February 24, 2013

சாவி...


பிப்ரவரி மாதம் வந்தாலே ஆசிரியர்  சாவியின் நினைவு கூடுதலாகவே   வந்து மனதில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். அவரது 85 வது பிறந்த தின பாராட்டு விழாவில் மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே இறைவன் திருவடி அடைந்தார்.
நம்ப மாட்டீர்கள், பிறந்த தின விழா அழைப்பிதழை டில்லியில் இருந்த எனக்கு
அவர் கைப்பட முகவரி எழுதி எனக்கு அனுப்பி இருந்தார்! குறைந்தது 500-600 அழைப்பிதழ்களாவது அனுப்பபட்டிருக்கும். அதில் என் அழைப்பிதழில் அவரே எழுதியதை எண்ணி நான் ஜம்பம் அடித்துக் கொள்ள இதைக்குறிப்பிட வில்லை.  நட்பைப் போற்றும் அவரது  பண்பை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
விழா நடந்த அன்று நான் அமெரிக்காவிற்குப் புறப்பட்டேன். அருமை நண்பர் ராணி மைந்தன், தான் எழுதிய “ சாவி 85” புத்தகத்தை ( விழாவில் வெளியிடுவதற்கு முன்பே!) எனக்கு அனுப்பியிருந்தார்.   நான் புறப்படும் தினம் புத்தகம் எனக்கு வந்தது. விமானத்தில் படிக்க எடுத்துக் கொண்டேன். அப்படியே படித்துக் கொண்டு போனேன். ” எத்தனை பெரிய எழுத்தாளர்  சாவி. அவருடைய தொடர்பும் பாசமும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்ததை எண்ணி, கண்களில் நீர் மல்க மெய்மறந்தேன். அமெரிக்காவில் இறங்கியதும்  அவர் மயங்கி விழுந்த தகவல்  வந்தது.  அப்போது கண்ணீர் விட்டு அழுதேன்.

சாவியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம், அவ்வப்போது எழுதினால் தான் எனக்கு மன நிம்மதி ஏற்படும்,
=                           =
ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்: “  சார்..உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட   பல வேறு அனுபவங்களை என்னிடம்  பல சமயம் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சுய சரித்திரத்தை   நீங்கள் எழுதுங்களேன்”
அதற்கு அவர், “நான் என்ன சாதனை செய்திருக்கிறேன், சுய சரித்திரம் எழுதுவதற்கு?” என்று கேட்டார்.

”இல்லை செய்துதான் இருக்கிறீர்கள். சில சம்பவங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. சில, எங்கள் போன்றவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டக்கூடியவை. தோல்விகளைக் கண்டு துவளாது, அவற்றிலிருந்து மீண்டு கம்பீரமாக நீங்கள் எழுந்து வந்திருப்பது பலருக்கு நம்பிக்கையைத் தரும்” என்றெல்லாம் சொன்னேன்.
”உங்கள் ஆசை எனக்குத் தெரிகிறது. சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் பிரமாதமாக எதையும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை என்றார். அத்துடன் நான் நிறுத்திக்கொண்டேன்.  

அவர் சொன்ன ஒரு குடும்ப நிகழ்ச்சியை அவர் எழுதுவது மாதிரி ஒரு கட்டுரையை சில நாட்கள் கழித்து எழுதினேன். அதில்  என் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை. தபாலில் அவருக்கு அனுப்பினேன்.  

February 17, 2013

ஜம்பம் ஒரு கலை

ஒரு சில கார்ட்டூனிஸ்டுகள் போடும் படங்களைப் பார்க்கும்போது, "நாமும் இப்படிச் சுலபமாகப் படம் போடலாம்' என்று தோன்றும்.  அந்தப் படங்களைப் பார்த்து ஓரளவு போடக் கூட முடியும். ஆனால் நாமே சொந்தமாக ஒரு படம் போட ஆரம்பித்தால்தான் அது எத்தனை கஷ்டமான காரியம் என்பது தெரியும்.


