Showing posts with label m. Show all posts
Showing posts with label m. Show all posts

July 05, 2017

பரிவு மாமி- 2

வீட்டுக்கு விளக்கேற்ற ஒரு நாட்டுப்பெண் வர வேண்டும்” என்று நம் குடும்பங்களில் கூறப்படுவது உண்டு.
 மாமி புகுந்த வீட்டில் விளக்கேற்ற வேண்டிய அவசியமில்லை. வீட்டில் ஒரு அகல் விளக்காகவே அவர் விளங்கினார். நான் எதையும் மிகைப்படுத்திக் கூறவில்லை. 
    அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் துளிக்கூடப் பாசாங்கு இல்லாத, இயல்பான அம்சமாகும். வேறு எந்த மாதிரியும் அவரால் இருக்க முடியாது. தான் தனிப்பிறவி என்றோ, மாதர்குல மாணிக்கம் என்றோ கருதிக் கொள்ள அவருக்குத் தெரியாது. இயல்பான எளிமைதான், அவருடைய Fair and Lovely க்ரீம்.
  மாமா ஒரு பள்ளி ஆசிரியர். சமூக சேவகர். மாமியிடம் முழுப் பொறுப்பையும் கொடுத்து விட்டு எளிமையாக, அலட்டல் இல்லாமல் “எல்லாம் அவள் பார்த்துப்பாள்” என்று இருப்பார். ஒதுங்கி இருக்க மாட்டார். பக்கபலமாக இருப்பார். அரவணைப்பாக இருப்பார்.
  குடும்பம் என்றால் நூறு பிரச்சனைகள் இருக்கும். ஒன்று போனால் ஒன்று வரும். கடல் அலை போல். அதுதான் வாழ்க்கை. பிரச்சினைகளை மனத் தெளிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவரது வாழ்க்கை நெறிமுறை. மாமி என்ற தீபத்திற்கு அவர் எண்ணெய்.
ஆகா, ஒரு தம்பதி என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் என்று என்னை வியக்கச்  செய்தவர். அதனால் அவர்களை என் ஆதர்ச தம்பதியாகக் கருதத் தொடங்கினேன். பின்னால் எனக்குத் திருமணம் ஆனதும் அவர்களை எங்களது ‘ரோல் மாடல்’ என்று வைத்துக் கொண்டோம். அது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில், பல சூழ்நிலைகளில் பல்வேறு முடிவுகளை, சிலசமயம் கடினமானவைகளையும் சில சமயம் எளிமையானவைகளையும் எப்படிக் கையாள்வது என்று புரியாமல்  குழம்பி நிற்கும் கணங்களில் இதை ‘மாமி’ எப்படிக் கையாண்டிருப்பார் என்று நாங்களே சிந்தித்து, நாங்களே அவர்கள் சார்பாக ஒரு ஆலோசனையை எங்களுக்குச் சொல்லிக் கொள்வோம்.