September 24, 2010

என் கண்களில் நீர் தளும்பியது.



கேப் கேனவரெல். அமெரிக்க விண்வெளி  மையம் உள்ள இடம். ஃப்பளாரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்ட்டர்.
அடுத்த வாரம் விண்ணில் விடப்படவிருக்கும் ஸ்பேஸ் ஷட்டில், ராக்கெட்டின் முதுகில் இணைக்கப்பட்டு செங்குத்தாக நின்று கொண்டிருக்கிறது.


மனிதனின் அபார சாதனைகளின் ஒரு உன்னத சிகரம் ஸ்பேஸ் ஷட்டில். உலகின் பல அற்புதமான முன்னேற்றங்களுக்கும் வசதிகளுக்கும் வழி வகுத்தது விண்வெளி ஆராய்ச்சியில் பெற்ற வெற்றிகள். ஏன், தோல்விகளும் கூட!

அங்கு விண்வெளி பயண முயற்சிகளின் போது உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்கள். சற்றே வளைந்த பிரமாண்டமான கான்கிரீட் பலகை. (42 அடிக்கு 50 அடி அளவு )கறுப்பு கிரானைட் பதிக்கப்பட்டு. உயிரிழந்த வீரர்களின் பெயர்களை முழுவதுமாக கல்லில் துளையிட்டு எடுத்து, பலகையின் பின்னாலிலிருந்து இயற்கையான வெளிச்சம் வருமாறு செய்திருக்கிறார்கள். பெயர்கள் வெள்ளியால் பொறிக்கப்பட்டவை போல் கிரானைட்டில் மின்னுகின்றன. எப்போதும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த கிரானைட் பலகையின் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, சூரியனை நோக்கி மெள்ளத் திரும்பும் வகையில் மோட்டாரும் பொருத்தி இருக்கிறார்கள்.
 
இந்த நினைவுச் சின்னத்தின் அருகே அஞ்சலியாக சில வாசகங்களை கிரானைட்டில் பொறித்திருக்கிறார்கள்.

""புதிய எல்லைகளை வெற்றி கொள்ள மனித சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம், அம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு. விண்வெளியை வெற்றி கொள்வதற்கு உயிருக்கு ஆபத்தான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பதை நெஞ்சார நம்பி, தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அஞ்சலியாக இந்நினைவுச் சின்னம் மே 9, 1991 அன்று அர்ப்பணிக்கப்படுகிறது''

இந்த வாசகத்தைப் படித்ததும் என் கண்களில் நீர் தளும்பியது. இன்றைய இன்டர்நெட், சாட்டிலைட், டி.வி. நிகழ்ச்சிகள் என்று பல நூறு வசதிகளை அவர்கள் அனுபவிக்கவில்லை. அவர்கள் வைத்த மரக்கன்று நமக்குப் பழம் தருகிறது.

அவர்கள் செய்த உயிர்த் தியாகத்தை என்றும் நன்றியுடன் நினைவில் போற்றுவோம்!

The Memorial
"Whenever mankind has sought to conquer new frontiers, there have been those who have given their lives for the cause. This astronauts memorial, dedicated May 9, 1991, is a tribute to American men and women who have made the ultimate sacrifice believing the conquest of space is worth the risk of life."
( என்  மொழிபெயர்ப்பை யாராவது மேம்படுத்தினால் நல்லது!)


இதோ மற்றொரு மொழிபெயர்ப்பு:
""புதிய எல்லைகளை வெற்றி கொள்ள,  மனித சமுதாயம் விழையும் போதெல்லாம், அம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு. மே 9, 1991 அன்று  அர்ப்பணிக்கப்படும் இந்த விண்வெளி வீரர்கள் நினைவுச் சின்னம், விண்வெளியை வெற்றி கொள்வதற்கு உயிருக்கு ஆபத்தான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பதை நெஞ்சார நம்பி, தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அளிக்கப்படும் புகழ் அஞ்சலி.

6 comments:

  1. உங்கள் மொழிபெயர்ப்பு அதை மேலும் மேம்படுத்தமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது.

    இந்த மாதிரி நம் நாட்டில் நன்றி செலுத்துகிறார்களா என்று தெரியப்படுத்தவும். (அரசியல் / மொழிப் போராட்டங்களில் உயிர் நீத்தவர்களைத்தவிர). - ஜெ.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி !பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. கடுகின் எழுத்துக்களைப் படித்துச் சிரித்து, சிரித்துக் கண்களில் நீர் வந்திருக்கிறது. மனசை நெகிழ வைத்துக் கண்களில் நீரை வரவழைக்கும்படியும் செய்துவிட்டீர்கள். சிந்திக்க வைத்த ஒரு பதிவு.

    ReplyDelete
  4. mynah அவர்களுக்கு, இதில் என் திறமை ஒன்றும் இல்லை. அஞ்சலி வாசகம் எழுதியவர் கண்ணீர் விட்டுக் கொண்டே எழுதி இருக்கிறார்.

    ReplyDelete


  5. இது நேக்கு கல்பனா சாவ்லாவை நினைவு படுத்தி விட்டது!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!