April 29, 2010

நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் நானும் - கடுகு

      பல வருஷங்களுக்கு முன்பு.கல்கி தீபாவளி மலரில் ஆண்டாளின் `வாரணமாயிரம்' பாடல்களை அழகான படங்களுடன் (ஓவியர் ரவி என்று நினைவு) 5 பக்கங்களுக்குப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்ததும் தான் திருமணங்களில் பாடப்படும் இந்தப் பாடல்கள் ஆண்டாள் இயற்றியவை என்று அறிந்ததுடன் அவற்றின் அழகுத் தமிழில் மனதைப் பறி கொடுத்தேன். (திருமணங்களில் வாரணமாயிரம் பாடல்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் புரோகிதர்கள் சொல்வார்கள். ஆகவே பாடலே பாதி புரியாது.)
அதுவரை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஓரளவே ஈடுபாடு இருந்தது. அதன்பின் அதன் மேல் மிகுந்த ஈடுபாடு எனக்கு ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் `மர்ரே' ராஜம் மலிவுப் பதிப்பாக மாதாமாதம் பல இலக்கியங்களை வெளியிடத்  துவங்கினார்.  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை 4 பாகங்களாக ஒரு மாதம் வெளியிட்டார். நாலு புத்தகங்களின் மொத்த விலை ரூ.4/- (ஆம். அவர் வெளியிட்ட எல்லா புத்தகங்களுக்கும் ஒரே விலை: ஒரு ரூபாய் என்று நிர்ணயித்திருந்தார்.)  நாலு புத்தகத்தையும் வாங்கினேன்.. படிக்கப் படிக்க தமிழ் மொழியின் அழகும், வீச்சும், ஆழ்வார்களின் கற்பனைத் திறனும், பக்திப் பெருக்கும் என்னை ஆட்கொண்டன. இதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் எங்கள் வீட்டு புத்தக அலமாரியைப் பார்த்துக் கொண்டிருந்த போது நாலாயிரத்தின் ஒரு பாகம் என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தேன். லேசான மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்த புஸ்தகத்தில் என் அப்பா, தன் கையெழுத்தையும் வாங்கிய தேதியையும் போட்டிருந்தார். அந்த தேதி நான் பிறந்த தேதிக்கு அடுத்த நாள்! அத்துடன் இன்னொரு பதிப்பும் இருந்தது. அது 1913-ல் பிரசுரிக்கப்பட்டது. கிட்டதட்ட 100 வருஷத்திற்கு முன் பிரசுரிக்கப்பட்ட அதைக் குடும்பப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.
அதன் பிறகு யார் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிரசுரித்தாலும் வாங்க ஆரம்பித்தேன்.
*                                   *                      *
திருமணம் ஆன பிறகு என் மனைவியும் நானும் நாலாயிரம் படித்தோம் எல்லாப் பாசுரங்களையும் ஒரு தரம் படித்தோம் . பிறகு 4000 பாடல்களையும் நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன். (அந்த கால கட்டத்தில் நான் அரசு ஊழியர். ஆதலால்  நேரத்திற்குப் பஞ்சமில்லை!) உத்தமூர், அண்ணங்கராச்சாரியார் புத்தகங்களைப் பார்த்து, `ராஜம்' பதிப்பு புத்தகங்களில் பள்ளி பாட புத்தகங்களில் செய்வது போல் கடினமான பதங்களுக்குக் கோடிட்டு அர்த்தமும் எழுதினேன். பிறகு நாங்கள்  இருவரும் 4000 பாசுரங்களையும் படித்தோம். எங்கள் குழந்தைக்கு இரண்டு வயது ஆனதுமே   திருப்பாவை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம்.
    அவளுக்கு இரண்டரை வயது ஆன சமயம் செங்கல்பட்டிற்கு வந்திருந்த கதாகாலட்சேப விற்பன்னர் எம்பார் விஜயராகவாச்சாரியாரை. என் மனைவியும் நானும் என் குழந்தை ஆனந்தியுடன் அவர் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்று சந்தித்தோம்.
``இவள் எங்கள் பெண்.. திருப்பாவையில்  முதல் பத்து பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறோம். அவள் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்'' என்றோம்.

