February 27, 2011

அர்ச்சனை-4 யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி
அம்புஜம் பெட்ரூமில் நுழையும் போதே, பஞ்சு  ஒரு பக்கமாகப் புரண்டு படுத்தார். கொட்டாவி விடுவது போல் பாவ்லா காட்டினார்.
``...பாவம். ஆபீஸில் ஏகப்பட்ட வேலை... தூங்கறதுக்கு டைம் கிடைக்கலை போல் இருக்கு. அதுதான் தூக்கம் வந்துடுத்து. ஆபீஸ  நாடகம் ஒத்திகை பார்க்கிற மாதிரி, கொட்டாவி விடறது, குறட்டை விடறது, முழித்துக் கொண்டே தூங்கறது எல்லாம் ஒத்திகை பார்க்கறாரோ, என்னவோ!  மனுஷன். அப்பதானே பொண்டாட்டி தொணதொணப்பிலிருந்து தப்பிக்கலாம்?
யார் அப்படிச் சொன்னதுன்னு கேக்கறீங்களா? நீங்க சொன்னீங்கன்னு நான் சொல்லலை. பாகீரதி சொன்னதைச் சொல்றேன். பாகீரதி யாருன்னு தெரியாதா? இதை நம்பச் சொல்றீங்களா? `பகீர்'ரதின்னு சொல்வீங்களே, உங்க உப்பிலியின் ஒய்ஃப். அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று என்னைக் கேட்டால்?... நல்லா இருக்கே .கேள்வி!.. அவளுக்கு அவ வீட்டுக்காரர் உப்பிலி சொல்லி இருப்பார். உப்பிலிக்கு அவரோட பெஸ்ட் ஃப்ரெண்ட் பஞ்சு சொல்லி இருப்பார்.
நான் நச்சுதான், தொணதொணப்புதான். பிக்கல் பிடுங்கல்தான்... அதனாலதான் என்னை பொண்டாட்டின்னு வெளியில சொல்லிக்க உங்களுக்கு வெட்கமா இருக்கு.

