July 10, 2014

குட்டிப் பதிவுகள் திரட்டு!

1.இரண்டு கொடுத்தீங்களே

More Random Acts of kindness என்ற புத்தகத்தில் படித்தது

"என் நண்பர் (பெயர் தாமஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.) டாமினிகன் குடியரசு நாட்டில் Habitat for humanity என்ற தொண்டு நிறுவனத்தில் சேவை செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் Etin என்ற சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது. எடின் மகா ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன். ஒரு கிழிந்த அழுக்கான சட்டையைத்தான் அவன் எப்போதும் அணிந்திருப்பான்.

ஒரு நாள் தாமஸ் தன் அலுவலகத்தை ஒழுங்கு செய்த போது ஒரு பெரிய பெட்டியில் துணிமணிகள் இருந்ததைப் பார்த்தார்.  அதில் எடினின் அளவுக்கு ஏற்றபடி சட்டைகள் இருந்தன. ஒரே மாதிரி டி-ஷர்ட்கள். அவற்றிலிருந்து இரண்டு சட்டைகளை எடுத்து அந்தப் பையனுக்குக் கொடுத்தார்.
அந்த சட்டையை எடின் மகிழ்ச்சியுடன் போட்டுக்கொண்டான்.  அந்த சட்டையில்தான் அவன் எப்போதும் அவரைப் பார்க்க வருவான்.

ஒரு நாள் என் நண்பர் வெளியே சென்றபோது வழியில் ஒரு சிறுவனைப் பார்த்தார்.   எடினுக்கு இவர் கொடுத்த சட்டையை அந்தப் பையன் போட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தார்.

சில நாள் கழித்து எடின் அவரைப் பார்க்க வந்த போது அவனிடம்  “ஷர்ட்டை உனக்குத்தானே கொடுத்தேன்? வேறு யாரோ ஒரு பையன் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேனே” என்று கேட்டார்.

அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தபடி, எடின் ”ஆமாம் சார்.... நீங்க எனக்கு ரெண்டு ஷர்ட்டு கொடுத்தீங்களே. மறந்துட்டீங்களா?” என்று கேட்டான்.

”அந்தக் கேள்வி என்னை உருக்கி விட்டது” என்று கண்கலங்கியபடி எங்களிடம் கூறினார் தாமஸ்."



2. பால் பாயின்ட் பேனாவிற்காக ஒரு சட்டம்.

 ரூஸ்வெல்ட் அதிபராக இருந்தபோதுஅமெரிக்க அரசு ஒரு விசித்திர சட்டம் 1958-ல் இயற்றியது,
 அரசு அலுவலகங்ளின் தேவைகளுக்கு, பார்வையற்றவர்களைக்கொண்ட அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களைத்தான்  வாங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றியது. அப்படி வாங்கவேண்டிய  பொருட்கள்  பட்டியலில் அவ்வப்போது மேலும் சில  பொருட்கள்  சேர்க்கப்படும்

1952ல்   சேர்க்கப்பட்ட ஒரு பொருள் பால் பாயின்ட் பேனா. ஸ்கில் க்ராப்ட் என்ற கம்பெனியின் தயரிப்பு. அந்த கம்பெனியில் பணிபுரிபவர்கள் 5500 பேர். அனைவரும் பார்வையற்றவர்கள்.  வருடத்தில் சுமார் 5 மிலியன் டாலர் மதிப்பு பால் பாயின்ட் பேனாக்கள் அந்த கம்பெனி சப்ளை செய்கிறது. ஒபாமா அலுவலகத்தில் கூட இந்த பேனா தான். (ஆதாரம்: ரீடர்ஸ் டைஜஸ்ட்)
(கொசுறு தகவல்: டில்லியில்  நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எங்கள் அலுவலக பிரம்பு நாற்காலிகளைப் பின்னுவதற்கு, பார்வையற்றவர்கள்தான் வருவார்கள். அவர்கள் பின்னும் வேகத்தையும் பார்த்து வியந்திருக்கிறேன்!) 

2. கொடுக்க மறந்த கடிதம்.

