Showing posts with label உதிரிப் பூ. Show all posts
Showing posts with label உதிரிப் பூ. Show all posts

April 03, 2019

கோடி கோடி நன்றிகள்


தெற்குக் கோடி! அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம் உள்ள இடம் கேப் கெனவரல் புளோரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்டர்.  ஒரு சமயம்  அங்கு சென்று பார்த்தேன்.
அடுத்த வாரம் விண்ணில் ஏற்படவிருக்கும் ஸ்பேஸ் ஷட்டில், ராக்கெட்டின் முதுகில்   இணைக்கப்பட்டு செங்குத்தாக நின்று கொண்டிருந்தது.  மனிதனின் அபார சாதன களின் உன்னத சிகரம் ஸ்பேஸ் ஷட்டில்.  உலகின் பல அற்புதமான முன்னேற்றங்களுக்கும் வசதிகளுக்கும்ம் வழிவகுத்து உள்ளது விண்வெளி ஆராய்ச்சியில் பெற்ற வெற்றிகள். ஏன், தோல்விகளும் கூட !

விண்வெளி பயண முயற்சிகளில் உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அங்கு அமைத்திருக்கிறார்கள். சற்றே வளைந்த, பிரம்மாண்டமான சுமார் 20 அடிக்கு 30 அடி அளவு, கருப்பு கிரானைட்  பலகை   பதிக்கப்பட்டு, வீரர்களின் பெயர்களை பாறையில் முழுவதுமாக செதுக்கி  எடுத்து விட்டு,  பாறையின் பின்னால் இருந்து இயற்கையான சூரிய வெளிச்சம் வருமாறு செய்திருக்கிறார்கள்.  பெயர்கள் வெள்ளியால் பொறிக்கப்பட்டவை போல் கிரானைட்டில் மின்னுகின்றன.
   எப்போதும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில் இந்த கிரானைட் பலகையின் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, அவை  சூரியனை நோக்கி மெல்லத் திரும்பும் வகையில் மோட்டாரைப் பொருத்தி இருக்கிறார்கள்.

இந்த நினைவுச் சின்னத்தின் அருகே அஞ்சலியாக சில வாசகங்களை   கிரானைட்டில் பொளிந்து   வைத்து இருக்கிறார்கள். அதைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.”
”புதிய எல்லைகளை வெற்றிகொள்ள மனித சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் இம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு .விண்வெளியை வெற்றிகரமாக வெற்றி கொள்வதற்காக உயிருக்கு ஆபத்தான முயற்சிகளை  மேற்கொள்ளலாம் என்று நம்பி,  தங்கள் உயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அஞ்சலியாக இந்த நினைவுச்சின்னம் மே 9, 1991 அன்று அர்ப்பணிக்கப்படுகிறது.”

இந்த வாசகத்தை படித்ததும் என் கண்களில் நீர் தளும்பியது. இன்றைய இன்டர்நெட்,   பிராட்பேண்ட்,  ஸ்மார்ட்போன்,  டிவி நிகழ்ச்சிகள் என்று பல நூறு வசதிகளை அவர்கள் அனுபவிக்கவில்லை.  அவர்களின்  உயிர்த் தியாகம்  நமக்கு நினைத்துக்கூடப் பார்க்காத பல வசதிகளுக்குப் பாதை அமைத்துள்ளது!
அவர்களின் தியாகத்தை என்றும் மனதிலிருத்தி வைப்போம்! அவர்களுக்குக் கோடி நன்றிகள் உரித்தாகும்.


வடக்கு கோடி
 ஃபோர்டு கார் என்றதும் நினைவுக்கு வரும் நகரம் டெட்ராய்ட். அங்கு ஃபோர்ட் மியூசியம் உள்ளது. அபாரமான மியூசியம்.  அதை முழுதாகப் பார்க்க மூன்று நாள் தேவைப்படும் என்றால் நம்ப மாட்டீர்கள். அங்குள்ள கார்கள், ரெயில் என்ஜின்கள் ,குட்டி விமானங்கள் போன்ற பல முக்கிய பொருட்களை விவரிக்க தனிக் கட்டுரையே தேவைப்படும்.  


மியூசியத்திற்குள் நுழையும்போது,கூடத்தில் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பெரிய மண்வெட்டி, சிமென்டில் சற்று புதைந்த மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது.

