February 07, 2011

அக்கா என்று அழைத்தார்! - கடுகு


சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். சீக்கிரமே சென்று விட்டதால் டாக்டர் வந்திருக்கவில்லை. ஆகவே சும்மா வெளியில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது சுமார் 50 வயதுள்ள பெண்மணி அங்கு வராந்தாக்களைப் பெருக்க வந்தார். இஸ்திரி போட்ட நூல் புடவை, நெற்றியில் விபூதிக் கீற்று, தலையில் பூ.

அவர் பெருக்கிக் கொண்டிருக்கும் போது மருத்துவமனையின் உள்ளே இருந்து ஒரு பெண் 20, 22 இருக்கும், வந்தார்.
அவர் ஜூனியர் டாக்டராக இருக்க வேண்டும் கொஞ்சம் காகிதத்தைச் சுருட்டி வைத்திருந்தார். அதை வெளியே பாதையில் போட்டபடியே பெருக்கிக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து, ``அக்கா... இந்தக் குப்பையையும் பெருக்கி எடுத்துக்கிட்டுப் போயிடுங்க'' என்றார்.
ஒரு கணம் நான் அசந்து போய் விட்டேன்.
அக்கா!
ஒரு ஜூனியர் டாக்டர், வேலைக்காரியை அக்கா என்றும், `எடுத்துப் போயிடுங்க' என்று மரியாதையாகவும் கூறியதைக் கேட்டு சிலிர்த்துப் போய் விட்டேன்.
வேலைக்காரி என்றால் ஒருமையில் தான் அழைப்பார்கள். `நீ, வா, போ, செய்' என்றுதான் உத்தரவு போடுவார்கள்.
அந்த ஜூனியர் டாக்டரின் பண்பு என்னை உறையச் செய்தது.
நிச்சயம் அந்த ஜூனியர் டாக்டர் சிறந்த மனிதநேயம் கொண்ட டாக்டராகவும் சேவை மனப்பான்மையுடன் மருத்துவத் தொழிலைச் செய்பவராகவும் மிளிர்வார் என்று எனக்குத் தோன்றியது.

3 comments:

  1. அந்த டாக்டரைப் பாராடும் அதே வேளையில் எனக்கு தோன்றுவது - சிலருக்கு இயற்கையி்லேயே மரியாதை வாஙும் முகம் / தோற்றம் இருக்கிறது. அந்த வேலைக்கரப் பெண்மணி வசதி உள்லவளாக இருந்திருந்தால் பெரிய படிப்பு படித்து தானும் வெற்றிகரமான ஆளாயிருந்திருப்பாள். - ஜெ.

    ReplyDelete
  2. லகே ரஹோ முன்னாபாய் என்ற படத்தில் ஒரு பெண்ணிடம் தொலைபேசி மூலம் தன் வருங்காலக் கணவனைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூறும் இடத்தில் சர்வரை மரியாதையாகக் கூப்பிடுகிறானா அல்லது உச்...உச்...என்று மரியாதைக்குறைவாக அழைக்கிறானா என்பதைப் பொறுத்து இருக்கும் அவனது குணம் என்று சஞ்சய்தத் கூறுவதாக அழகாகக்காட்சிப்படுத்தியிருப்பார்கள். அவர் சொன்னதுபோல அந்த ஆடம்பரமான மணமகன் உச்...உச்..என்றுதான் அழைப்பான். திரும்பிப்பார்த்தால் அந்த அழகான பெண் காணாமல் போயிருப்பாள். அந்தக்காட்சிதான் நினைவுக்கு வந்தது

    ReplyDelete
  3. என் மனைவி கூட வீட்டு வேலைக்கரம்மாவை பன்மையில்தான் அழைப்பாள்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!