November 24, 2018

ஜார்ஜ் பெர்னாட்ஷா

 தெரிந்த பெயர் ; தெரியாத விவரங்கள்  
ஜார்ஜ் பெர்னாட்ஷா (26 July 1856 – 2 November 1950)

       ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் பெயர் தெரிந்த அளவு, அவரைப் பற்றிய பல தகவல்கள் பலருக்குத் தெரியாது.

     அவரைப் பற்றிய மூன்று துணுக்குகள் ஓரளவு பிரபலம். 
1. கிரிக்கெட்டைப் பற்றி அவர் சொன்ன ஒரு கருத்து.

  1. "Cricket is a game played by 11 fools and watched by 11,000 fools."  
    2.  My Fair Lady  அபாரமான திரைப்படம். அவர் எழுதிய PYGMALION   நாடகத்தின் திரை வடிவம்.
   
     3.அவரைப் பற்றிய ஒரு மாதிரியான’  துணுக்கும் சற்று பிரபலமானது. 
      ஒரு  பெண்மணி (Lady Astor ?) அவரிடம் காதல் வயப்பட்டு(!!) சொன்னாராம்: “நாம் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம்.  நமக்கு பிறக்கும் குழந்தை, உங்களைப் போல் அறிவாளியாகவும் என்னைப் போல் அழகாகவும் இருக்கும்” என்றார்.
     “நீ சொல்வது சரிதான். ஒருக்கால், குழந்தை என்னைப் போல் ‘அழகாகவும்’, உன்னைப் போல் ‘அறிவாளி’யாகவும் பிறக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று சொன்னாராம் ஷா!
      இது ஒரு ரீல் துணுக்கு. இது மாதிரி சர்ச்சில், ஐன்ஸ்டீன் என்று பல பிரபலங்களின் பெயர்களிலும்  பல ஹாலிவுட் நடிகைகளின் பெயர்களிலும் இதே துணுக்கு வந்திருக்கிறது!)
 * ஷா எழுதிய நாடகங்கள் எல்லாம் 36 தொகுதிகளாக வெளியாகி உள்ளன.  
  *ஷா  முழுக்க முழுக்க சைவமாக இருந்தவர். 
*அவருக்கு ஆங்கில மொழியின் ‘ஸ்பெல்லிங்’-கை சீர்திருத்த வேண்டும் என்ற வெறி இருந்தது.  நோபல் பரிசுத்தொகயில்  ஒரு பகுதியை  இந்த பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்கு கொடுத்து விட்டார்.

November 10, 2018

தப்புத் தபால் தலையும், கில்லாடி ஆசாமியும்!

      தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம்   பல நாடுகளில் நடக்கிறது. ஏன், ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.  அலட்சியம்தான் காரணம். 
      ஒரு பெரிய பிரமுகரின் படத்தை ஒரு தபால் தலையில் வெளியிட்டார்கள். (எந்தப் பிரமுகர் எந்த நாடு என்பது முக்கியமல்ல.) அவர் மேஜை முன் உட்கார்ந்து எதையோ எழுதுவது போல் எடுக்கப்பட்ட படம் (அல்லது ஓவியம்). அச்சாகி தபால் தலை விற்பனைக்கு அனுப்பப்பட்டது.  சில நாட்கள் கழித்து அதில் ஒரு பெரிய தவறு இருப்பது தெரிய வந்தது. ஓவியம் வரைந்தவர், அவரது இடது கையில் ஆறு விரல்களைப் போட்டு விட்டார்! இதை ஒருவர் கூட கவனிக்கவில்லை!

 ஐ.நா சபையின் உறுப்பினராக இருந்த    டேக் ஹாம்மர்ஸ்ஷோல்ட் (DAG HAMMARSKJOLD)  காலமான பிறகு, முதலாம்  ஆண்டு நினைவு நாளன்று ( 23 அக்டோபர்,  1962 ) அவரை கௌரவிக்க நாலு சென்ட் தபால் தலையை அமெரிக்கா வெளியிட்டது. ஸ்டாம்பின் வடிவமைப்பு தயாரானதும், அந்த படத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு, இன்ன தேதியில் ஸ்டாம்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்து இருந்தார்கள்.  இளஞ்சிவப்பு வண்ண கலர் பேப்பரில் ஹாம்மர்ஸ்ஷோல்டின் படம் டிசைன் செய்யப்பட்டிருந்தது. 

