June 24, 2016

அன்று செய்த உதவி


பல வருஷங்களுக்கு முன்பு நடந்த உண்மைச்சம்பவம். 



இரண்டு இளைஞர்கள். அமெரிக்காவில் பிரபல ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
(அமெரிக்காவில் கல்லூரிப்படிப்பு என்பது யானையைக் கட்டித்   தீனி போடுவது போல் மிகுந்த செலவு வைக்கும் ஒரு நடவடிக்கை  ஆகும். “இரண்டு பசங்களும் காலேஜ் போறாங்க. அதனால் வீட்டை  வித்துட்டோம்.  வாடகை வீட்டிற்கு மாறிவிட்டோம்” என்று பல பெற்றோர்கள் சொல்வது எனக்குத் தெரியும்.)
இந்த இளைஞர்களுக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. கல்லூரி செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். 
ஏதாவது இசை நிகழ்ச்சியை நடத்தி அதில் கிடைக்கும் லாபத்தை,  கல்லூரிச் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள்.
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த, போலந்தைச் சேர்ந்த  பியானோ கலைஞர் Paderewski ( பெடெரெஃப்ஸ்கி) யின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய முனைந்தார்கள்.  இரண்டாயிரம் டாலர் தந்தால் வருவதாக, அவருடைய மானேஜர் அந்த இளைஞர்களிடம் சொன்னார். அந்தக் காலத்தில் இது மிகப் பெரிய தொகை.  இருந்தாலும், டிக்கெட் வசூல் அதற்குமேல் கிடைக்கும் என்று தங்களைத் தைரியப்படுத்திக் கொண்டு, அவர் கேட்ட தொகையைத் தர ஒப்புக்கொண்டார்கள்
அவரது நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு பணம் வசூலாகவில்லை. மொத்தம் 1600 டாலர்தான் வசூல்.
நிகழ்ச்சி முடிந்ததும் அந்த இளைஞர்கள் தயங்கித் தயங்கி Paderewski-யிடம் விஷயத்தைச் சொல்லியபடியே 1600 டாலரையும், 400 டாலருக்கு ஒரு பிரமாணப் பத்திரத்தையும் கொடுத்தார்கள். “நாங்கள் விரைவில் 400 டாலர் சம்பாதித்து உங்களுக்கு அனுப்பிவிடுகிறோம்.” என்றார்கள்.  படிப்புச் செலவுக்காக அவர்கள் நடத்திய நிகழ்ச்சி அவர்களுடைய படிப்பிற்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் போலிருந்தது!
அந்த பியானோ மேதை அவர்களிடம் “பாய்ஸ்... இதெல்லாம் தேவையில்லை.” என்று சொல்லியபடி, பிரமாணப் பத்திரத்தை இரண்டாகக் கிழித்துவிட்டு, அந்த கிழிந்த காகிதங்களுடன், அவர்கள் கொடுத்த 1600 டாலரையும் அவர்களிடம் கொடுத்தார். இந்தப் பணத்தில் ஒவ்வொருவரும் 10 சதவிகிதம் உங்கள் உழைப்பிற்காக எடுத்துக்கொள்ளுங்கள். செலவு போக மீதிப்பணத்தை எனக்குக் கொடுத்தால் போதும்” என்றார்.
அந்த இளைஞர்கள் அப்படியே உருகிப் போனார்கள்.
+         +                 +
இதற்குப் பிறகு பல வருடங்கள் கழிந்தன. முதல் உலக யுத்தமும் வந்து போயிற்று.
இப்போது பெடெரெஃப்ஸ்கி  போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகி விட்டிருந்தார்.  ஆனால் போலந்தில் கடுமையான பஞ்சம் நிலவியதால், மக்கள் பசியும் பட்டினியுமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்க Paderewski ஏதேதோ முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் ஒருத்தர்தான் தனக்கு உதவி செய்வார் என்று அவரிடம் உதவி கேட்க நினைத்தார். ஹூவர் அப்போது அமெரிக்க உணவு மற்றும் நிவாரண அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார். அவரிடம் உதவி கேட்டார். பெடர்வஸ்கியின் வேண்டுகோளை ஏற்று,   டன் கணக்கில் உணவுப் பொருட்களை போலந்திற்கு அனுப்பி வைத்தார்.
ஓரளவு பஞ்சத்தை சமாளித்தபிறகு பெடர்வஸ்கி, பாரீஸுக்கு வந்திருந்த அதிபர் ஹூவரை,   பாரீஸ் போய்ச் சந்தித்தார்; உணவுப்   பொருட்களைப் போலந்திற்கு அனுப்பியதற்கு, போலந்து மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

