முன் குறிப்பு:
சுமார் 45 வருஷத்திற்கு முன்பு தினமணி கதிரில், நான் மொழிபெயர்த்த இந்த கட்டுரை சமீபத்தில் ஒரு வாசக ரசிகர் கண்ணில் பட்டிருக்கிறது. படித்துப் பார்த்திருக்கிறார்.. அவருக்குப் பிடித்திருந்தது. ‘தாளிப்பு’வில் போட சிபாரிசு செய்ததுடன், அதை தட்டச்சும் செய்து அனுப்பி விட்டார்.
அதை இரண்டு பாகங்களாகப் போடுகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் என்னைப் பாராட்டுங்கள்; இல்லாவிட்டால் அந்த நேயரைக் காய்ச்சுங்கள்.. அடடா. அவசரத்தில் மாற்றி எழுதி விட்டேன்! அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!
=============================
திடீரென்றுதான் ஸாமுக்குத் தோன்றியது, தம்மால் பறக்க முடியும் என்று. மாதா கோவிலில் வேதத்திலிருந்து சில
அத்தியாயங்களைப் படித்துக் கொண்டிருந்த ஸிஸ்டர் மின்னியின் சொற்பொழிவை
வேண்டாவெறுப்பாக , ஸாம், அவர் மனைவி
முல்லி இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். "ஆழமான நம்பிக்கை மலையையும் நகர்த்தும்" என்ற வேத வாக்கியத்திற்கு அவர் அப்போது விளக்கம்
தந்துகொண்டிருந்தார்.
"கோவிலில் கூடியிருக்கும் ஆயிர கணக்கான
மக்கள் ஒன்று சேர்ந்து மலையடிக்குப் போய், "மலை நகர வேண்டும்" என்று திடநம்பிக்கையுடன் விரும்பினால் போதும்; அது தானாகப் பத்தடி ஒதுங்கிப் போகும். ஆனால் மலையை நகர்த்த வேண்டிய அவசியம்
இப்போது யாருக்கும் இல்லையாதலால், நம்பிக்கையால்
செய்ய முடியாதது எதுவுமே இல்லை" என்பதை
மட்டும் உணர்ந்தால் போதும்....
கடைசியாகத் தொண்டை கிழிய அந்த வேத
வாக்கியத்தைப் பாடி முடித்துவிட்டுச் சபை கலைந்தது.
வெளியே பஸ் ஸ்டாப்பில் நின்று
கொண்டிருந்த முல்லியும் ஸாமும் காலிபோர்னியாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஸாமுக்குத் தெரியும், காலிபோர்னியாவிலேயே நிரந்தரமாகத் தங்க
நினைக்கிறாள் முல்லி என்பது. ஏனெனில்
முல்லியாவது, அவர்களது பெண் லாவினியாவது
காலிபோர்னியாவை ஒரு நாளைக்கு நாற்பது தரமாவது புகழ்வார்கள். லாவினியாவுக்கு ஹாலிவுட்டில் பெரிய சினிமா ஸ்டாராக ஜொலிக்க
ஆசை. ஆக, அவர்களுக்கு இங்கிலாந்து திரும்பும் எண்ணமே கிடையாது.
பஸ் வருகிற வழியாக இல்லை. சளசளவென்று முல்லி ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள்- சாதாரண பெண்களின் வழக்கப்படி. ஸாம் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தலையை ஆட்டிக்
கொண்டே இருந்தார்-சாதாரண
ஆண்களின் வழக்கப்படி, ஆனால் அவர்
மனது மட்டும் நம்பிக்கை, மலை, நகர்தல்- இவைகளை அசை போட்டுக்கொண்டே இருந்தது. நகர்த்துவது என்பது பெரிய விஷயம். சின்னதாக ஆரம்பித்துத்தான் பெரிய விஷயங்களுக்குப் போக
வேண்டும். சரி, இப்போது நம்பிக்கையால் நமக்கு வேண்டிய டவுன் பஸ்ஸை
வரவழைப்போம்.
கண்களை/ மூடிக்கொண்டு ஸாம் முணுமுணுத்தார்: "எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கண்களைத் திறக்கும்போது ஒன்பதாம் நம்பர் பஸ்
வந்திருக்கும்". அவர் இதைச் சொல்லி முடிப்பதற்கு முன்னால்
முல்லி அவரை உலுக்கி, "பஸ் வந்து விட்டது, அதற்குள் என்ன தூக்கம்?" என்றாள்.
ஸாம் கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம், அதே பஸ் வந்து நின்று கொண்டிருந்தது! தற்செயலாக இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஸாமுக்கு அந்த சக்தியின்மேல் பலத்த நம்பிக்கை
விழுந்துவிட்டது. பஸ் அவர்கள்
இறங்க வேண்டிய இடத்துக்கு வந்து நின்றது. முல்லியும் ஸாமும் வீட்டை நோக்கி நடந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்த கடல், அலை வீசிக்கொண்டிருந்தது. அந்தக் கடலுக்கு வெகு தூரத்தில் ஹாலிவுட்
நட்சத்திரங்களின் மாளிகைகள்: கடல்
பறவைகள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன.
இந்தச் சமயத்தில்தான் ஸாமுக்குத்
திடீரென்று தோன்றியது, மனிதன்
பறக்க முடியும் என்று!