இந்த மாதிரி பார்க்க, அல்லது கேட்க எளிதாக இருப்பது ஜம்பம்.  ஆனால் நாமே ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமானால் அதுவும் நாசுக்குடன், ஒரு சாமர்த்தியத்துடன், ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டுமென்றால், அது ஒரு கலை என்பதை உணர்வோம்.
    சிறந்த முறையில் ஜம்பம் அடித்துக்கொள்வது என்பதன் இலக்கணம் என்ன?
    சொல்ல வேண்டியவைகளை, சொந்தப் பெருமைகளைப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஜம்பமாகச் சொல்கிறான் என்பதைப் பிறர் உணராதபடி ஜம்பமாகச் சொல்ல வேண்டும்!
    மாதிரிக்குச் சில ஜம்ப உரைகளை இங்கு தருகிறேன்:
*                                   *

    ""சார். . . என்னைக் கேட்டால் பசங்களை என்ஜினீர், டாக்டர் என்று படிக்க வைக்கிறதை விட ஒரு டைப்பிஸ்டாக ஆக்குவதே மேல் என்பேன்.  பாருங்களேன், இவன் இருக்கிறானே ராஜு, எம்.பி.பி.எஸ் பாஸ் பண்ணினானே, அப்போ கிடைச்ச கோல்டு மெடலோடு திருப்தி அடைய வேண்டியதுதான்.  இப்போ அமெரிக்கா போகணும்னு துடிக்கிறான்.   ராமு இருக்கிறானே, அவன் பி.ஈ. படிச்சு ஐம்பதாயிரம்யிரம் சம்பாதிக்கிறது போறாதாம். சொந்தமாக இண்டஸ்ட்ரி ஆரம்பிக்கப் போகிறானாம். பேசாமல் நானும் என் ஒய்ஃபும் என் பெண் கிட்டே பாரீஸுக்கே போய்விடலாமா என்று தோன்றுகிறது!''

    ""எங்க ஜலஜா இருக்கிறாளே படிப்பு பூஜ்யம்.  "என்னடி, இப்படி மார்க் வாங்கினால் எப்படி உருப்படுவே' என்று கேட்டால் என்ன சொல்லுகிறாள் தெரியுமா?  "இதோடு மேடைப் பேச்சிலே பதினேழு கப் வாங்கி இருக்கிறேன். டேபிள் டென்னிஸ் சாம்பியன் என்று காலேஜில் பேர் வாங்கி இருக்கிறேன்.  போம்மா, நான் அரசியல்வாதியாகவோ, இல்லை புகழ் பெற்ற விளையாட்டுக் காரியாகவோ ஆகிறேன்' என்கிறாள்...  ஹூம் அவள் தலையிலே என்ன எழுதியிருக்கிறதோ!''

    ""மணி பத்தடிக்கப் போகிறது இன்னும் என் வீட்டுக்காரர் வரவில்லை மாமி... அவரவர்கள் ஆபீஸ் முடிந்ததும் வீட்டுக்கு  வரவில்லையோ? இவருக்கு சதா நாடகம்தான். இதோடு இரண்டாயிரம் தரம் மேடை ஏறியாச்சு, என்ன லாபம்? என் கழுத்திலே குந்து மணி பொன் ஏறித்தா? இந்த அழகிலே இவருக்குக் "கலைமாமணி' பட்டம் கொடுக்கப் போறாங்களாம்.  மலேசியாவில் நாடகம் போடக் கூப்பிடறாங்களாம். என்ன  ட்ராமா வேண்டியிருக்கு, வெங்கட்ராமா! நான் பண்ணின புண்ணியம் அவ்வளவுதான்!''

    ""அதை ஏன் கேக்கறே, மருக்கொழுந்து. என் மச்சான் இருக்குதே அல்லா போலீஸ்காரனுக்கும் டாவு காட்டிட்டு தனக்கும் இருபது படி அரிசி நெல்லூர்லேருந்து கொண்டாந்துடுது!  இதைப் பார்த்து என் கொளுந்தியாளுக்கு வயித்தெரிச்சல்.  வவுறு எரியறேய நீ போவச் சொல்லேன் உன் புருஷனையும்!  அவன் அகப்பட்டுக்கிட்டு முழிப்பான்.  அவனுக்கு இன்னா தெரியும்?  ஆபீஸ் வாட்ச்மேன் வேலை பாத்து 50000 ரூபா சம்பாதிக்கத் தெரியும்!  அது என்ன பெரிய பீதாம்பரய்யர் வித்தையா?''

    ""ஏண்டா டயர் ஏஜென்ஸி எடுத்தோம் என்று இருக்கிறது.  நாலைந்து மாசமா ஓடவே இல்லை, ஏழு குமாஸ்தா, இரண்டு பியூன் இவர்களுக்குச் சம்பளமே நாற்பதாயிரம் ரூபா ஆகிறது.  இப்படிப் போனால் எத்தனை நாளைக்குத் தாக்குப் படிக்க முடியும்?  ஒரு வருஷம் இரண்டு வருஷங்கள் முடியலாம்.  இதை மூட்டைகட்டிவிட்டுப் பழையபடி வைர வியாபாரத்துக்கே போய்விடப் போகிறேன்.''