“நன்றி தெரிவிக்கத் தேவையில்லை. மிஸ்டர் பெடர்வ்ஸ்கி...” என்று ஹூவர் நட்புடன் சொல்லிவிட்டு “உங்களுக்கு மறந்துபோய்விட்டது என்று நினைக்கிறேன். ஒரு சமயம் நீங்கள் எனக்கு உதவி செய்து இருக்கிறீர்கள். அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கப் பணம் இன்றி தவித்துக் கொண்டிருந்தேன். நீங்கள்தான் உதவி செய்தீர்கள் உங்கள் பியானோ நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்து..” என்றார் ஹூவர். பழைய சம்பவங்களை நினவு படுத்தினார்.
இரு தலைவர்களும் அப்படியே நெகிழ்ந்து போனார்கள்.
ஆதாரம்: BITS & PIECES பத்திரிகை 

சிறு குறிப்பு:
பெடரெஃப்ஸ்கி
உலகப் பிரபல பியானோ கலைஞர். போலந்து நாட்டின் பிரதமராக ஜனவரி 1919- நவம்பர் 1919 இருந்தார், பிறகு அவர் போலந்தின் பல உயர் மட்ட  முக்கிய கமிட்டிகளின் தலைவராகவும் இருந்தார். 1941-ல் காலமானார். THE LION OF POLAND என்று அழைக்கப் பட்டவர்.

ஹெர்பர்ட் ஹூவர்

ஹெர்பர்ட் ஹூவர் அமெரிக்காவின் முப்பத்தியோராவது அதிபராக 1929-33 ஆண்டுகளில் இருந்தவர். பொறியியல் நிபுணர். அவரது சம்பளப் பணத்தை அப்படியே முழுவதுமாகத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்தவர். ஒன்பதாவது வயதில் தாயை இழந்தார். அப்பாவை அதற்கு முன் இழந்தார். அவர்கள் விட்டுவிட்டுப் போனது நிறைய கடன்களையும் ஏழ்மையையும்!
ஹெர்பர்ட் ஹூவர் 1964-ல் காலமானார்,
முக்கிய குறிப்பு:  இந்தப் பதிவைத் 
தட்டச்சு செய்து உதவியது:  சகோதரி திருமதி எஸ். ஷோபனா.
அவருக்கு என் நன்றி.



June 13, 2016

சாவியும் சத்யசாயியும்

ஒரு வியப்பூட்டும் தகவல்.

       ஆசிரியர் சாவி என்மேல் அளவு கடந்த அபிமானம் கொண்டவர். நீங்கள் என் ‘CONSCIENCE KEEPER’ என்று கடிதத்தில் எழுதியது மட்டுமல்ல, எத்தனை எத்தனையோ விஷயங்களில் என் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார். மகிழ்ச்சிகரமான விஷயங்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்; சோகம், ஏமாற்றம், கஷ்டம், நஷ்டம் போன்றவற்றையும் என்னிடம் பகிர்ந்துகொண்டு ஆறுதல் அடைந்திருக்கிறார். அவர் என்னிடம் என்ன கண்டார் என்று எனக்குத் தெரியாது.
அவரைப் பற்றிய நினைவுகள் எப்போதும் என் மனதில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன.  அவர் என்னிடம் சொன்ன ஒரு வியப்பூட்டும் தகவல்.

