியுடன் வீதிகளில் பலர்  வருவார்கள்.  நாம் கொடுக்கும் துணிகளுக்கு இந்த ‘பிரெஸ்வாலா’க்கள் நம் வீட்டு வாசலிலேயேஇஸ்திரி போட்டுக் கொடுப்பார்கள். நாளடைவில் ’நடமாடும்’ என்பதை எடுத்துவிட்டார்கள். ஆங்காங்கு மரத்தடி நிழலில் இஸ்திரி பெட்டியுடன் தொழிலை  நடத்த ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு இஸ்திரி பெட்டியுடன் இன்னொரு பெட்டி சேர்ந்து கொண்டது. அது டிரான்சிஸ்டர்!. ‘தம்மாரே தம்’ ‘ மெஹ்பூபா மெஹ்பூபா’’’ஜூட்டு போலே கவ்வா காட்டே’ போன்ற பாடல்கள் ஹனுமான் சாலிஸா மாதிரி விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும். சமீப காலத்தில் என்ன மாறுதல் வந்திருக்கிறது என்று தெரியவில்லை. டிவிடி பிளேயர் வந்திருக்கும் என்று நினக்கிறேன்!

டில்லி பிஸ்கெட்:
டில்லி  மார்க்கெட்களில் பிஸ்கெட் பண்ணித் தரும்  கடைகள் இருந்தன - நம் ஊர் வறுகடலைக் கடைகள் மாதிரி.. கோதுமை மாவு, பால், டால்டா  (இன்று டால்டா இருக்கிறதா என்று தெரியவில்லை!) முதலியவற்றைக் கொடுத்து விட்டு வந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போனால் நாம் கொடுக்கும் மாவுக்கு எவ்வளவு வருமோ அவ்வளவு பிஸ்கெட்கள் தட்டு தட்டாக  ரெடியாக இருக்கும். ஒரு பிஸ்கெட் கூட  அவர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
சென்னை போகிறவர்கள் எல்லாரும், பெரிய எண்ணை டப்பா அளவு டின்னில் எடுத்துக் கொண்டு போவார்கள். நாளடைவில்  இந்த மாதிரி பிஸ்கெட்களை சிறு தொழில் நிறுவனங்கள்  சொந்தமாகத் தயாரித்து பிளாஸ்டிக் கவரில்  ’பேக்’செய்து விற்க ஆரம்பித்தார்கள். அதனால் மார்க்கெட்   பேக்கரிக்கடை    தொழில் நலிந்து போய்விட்டது.

சண்டே பஜார்
ஞாயிற்றுக் கிழமைகளில் டில்லி செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சௌக்கில் நடைபாதைக் கடைகள் நூற்றுக்கணக்கில்  முழுத்தெருவிலும் முளைத்துவிடும்.
செங்கோட்டைக்கு புது டில்லிப் பகுதிகளிலிருந்து போகிறவர்கள் தாரியாகஞ்ச் என்ற வீதி வழியாகத்தான் போகவேண்டும். தாரியாகஞ்ச்  தெருவின் ஒரு பக்கம்  நடைபாதைகளில்  பழைய புத்தகங்கள் பரப்பி இருக்கும். நான் அங்கு வாங்கிய புத்தகங்கள் ஏராளம்.
திடீரென்று அந்தக் கடைகளை அங்கு பரப்பக் கூடாது என்று துரத்தி விட்டார்கள்.  எல்லாரும் செங்கோட்டைக்குப் பின்னால் இருக்கும் மைதானத்தில் கடை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தார்கள். அங்கு போக எனக்குப் பிடிக்க வில்லை.  அதற்கு ‘சோர் பஜார்: - (திருட்டுப் பொருள்கள் மார்க்கெட்!) என்று பெயர்.  இன்னும் அங்கு சண்டே மார்க்கெட் இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் டில்லியில் பேட்டைக்குப் பேட்டை ஒரு நாள் இப்படிப்பட்ட மார்க்கெட் வந்து விட்டது!

