June 21, 2017

1. லிங்கன் 2. ஆர்தர் ஆஷ்


முன்குறிப்பு: நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஆங்கிலத் துணைப்பாடமாக ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு புத்தகம் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. 


அதை வைத்தவருக்கு நன்றி சொல்ல வேண்டும். லிங்கனின் வாழ்க்கை பல விதங்களில் பல வித அற்புதத் தாக்கங்களை ஏற்படுத்தியது. அவர் பெரிய ஹீரோ வாகவும் வழிகாட்டியாகவும் எனக்கு அமைந்து விட்டார்.
அமெரிக்காவிற்கு வந்தபோது வாஷிங்ட னில் அவரது சிலையைப் பார்த்தேன். அவரது புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்திய போர்க்களத்திற்குச் சென்று பார்த்தேன். அவரது பல பொன்மொழிகளைப் படித்து எழுதி வைத்துக்கொண்டேன்.
“தாளிப்பு”-வில் ஏற்கனவே அவரைப் பற்றிய பதிவுகளை எழுதியுள்ளேன். அவைகளின் சுட்டி:

1, ஒரு மனிதர்: 16000 புத்தகங்கள்!
2. கலியுக வேதம் பிரிட்டானிகா

லிங்கனைப் பற்றி ஒரு பிரபல துணுக்கு ஒன்று உண்டு. அவர் அதிபரான சமயம் GRACE BEDELL என்ற சிறுமி அவருக்குக் கடிதம் எழுதினாள். “நீங்கள் மிகவும் மெலிந்த மனிதராக இருக்கிறீர்கள். உங்கள் முக அமைப்பிற்கு நீங்கள் தாடி வைத்துக்கொண்டால்எடுப்பாக இருக்கும்.” என்று எழுதினாள்.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த லிங்கன் தன் கைப்பட அந்தப் பெண்ணுக்கு பதில் எழுதினார். பின்னால் அவள் யோசனையை ஏற்றோ அல்லது அவராகவோ தாடி வளர்த்துக்கொண்டார்.

அதன் பிறகு அதிபராக பதவி ஏற்க அவர் வாஷிங்டனிலிருந்து ILLINOIS-க்கு போகவேண்டி யிருந்தது. அதிபருக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. தனது ரயிலை WEST FIELD என்ற ஊரில் நிறுத்தும்படி லிங்கன் சொன்னார். (இந்த ஊர் NEWYORK மாநிலத்தில் உள்ளது.)
அதன்படியே ரயில் நின்றதும் அவர் வண்டியிலிருந்து இறங்கி, ஒரு அறிவிப்பைச் செய்தார். “இந்த ஊரிலிருந்து எனக்குக் கடிதம் எழுதிய GRACE BEDELL, இந்தக் கூட்டத்திலிருந்தால், அவரை இங்கு வரும்படி அழைக்கிறேன்.” என்றார்.
ஒரு பையன் தன் அருகிலிருந்த கம்பத்தில் ஏறி, “அதோ..அதோ.. இருக்கிறாள் ” என்று கத்தினான்.
அந்தப் பெண்ணுக்குத் தலைகால் பிடிபடவில்லை.
“இதோ...இதோ... இங்கே இருக்கிறேன்” என்று குதித்துக்
கொண்டே சென்றாள். அவளுடைய அப்பா அவளை அதிபரிடம் அழைத்துச் சென்றார்,
லிங்கன் அவளைப் பார்த்து “கிரேஸ், உன் யோசனையை ஏற்று நான் தாடி வளர்த்திருக்கிறேன். இப்போது நான் சிறிதளவு பார்க்கும்படியாக இருக்கிறேனா?“ என்று கேட்டார். குனிந்து அவளுக்குச் செல்லமாக முத்தமிட்டார்.
“நீங்கள் இப்போது ரொம்பப் பிரமாதமாக இருக்கிறீர்கள். நம் நாட்டின் மிகப் பெரிய, மிகச் சிறந்த) அதிபராக நீங்கள் இருப்பீர்கள் என்று நான் பந்தயம் கட்டத் தயார்.” என்றாள் அவள்.
லிங்கன் தன் உயரமான தொப்பியைப் போட்டுக் கொண்டு டாடா சொல்லி விட்டு, ரயிலில் ஏறினார். ரயில் புறப்பட்டுச் சென்றது.
அதன் பின்பு Grace அவருக்குக் கடிதம் எதுவும் எழுதவில்லை; சந்திக்கவும் இல்லை. பின்னால் WEST FIELD முனிசிபல் நிர்வாகம்,  சரித்திரத்தில் தங்கள் ஊர் பெயரும் இடம் பிடிக்க, லிங்கன் - கிரேஸ் சிலைகளை  ஊர் பூங்காவில் நிறுவி, பெருமை யடைந்தது!
-----------------
ஆர்தர்  ஆஷ்  (1943-1993)
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராகத் திகழ்ந்தவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்  (Arthur Ashe) . மூன்று Grand Slam போட்டிகளில் வென்றவர். 1980-ல் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.
அந்த சமயம் அவருக்கு பை-பாஸ் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. அப்போது அவருக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் வைரஸ் இருந்ததால், அவர் எய்ட்ஸ் நோயாளியாகி விட்டார். அதனால் 1993-இல் காலமாகி விட்டார். அவரது நினைவாக நியூயார்க்கில் ஒரு பிரமாண்டமான டென்னிஸ் ஸ்டேடியம் 1997-இல் கட்டப்பட்டது.