       சாவி அவர்களுக்கு சத்ய சாயிபாபா மீது அளவற்ற பக்தி. வீட்டில் பூஜை அறையில் பெரிய படம் வைத்திருப்பார். அவர் வீட்டிற்கு எப்போது நான் சென்றாலும் பூஜை அறைக்கு அழைத்துச் செல்வார்.

     பாபாவின் வரலாறை. ஸ்ரீவேணுகோபாலனை எழுதச் சொல்லி சாவியில் தொடராகப் போட்டதுடன், புத்தக வெளியீட்டையும் விழாவாகக் கொண்டாடினார். பாபாவின் புகைப்படங்கள், ஓவியங்கள் என்று ஒரு கண்காட்சியையும் (மியூசிக் அகாடமி ஹாலில் என்று நினைவு)  நடத்தியிருக்கிறார்.

அதில் ஒரு பெரிய படம் -- பெங்களூர் ஓவியர் வரைந்தது -- அற்புதமாக இருந்தது; அனைவரையும் கவர்ந்தது. (இந்தக் கால கட்டத்தில் நான் டில்லியில் இருந்தேன்.)  ந்தப் படத்தைப் பார்த்ததும் சாவி மேலும் தீவிர சாயி பக்தராகி விட்டார்.

சாவி காலமாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் நானும்  சென்னை வந்தோம்.  சாவியை அவர் வீட்டில் சந்தித்தோம்.

அப்போது அவர் சத்ய சாயியின்  இந்த ஓவியத்தைப்ப ற்றி ஒரு அரிய அனுபவத்தைக் கூறினார். சிற்சில குட்டி விவரங்கள் மறந்துபோய் விட்டன.  நினைவில் உள்ளதைக் கூறுகிறேன்.

June 03, 2016

குடும்பத்தை நடத்துவது எப்படி?

என் குறிப்பு:
இதே வலைத்தளத்தில் வலது பத்தியில் உள்ள சில விஷயங்களில் ஒன்று, 'எனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்'  என்ற தலைப்பில் சில மேதைகளைக் குறிப்பிட்டு இருப்பது.. அதில் சிலர் சென்ற தலைமுறை எழுத்தாளர்கள்.  அபாரமாக எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்கள் எளிதில் கிடைக்காது. பழைய புத்தகக் கடையில் கிடைத்தாலும் கிடைக்கும்.
என் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களில் ஒருவர்  ELINOR GOULDING SMITH. அவருடைய நகைச்சுவை சரளமானது; எளிமையானது; குடும்பப் பாங்கானது.  இவர் குதிரையை வைத்து ஒரு 250 பக்க புத்தகம் எழுதி இருக்கிறார். பயங்கர நகைச்சுவை!

அவர் எழுதிய மற்றொரு புத்தகம்  THE COMPLETE BOOK OF ABSOLUTELY PERFECT HOUSEKEEPING. அதிலிருந்து ஒரு அத்தியாயத்தைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன். புத்தகம் வெளியான ஆண்டு: 1956!
              +                       +
குடும்பத்தை நடத்துவது எப்படி?
(ஓடி, ஓடி, விடாமல் ஓடிக் கொண்டே!)

ஒரு வீட்டை நிர்வகிப்பது மிகவும் கடினமான வேலை என்று ஒரு குடும்பப்பெண் நினைப்பாள் என்று நினைக்கவே எனக்குப் பிடிக்காது. உண்மை அதுதான்;  இருந்தாலும் அதைப்பற்றி நினைக்கத்தான்  எனக்குப்  பிடிக்காது. உண்மை கசக்கும். ஆனால் இதில் உள்ள சிரமங்கள் நம் பணிக்கு ஊக்கமும் உற்சாகமும் சவாலும் தருவதுடன் அர்த்தமும் வித விதமானதாகவும் அமையும். அதே சமயம் சற்று அருவருப்பானதும் கூட.