டில்லியில் மாறாததும் உண்டு
டில்லியில் மாறாதது பல விஷயங்கள் இருக்கலாம்.  நான் டில்லியை விட்டு வரும் வரை மாறாத  ஒன்றைச்  சொல்கிறேன்.
டில்லிக்குப் போன தினம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளை பார்த்தேன். அதில் ஆசிரியர் கடிதத்தில் டில்லி பஸ்களைப் பற்றி  ஒரு கடிதம் வெளியாகி இருந்தது.   அந்த கால கட்டத்தில் டில்லி பஸ்களை  Delhi Transport Underaking   என்ற அமைப்பு நிர்வகித்து வந்தது. கடிதத்தில், இந்த டி.டி.யு பஸ்களில் ரூட் போர்டுகள் இருப்பதே இல்லை.   “ பஸ் எங்கே போகிறது? என்று கண்டக்டரைக் கேட்பதாக இருக்கிறது. பல சமயம் கண்டக்டரைக் கேட்பதற்குள் பஸ் புறப்பட்டுப் போய்விடுகிறது. எத்தனை தடவை புகார் எழுதினாலும் பயனில்லை” என்று யாரோ ஒருவர் புலம்பி இருந்தார். 2002-ல்  டில்லியை விட்டுச் சென்னை வரும் தினம், பேப்பரில் கிட்டதட்ட இதே ரீதியில் ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. என்ன வித்தியாசம்  DTU என்பது DTC   ( (டில்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்) என்று மாறிவிட்டது!
அந்த நாள் முதல் இந்த நாள் வரை வான்மதியும், மீனும், டில்லி பஸ்ஸும் மாறவில்லை என்பது உண்மை!

டில்லி கலியாணங்கள்
டில்லியில் பெரும்பாலான கலியாணங்கள் பிரம்மாண்டமான ஷாமியானா பந்தலில்தான் நடைபெறும். வீதியை அடைத்துக் கொண்டு  பந்தல் போட்டுவிடுவார்கள். குதிரை மீது அமர்ந்து அரும் மணமகனை பேண்ட் வாத்தியம் முழங்க டான்ஸ் ஆடி அழைத்து வருவார்கள். நுழைவாயிலுக்கு சுமார் 50 கெஜ தூரம் வந்ததும் மேலும் பலர் டான்ஸ் ஆடுபவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். ”சாச்சி வா”, ”அத்தை வா”, ”அங்கிள் வாங்கோ” என்று பலரைக் கைபிடித்து  இழுத்து ஆடச் சொல்வார்கள். டிரம்காரர் சரக்கு போட்டவர் போல -  போல் என்ன? போட்டவர்தான்!- வெறியுடன் டிரம் அடிக்க அடிக்க, ஆடுபவர்கள் மாப்பிள்ளை மேலே போக விடாமல் ஆடிக்கொண்டு (தள்ளாடிக்கொண்டும்!)  இருப்பார்கள். நம்புங்கள், பல சமயம் இந்த 50 கெஜ தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரம் கூட ஆகிவிடும்.பந்தலுக்குள் நுழைந்ததும் 90 பங்கு கூட்டம் காணாமல் போவிடும். ஆம்,எல்லாரும் சாப்பிடப் போய்விடுவார்கள்!.கலியாணப் பெண், பிள்ளை, புரோகிதர் மற்றும் 7,8 பேர் தான்  மணமேடையில் இருப்பார்கள்!
டில்லிக்குப் போன புதிதில், கலியாண வீட்டார் ‘யாரும் நம்மைச் சாப்பிடக் கூப்பிடவில்லையே’ என்று காத்திருந்து விட்டு, சாப்பிடாமலேயே வந்திருக்கிறேன்.
டில்லிக் கலியாணங்களில் சீர் வரிசையில் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். ஒரு தையல் மெஷின். (டெய்லர் மாடல் அல்ல: கை மெஷின்!) எனக்குத் தையல் மோகம்  (இரண்டு அர்த்தத்திலும்!)  உண்டு என்பதால். சீர் வரிசையில் இருக்கும் மெஷின் கண்ணில் தவறாது படும்!

எல்லாருக்கும் தைத்துக் கொடுக்கிற வேலை‘நம் பெண் தலையில்  விழுந்துவிடக்கூடாது என்பதற்காக சமீப காலங்களில் பெண் வீட்டுக்காரர்கள் மெஷினை‘  அம்பேல் ஆக்கிவிட்டார்கள்!

சென்னையில்  மாறிப் போச்சு
தொடாதே!
டில்லியில் காய்கறி கடைக்குப் போனால் முதலில் ஒரு தகரத்தட்டை (பழைய பிலிம்ரோல் டப்பாக்கள்!) நம்மிடம் கொடுப்பார்கள். கறிகாய்களைப் நாம் பொறுக்கிக் கொடுக்கவேண்டும்.
இருபது வருஷத்திற்கு மேல் டில்லியிருந்துவிட்டுச் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். நம் ஊர், நம்ம மொழியில் பேசலாம் என்று மனதில் ஒரே உற்சாகம்.  ( சர் வால்டர் ஸ்காட் பாடல் ஞாபகம் இருக்கிறதா? Breathes there the man with soul so dead /  Who never to himself hath said, /  This is my own, my native land!)