சில நூறு தபால் தலைகளை  இளஞ்சிவப்புக்குப் பதில், மஞ்சள் கலரில் தவறாக அச்சகத்கதில்  அச்சடித்து விட்டார்கள். நல்லகாலம், எல்லா தபால் தலைகளையும் அடிப்பதற்கு முன் தப்பைக்  கண்டுபிடித்து விட்டார்கள். மீதி தபால் தலைகளைச் சரியான வண்ணத்தில் அச்சடித்தார்கள். 

October 30, 2018

துணுக்குப் பேரணி


  அம்மாடி, கேட்லாக்
           எழுபதுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் டில்லி தாரியாகஞ்ச்                       நடைபாதை கடைகளுக்கு படையெடுப்பது என் வழக்கம். அங்கு பல, அற்புதமான, அரிய ஆங்கில புத்தகங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.
     
புத்தகம் மட்டுமல்ல, அயல்நாட்டு ஃபேஷன் பத்திரிகைகள், அமெரிக்கSEARS  கேட்லாக் போன்றவைகளும் (அயல் நாட்டு தூதரகங்கள் பழைய பேப்பர் கடையில் போட்டவை!)  இங்கு கிடைக்கும். அதை வாங்கி நம் உள்ளூர் தையல்காரர்கள் புதுவிதமான டிரஸ்களைத் தைப்பார்கள். பர்னிச்சர் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமான மேஜை, நாற்காலி என்று தயாரிப்பதற்கு ஐடியா கிடைக்கும்.
    கேட்லாக்  பயங்கரக் கனமாக இருக்கும். (1975-ம் வருஷ SEARS  கேட்லாக் 1491 பக்கங்கள்!). (பழைய  கேட்லாக்குகள் இப்போதும் கிடைக்கின்றன. E-book - 1969- ம் வருஷ SEARS  விளையாட்டு பொம்மைகள் கேட்லாக் விலை 150 டாலர்!

இரட்டையர்கள், ஆனால் விரோதிகள்.
     உலகின் மிகப் பிரபல இரட்டையர்கள் பல வருஷங்களுக்கு முன்பு சையாம்  நாட்டில் ( இன்றைய தாய்லாந்தில்)   1811-ம் ஆண்டு பிறந்த இரட்டையர்கள். 
அவர்கள் தனித்தனியாக, இரண்டு பேராக பிறக்கவில்லை. விலாப்பகுதி சதை அவர்களை ஒட்ட வைத்து இருந்தது. CHANG-ENG ஒட்டிய உடலுடன் வளர்ந்தார்கள்.  1829 -ம் ஆண்டு அவர்கள் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார்கள். பல கண்காட்சிகளில் கலந்து கொண்டு நிறைய பணம் சம்பாதித்தார்கள்.
1874’ம் ஆண்டு, ஒரு மணி  நேர இடைவெளியில் இரண்டு பேரும் காலமானார்கள்! 
பி.கு: காலமாவதற்கு சில வருஷங்களுக்கு முன்பு அவர்களுக்குள்
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரோதிகளாக ஆகிவிட்டார்களாம்!

மூடுக்கு ஏற்ற கலர்
     பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட்டிற்கு ஒரு விசித்திர வழக்கம் இருந்தது. அவருக்கு பிடித்த எழுத்தாளரான DORIAN GRAY  எழுதிய புத்தகத்தை ஒன்பது காபிகள் வாங்கி, ஒவ்வொரு புத்தகத்தையயும் ஒவ்வொரு வித கலரில் பைண்ட் செய்து வைத்துக் கொண்டார். 
“எதற்கு ஒரே புத்தகம் ஒன்பது காபிகள். அவற்றை ஒன்பது கலரில் வைத்திருக்கிறீர்களே?என்று கேட்பவர்களுக்கு “ஆமாம்.. என் மூடுக்கு தகுந்த கலர் அட்டை போட்ட காபியை எடுத்துப் படிக்க விரும்புவதே காரணம் என்பார்.

   பிரிட்டீஷ் மியுசியமில் உள்ள புத்தகங்கள் எல்லாம் கலர் அட்டை போட்ட புத்தகங்களாக இருக்கும் என்கிறது ஒரு தகவல். சரித்திரம் சம்பந்தமான புத்தகங்கள்-சிவப்பு, Theological  புத்தகங்கள் – நீலம் கவிதைகள் – மஞ்சள், Natural History  பச்சை என்று வைத்திருக்கிறார்களாம்.

