முன்குறிப்பு:
வீட்டுக்குள் நுழையும்போதே கமாலாவின் முகத்தில் எள் ப்ளஸ் கொள் மட்டுமல்ல நவதானியங்களும் வெடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கையில் சிலம்பு வைத்திருக்கும் கண்ணகி போஸில் ஒரு கடிதத்துடன் தலை விரித்தபடி (அன்று வெள்ளிக்கிழமையாதலால் எண்ணை தேய்த்துக் குளித்து தலைமுடியை ஆற விட்டபடி.) நின்று கொண்டிருந்தாள்.
”அப்பா.. என்ன வெய்யில்?”என்றேன், ஏதோ பேச வேண்டுமே!
“ ஒவ்வொரு வருஷமும் வர்ற வெய்யில் தான்.."
" ஆமாம். கையில என்ன லெட்டர்?”
“ தொச்சு எழுதிஇருக்கிறான்..”
“ மணி ஆர்டர் அனுப்பணுமா. செக் அனுப்பணுமா?”
“ மணி ஆர்டரும் இல்லை,. சுப்பிரமணி ஆர்டரும் இல்லை. கோபமா எழுதி இருக்கிறான்!”
“ கோபம் பாபம்னு அவன்கிட்ட சொல்லு.. என்னவாம் கோபத்துக்கு காரணம்?”
“ உங்கள் “ பிளாக்:கில் நீங்க ஆஸ்பத்திரியில் இருந்ததை எழுதியிருக்கிறீங்களாமே.. அவனுக்கு அல்சர் வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தானே அதைப் பத்தி எழுதினால் என்ன, அதுக்குக்கூட நான் தகுதி இல்லாதவனான்னு கேட்டிருக்கிறான்.”
“ என் பிளாக் என்னஆஸ்பத்திரி அனுபவ பிளக்கா? .. அப்புறம் கால் சுளுக்குன்னு மூணு நிமிஷம் ஆஸ்பத்திரியில் அங்கச்சி இருந்தாளே, அதைப் பத்தியும் எழுதச் சொல்வான்.”
” வேண்டாம் .. வேண்டாம்..எதைப் பத்தியும் எழுத வேண்டாம்..தொச்சுன்னு சொன்னாலே உங்களுக்குப் பத்தி எரியறது.” என்று கோபமாக உள்ளே போனாள் கமலா,
நம் பிளாக்கில் எத்தனையோ குப்பையைப் போடும்போது, தொச்சுவைப் பற்றி எழுதினால் ஒன்றும் மோசமாகி விடாது என்று எண்ணி ” தொச்சுவுக்கு அல்சர்”
கட்டுரையைப் போடுகிறேன்.( நமக்குள் இருக்கட்டும்: வருகிற வாரம் ஊரிலிருந்து என் அம்மா வரப்போகிறாள்!)
யாராவது பாராட்டி எழுதினால் கமாலாவின் கோபம் ஆறும். இல்லாவிட்டால் நானே பத்து புனைபெயரில் எழுதவேண்டும்! ( கஷ்டமடா சாமி!)
================================
தொச்சுவுக்கு அல்சர்
ஒரு இலக்கியக் .கூட்டத்தில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்தேன். வீட்டிற்கு தொச்சு வந்திருப்பதை அவனுடைய (கர்ண கடூரமான) குரல் அறிவித்தது. அவனது புத்திர சிகாமணிகள் என் வீட்டை ஒரு குருக்ஷேத்திர மைதானமாகக் கருதிப் பாரதப் போர் நடத்திக் கொண்டிருந்தன.
“டேய் தொச்சு, இன்னும் ஒரு அடை போடறேண்டா'' என்று என் அருமை மனைவி கமலா, ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்துக் கெஞ்சுவது போல் தொச்சுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
தொச்சுவின் மனைவி அங்கச்சி, “அக்கா... நீங்க போட்டுண்டே இருந்தால் உங்க மனசு கஷ்டப்படக் கூடாதே என்று இவர் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். ஆறு அடைக்கு மேலே நான் கொடுக்கவே மாட்டேன்... வயிறு நிறைய சாப்பிடணும்னு நாட்டிலே ஒரு சட்டமும் இல்லையே, அக்கா. அரை வயிறு சாப்பிட்டால் போதும்'' என்றாள்.
“தொச்சு என்னிக்கும் அரை வயிறுதான் சாப்பிடுவான்'' என்று என் மாமியார் அறிவித்தாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நான்.... “கமலா தண்ணி கொண்டு வா'' என்று கத்தினேன்.
“அடாடா... வீட்டுக்குள் வரும் போதே எரிஞ்சு விழ வேண்டுமா... இந்தாங்க தண்ணி'' என்று சொல்லி "டங்"கென்று டம்ளரை வைத்தாள் கமலா.
டைனிங் ஹாலில் அடை சம்ஹாரம் பண்ணிக் கொண்டிருந்த தொச்சு, “ஐயோ அம்மா'' என்று சோகக் குரல் கொடுத்தான்.