படுக்கையில் சாய்ந்தபடி பஞ்சு ஏதோ ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டு வேலையை முடித்து விட்டு சமையலறையை மூடிவிட்டு மாடிக்கு வந்த அம்புஜம், ``ஆமாம்... வீட்டுக்கு வர்றப்போ காபிப்பொடி வாங்கிண்டு வரச் சொன்னேனே... என்னது, வாங்கிண்டு வரவில்லையா? இது என்ன வீடுன்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? இல்லை, ஓட்டல்னு நெனைச்சுக்கிட்டு இருக்கீங்களா..? வீடு, வாசல், குடும்பம்னு அக்கறை இருந்தால் எப்படி மறப்பீங்க?
மறக்கலையா? கடை மூடியிருந்ததா? எப்போ? சரிதான். நீங்க பீரோ புல்லிங் கொள்ளைக்காரன் மாதிரி நடுராத்திரிக்கு வீட்டுக்கு வர்றப்போ எந்த கடைக்காரன் கடையைத் திறந்து வெச்சு காத்துகிட்டு இருப்பான்? சரி... கொஞ்சம் இப்படி திரும்பிப் பாருங்க. என்னமோ விழுந்து விழுந்து படிக்கறீங்களே... படிக்கிற சமயத்திலே படிக்கலை. படிச்சிருந்தால் தாலுகா ஆபீஸ்ல ஹெட்கிளார்க் வேலையிலே வந்து விழுந்திருக்க மாட்டீங்க...
நடுராத்திரிகு வந்ததுதான் வந்தீங்க... ஏன் லேட்டுன்னு சொன்னா வாய் முத்து உதிர்ந்துடுமோ? பசங்களைப் பற்றி ஒரு கேள்வி உண்டா? உமாவுக்கு சல்வார்-கமிஸ் வேணும்னு சொன்னேன். பணம் காசு கேட்கலை. என்ன படிக்கறீங்க, ஆடிட் ரிப்போர்ட்டா? ஆபீஸ் வேலையா? என்ன சொன்னீங்க..? டிராமா கதை வசனமா? எதுக்குப் படிக்கிறீங்க?
நெனைச்சேன்... டிராமா குரூப்ல சேர்ந்திருக்கீங்களா? இந்த வயசிலே இப்படி ஒரு ஆசையா? டிராமா ரிகர்சல் அது இதுன்னு லேட்டாக வர்றதுக்கு ஒரு சாக்குக் கிடைச்சது. ஆமாம், உங்களுக்கு நடிக்கத் தெரியும்னு யார் சொன்னது? ஏற்கனவே குடும்பத்தின் பேரில உங்களுக்கு சொல்ல முடியாத அளவு அக்கறை. இனிமேல் நடிகர் திலகமாயிடுவீங்க! அவ்வளவுதான்... வீடு அம்போதான்.
அதிருக்கட்டும், உங்களை டிராமா குரூப்ல சேர்த்து விட்டது யாரு? நீங்க கலைச் சேவை செய்யலைன்னு யார் அழுதார்கள்? இதெல்லாம் விடலைப் பையன்கள், பெண்கள் போன்ற கவலையற்ற ஜீவன்களின் பொழுதுபோக்கு. அப்படிப் பார்த்தால் ஒரு விதத்திலும் நீங்களும் கவலையில்லாத மனிதன்தான்! ஐயாவை டிராமா குரூப்லே சேர்த்து விட்டது யார்?
நெனைச்சேன்... பக்கத்து வீட்டு சிதம்பரமா? அந்தத் தளுக்கு சுந்தரி, மினுக்கு மோகினி, பவுடர் பரதேவதை இருக்காளே அந்த டிராமா குரூப்பிலேயா? போங்க, இனிமே தினமும் வேலன்டின் டேதான்! அப்படி முறைச்சுப் பார்த்தால் நான் வாயை மூடிண்டுவிடுவேன்னு நினைச்சீங்களா? இனிமேல வாரத்தில எட்டு நாள் ரிகர்சல் வெச்சுண்டால் கூட மிஸ்டர் பஞ்சுவுக்கு சந்தோஷம்தான்!
