December 19, 2016

பாசமுள்ள கமலா

  என் அருமை மனைவி கமலா மிகுந்த பாசம் மிக்கவள். பாசமில்லாதவர்கள் உண்டா? இதைப் போய் ஜம்பமடித்துக் கொள்கிறீர்களே? என்று கேட்கும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை. கமலாவின் பாசம் சாதாரணப் பாசம் அல்ல. எல்லாருக்கும் தாய்ப் பாசம், தந்தைப் பாசம், குழந்தைப் பாசம், பேரன், பேத்தி பாசம் என்று இருக்கும். ன் அருமை மனைவி கமலாவுக்கோ மாமியார்ப் பாசம், நாத்தனார்ப பாசம் என இரண்டு எக்ஸ்ட்ரா பாசமும் உண்டு. மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். எந்த மனைவிக்கு மாமியார் மீதும், நாத்தனார் மீதும் பாசம் இருக்கிறது என்று.

நான் சொல்வதைப் படித்து (ஒருவர் சொல்வதைக் கேட்கத்தான் முடியும், படிக்க முடியுமா என்று கேட்காதீர்கள்) நம்பாதவர்களுக்கு ஒரு சில உதாரணங்கள் தருகிறேன்.
எந்தச் சம்பவமானாலும், எந்த விஷயமானாலும் கமலாவிற்கு என் அம்மா மற்றும் என் அக்காவின் ஞாபகம் வராமல் இருக்காது

வார்த்தைக்கு வார்த்தைஉங்க அம்மா, உங்க அக்காஎன்று சொல்லாமல் இருக்க மாட்டாள். (சில சமயம்உங்க அம்மாக்காரி, உங்க அக்காக்காரிஎன்றும் சொல்வாள் என்பதை நான் மறைக்கவில்லை.) சரி, இப்போது பார்க்கலாமா சில சாம்பிள்களை?
‘‘என்ன கமலா, லல்லி கடையில் புடவைகள் ஸேல் போட்டிருக்காங்களாம். பேப்பர்ல பாத்தியா?’’
நான் எங்கே பார்த்தேன்? 50 பர்ஸண்ட் டிஸ்கவுண்ட், 3 நாளைக்கு மட்டும், அதுவும் தி.நகர் ஷோரூமில் மட்டும் என்று இருந்ததே. உம், நான் எங்கே பார்த்தேன்? சீப்பாகக் கிடைக்கிறதே என்று நாலு வாழைப் பூவை வாங்கிண்டு வந்துட்டீங்க. அதைஆய்ஞ்சுபண்றதுக்கே டயம் இல்லை. வாழைப் பூன்னு சொன்னதும் நினைவுக்கு வர்றது. கல்யாணம் ஆன புதுசுல உங்க வீட்டிலே இரண்டு நாளைக்கு ஒரு தரம் வாழைப் பூ தானே சமையல்? உங்க தோட்டத்திலே வாழை மரம் நிறைய இருக்கு. வாழைப் பூவுக்கும் பஞ்சமில்ல. ஆய்ஞ்சுதிருத்தி சமையல் பண்ண ஒரு பைத்தியக்காரி நான் இருக்கேன். உங்க அம்மா உருக்கமாகமலா பண்ணினால் வாழைப்பூக் கறி தேன் மாதிரி இருக்கிறதுஎன்பாள். உங்க அக்கா சரோஜா, அதை விடு அம்மா, கமலா எவ்வளவு நைஸா மணி மணியாத் திருத்தறா... பார்த்தாலே கண்ணிலே ஒத்திக்கணும் போல இல்லையா? என்பாள். உங்க அம்மா போன ஜன்மத்திலே நாதஸ்வர வித்வானாக இருந்திருக்க வேண்டும். உங்க அக்கா ஒத்து ஊதுபவராக இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கா நாதஸ்வரம், உங்க அம்மா ஒத்து. அவ்வளவு அந்நியோன்னியம்! கண்ணிலே ஒத்திக்கணும் என்றால் நான் வெங்காயத்தைப் பொடிப்பொடியா திருத்தித் தருவேனே! ... சரி, உங்க அம்மா, அக்காவைப் பத்திப் பேச ஆரம்பிச்சால் முடிவே வராது. புடவை ஸேல் போட்டிருக்கு. ... சரி.. சொல்லுங்கோ.
தீபாவளி வர்றது. ஒன்றிரண்டு புடவை வாங்கிக்கலாமான்னு கேட்கறேன்.
ஒண்ணு, இரண்டு... ஆக மூன்று புடவை. 50 பர்சண்ட் தள்ளுபடி புடவை எனக்கு. பத்து பர்சண்ட் தள்ளுபடி உங்க அம்மாவுக்கும், உங்க அக்காவுக்கும்அதுதான், என்னடா இத்தனை கரிசனம்னு பார்த்தேன். செய்யுங்கோ... பெத்து வளர்த்தவாளுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப் போறீங்க? ஏன்னா.. உங்களைத்தான். மிஸஸ் கண்ணன் சொன்னா, ஒரு வேன் ஏற்பாடு பண்ணிண்டு மகாபலிபுரம் போகப் போறாளாம். நீங்களும் வர்றீங்களான்னு கேட்டா.
கமலா... மகாபலிபுரம் போகணும்னா நாம தனியாக ஒரு வேன் வெச்சுண்டு போகலாம். நாம் தனியாகப் போனால்தான் நல்லா அனுபவிக்க முடியும். அவங்க குடும்பத்தோட போனால் சுகப்படுமா?
வாஸ்தவம்தான் நீங்க சொன்னதுக்கு உங்க வாயிலே அரை மூட்டை சர்க்கரை போடணும். முப்பது வருஷத்துக்கு அப்புறம் மகாபலிபுரம் போகலாமான்னு கேட்கிறேன். தனியா போனால்தான் ஜாலியாக இருக்கும்னு சொல்றீங்க... முப்பது வருஷத்துக்கு முன்னே கலியாணம் ஆனவுடன் போனோமே, நினைவிருக்கா... எவ்வளவு ஜாலி... எவ்வளவு ஜாலி... காசைத்தான் வேன்காரனுக்கு கொட்டிக் கொடுக்கிறோமே, நானும் வர்றேன்டாஎன்று உங்க அம்மாக்காரி சொல்ல, தடுக்கி விழுந்தா விழக்கூடிய இடம் மகாபலிபுரம். அதுக்குப் போகிறதுக்குக் காலே வர்றதில்லே. எல்லாரும் போய் வந்தால் போகிறதுஎன்று உங்க அக்காக்காரி (ஆமாம், அம்மாக்காரி வந்தால் தொடர்ந்து அக்காக்காரி என்றுதான் வரவேண்டும்.) சொல்ல, ஜானவாஸக் காரைவிட அடைசலாக ஏகப்பட்ட பேரன், பேத்திகளுடன் நாம் ஹனிமூன் போனோமே... அப்பத்தான் எனக்கு ஞானோதயம் உண்டாயிற்று. பாசம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். தடுக்கி விழுந்தால் விழக்கூடய இடம் என்று உங்க அக்கா சொன்னாளே, என்கிட்ட சொல்லி இருந்தால், தடுக்கி விட்டிருப்பேனே... நான் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். உங்களுக்கு ஒரே ஒரு அக்காதான் இருக்கிறாளே என்று...
சார், போஸ்ட்...
கமலா, தபால் வந்திருக்கு...
யாரு... உங்கம்மாவா, அக்காவா?... லெட்டரைப் படிக்கிறதுக்கு முன்னே மணியார்டர் பாரத்தை ரெடியா எடுத்து  வெச்சுக்கங்க.
கமலா, டெலிபோன் பில் வந்திருக்கு ஆயிரம் ரூபாய்க்கு. அநியாயமாயிருக்கே.
எங்கப்பாவுக்கு ஒரு கால் போட்டு ஒரு நிமிஷம் பேசினதுக்கு வந்திருக்கும்.உங்க அம்மாவுக்கும் உங்க அக்காவுக்கும் கால் போட்டது ப்ரீதானே.என்ன செய்யறது... ஊர்ல உங்க அம்மாகிட்ட இருக்கிற எருமைக் கன்னுக்குட்டி மேலே கூட உங்களுக்குப் பாசம். அது எப்படி இருக்கிறது என்று நாலு நாளைக்கு ஒரு தரம் கால் மணி பேசாமல் எப்படி இருக்கிறது?.. உங்க அக்கா இருக்கிறாளே...

இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா? கமலா உண்மையிலேயே பாசத் திலகம் தானே?

11 comments:

  1. கமலா கதைகள் எப்போதும் படிக்க உற்சாகம். (நாம மட்டும் கஷ்டப்படலைப்பா என்று). இப்போதுதான் கமலா கதைக்கு ஜெ... படம் பார்க்கிறேன். (படத்தில் நகைச்சுவை இல்லை). கமலா பாச லிஸ்டில் கணவன் பாசம் மட்டும் மிஸ்ஸிங்.

    ReplyDelete
  2. எனக்கு சுக்ர தசை நடப்பதால்,
    அந்த MISSING ஒரு BLESSING!
    -கடுகு

    ReplyDelete
  3. கடைசில ஒரு வழியா பூனைக்குட்டி வெளில வந்துருச்சு. எப்போ வீட்டுல கேட்டாலும், இது வெறும் கதைதான்னு சொல்லித் தப்பிச்சிருப்பீங்க. இப்போ, 'கமலா'ங்கற கேரக்டரே, மனைவியை மனதில் கொண்டு எழுதியிருக்கீங்க என்று (மறதிலயா?) ஒப்புக்கொண்டிருக்கீங்க. இருந்தாலும் கவலையில்லை, உங்களுக்கு சுக்ர தசை நடப்பதால்.

    உங்கள் கமலா/தொச்சு கதைகளுக்கு யாருடைய ஓவியம் ரொம்பப் பொருந்துவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? (அப்புசாமி கதைகளுக்கு ஜெ.. ரொம்பப் பொருந்துவதாகவும், பொன்னியில் செல்வனுக்கு மணியம் அவர்களும், சுஜாதா கதைகளுக்கு ஜெ.வும், சாண்டில்யனுக்கு லதா அவர்களும் ரொம்பப் பொருந்துவதாக நினைப்பேன்)

    ReplyDelete
  4. சார், நீண்ட நாட்களுக்கு பிறகு சிரித்துப்படித்தேன்.நன்றி..

    ReplyDelete
  5. good post..
    http://filminstitutechennai.in

    ReplyDelete
  6. கமலாவின் பாசம் மனதில் ஒட்டிக்குமே!:)

    ReplyDelete
  7. ரொம்ப நாட்களா வரணும்னு நினைச்சு இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. மெல்ல மெல்ல மத்ததுக்கும் வரேன்.:)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!