 மியூசியத்திற்கு அடிக்கல் நாட்டியவர் உபயோகித்த மண் வெட்டி அது!  ஈர சிமென்ட்டில்,  தனது ஆள்காட்டி விரலால் அவர்பெரிதாகk கையெழுத் திட்டிருக்கிறார்.    அப்படி கையெழுத்திட்டவர்: தாமஸ் ஆல்வா எடிசன்!

 அvar ஹென்றி ஃபோர்டின் மிக நெருங்கிய நண்பர்.  எலக்ட்ரிக் பல்பு உள்பட ஆயிரத்து நூறு கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர் எடிசன் அந்த மேடை இருந்த இடத்தில் அvar நின்று, கையெழுத்திட்டிருக்கிறார்.  அந்த இடத்தில் நாம் நிற்கிறோம் என்பதை நினைத்தபோது மனதில் சிலிர்ப்பு ஏற்பட்டது.
        எடிசன் தன்னுடைய ஆராய்ச்சிகளைச் செய்த இடம் நியூ ஜெர்ஸியில் உள்ள ’தெற்கு ஆரஞ்சு’ என்ற பகுதி.   அது நியூஜெர்சியில் உள்ள ஊர். 
 அங்கு உள்ள புத்தக சந்தைக்கு நான் அடிக்கடி போவேன். அப்போதெல்லாம் , அவரது   கண்டுபிடிப்புகளையும், முயற்சிகளையும்  நினைவு கொள்வேன்.

பின் குறிப்பு
தாமஸ் ஆல்வா எடிஸன் பற்றிய ஒருநெகிழ்ச்சியூட்டும் தகவல்:

எடிசன் சிறுவனாக இருந்தபோது, ஏழ்மை காரணமாக் ரயில்களில் பேப்பர் விற்பது உண்டு. அப்படி ஒரு சமயம் ரயிலில் பேப்பர் விற்றுக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் எடிசனிடம் டிக்கெட் கேட்டார். டிக்கெட் இல்லை. ஈவு இரக்கம் இல்லாத aந்த அந்த பரிசோதகர் ‘சின்னப்பையன் பிழைப்புக்காக ஏதோ செய்கிறான்’ என்று ஒரு கணம் கூட நினைக்காமல், கோபத்தை எல்லாம் திரட்டி எடிசனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார். அந்த அறை பாதி கன்னத்திலும், பாதி எடிசனின் காதிலும் பட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? எடிசன் முழுச் செவிடாகி விட்டார். இவர்தான் தொலபேசியையும் கிராமபோனை யும் கண்டுபிடித்துப் புகழ் பெற்றார். காது கேட்காதவர் செய்த சாதனை இது! இதை நாம் மறக்கக் கூடாது.

June 22, 2018

ஒரு கல்லறை வாசகத்தின் கதை

ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறந்து போனவரை நல்லடக்கம் செய்த இடத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட கல்லை நிறுத்திவைத்து அதில் அடக்கம் செய்யப்பட்டவரைப் பற்றி ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார்கள். (சமீப காலங்களில் இந்தப் பழக்கம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.)
இந்த வாசகங்களைத் தொகுத்துப் பல புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் உள்ளவை எல்லாம் உண்மையா, கற்பனையா என்றெல்லாம் கூற முடியாது.
ஆனால் சில பிரபல அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களின் கல்லறை வாசகங்கள் சிறப்பாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.

இப்படி சிறந்த கல்லறை வாசகங்களைப் பற்றியும் கல்லறையில் நீண்ட உறக்கத்தில் இருப்பவர்களைப் பற்றியும் எழுதலாம் என்றெண்ணி, பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். புவி ஈர்ப்புச் சக்தியை (அது மட்டுமல்ல இன்னும் பல நூறு விஷயங்களை) கண்டுபிடித்த) சர் ஐசக் நியூட்டனைப் பற்றிப் படித்தபோது ஐசக் நியூட்டன் தனது வழிகாட்டியாக சர் கிரிஸ்டபர் ரென் என்பவரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரென் புகழ்பெற்ற கட்டட நிபுணர். லண்டனில் உள்ள, அபாரமாக வடிவமைக்கப்பட்ட செயின்ட் பால்’ஸ் கதீட்ரலை உருவாக்கியவர்.

