June 30, 2010

பையாகுட்டி -- கேரக்டர்

காஞ்சீபுரம் பாசஞ்சர், காட்டாங்கொளத்தூர் ஸ்டேஷனிலிருந்து புறப்படும் சமயம், திறந்த கோட்டுப் பறக்க, வேட்டியை டப்பா கட்டு கட்டியபடி ஓடி வந்து தொத்திக் கொள்ளும் ஆசாமி தான் திருவாளர் பையாகுட்டி. பெயருக்கு ஏற்றார்ப் போல் சிறிய கச்சலான ஆசாமி தான் பையாகுட்டி. ஒருகையில் எல். ஜி. பெருங்காயப் பை, மற்றொரு கையில்  குடை, ரிடையரான பிறகு ஒரு தனியார் கம்பெனியில் "மாடு' போல் உழைக்கும் ஜீவன்.
அந்த வண்டியில் பையாகுட்டி ஏறியதும் கலகலப்பு ஏற்படும். "வாய்யா பையாகுட்டி.... அக்சப்டென்ஸ் என்ன?'' என்று யாராவது கேட்பார்கள்.
 ஆம், பையாகுட்டியின் வாழ்க்கையில் ரேஸ், ரம்மி, குறுக்கெழுத்துப் போட்டி, ஐரிஷ் ஸ்வீப் ஸ்டேக்ஸ், நியூயார்க் காட்டன் ஆகியவைகள் தான் முக்கிய பங்கு பெற்றிருந்தன!
வாய் ஓயாமல் பேசுவார் பையாகுட்டி. "ஏண்டா ராமு, ராத்திரி உன்னை, த்ரீ மெயிலில் காணோம்? ஒரு கை குறைஞ்சுதுன்னு  ஒரு பாசஞ்ஜரைப் போட்டுக் கொண்டோம். பாவிக்கு என்னமா ஆடித்துத் தெரியுமா கை! எல்லாரையும் துரத்தித் துரத்தி அடிச்சான். இத்தனைக்கும் "பிரும்மச்சாரி'யும் "பத்து'வும் எவ்வளவு திருட்டு ஆட்டம் ஆட முடியுமோ அவ்வளவு ஆடினார்கள். பெரிய கல்லுளிமங்கனப்பா அவன். எல்லாரையும் சுருட்டி பைக்குள்ளே போட்டுக் கொண்டான்.

கோளறு பதிகம்-2 - உருவளர்

பாடல்: 2
உருவளர் பவள மேனி ஒளிநீ றணிந்து
      உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
      திசைதெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து - அழகில் சிறந்த சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும் திருநீற்றினை அணிந்து கொண்டு

உமையொடும் வெள்ளை விடை மேல் - உமையன்னையுடன் வெள்ளை எருதின் மேல் ஏறி

முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்

திங்கள் - நிலவையும்

முடிமேல் அணிந்து - திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்

திருமகள் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள்

கலையதூர்தி - கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்

செயமாது - வெற்றிக்கு அதிபதியான மலைமகள்

பூமி - நிலமகள்

திசை தெய்வமான பலவும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா. ( நெதி = செல்வம்)

June 26, 2010

கமலாவும் காரும் -- கடுகு

   என் அருமை மனைவி கமலாவுக்கு எந்த வேளையில் அந்த யோசனை தோன்றியதோ எனக்குத் தெரியாது. (தெரியாது என்றா சொன்னேன்? தப்பு, தப்பு, அவளுக்கு அந்த ஐடியா தோன்றிய வேளை, எனக்குப் போதாத வேளை!)
    சூடாகக் காப்பியைக் கொடுத்தபடியே  (சூடான காப்பி என்பது எனக்கு அவள் வைக்கும் ஐஸ்!) கமலா கேட்டாள்.
    ""எப்போ காரை வாங்கப் போகிறீங்க?''
    ""அநியாய விலை விக்கிறது, கீரை கெட்ட கேட்டுக்கு இவ்வளவு கிராக்கியா?'' என்றேன். சமயத்தில் இப்படி அரை குறையாகக் காதில் விழுந்தது போல் நான் பாவிப்பது உண்டு.
    ""நான் காரைச் சொன்னால், நீங்க கீரையைச் சொல்றீங்க. அதுவே உங்க அக்கா...''
    ""இதோ பார், கமலா. இனிமேல் எங்க அக்காவுக்கு ஒரு ரிப்பன் கூட வாங்கிக் கொடுக்கலை. அவளுக்கு வாங்கிக் கொடுத்தால், உங்கிட்டே வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்குது... என்ன கேட்ட? கார் வாங்கணும்னா?.. இதென்ன புதுசா?... இத்தனை நாளாக எதிர்வீட்டு மைதிலி கண்ணன் புடவை வாங்கினால், நீ வாங்குவே. அடுத்த வீட்டு மல்லிகா மோகன், பிளாஸ்டிக் டப்பா வாங்கினால் நீ வாங்குவே. மூணாவது வீட்டு ஜானகி சந்துரு எவர்சில்வர் பாத்திரம் வாங்கினால், நீயும் வாங்குவே. கோடி வீட்டு சுதா மூர்த்தி, நகைச் சீட்டுக் கட்டினால், நீயும் கட்டுவே. இந்த நாலு பேர்லே யார் கார் வாங்கியிருக்கா, சொல்லு. அவங்களை ஒரு கை பார்த்துவிட்டு வருகிறேன்'' என்றேன்.
    ""நன்னாயிருக்குதே நீங்க சொல்றது? ஏன் என்னைப் பார்த்து தான் அவங்க ஏதாவது வாங்கட்டுமே. "மிஸஸ் கமலா கடுகு கார் வாங்கியிருக்கா, நாமும் வாங்கலாம்' என்று அவங்க சொன்னால் என்ன தப்பு?''

புருஷோத்தம் கௌசிக்

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.
 மத்திய அமச்சரவையில் விமானத் துறை அமைச்சராக புருஷோத்தம் கௌசிக் என்பவர் இருந்தார்.  இவர் ஒரு நாள் விடிகாலை ஸ்டேட்ஸ்மென் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார். ஸ்டேட்ஸ்மெனில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் `புகார் பெட்டி' கடிதங்கள் வெளியாகும். அதில் ஒரு கடிதத்தில்l இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயணி ஒருவர் தனக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் எழுதியிருந்தார்.

கௌசிக் உடனே ஸ்டேட்ஸ்மென் ஆபீசுக்குப் போன் செய்து அந்தக் கடிதம் எழுதியவரின் விலாசத்தைக் கேட்டார். அந்த விடிகாலை வேளையில் பணியில் இருந்த ஒரு உதவி ஆசிரியர் அங்குமிங்கும் தேடி குறிப்பிட்ட கடிதத்தைக் கண்டுபிடித்து விவரங்களைக் கொடுத்தார்.

கௌசிக் உடனே காரை எடுத்துக் கொண்டு (டில்லியில் பட்டேல் நகரில் இருந்த) அந்தப் பயணியின் வீட்டுக்கே   போய் கதவைத் தட்டினார்.

கோளறு பதிகம்-1: என்பொடு

பாடல் 1:
என்பொடு கொம்பா டாமை இவைமார் பிலங்க
      எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டோ டாறும்
      உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க         \
எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்
ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்
ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்
பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்
ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்
உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.