Showing posts with label சோ. Show all posts
Showing posts with label சோ. Show all posts

February 12, 2010

சோவின் அப்பாவும் நானும் -- கடுகு

” சோவும் நானும்” என்று ஒரு கட்டுரை எழுதத்தான் ஆரம்பித்தேன். அப்போது அவருடைய அப்பா என் நினைவுக்கு வந்தார். ஆகவே கட்டுரையின் தலைப்பை ”சோவின் அப்பாவும்  நானும்” என்று மாற்றிவிட்டேன்.. சோவைப் பற்றி வேறொரு கட்டுரையைப் பின்னால் எழுதுகிறேன்.
*               *                  *                   *
               சோவின் அப்பா திரு சீனிவாச ஐயர் ஒரு அட்வகேட். எப்போது  .  அவர் சென்னையை விட்டு செங்கற்பட்டுக்கு அருகில் மூன்று மைல் தூரத்தில் இருந்த ஆத்தூர் கிராமத்திற்கு வந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அங்கு நிறைய நிலங்களை வாங்கி பெரிய அளவில் நவீன முறையில் விவசாயம் பண்ண ஆரம்பித்தார்- கிட்டத்தட்ட தனி ஆளாக! 


(இவருடைய பண்ணைக்கு  கல்கி விஜயம் செய்ததையும், அதைப் பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியதையும் ஏற்கனவே டாம் டாம் பண்ணி இருக்கிறேன்!)
           அவருடைய பண்ணை வீட்டில்ஒரு பெரிய சுவரில்,  கருப்பு வர்ணம் அடித்துக் கட்டங்கள் போட்டு, வயல்களைப் பற்றிய விவரஙகள், எந்தெந்த பயிர்கள் சாகுபடி ஆகின்றன, என்றைக்கு உரம் இட வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும் போன்ற பல புள்ளி விவரங்கள் குறிக்கப்பட்டு இருக்கும். இண்டர்காம் டெலிபோன்களை வயல்களில் கொம்பு நட்டு வைத்திருப்பார்.”முருகேசா, பம்ப் போட்டு அரை மணி ஆச்சு. மடை மாத்திடு” என்று போனில் சொல்வார்.
“என் பண்ணைக்குள் உப்பும். கிரசினும், உங்களை போன்ற் உதவாக்கரை ஆசாமிகளும்தான் வெளியிலிருந்து வரவேண்டும்” என்று நண்பர்களிடம் த்மாஷாகக் கூறுவார். தீவிர விவசாயி என்ற முறையில் வெளிநாடுக்ளுக்குச் சென்று வந்திருக்கிறார். அப்போதும் தன் கட்டுக்குடுமியை அவர் எடுக்கவில்லை.