ஆமாம்... நான் இல்லாததும் பொல்லாததும்தான் சொல்றேன். நேற்று சாயங்காலம் கோயிலுக்குப் போகும் போது எதிரே ஒரு மோகினி வந்தாளே, அவளைப் பார்த்ததும் அண்ணலும் இளித்தான், அவளும் இளித்தாள். அவள் யாரு? இளிக்கிற அளவுக்கு என்ன நெருக்கம் என்று இந்த க்ஷணம் வரை எனக்குச் சொல்லலை. அவளுக்கு என்னை அறிமுகம் கூட செய்து வெக்கலையே... பாவம், சொல்லிக்க வெட்கமாக இருந்திருக்கும்! அவள் கழுத்தை ஒடித்து, கண்ணைச் சுழற்றி பார்த்த பார்வையே சரியாக இல்லை. இதோ பாருங்க... அம்புஜம் மக்காக இருந்த காலம் மலை ஏறியாச்சு. அவளுக்கு ஞான திருஷ்டி இல்லாவிட்டாலும், மனுஷாளை எடை போடத் தெரியும். ஏதோ கண்ணிலே சாளேசுவரம் வரலை... ஒரு பார்வையிலேயே மனுஷாளின் தராதரத்தைக் கண்டுபிடிச்சுடுவேன்.
ஆஹா... அவளைத் தப்பாகச் சொல்லக் கூடாதா? அடாடா... என்னமா உருகுகிறார்! பொண்டாட்டி தவிர எல்லாரும் ப்த்தரை மாத்துத் தங்கம், நல்லவங்க; நம்பகமானவங்கன்னு . சொல்றீங்க... எனக்கு எல்லாரும் தளுக்கு மினுக்கு சுந்தரிகள்தான். பல்லை இளிக்கிறவர்கள்தான்.  அது சரி, அப்படி நான் எங்கே. எப்போ  சொன்னேன். இந்த பாகீரதியைத்தான் சொன்னேன். அவள்தான்  தன் பேரை பேஷன் பேரா மாத்திக்கப் போறாளாம். அனுஷ்காவோ, கத்திரிக்காவோ ஏதோ ஒரு பேர்...
அவள் பார்வையே சரியில்லை. அவள் எதுக்கு ஒரு உதட்டுச் சுழிப்புடன் சிரிக்கணும்... என்னது, நீங்க பாக்கலையா? அவள் தெருக்கோடியில் வரும் போதே நீங்க வெச்ச கண்ணை எடுக்காமல் பார்த்துட்டு இருந்ததை நான் பார்த்துண்டுதான் இருந்தேன்.
எனக்குக் கோவில், குளம் எதுவும் வேண்டாம். ஹும்...உங்களோட வர்ற போதுதானா எதிரே மோகினிகள் வரணும்... ஹும், நான் உங்கள் கூட வந்தால்தானே இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்க வேண்டி இருக்குது. நீங்களே ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்னு வெளியில அழைச்சிண்டு போறீங்க. அதையும் நிறுத்திட்டா போச்சு. நம்பளோட இருபத்தைந்தாவது கலியாண நாள் வர்ற மாசம் வருகிறது. என்னது? என்னிக்குன்னா கேட்கறீங்க... பாவம், எப்படி ஞாபகம் இருக்கும்? கலியாணம் பண்ணிண்டதாவது ஞாபகம் இருக்கா? இல்லை, அம்புஜம்னு ஒரு லேடி ஹவுஸ்கீப்பரை வேலைக்கு வெச்சுண்டு இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு என்பதாவது தெரியுமா? என்னது... எரிச்சல் ஊட்டறேனா... கல்யாணம் ஆனபோது எப்படி இருந்தீங்க...
ஹும்... ஆமா ஆமா... என்னைச் சொல்வீங்க. கலியாணம் ஆனபோது இருந்த அம்புஜம் இப்போ வேற அம்புஜமா ஆயிட்டேனா? அதுக்கு யார் பொறுப்பு? மக்கு மாதிரி இருந்தால் அதே அம்புஜம். என்ன, ஏதுன்னு கேள்வி கேட்டால் மாறிப் போய்ட்டேன். யார் அப்படி கேட்கும்படி செய்ஞ்சது? நீங்க தானே? நீங்க சொல்றதுக்கெல்லாம் பொம்மை மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தால் நான் பத்தரை மாத்து தங்கம்... உங்க ஆட்டம், பாட்டம் எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி டான்ஸ் ஆடிண்டு இருந்தால் தங்கம். எதுக்கும் ஒரு எல்லை உண்டு. நான் முட்டாளாகவே இருந்துட்டா  உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். இப்போ முழிச்சுண்டுட்டேனே...
அடப் பாவமே , நான் கத்திண்டு இருக்கேன். இவர் என்னடான்னா குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்!  ( தொடரும்)

5 comments:

  1. அனுஷ்காஎல்லாம் வருவதால் இது புத்தம் புதிய அர்ச்சனை என்று நினைக்கிறேன்! இல்லை, அனுஷ்கா மட்டும் இன்றைய செருகலா? எப்படி, இப்படி மூச்சுவிடாமல் அம்புஜம் மாமியால் புலம்பமுடிகிறது! அவர் தாடையை தோளில் இடித்துக் கொள்வது கூட எனக்கு ‘தெரிகிறது’ ! - ஜெ.

    ReplyDelete
  2. <>> இல்லை,இந்த தொடரே புதிதுதான். எத்தனை அத்தியாய்ம் எழுதுவது என்று நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. தொடர் முடிந்ததும் ஒரு பின்குறிப்பு வ்ரும். அதைத் தவறாமல் ப்டிக்கவும்.

    ReplyDelete
  3. //அதைத் தவறாமல் ப்டிக்கவும்// - இதை சொல்லவும் வேண்டுமா?! தினம் உங்கள் சைட்டுக்குப் போகாமல் நாள் முடிவதில்லை!

    எல்லா கலைஞர்களுக்கும் / எழுத்தாளர்களுக்கும் படைப்புத்திறன் ஒரு கால கட்டத்தில் நீர்த்துப்போகும் என்று நினைத்திருந்தேன். உங்கள் எழுத்து அதைப் பொய் ஆக்கிவிட்டது.

    -ஜெ.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    இப்பவே சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே, அந்தப் பின் குறிப்பு என்னவாக இருக்கும் என்று ஆர்வமாக இருக்கு.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!