September 01, 2017

துணுக்கு மணிகள்

சமீபத்தில் LEO ROSTEN எழுதிய 400 பக்க புத்தகம் எனக்குக் கிடைத்தது. புத்தகத்தின் பெயர் People I have loved, known and admired. 37 அபாரமான கட்டுரைகள். அவற்றிலிருந்து ஒன்றிரண்டு கட்டுரைகளைத் தமிழ்ப்படுத்திப் போட வேண்டும் என்று என் மனது துடிக்கிறது. பின்னால் பார்க்கலாம்.
அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் சில குட்டித் தகவல்களைத் தந்திருக்கிறார். அவற்றை மட்டும் இங்கு தருகிறேன்.
RENOIR என்று ஒரு பிரபல ஓவியர் இருந்தார். அவர் தன் வீட்டுப் பணிப் பெண்ணாக GABRIEEL என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். அந்தப் பணிப்பெண் சற்று களையான முகம் கொண்டவராக இருந்ததினாலோ என்னவோ, அவளை மாடலாக இருக்கச் சொல்லி படம் வரைந்தார். படம் நன்றாக வந்தாலும் ஏதோ அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை

அந்தப் பெண்ணின் சருமத்தின் நிறத்தில் ஏதோ கவர்ச்சியை அவர் கண்டார். தான் வரைந்த ஓவியத்தில் அது வெளிப்படவில்லை. அதனால் அவளை மீண்டும் வரைந்தார். அதுவும் சரியாக வரவில்லை.  RENOIR-  ஏதோ ஒரு வெறி பிடித்துக் கொண்டது. மீண்டும் மீண்டும் அவளை வரைந்தார்; திருப்தி ஏற்படவில்லை. இப்படி அவர், அந்தப் பெண்ணை மட்டும் வரைந்த ஓவியங்களின் எண்ணிக்கை, நம்புங்கள், 300-க்கும் மேல்!
RENOIR-ஆவது பரவாயில்லை. அந்தப் பெண்ணின் முழுமையான அழகு தனது ஓவியத்தில் வராததாலோ என்னவோ மீண்டும் மீண்டும் வரைந்தார்.

July 26, 2017

ஓ, மை GOD!

TIME பத்திரிகையின் இதழ்களில் வந்தவை)