1952-ல் வெளியான ஒரு பழைய புத்தகம் சமீபத்தில் கைக்கு அகப்பட்டது.   FORBES MAGAZINE  என்ற பிரபல அமெரிக்க பிஸினஸ் பத்திரிகையின் ஆசிரியர் B.C. Forbes (1880-1954) எழுதிய  101 UNUSUAL EXPERIENCES என்ற புத்தகம்.   பல தொழிலதிபர்களைப் பற்றி  101 சுவையான துணுக்குக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றிலிருந்து ஒரு கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன்.

 REMINGTON RAND என்ற பெயர் நமக்கெல்லாம் பரிச்சயமானதுதான்.

ரெமிங்டன் ஒரு டைப்ரைட்டர் தயாரிப்பாளர்.
துவக்க காலத்தில் அவர் சாதாரண சேல்ஸ்மேனாக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். வங்கிகளுக்குத் தேவையான சாதனங்களையும் பொருட்களையும் விற்கும் கம்பெனி அது. 

அந்த காலத்தில் பிரபலமாக இருந்த   MUNSEY வங்கியின் தலைவர்  FRANK MUNSEYயைச் சந்தித்தார்.  அந்த வங்கி, வாஷிங்டனில் ஒரு கிளையைத் துவங்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது.   MUNSEYயிடம் ரெமிங்டன் தங்கள் கம்பெனியின் தயாரிப்புகளைப் பற்றிக் கூறினார்.
விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்த  MUNSEY  “இதெல்லாம் எனக்கு அதிகம் தெரியாது. வாஷிங்டன் கிளை மானேஜருக்கு ஒரு கடிதம் தருகிறேன். போய்ப் பாருங்கள். சற்று நேரம் வெளியே உட்காருங்கள்.  கடிதம் தயாரித்துக் கொடுக்கிறேன்" என்றார்.
 
சில நிமிடங்கள் கழித்து, நன்றாக சீல் வைத்த கவரை ரெமிங்டனிடம் கொடுத்தார். 
ஒரே உற்சாகத்துடன் நேரே வாஷிங்டனுக்குச் சென்று, மானேஜரைப் பார்த்தார்.  அவரிடம் தன் கம்பெனியின் தயாரிப்புகளைப்  பற்றி அட்டகாசமாகப் பேசி அசத்தி விட்டார்.  25000 டாலருக்கு ஆர்டரும் வாங்கிவிட்டார். 

ஒரு வாரம் கழித்து  ரெமிங்டன் தன் கைப்பெட்டியில் எதையோ  தேடும்போது  கண்ணில் பட்டது  MUNSEY  கொடுத்த கடிதம். உற்சாக மிகுதியால்  அவர் கொடுத்த லெட்டரை வாஷிங்டன் மானேஜரிடம் கொடுக்க மறந்துவிட்டது நினைவுக்கு வந்தது.
’இனிமேல் கடிதத்தைக்கொடுக்கத் தேவையில்லை. MUNSEY  என்னதான் கடிதத்தில் எழுதியிருக்கிறார் என்று பார்த்துவிட்டு கிழித்துப் போடலாம்' என்று எண்ணி, பிரித்துப் பார்த்தார்.  அதில் MUNSEY  இவ்வாறு எழுதியிருந்தார்.
''இந்தக் கடிதத்தைக் கொண்டுவரும் ரெமிங்டன் தரும் எல்லா விவரங்களையும் கேட்டுக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எதுவும் வாங்க ஆர்டர் கொடுக்க  வேண்டாம். ''

மறந்து போனதும் ஒருவிதத்தில் நல்லதுதான் என்று ரெமிங்டன் குஷிப்பட்டார்!

4.  இங்கிலாந்து எழுத்தாளர் PATRICK CAMPBELL.   ஐம்பது களில் தினசரிகளில் நகைச்சுவை கட்டுரைகள் நிறைய எழுதி இருக்கிறார்.
 அவருடைய கட்டுரைகள் தொகுப்பைப் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டது.
அவருக்கு வாய் லேசாகத் திக்கும்.
அதனாலோ என்னவோ புத்தகத்தின் தலைப்பை:
THE P-P-PENGUIN PATRCIK CAMPBELL  என்று  பெங்குவின் வைத்து விட்டது! (டில்லி தாரியாகஞ்சில் நான் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று!)

5 ”அமெரிக்காவில் என்ன குப்பை கொட்டறானோ!”