    சிலருக்குத்தான் இயற்கையாக, அதே சமயம். ஜம்பம்  தெரியாதபடி, ஜம்பம்  அடித்துக் கொள்ள தெரியும்.  பலருக்குத் தெரியாது.
=====
 ஒரு பின்னூட்டம்:
ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
"பெரிய பொண்ணு மேல படிக்க அமெரிக்கா போறேன்னா..சரின்னேன்..இப்ப சின்னவளும் மேல படிக்க அமெரிக்கா போணும்ங்கிறா..’வேண்டாம்மா..இங்கேயே க்ரூப் ஒன் எழுதிட்டு ஒரு ஐ.ஏ.எஸ்..ஒரு ஐ.ஆர்.எஸ் ஆகே’ன்னு சொல்லிப் பார்த்தேன்...கேட்கவே மாட்டேங்கிறா ...என்ன பண்றது...அவளையும் அமெரிக்கா அனுப்பினேன். சும்மா அனுப்பலை..”இதோ பாரும்மா..கடல் கடந்து அவ்வளவு தூரம் போறேள்..என்னால ஒண்ணும் முடியாது.. இனிமேல் ஒபாமா தான் ஒனக்கும், ஒங்க அக்காவுக்கும் அப்பா..அம்மா..ஒரு ஹெட் ஃபோன்லேர்ந்து ஹெலி காப்டர் வரை எது வாங்கணும்னாலும், அவரை கேட்டு வாங்கிக்கோன்னு’ சொல்லித் தான் அனுப்பி வைச்சேனாக்கும்!

February 11, 2013

லைட்ஸ் ஆன்

 லைட்ஸ் ஆன்!
 இந்த இரண்டு சிறிய பதங்கள் ஒரு பெரிய எழுத்தாளரின் அடையாளமாகப் போய்விட்டது என்றால் அது அந்தப் பதங்களின் சிறப்பு அல்ல. அவரால் அந்த பதங்கள் பெற்ற கௌரவம்.

 ரா, கி, ரங்கராஜன் கலைமாமணிக்கோ பத்மஸ்ரீக்கோ ஆசைப்படவில்லை. இதற்கெல்லாம் எழுதும் திறமை மட்டும் இருந்தால் போதாது என்று அவருக்குத் தெரியும். பார்க்கப் போனால், இந்தத் திறமை இல்லாவிட்டாலும் பரவாயில்லை,வேறு சில ‘திறமைகள்’ இருக்கவேண்டும்.
ஆகவே அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. 

ஆனால் தனது  லைட்ஸ் ஆன்! கட்டுரைகள் புத்தகமாக வரவேண்டும் என்று விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக எந்த பதிப்பகமும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் எழுத்தாளர்கள் ‘சுபா’ வின் தங்கத்தாமரைப் பதிப்பகம் அதை வெளியிட்டது. . (அவர் அதைப் பார்க்காமல் காலமாகி விட்டார் என்பது சோகம்!)

புத்தகத்திலிருந்து  இரண்டு மூன்று பத்திகளை இங்கு தருகிறேன்.  புத்தகத்தை வாங்கி முழுமையாகப் படியுங்கள். சுவையோ சுவை!
தொடர்பு கொள்க: தங்கத் தாமரைப் பதிப்பகம், 37 கால்வாய்க் கரை சாலை,கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை 600020  போன்:24414441. பக்கம்: 160 விலை:ரூ 70.
******                                                                       
* சூப்பர் ஸ்டார்களின் லட்சணம் யாது? அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது. ரஜினிக்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா. கமலுக்கு முதலில் சுருதி ஹாசன். இப்போதும் பெண் (என்ன ஹாசன் என்பது இன்னும் தெரியவில்லை). கமல்தான் ஹாசனை விடமாட்டேன் என்கிறாரே தவிர, ஹாசன்களுக்குக் கமலிடம் இன்னும் பாசம் ஏற்படக் காணோம். சாருஹாசன் குடும்பத்திலிருந்து யாரும் கமலின் லஸ் சர்ச் வீட்டுக்கு வந்து புதிய வாரிசைப் பார்க்கவில்லை. -Still maintaining a stiff upper lip!

* Oh, by the way, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஒரு பயிற்சி முகாமில் பங்கு கொள்வதற்காகப் புறப்பட்ட பாரதிராஜா சோழா ஓட்டலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தார். (அது ஒரு ஆச்சரியமான விஷயம். பாரதிராஜா இதுவரை Press meet வைத்ததாக சரித்திரம் கிடையாது.)
 