ஒண்ணு சோல்றேன், கேட்டுக்கோங்கோ.இதுதான் சாக்குன்னு அந்த சித்ராங்கி, நம் வீட்டுக்குள்ள வந்தால்.... நான் மனுஷியாக இருக்க மாட்டேன். உங்க பஞ்சு லீலைகளையெல்லாம் ரிகர்சல் ஹாலில் வெச்சுக்குங்க. பின்ன என்ன? நான் பைத்தியக்காரி. நான் சொல்றது எல்லாம் உளறல்தான். நான் அந்த சிதம்பரத்துக் கிட்ட கேக்கறேன். நன்னா உறைக்கிற மாதிரி கேக்கறேன். எனக்கென்ன பயம்?
தூக்கமா?. எப்படி தூக்கம் வரும்? எனக்குத் தூக்கம் வரவில்லை டிராமா குரூப்ல இருக்கிற பசங்க நடவடிக்கை, வம்புப் பேச்சு, ஏ ஜோக்குகள் இதெல்லாம் உங்களுக்கு சீக்கிரம் அத்துப்படி ஆயிடும். அதுவே டிப்ளமா, டிகிரி, பி.எச்டி. எல்லாம் ஒரே வாரத்தில உங்களுக்குக் கெடைச்சுடும்.
உங்களுக்கு என்ன ரோல்? ஐயோ, ஆண்டவா? இந்த மனுஷனுக்கு இப்படி புத்தி போகுமா? எனக்கு இப்படி ஒரு சோதனை, வேதனை எல்லாம் தேவையா? என் வாழ்க்கை சிரிப்பாய் சிரிக்கும்படி ஏன் பண்றே? நான் என்ன பாவம் பண்ணினேன்?
ஆமாம்... நான் ஒப்பாரி வெக்கறேன். இப்படி பேட்டை ரவுடி வேஷத்தில் நடிக்கறதை நினைச்சு துள்ளிக் குதிக்கணுமா? ஆமாம், குதிக்கணும்தான். ஏதாவது பாழும் கிணற்றில்தான் குதிக்கணும். இனிமேல் என் பேர் அம்புஜம் என்பதே எனக்கு மறந்துடும். ஊரெல்லாம் ரௌடி மாமி என்றுதான் கூப்பிடப் போறாங்க.
இன்னிக்கு ராத்திரி எனக்கு சிவராத்திரிதான். நாலு காம்போஸ் மாத்திரையைப் போட்டுக்கலாம்னு பார்த்தால் இந்த அர்த்தராத்திரியில் எந்த மருந்துக் கடை திறந்திருக்கும்? நான் அரை மணி தியானம் பண்ணப் போறேன். எனக்குத் தூக்கத்தைக் கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை, இந்த மனுஷனுக்கு நல்ல புத்தியைக் கொடுடாப்பா என்று ஆண்டவன்கிட்ட வேண்டிக்கப் போறேன்.''
அம்புஜம் மாமி கண்ணை மூடி சுவாமி படத்தின் முன் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தாள். `நல்ல சமயமடா, இதை நழுவ விடுவாயோ?' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே டிராமா நோட்புக்கை மூடி வைத்து விட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு பஞ்சு தூங்க ஆரம்பித்தார். (தொடரும்_
அப்பப்பா... அம்புஜத்தின் அம்பு என்னமாக சரமாரியாகப் பாய்கிறது..இது கற்பனை என்று நான் சொல்லமாட்டேன்.. உங்கள் வீட்டு அனுபவமாகத்தான் இருக்கும்..அத்தனை நேச்சுரல்!
ReplyDelete-கபாலி