ஒரு சமயம் அமெரிக்காவில் டென்னஸி மாநிலத்தில் நேஷ்வில் என்ற ஊர் தமிழ்ச் சங்கத்தில் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். பிரபல வேண்டர்பில்ட் சர்வகலாசாலை அங்குதான் உள்ளது.
நான் அட்லான்டாவில்
(அதாவது சுமார் 250 மைல் தள்ளி) இருந்தேன். 


”உங்களைக் காரில் அழைத்து வந்து, திரும்பிக் கொண்டுபோய்விட ஒருத்தரிடம் சொல்லிவிட்டோம்.” என்று தெரிவித்து இருந்தார்கள்.


 250 மைல் ஒரு ட்ரிப், திருப்பிக் கொண்டு விட 250 மைல். அட, நாம் பெரிய எழுத்தாளர் தான் என்று ஒரு கணம் நினைத்தேன். உடனே என் தலை கனமாகவில்லை. ஏற்கனவே தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியாக சிரிப்பு உரை நிகழ்த்த என்னைக் கேட்டபோதே ஆகிவிட்டது! 

அங்கு போய் உரை நிகழ்த்தினேன். நல்ல கூட்டம். அதுவும் இளைஞர்கள். நம்முடைய உரையைக் கேட்கத்தான் இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று மனதிற்குள் ஜம்பமடித்துக் கொண்டேன். பிறகு தான் ஒரு
விஷயம் தெரிந்தது. 


விஷயம் என்னவென்றால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நிச்சயம் சாப்பாடு இருக்கும். அதுவும் பல மாமிகள் வீட்டிலிருந்து செய்து கொண்டு வரும்  வடை, பாயசம் சாப்பாடு! இதனால் பேச்சிலர் இளஞர்கள் தவறாது வந்துவிடுவார்கள்.  கூட்டத்திற்குப் பஞ்சம் இருக்காது.

விழாவில் ஒரு மணி நேரம் அட்டகாசமாகப் பேசி கைத்தட்டல் வாங்கினேன். (மேலே சொன்ன வாக்கியத்தில் முன் பாதி வேண்டுமானால் புருடா என்று வைத்துக்கொண்டால் பரவாயில்லை. பின் பாதி உண்மை.)

விழா முடிந்து வீட்டிற்குக் கிளம்பினேன், தலைவரின் LEXUS காரில்!

அப்போது தமிழ்ச்சங்க செயலாளர் ராஜன் ஓடிவந்தார். "ஒரே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கள். ஹாலைக் க்ளீன் பண்ணிவிட்டோம், வாடகை எடுக்கும் ஹாலை சுத்தம் பண்ணி ஒப்படைப்பது நம் பொறுப்பு.....இதோ குப்பையைக் கொட்டிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினார். சில நிமிஷங்கள் கழித்து வந்தார்.
"என்ன குப்பையைக் கொட்டிவிட்டீர்களா?” என்று ராஜனைக்  கேட்டேன்.

கொட்டியாச்சு.. .  ஊரில் அம்மா என்ன சொல்லுவாள் தெரியுமா?   ‘என்னமோ அமெரிக்கா, அமெரிக்கான்னு போயிருக்கான். இங்கு இருக்காமல் ஓடியிருக்கான். உம்,  அங்கே போய் என்ன குப்பை கொட்டறானோ!’ என்று  சொல்லுவாள். நல்ல காலம், அம்மா இங்கே இல்லை, நான் உண்மையிலேயே குப்பை கொட்டுவதைப் பார்க்க!” என்றார்!

6 comments:

  1. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    நாலு விஷயம் என்றாலும் நல்ல விஷயங்கள் , நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

    தினமும் வந்து பார்த்து, இன்று படித்து மகிழ்கிறோம்.

    நன்றி.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. சுவையான தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  3. வணக்கம்
    சிறப்பான தகவலை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Jegadeesh அவர்களுக்கு,
    நீங்கள் முழுப் பதிவைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.ஐந்து தகவல்கள் உள்ளன.
    -கடுகு

    ReplyDelete
  5. ஒரு தமிழ் திரைப்படத்திற்கு ‘ரா..ரா.. ரா.. ராஜசேகர் ’என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்!
    -டில்லி பல்லி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!