ஆசிரியர் சாவி சொன்னது
     சாவி சொல்வார். “சிறுகதை போட்டியில் எனக்கு நம்பிக்கையில்லை. ஐம்பதாயிரம் லட்சம் என்று பரிசுத் தொகை வைத்தால், சிறப்பான கதை எழுதுவார்கள் என்று கருதுவது தவறு. 

October 21, 2018

சூழ்நிலை


சூழ்நிலைதான் மனிதனையும் மனித குணங்களையும் உருவாக்குகிறது.  படு சீரியஸாக இருக்கும் ஆசாமி கூட சீட்டுக் கோஷ்டியில் இருக்கும் போது அரட்டையும், கூச்சலும் போடத் தயங்குவதில்லை. அவரே மாலையில் கதாகாலட்சேபத்தில் உட்கார்ந்திருக்கும் போது, காதலாகிக் கசித்து, கண்ணீர்ப் பெருக்கி நிற்கிறார்.  சீட்டாட்டத்தின்போது , ஜோக்கடிக்காமல் இருப்பது நடக்கக் கூடிய காரியமல்ல. எப்பேர்ப்பட்ட முசுடுவும் மாறி விடுவார்.

  வீட்டு வாசலுக்கு வரும்  காய்கறிக்காரியிடம் "என்ன? கொத்தமல்லி ஒரு ரூபய்க்கு நாலு கட்டுதானா?  அநியாய வெலை சொல்றியே! ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது , சற்றும் யோசிக்காமல் ’டிப்’பாக ஐந்து ரூபாய் கொடுப்பார்- சர்வர் கேட்காமல் இருந்தாலும்!
    மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சிப்பந்தி, தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு’டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில், தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து க் கொண்டு, வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம்.  எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
    இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். "ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலை ஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபது, முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்! இது பழைய கணக்கு. இப்போது எவ்வளவு இருக்கும் என்று எனக்குத் தெரியாது!))  இவரே கிளப்பை விட்டு  இரவு 12 மணிக்கு வெளியே வரும் போது ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். "என்னய்யா,  சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது  ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.

    தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: "என்ன இது? இன்னும் இரண்டு கவு ன்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை. '' ஆனால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில், ஒரு  ‘சலானி’ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் கூட காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
          பீச், சினிமா தியேட்டர் என்று  போனால் பாப்கார்ன், ஐஸ் கிரீம் என்று கண்ணை மூடிச் செலவு பண்ணுவார்: கோவில் உண்டியில் பணம் போட, பர்ஸைத் துழாவித் துழாவிச் சில்லறையைத் தேடுவார்.
                          நாம் எல்லாரும் சூழ்நிலைகளின் கைப்பொம்மைகள்!
=====================

( அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.)

October 09, 2018

கமலாவும் கிச்சன் கார்டனும் - பாகம் 2

 ஒரு வாரம்  கழித்துப் பெரிய பெட்டி பார்சல் வந்தது. “பரவாயில்லையே 500 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய பெட்டி. அதில் விதைகள, திரவ உரங்கள், பூச்சி மருந்துகள் (அடடா, அந்த பூச்சி மருந்து புட்டிகளின் லேபில்களில் பூச்சிகளின் படத்தை மூன்று வர்ணங்களில்  மாதிரி இருந்தன) “ரவிவர்மா” தீட்டிய படங்கள் பொட்டலங்கள்  இருந்தன.  
படமங்கள் மட்டும் பெரிதாக இருந்திருந்தால், எனக்கு செலவு நூறு, இருநூறு  ஆகி இருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? கமலா அந்த பூச்சி படங்களையும் ஃபிரேம் போட்டுக் கொண்டு வரச் சொல்லி இருப்பாள். பிழைத்தேன்.
     பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்த போதும், கஜலஷ்மி பதக்க செயினை பிறந்த நாள் பரிசாகக் கொடுத்த போதும், ‘மாட்டல்’ என்ற நகை திடீர் ஃபாஷனாக வந்த போது, என் அக்காவிற்கு வாங்கிக் கொடுக்காமல், கமலாவிற்கு வாங்கிக் கொடுத்த போதும் வராத, சந்தோஷம்,  ஏதோ கலியாண சீர் வந்தது போல் மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்து!
      பெட்டியில் ஒரு நோட்டீஸ் இருந்தது. அதுவும் மூன்று கலரில் அச்சடித்து இருந்ததா என்று கேட்காதீர்கள்:.அது அந்த விதைக் கம்பெனியை    அவமானப்படுத்துகிற மாதிரியான கேள்வி. 