அவர் இறப்பதற்கு முன்பு, மருத்துவமனையில் இருந்தபோது ஏராளமான ரசிகர்கள் அவருக்கு GET WELL கார்டுகள் அனுப்பினார்கள். "இந்தக் கொடிய நோயைத் தர கடவுள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தார்?'' என்கிற ரீதியில் எழுதியிருந்தார்கள்.
அதற்கு  Ashe  எழுதிய  பதில் கல்நெஞ்சையும் கரையச் செய்யும் ஆஷ் எழுதியது -
உலகம் முழுவதும் 50 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட்டை ஆடத் துவங்கி இருக்கிறார்கள்; 5 லட்சம் போர் தொழில்முறை டென்னிஸ் வீரர்களாகப் பயிற்சி பெற்று வருகிறார்கள். 5 கோடி பேர் விளையாடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 50 ஆயிரம் பேர் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்றிருக்கிறார்கள். 5000 பேர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளைத் தொட்டு விட்டார்கள். 50 பேர் விம்பிள்டன் போட்டியை நெருங்கி விட்டார்கள். 4 பேர் செமி ஃபைனல்ஸிற்கு வந்து விட்டார்கள். 2 பேர் ஃபைனல்ஸில் இடம் பிடித்து விட்டார்கள். டென்னிஸ் போட்டியில் வெற்றிக் கோப்பையை  நான் - நான் மட்டும் - உயரப் பிடித்தபோது, கடவுளிடம் "என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?'' என்று கேட்கவில்லை.
”இன்று, வலி என்னைத் தாக்கும் சமயத்தில் கடவுளிடம், ’என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தீர்கள்?'’ என்று நான்  கேட்கக்கூடாது.  (And today in pain, I should not be asking GOD, Why me?)”
--------------------------------
 ஒரு COINCIDENCE
 ஆர்தர் ஆஷ் பற்றிய பதிவை  ஒரு வருஷத்திற்கு முன்பு எழுதினேன். சென்ற வாரம்தான் ’தாளிப்பு’வில் போட்டேன்.  இந்த வார TIME இதழில்  ஆர்தர் ஆஷ் பற்றி பெரிய கட்டுரை வந்திருக்கிறது.
=================


முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

3 comments:

  1. ஆர்தர் ஆஷ் (பெயர் ஞாபகம் இல்லை என்றாலும்) சொன்னதைப் படித்திருக்கிறேன். திரும்பப் படிக்கும்போது கண்ணில் கண்ணீர். இது எல்லோருக்கும், எல்லா வாழ்க்கைக்கும் பொருந்தும் இல்லையா? நல்லது கிடைக்கும்போது, இறைவா உனக்கு நன்றி கூறுகிறென், எளியனான, பொருத்தமில்லாத எனக்கு இத்தகைய உயர்வைத் தந்துள்ளாயே என்று எத்தனைமுறை நாம் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்? கஷ்டம் வரும்போது மட்டும், நீ என்ன கல்லா, இதயம் இல்லையா என்று குறைகூறத் தயங்குவதில்லை. மிகவும் ரசித்தேன். அந்த வலியிலும், Should not be asking GOD, Why me? - அடடா.. என்னமாதிரி ஒரு சிந்தனை. 'கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே'

    ReplyDelete
  2. பொதுவா அமெரிக்க அதிபர்கள், 'அமெரிக்க கனவுகள், அமெரிக்காவின் மாண்பு' போன்றவற்றை follow செய்பவர்கள். அதாவது உதாரண புருஷர்களாகக் காட்சியளிப்பவர்கள் (வாக்களிக்கச் செல்லும்போது, ஒபாமாவிடம், அவர் அதிபராக இருந்தபோது, Booth அதிகாரி, உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள் என்று கேட்பதை கிளிப்பாகப் பகிருவது, அவரே மெக்டொனால்டில் வரிசையில் நின்று உணவு வாங்குவது போன்று). லிங்கன் அதில் ஸ்பெஷல். பெரிய தேசத் தலைவர். அவர் செய்த செயல் ரசிக்கும்படி இருந்தது. இதுதான் அதிபர்களை சாதாரணப் பிரஜைகளோடு இணைத்துவைக்கும் முறை. தேச மக்களும் அவர்களை உதாரணமாகக் கொண்டு முன்னேறும் விதம். லிங்கன் போன்ற 'பெரியவர்கள்' இன்னும் பல்லாண்டு அதிபராக இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  3. லிங்கனைப் பற்றிய அரிய செய்திகள்! அறியாத ஆர்தர் ஆஷ் பற்றிய செய்திகள்! இரண்டுக்கும் நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன் :