"26 படங்கள் தயாரித்தேன். அதில் எட்டுப் படம் சில்வர் ஜூபிளி, ஆறு படம் நூறு நாள்" என்ற புள்ளி விவரங்களை வழங்கினார். அவர் அறிமுகம் செய்த ஹீரோ, ஹீரோயின்கள் முப்பது பேராம். அவர் கீழே உதவி டைரக்டர்களாக இருந்து டைரக்டர்களாகியிருப்பவர்கள் எட்டுப் பேராம்.
"இந்த அமெரிக்க அழைப்பு அவார்டு கிடைப்பதை விடப் பெரிசு" என்று பாரதிராஜா சொன்னார். மனிதர் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டுமா? Amusing!
*ரஜினி கெட்டிக்காரர். எந்தச் சமயத்தில் எதிலிருந்து கழட்டிக் கொள்ள 
வேண்டுமென்ற தெரிந்து வைத்திருப்பவர்.
திருநாவுக்கரசுவின் மருதுபாண்டி நூறாவது நாள் விழாவுக்கு அவர் வருகை தர ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் அழைப்பிதழில் ரஜினிகாந்த் என்று தமது பெயரைப் பாட அனுமதிக்கவில்லை. சூப்பர் ஸ்டர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். (Ôசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால்...Õ) பேசும்போது கூட தானும் திருநாவுக்கரசும் நெருங்கிய நண்பர்கள் என்பதால்தான் இந்த விழாவுக்கு வந்ததாக அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டார். Unenviable position தான் பாவம்.



*எம்.எஸ்.விசுவநாதனிடம் ஒரு Sense of Humour உண்டு என்று அன்று தெரிந்து கொண்டேன். மரியாதையுடன் ஒரு அன்பர் அவர் காலைத் தொட்டு வணங்கினார். அவரை யாரோ ஒரு இசை டைரக்டர் போலிருக்கிறது என்று எண்ணிய எம்.எஸ்.வி. "நல்லா மியூசிக் செய்யுங்க" என்று ஆசீர்வாதம் பண்ணினார். "ஐயோ, எனக்கு மியூசிக் வராதுங்க" என்றார் அந்த அன்பர். எம்.எஸ்.வி. சளைக்கவில்லை
"அட, அப்படியானால் நீதான் இன்று தமிழ்நாட்டிலேயே பெஸ்ட் மியூசிக் டைரக்டர்!" என்றார்.


February 05, 2013

ஈரமுள்ள நெஞ்சு

1. போதும்..போதும்.. உதவி போதும்..

பல வருடங்களுக்கு முன்பு கல்கி இதழில் தொடர்ந்து கேள்வி-பதில் எழுதி வந்தேன். அப்போது ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி ஒரு கேள்வி அனுப்பி இருந்தாள்.  அந்தக் கேள்வியையும் அதற்கு நான் எழுதிய பதிலையும் முதலில் படியுங்கள்.

கேள்வி:  நான் மருத்துவக் கல்லூரி மாணவி. மூன்றாவது  வருஷப் படிப்பிற்குத் தேவையான புத்தகங்கள்  வாங்க, பண உதவி செய்யக்கூடிய அமைப்புகள், நிறுவனங்கள்  இருக்கின்றனவா?

பதில்: அப்படி பண உதவி செய்யக்கூடிய அமைப்புகள் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஈரமுள்ள நெஞ்சங்கள் உலகெங்கும் உள்ளன என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இந்த கேள்வி-பதில் வெளிவந்த  அடுத்த வாரம் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
 கல்கி இதழில் தலையங்கத்தில், இந்த கேள்வி-பதிலைப் பற்றியும் அதன் பின்விளைவைப் பற்றியும் எழுதப்பட்டிருந்தது. தலையங்கத்தின் சுருக்கம்: கடுகு பதில்களில்  வந்த  கேள்வி-பதிலைப் படித்த நம் வாசகர்கள் பலர், அந்த மருத்துவ மாணவிக்கு நிதி உதவியை வெள்ளமாக அளித்து வருகிறார்கள். அந்த மாணவி நமக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் தேவைக்கும் மிக அதிகமாக நிதி சேர்ந்து விட்டது. இனி யாரும் எனக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார்.
மறுவாரமே தலையங்கத்தில் இது வந்தது என்றால், முந்தைய வார இதழ் வந்த ஒன்றிரண்டு நாட்களலேயே  நிதி சேர்ந்திருக்க வேண்டும் ( அந்த காலகட்டத்தில் ஆஃப்செட் இல்லை. எல்லாம் கையால் அச்சு கோத்துதான்  பத்திரிகை ரெடி பண்ண வேண்டும். ஆகவே  ஒரு வாரம் முன்னதாகவே 95 பங்கு இதழ்கள் தயாராகிவிடும்.)
அரைப்பக்க விளம்பரம் இல்லை, டிவி, ரேடியோ விளம்பரங்கள் இல்லை, ரேடியோ இல்லை. சினிமா நடிகர், நடிகைகளின் வேண்டுகோள்கள் இல்லை. கல்கியில் கேள்வி-பதில் பகுதியில் இரண்டு வரி பதில் புரிந்த சாதனை.
நாக்கில் ஈரம் வறண்டாலும் நல்ல உள்ளங்களின் நெஞ்சில் ஈரம் என்றும் வறண்டு போகாது. 

2.  விளம்பரமில்லாமல் செய்த உதவி 

 ’நாலாயிரமும் நானும்’ பதிவிற்கு ஒரு பிற்சேர்க்கை போட்டிருந்தேன். அதைப் படிக்காதவர்கள் முதலில் அந்த பதிவைப் படித்து விட்டுத் தொடருங்கள்.
அதில் ஒரு சின்ன ஊரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நூறு பேருக்குமேல் நாலாயிர பிரபந்தத்தை படிப்பது பற்றி எழுதி இருந்தேன். அவர்களது எளிமையைப் பற்றியும், பக்தி சிரத்தையைப் பற்றியும் எழுதி இருந்தேன். அதைப் படித்த ஒரு ஈர நெஞ்சு அன்பர் அவர்களுக்குச் சிறிது நிதி உதவி செய்ய விரும்புவதாக எனக்கு எழுதினார். தன்னைப் பற்றி எந்த விவரமும் சொல்லக்கூடாது என்றும் எழுதி இருந்தார்.

  அந்த பிரபந்த அன்பர்களிடம் தொடர்பு கொண்டேன் .” அவர் எவ்வளவு தொகைக்கு உதவுவார் என்று தெரியாது. உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்று சொல்லுங்கள். அதை அவருக்குத்தெரிவித்து விடுகிறேன்” என்றேன். அவர்கள் சொன்னார்கள் ” ஐயா பணம் தேவையில்லை. பிரபந்த புத்தககங்கள் வாங்கிக் கொடுத்தால் மிக்க  நன்றி உடையவர்களாக இருப்போம் ” என்றார்கள்.. 
“ சரி,  அதிக பட்சமாக எவ்வளவு காபிகள் கொடுத்தால் சந்தோஷம்?”
“ நூறு காபி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்” என்றார்கள்.
இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட அன்பரிடம் சொன்னேன்
“ அப்படியே செஞ்சுட்டாப் போச்சு.. பணத்தை அனுப்பிடறேன்.புத்தகத்தை அவங்களுக்கு அனுப்பிடுங்கோ.. என் பேர் எதுவும் யாருக்கும் சொல்லாதீங்கோ.. தயவுசெய்து” என்றார். 
சில நாட்களுக்குப் பிறகு 20,000 ரூபாய் பணம் வந்தது. நானும் 100 காபிகள் திவ்வியப் பிரபந்த அன்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

3.  ஈரமும் பரிவும் கொண்ட மனம்

சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த ஒரு பெண்மணி  கூறியதை அப்படியே எழுதுகிறேன்.

“ சென்ற வாரம் நான் அட்லாண்டா போகவேண்டி இருந்தது.  ஏர்போர்ட் லௌஞ்சில் காத்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து அறிவிப்பு வந்தது. “அட்லாண்டா போகும் பயணிகள் விமானம் தயாராக உள்ளது. முதலில், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள், முதல் வகுப்புப் பயணிகள், சக்கர நாற்காலிப் பயணிகள் மற்றும் நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள்  (OUR NATION'S PROUD  ARMY MEN ) உள்ளே போகலாம்.” என்று அறிவித்தார்கள்.

February 03, 2013

Clue இல்லாத குறுக்கெழுத்துப் போட்டி

இது Clue  இல்லாத குறுக்கெழுத்துப் போட்டி, வாழ்க்கையில் எத்தனை புதிர்களைச் சந்திக்கிறோம். அவற்றில் Clue இல்லாதவைகள் தான் அதிகம். இருந்தாலும் அவைகளைப் பெரும்பாலான சமயங்களில் வென்றிடுகிறோம் அல்லவா!
முயற்சி செய்யுங்கள்!