அந்த நோட்டீஸில் “அன்புடையீர், உங்கள் கிச்சன் கார்டன் ஆர்வத்தை நாங்கள் பாராட்டும் வகையில் நான்கு ‘பண்டில்’ வைக்கோலை எங்கள் அன்பளிப்பாகத் தருகிறோம். விதைக்கும் போது, வைக்கோல் தேவைப்படும். (பயிர் வளர்ப்புக் குறிப்பைப் பார்க்கவும்.) வைக்கோல் சுலமாகக் கிடைப்பதில்லை. உங்களுக்கு வைக்கோல் ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதற்காக நாங்களே சப்ளை செய்கிறோம். பணம் ஏதும் தர வேண்டாம். நீங்கள் எங்கள் பண்ணைக்கு வந்து வைக்கோல் பண்டில்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். அதைப் பார்சலில் அனுப்பினால் வைக்கோலின் விலையை விட பார்சல் கட்டணம் அதிகமாகிவிடும்” என்று எழுதியிருந்தார்கள்.
       உடனே கமலா, “ஒரு நிமிஷம் இருங்கோ. இதோ புடவையை மாத்திக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே பெட்ரூமிற்குள் போனாள்.
     என்ன கமலா! புடவையை எதுக்கு மாத்திக்கப் போறே?” என்று கேட்டேன்.
     அந்த நோட்டீஸை எடுத்து, எழுத்துக் கூட்டிப் படியுங்கோ. அப்பவாவது உங்க மர மண்டையில் ஏதாவது உறைக்கிறதா என்று பார்க்கலாம்.  'பண்ணைக்கு வந்தால் வைக்கோல் பண்டில் இலவசமாகத் தருகிறோம்’ என்று அதில் போட்டிருக்கா இல்லையா?... இன்னிக்கே போய் எடுத்துண்டு வந்துடலாம், நம்ப காரில்” என்றாள்.
     “கமலா.. அது நோட்டீஸ் தானே.. ஏதோ கோர்ட் சம்மன் மாதிரி நினைச்சுண்டு, காலில் வெந்நீர் கொட்டிண்ட மாதிரி பதைபதைச்சுண்டு அவசரப்படறயே...  ஸ்டாக் தீர்ந்துடுச்சு என்று சொல்லிவிடுவார்களா என்ன?” என்று கேட்டேன்.
     இதற்கு கமலாவின்  ‘நியுட்டன் விதி’ ரியாக்‌ஷன் பற்றியும் அவள் விட்ட ராம பாணங்களைப் பற்றிய விவரங்களும் இப்போது தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வைக்கோல் பண்டில் வாங்க, பண்ணைக்குப் போகக் கார் புறப்பட்டது. இரண்டு மணி கழிந்து நாலு பண்டில் வைக்கோலுடன் வீடு திரும்பினோம்.
     நாளைக்குக் காலையில் ‘கிச்சன்’ கார்டன்’ வேலையை ஆரம்பிச்சுடப் போறேன்” என்றாள்.
      “தப்பு, தப்பு,  ‘ஆரம்பிச்சுடப் போறோம்’ என்று சொல்லு” என்று சொன்னேன்.
       “என்ன, என்ன? என்ன சொன்னீங்க? ஆரம்பிச்சுடப் போறோம்னு என்றா சொன்னீங்க. நிஜம்மாவா? சுனாமிதான் வரப் போறது” என்றாள்.
          “சுனாமியும் வராது…பினாமியும் வராது. நம்ப தோட்டம் பாரேன், ஹார்ட்டி கல்சரல் கிளப் நடத்தும் தோட்டப் போட்டியில் நிச்சயம் பரிசு வாங்கும். பரிசு வாங்கறதுக்கு நீ போகிற போது ,என்ன கலர் பட்டுப் புடவை கட்டிக்கணும்னு இப்பவே பிடிச்சு யோசிக்க ஆரம்பி” என்றேன்.

     மறுநாள் முதல், தோட்ட வேலை ஜரூராக நடந்தது. பள்ளம் தோண்டுவதும், கொத்துவதும் என் வேலை. கிராமத்தில் இந்த வேலைகளைச் சிறு வயதில் செய்திருந்ததால், மளமளவென்று செய்தேன். கமலா அவ்வப்போது இங்கே கத்தரி செடி, இங்கே பச்சை மிளகாய், இங்கே தக்காளி என்று பிளான் போட்டாள்.