April 28, 2010

புது மனைவி கமலாவிற்கு -கடுகு

ஒரு  கவிதை போல் நீ உறங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலை வேளையில் உன்னை எழுப்பிக் காப்பி போடச் சொல்லாததைத் தவறாக எண்ணாதே.
நேற்றுக் காலை நீ காப்பி போட்டபோது இடுக்கியின் பிடி தளர்ந்து வெந்நீர்ப் பாத்திரம் அப்படியே கீழே விழ, அருகில் நின்று கொண்டிருந்த என் காலில் கொட்டிச் சிறிது ரணத்தை ஏற்படுத்தியது. நான் அங்கு நின்றது என்னுடைய தவறு. இடுக்கி பிடி தளர்ந்தால் வெந்நீர்ப் பாத்திரம் கீழே விழுமே என்று எனக்குத் தெரிந்திருக்க வேண்டாமோ? சே. என்ன கணவன் நான்!
அப்புறம் காலைச் சிற்றுண்டிக்குத் தோசை வார்த்தாயே,  அடாடா///அதிலும் உன் சாமர்த்தியத்தைக் கண்டேன். ஆசைக் கணவன் சாப்பிடச் சின்னச் சின்ன விள்ளல்களாக இருந்தால் சௌகரியமாக இருக்கும் என்று தானே தோசையைத் திருப்பும்போது ஒன்பது துண்டுகளாத் திருப்பினாய்? ஒரேயடியாகத் திருப்புவதை விட இப்படிப் பல துண்டுகளைத் திருப்புவது சிரமமான வேலை. இருந்தும் என் மேல் இருக்கும் ஆசையினால் நீ சிரமத்தைப் பொருட்படுத்தவில்லை. தோசை முறுவலாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். ஊத்தப்பம் மாதிரி இருந்தாலும், எனக்குப் பிடிக்கும் என்று நான் சொல்லியிருந்ததை ஞாபகம் வைத்துக் கொண்டு ஒரு துண்டு படு
மெல்லிசாகவும் மற்றது ஒரு இஞ்ச் கனமாகவும் நீ வார்த்த சாமர்த்தியத்தை நான் எப்படி விவரிப்பேன்!
நமக்குக் கல்யாணமாகிய முதல் நாளிலேயே இத்தனை சாமர்த்தியத்தைக் காட்டி விட்டாயே, செல்லமே!
காப்பியில் சர்க்கரைக்குப் பதிலாக பவுடர் உப்பைத் தவறுதலாகத்தான் போட்டுவிட்டாய். இருந்தாலும் நம்பு, என் மனோரஞ்சித மலரே, உப்புப் போட்ட காப்பியின் ருசி இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று எனக்கு இதுவரை தெரியாது, அடாடா, என்ன டேஸ்ட்!

April 24, 2010

கறுப்பு தங்க மீன் எங்கே? - கடுகு

குப்புசாமி வீட்டிற்கு நான் போனபோது வீடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் மேல் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்கள்.
``ஜன்னலை ராத்திரி மூடி வைக்கணும்னு சொன்னேனே... யார் மறந்தது?'' என்று குப்புசாமி கத்த--
``கொக்கி உடைஞ்சு போச்சுன்னு கழுதையாகக் கத்தினது உங்க காதில விழுந்துதா..?''- என்று அவன் மனைவி பங்கஜம்..கத்த -
`` கத்தினேன்னு நீ சொன்னா போதும். `கழுதையா' என்ற அடைமொழிக்கு அவசியமே இல்லை. ...போச்சே... இப்ப என்ன செய்யறது?''