காஸ்ட்ரோவின் சாதனை!
நீண்ட பேச்சுத் திறத்திற்கு  ஃபிடல் காஸ்ட்ரோவை யாரும் மிஞ்சவில்லைகின்னஸ் புத்தகத்தில் மிக நீண்ட உரை நிகழ்த்தியவர் என்று காஸ்ட்ரோவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. 1986-இல் ஹவானாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் 7 மணி 10 நிமிஷம் நேரம் பேசினாராம்!
காஸ்ட்ரோவின் மினி சாதனை!
பல வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். புது டில்லி விக்யான் பவனில் ஏதோ ஒரு உலக மகாநாடு. பல நாடுகளி-ருந்து பிரதமர்கள் வந்திருந்தனர். கியூபாவிலிருந்து காஸ்ட்ரோ வந்திருந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவரை கைகுலுக்கி வரவேற்றார். காஸ்ட்ரோ என்ன செய்தார் தெரியுமா? இந்திரா காந்தியைக் கரடிப்பிடியாகப் பிடித்து கட்டிக் கொண்டார். இந்திரா காந்தியினால் கழண்டு வர முடியவில்லை. நெளிந்து  பார்த்தார். முடியவில்லை.
நாற்காலியா, சிம்மாசனமா?
ஹாரி பாட்டர் கதைகள் எழுதி, இங்கிலாந்து ராணியை விட பணக்காரியாக ஆகிவிட்ட J.K.Rowling உபயோகித்த நாற்காலியை ஏலம் விட்டார்களாம். என்ன விலைக்குப் போயிற்று தெரியுமா? மூன்று லட்சத்து தொண்ணூற்று நாலு ஆயிரம் டாலர்களுக்கு! அது என்ன மந்திரசக்தி வாய்ந்த நாற்காலியா?
கால் காசு
1970-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கால்
டாலர் நாணயம் e-bay-இல் விலைக்கு வந்தது. அதை முப்பத்து ஐந்தாயிரம் டாலரைக் கொடுத்து ஒருத்தர் வாங்கி இருக்கிறார்!  (ஒரு காசு பெறாத கால் காசுக்கு  இவ்வளவு விலையா?).
மூடிகள், கோடிக்கணக்கில்...
ஆஸ்திரியா நாட்டில் ஒருவர் "பியர்' பிரியர்... இல்லை... இல்லை... "பியர்' மூடிகள் பிரியராம். அவர் புட்டி மூடிகளைச் சேர்க்க முனைந்து இதுவரை சேர்த்துள்ள  மூடிகளின் எண்ணிக்கை நூறு கோடியாம்.
ஹிட்லரின் புத்தகம்...
ஹிட்லரின் சுயசரிதை MEIN KAMF. அவர் தான் எழுதிய புத்தகத்தின் ஒரு பிரதியைத் தன்னிடம் வைத்திருந்தார். சமீபத்தில் அந்தப் புத்தகம் ஏலம் விடப்பட்டது. இருபதாயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஐந்து டாலருக்கு ($20,655) ஏலம் போயிற்றாம்!
சுட்டெரித்தது...
கடந்த  ஜூலை மாதம் 21-ஆம் தேதி குவைத் நாடு ஒரு உலக ரிகார்டைத் தொட்டது. அந்த  நாட்டில் வெய்யில் உலைக்களமாக அனல் கக்கியது
  எத்தனை டிகிரி தெரியுமா129.2  டிகிரி பாரன்ஹீட்!
உயரப்  பறந்து  உயர்ந்தவர்
அமெரிக்க இரட்டை சகோதரர்கள் ஸ்காட் கெல்லியும் மார்க் கெல்லியும்  NASA-வின் விண்வெளி வீரர்கள். ஸ்காட் கெல்லி கிட்டத்தட்ட ஒரு வருடம் விண்வெளியில் பறந்துவிட்டுத் திரும்பினார். அவர் விண்வெளியில் இருந்த சமயத்தில் அவருடைய சகோதரர் மார்க் கெல்லியை, விண்வெளியிலிருக்கும் ஸ்காட் உண்பது, உறங்குவது போன்றே  இருக்கு மாறு செய்தார்கள்.
ஸ்காட் கெல்லி விண்ணிலிருந்து திரும்பிய பிறகு - அதாவது 5440 தடவை உலகைச் சுற்றி வந்துவிட்ட பிறகு, அவரது உயரத்தையும் மார்க் கெல்லியின் உயரத்தையும் அளந்தார்கள். ஒரு வருட காலத்தில் பூமியின் ஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் இருந்ததாலோ என்னவோ, மார்க் கெல்லியை விட இரண்டு அங்குலம்  அதிகமாக  ஸ்காட் கெல்லி வளர்ந்திருந்தார்.
விண்வெளியில் ஒரு வருஷம் பயணம் செய்த ஸ்காட் கெல்லி எத்தனை சூரிய உதயங்களைப் பார்த்தார் தெரியுமா? பத்தாயிரத்து எண்ணூற்று எண்பது (10,800)!
தள்ளுமுள்ளுதான்....
ஒரே தள்ளுமுள்ளு! எதற்கு? "விண்வெளி வீரர்கள் தேவை' என்று NASA  செய்த விளம்பரத்திற்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள் தெரியுமா? பதினெட்டாயிரத்து  முன்னூறு பேர்.
நீண்ட சுருட்டு!
கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு2016 ஆகஸ்ட் 13-ஆம் தேதி 90வது வயது பிறந்த நாளை ஒரு சுருட்டுக் கம்பெனி             வித்தியாசமாகக் கொண்டாடி யது.
 அவருக்காக ஒரு சிறப்பு சுருட்டைத் தயார் செய்தார்களாம். உலகிலேயே நீளமான சுருட்டு அதுநீளம் : 295 அடி.
(குறிப்பு: காஸ்ட்ரோ சுருட்டு பிடிப்பதை எப்போதோ நிறுத்தி விட்டார்).
நீண்ட ஆயுள்...
கிரீன்லாண்டில், வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள ஷார்க் மீன்கள் கிட்டத்தட்ட 400 வருடங்கள் வாழ்கின்றனவாம். உலகிலேயே நீண்ட ஆயுளைக் கொண்ட உயிரினங்களாம்!