சென்னை வந்ததும்ஆவலாக சைனா பஜார் சென்றேன். நடைபாதையில் காய்கறி கடைகள் இருந்தன. வெண்டைக்காய் அழகிய  LADIES FINGER மாதிரி இருந்தது.(டில்லியில் அதற்கு  ‘பிண்டி’ என்று கரடு முரடான பெயர்!)
இரண்டு காயை எடுத்திருப்பேன்.  “இன்னா பொறுக்கறே?.நான் எதுக்குக் குந்திக்கினு இருக்கேன்.... பாத்தியாடி அருக்காணி, வெண்டைக்காயைப் பொறுக்க வந்துட்டாரு இவரு டில்லி பாதுஸா  மா(தி)ரி” என்றார்.

இப்போது சென்னையில் எல்லா காய்கறி கடைகளிலும் நம்மை டில்லி பாதுஷாவாக ஆக்கி விட்டார்கள். ஆம், இப்போதெல்லாம் பிளாஸ்டிக் தட்டை எடுத்துப் போடுகிறார்கள். நாமே பொறுக்கி கொள்ளலாம்.யாரும்  “பாத்தியாடி அருக்காணி” என்று குரல் கொடுப்பதில்லை!
நல்ல மாறுதல்!

இன்னும் நிறைய இருக்கின்றன. பின்னால் பார்க்கலாம்.

August 13, 2013

WORD PLAY -வார்த்தை விளையாட்டு

 அன்புடையீர், 
சிலர் அனுப்பிய பின்னூட்டங்கள் எப்படியோ மாயமாய்ப்   போய்விட்டன. அவர்கள் அன்புடன் மறுபடியும் அனுப்பினால். பிரசுரிக்கிறேன்.
==================================
எலிஸபெத் ராணி
சமீபத்தில் எலிஸபெத் அரசிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம், அது தொடர்பான ஒரு துணுக்கைப் பதிவில் போடலாம் என்று எண்ணினேன். ஆனால் வேறு பதிவுகள் கியூவில்  முந்திக் கொண்டதால் போடவில்லை.
உடனே போடாததும் ஒரு விதத்தில்  நல்லதாகப் போயிற்று.

FLASHBACK:  1964-ல் ராணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ( அந்தக் குழந்தை தான்  எட்வர்ட்.) அந்தக் குழந்தை பிறந்தபோது லண்டன் டெய்லி மெயில் தினசரி குழந்தையின் படத்தை வெளியிட்டது.  குழந்தை அழுது கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம். படத்திற்கு மெயில் போட்ட தலைப்பு”  HIS CRYNESS!  (HIS ROYAL CRYNESS? - எது  சரி என்று  ஞாபகம் இல்லை.)
இந்த வித்தியாசமான WORDPLAY - யை நான் தினமணி கதிரில் துணுக்காக எழுதினேன்.
*               *                *
சமீபத்தில் அமுல் விளம்பரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏர்- இந்தியா விளம்பரங்களைப் போல் நகைச்சுவையுடன் அவை இருக்கும்.(யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் விளம்பரங்களும் இதே ரகம். ("At United India,it's always U before I.)  என்றாலும், இன்ஷூரன்ஸ் என்ற  வார்த்தையை வைத்துக் கொண்டு அதிகம் விளையாட முடியாது.

ராணிக்குக் கொள்ளு பேரன் பிறந்த சமயம் அமுல் விளம்பரத்தில்
HIS  ROYAL CRYNESS! என்ற வார்த்தையை போட்டு இருந்தார்கள். படத்தைப் பார்க்கவும்.
போனசாக மேலும் சில அமுல் விளம்பரங்களைத் தருகிறேன். இப்போதெல்லாம் அமுல்  விளம்பரங்களில் ‘ஹிங்கிலீஷ்’ அதிகம் இருப்பதால் ஹிந்தி தெரியாதவர்கள் அதிகம் ரசிக்க முடியாது.

January 14, 2013

தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்

கூகுள்ஸ்ரீ!
இன்று பெண்களைப் பிடித்து ஆட்டும் வியாதி:டிவி சீரியல்கள்’ ஆண்களை பிடித்து ஆட்டுவது கம்ப்யூட்டரும் கூகுளும் தான்.
” எப்பப் பார்ததாலும் கம்ப்யூட்டரையும்  கூகுளையும்  கட்டி அழுது கொண்டே இருக்கிறீர்களே, என்னைக் கலியாணம் பண்ணிக் கொண்டதற்குப் பதில் அதுங்களையே  பண்ணிக் கொண்டிருக்கலாம் என்ற குரல் ( அல்லது கூக்குரல்) எல்லார் வீட்டிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கூகுளும் ஒரு மனைவிதான் என்று ஒரு குறும்பர் ஒரு குறும்புப் பா எழுதி இருக்கிறார்.!




I love this google thing which is just like our dear wife .
We hardly get to complete a sentence in our whole life.

Both google and wife know what really we want to say
And suggest it helpfully as they care for us night and day.
They save our breath, with no strain on our minds, hurray.
++++++++++++++++++++++++++++++

சூழ்நிலை 

சூழ்நிலை   தான் மனிதனையும் மனித குணங்களையும் உருவாக்குகிறது.  படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில் இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில் காலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது காதலாகிக் கசித்து, கண்ணீர்ப் பெருக்கி நிற்கிறார். சீட்டாட்டத்தின்போது ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்

   "என்ன? கொத்தமல்லி பத்து பைசாவுக்கு நாலு தானா? ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது பத்து அல்லது இருபது ரூபாய்  "டிப்"பாகக் கொடுக்கிறார். இத்தனைக்கும் சர்வர் கேட்பது கூட கிடையாது. இருந்தும் கொடுத்து விடுகிறார், சற்றும் யோசிக்காமல். மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சர்வர் தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு "டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில் தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம். எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
    இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். ""ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலைஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபதாயிரம். முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்!) இவரே கிளப்பை விட்டு வரும் போது மாறிவிடுவார். ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். ""என்னய்யா, சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது  ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.
    தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: ""என்ன இது? இன்னும் இரண்டு கவுண்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை.'' ஆ னால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில் ஒரு "சலானி"ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
------------------------------------------------------------ 


இங்கிலாந்தின் பிரபல கவிஞர் மில்டன் (9 டிசம்பர்1608 – 8 நவம்பர்1674)

சமீபத்தில்  அவரைப் பற்றிய ஒரு  புத்தகம்  வெளியாயிற்று. அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த   குறிப்பு:

There Is No Poet In English Literature Like Milton : So Firm In Religious Conviction, So Fierce
In Politics, So High In Poetic Flight, So Grand In Style, So Great In Scholarship, So Beautiful In Appearance, So Overbearing In Attitude, So Stoical In Sufferance And All These Are At The Same Time. And All These Varied Facets Of Milton Have Variously Coloured The English Literature. Milton Is The Third Milestone In The History Of English Literature,

The First And The Second Being Chaucer And Shakespeare, Respectively. Therefore, One's Study Of English Literature Will, Certainly, Remain Incomplete So Long As One Is Not Acquainted With Milton's Works.

The Present Book May Be Treated As An Introduction To Milton. In It, All The Three Phases Of Milton's Creative Life Have Been Highlighted : The Phase Of Early Or Minor Poems, The Phase Of Pamphleteering And The Phase Of The Epics And The Lone Drama.

Special Treatments Have Been Accorded To The Poet's Major Works : Paradise Lost, Paradise Regained And Samson Agonistes. 

(துணுக்கு சேதி: 1652 வாக்கில் மில்டன் கண் பார்வையை இழந்தார். அதற்கு  15 வருஷங்களுக்குப் பிறகு அவரது புகழ்பெற்ற  PARADISE LOST  புத்தகம் வெளியாயிற்று!)

பார்வை இழந்த பிறகு,  அது குறித்து மில்டன் எழுதிய கவிதை. 
 On His Blindness
  
WHEN I consider how my light is spent 
  E're half my days, in this dark world and wide, 
  And that one Talent which is death to hide, 
  Lodg'd with me useless, though my Soul more bent 
To serve therewith my Maker, and present         5
  My true account, least he returning chide, 
  Doth God exact day-labour, light deny'd, 
  I fondly ask; But patience to prevent 
That murmur, soon replies, God doth not need 
  Either man's work or his own gifts, who best  10
  Bear his milde yoak, they serve him best, his State 
Is Kingly. Thousands at his bidding speed 
  And post o're Land and Ocean without rest: 
  They also serve who only stand and waite.