இனிமேலும் இந்த எபிஸோடைப் பார்த்துக் கொண்டிருப்பது நாகரீகம் அல்ல என்பதால் நான், ``என்னப்பா குப்புசாமி?  என்ன... என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.
``வாப்பா... வா,,,இந்த மீன் தொட்டியிலே ஏழு தங்க மீனும் ஒரு கறுப்பு தங்க மீனும் இருந்தது. ராத்திரி இருந்தது. இப்ப காணோம்...''
``மீன் தொட்டியிலிருந்து துள்ளி வெளியே விழுந்திருக்குமோ என்னவோ... பூனை கீனை வந்த எடுத்துக்கிட்டுப் போயிருக்கும். இதுக்குப் போய் வீட்டை ரெண்டாக்கறீங்களே!'' என்று கேட்டேன்.
``பாத்தியா... பாத்தியா... பங்கஜம்... என்ன கேட்டார் பாத்தியா? வீடு இரண்டாக்கறோமாம். அப்படி நிச்சயமாக ஆகப் போகிறது. ஐயோ... இந்த மீன் போனதால என்னென்ன இரண்டு படப் போகுதோ'' என்றார் குப்புசாமி.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. குப்புசாமியைக் கேட்டேன்.
``அப்பா... மீன் தொட்டியில ஏழு தங்க மீனும், ஒரு கறுப்பு தங்க மீனும் இருந்தால் வீட்டில் லக்ஷ்மி தாண்டவமாடுவாள்னு சாஸ்திரம் சொல்லுது!''
``எந்த சாஸ்திரம் அப்படி சொல்றது?  வேடிக்கையான சாஸ்திரமாக இருக்கிறதே!''
``வாஸ்து அப்பா... வாஸ்து சாஸ்திரம்!''

April 21, 2010

எம். எஸ். தரிசனம்

செங்கற்பட்டு சேவா சங்கத்திற்காக எம். எஸ் அவர்கள் ஒரு கச்சேரி 1952-ல் செய்தார். சங்கத்தின் தொண்டன் என்ற முறையில் கச்சேரி செய்ய வந்த எம். எஸ். அவர்களுக்கு நமஸ்காரம் போட்டேன்.  பிறகு கச்சேரி முடிந்து அவர் விடைபெறும்போது அவ்ரிடம் கையெழுத்து வாங்கினேன்..
அதன் பிறகு 1985-ல் அவரது உறவினர் திருமணத்திற்குப் போயிருந்து போது அவர் இங்கும் அங்கும் போய் எல்லாரையும் விசாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து வியந்து போனேன். குறுக்கே போன என்னிடம் “சாப்பிட்டீங்களா?” என்று பரிவோடு கேட்டார்.

2004-ல்  ஒரு நாள் என் டில்லி நண்பர் போன் செய்தார்.: என் பையன் ரவி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். அவன எம்.எஸ். அவர்களைப் பார்த்து ந்மஸ்காரம் சொல்ல ஆசைப்படுகிறான். நாளைக்குப் பகல் சென்னை வருகிறான். சாயங்காலம்  பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள்... ஆகட்டும், பார்க்கிறேன் அது இது என்று எது சொன்னாலும் என் காதில் விழாது... நீங்கள் தான் பிரபலமான ஆசாமியாச்சே!” என்று சொன்னார்.
எம். எஸ் அவர்களோ உடல் நலமில்லாமல் இருக்கிறர் என்பது எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று புரியவில்லை. ‘எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமே: என்று திரு. ஆத்மா அவர்களுக்குப் போன் செய்தேன்
 என்னை அறிமுகம் செய்துகொண்டேன். ஆத்மா உடனே உற்சாகமாக: ”அடேடே.. நீங்களா? எப்படி இருக்கீங்க?  டில்லிதானே?” என்று மிகவும் பரிச்சியமானவரைப் போல கேட்டார். ( அவர் என் விசிறி என்பதைப் பின்னால் அறிந்தேன்.)

தமிழ் முத்து - 9 வேயுறு தோளி பங்கன்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!

வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்

விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்

மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு