August 19, 2018

எங்கள் வீட்டு எறும்பே!


              ஒரு சின்ன முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, சுமார் இரண்டரை வருஷங்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினேன். விமானத்தில் சில சாக்லேட்டுகளைக் கொடுத்தார்கள். அதை அப்படியே  எடுத்து வந்தேன்.
     சென்னை வந்து, வீட்டைத் திறந்தோம். இரண்டரை வருடங்களாக பூட்டிக் கிடந்த வீடு. ஜன்னல் கதவுகளெல்லாம் நன்றாகத் திறந்து, மின்விசிறிகளை ஓடவிட்டோம். மாடி அறையில் ஒரு அலமாரியைத் திறந்து அதில் எங்கள் கைப்பை முதலியவற்றை வைத்தோம்.  பெட்டிகளைத் திறப்பதில் அரைமணி நேரம் சென்றது. பிறகு உறங்குவதற்குச் சென்றோம். அப்போது அந்த குறிப்பிட்ட அலமாரியிலிருந்து எதோ ஒரு பொருளை எடுக்க அதைத் திறந்தவுடன் -- நம்பமாட்டீர்கள், -- நாங்கள் வைத்த சாக்லெட்டின் மீது எறும்புகள்  ‘நட்பும் சுற்றமும் சூழவிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன!
     இரண்டரை வருடம் ‘பாலைவனமாகஇருந்த வீட்டின் மாடியில், திடீரென்று சாக்லெட்டுகள் வைக்கப்பட்டதை எறும்புகளுக்கு யார் தகவல் கொடுத்திருப்பார்கள்? அலமாரிக்கு வரும் வழியை எந்த Google map-ல் அவை பார்த்திருக்கும்? அதுவும் இரவு 11 மணிக்கு, முதல் மாடி அலமாரிக்குள் இருப்பதை அவைகளுக்கு யார்  whatsup ல் தகவல் கொடுத்திருப்பார்கள்? வியப்புக்குரிய விஷயம்.
     கிட்டத்தட்ட இதேமாதிரி அனுபவம் இஸ்ரேல் எழுத்தாளர் Ephraim Kishon-க்கு ஏற்பட்டிருக்க வேண்டும்  ஒரு அனுபவக் கட்டுரையை எழுதியுள்ளார்.  அதற்கு ‘வேஷ்டிஜிப்பா’ போட்டுத் தமிழ்க் கதையாக்கித் தருகிறேன்.

எங்கள் வீட்டு எறும்பே!
     தரை தளத்தில் வீடு இருப்பது ஒரு விதத்தில் சௌகரியம்தான்  படிக்கட்டு ஏறவேண்டிய தொல்லை இல்லை. நமக்கு மட்டுமல்ல, எறும்புகளுக்கும் படியேறி நம் வீட்டிற்குள் நுழைய வேண்டிய கஷ்டம் இல்லை. ராஜ கம்பீரமாக, ரத,கஜ துக பதாதிகளுடன் வரலாம். 
ஒவ்வொரு நாள் காலையிலும், கறுப்பு சாக்கால் கோடு போட்டது போல் ஒரு எறும்பு வரிசை என் வீட்டிற்குள் நுழையும். தினமும் அவைகளைப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதால் பல எறும்புகளை பத்தடி தூரத்திலிருந்து பார்த்தாலே பரிச்சயமான எறும்புகள்தான் என்பதைத் தெரிந்துக் கொண்டு விடுவேன். மற்ற மாதங்களை விட கோடைக் காலத்தில் எறும்புகள் அதிகம் வரும். (ஊரிலிருந்து சம்மர்-வெக்கேஷனி’ல் உறவினர்கள் வந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன்!)
எது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். என் மனைவிக்கு எறும்புகள் வருவது பிடிக்கவில்லை. அவைகளை என் உறவினராகக் கருதினாளோ என்னவோ! 
  ”முதலில் இந்த எறும்புகளை ஒழித்துவிட்டுத்தான் வேறு வேலையைப் பார்க்கப் போகிறேன்என்றாள். தொடர்ந்து   “ஏய் எறும்பே, உனக்காச்சு, எனக்காச்சுஎன்று ஒரு சபதக் குரலில் சொன்னாள்.
     “இதோ பாருங்க., இப்படி நம் வீட்டிற்குப் பேரணியாக வருகிற எறும்புகளை மருந்து போட்டோ, துடைப்பத்தால் பெருக்கித் தள்ளியோ, பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. இந்த எறும்புகள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அங்கு போய் பூண்டோடு ஒழித்து விட வேண்டும். இதுதான் என் திட்டம்” என்றாள்.
    “செய்..செய்.. உன் இஷ்டப்படி செய். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த போது நடந்த மாதிரி, ‘ எறும்பை விரும்பும் மன்றத்தினர் ‘ என்ற பெயரில் யாராவது சிலர் கொடி பிடித்துக் கொண்டு கோஷம் போடப் போகிறார்கள்..என்றேன்.
     “கோஷமாவது போடட்டும், வேஷமாவது போடட்டும். எனக்குக் கவலையில்லை. இவைகளைக் பூண்டோடு அழித்தால்தான் எனக்கு நிம்மதி.
     “இரு..இரு.. ஒரு சின்ன சந்தேகம். ஆமாம், பூண்டோடு, பூண்டோடு என்று சொல்கிறாயே,  அடுத்த தெருவில் யார் வீட்டிலாவது சாம்பாரில்  பூண்டு போட்டால்கூட  உனக்கு ஆகாதே. எப்படிப் பூண்டோடு அழிப்பே?” என்றேன் 
    “இந்த மாதிரி அறுவை ஜோக்கை எப்படி சமாளிக்கிறேனோ, அது மாதிரி எந்தப் பிரச்னையையும் சமாளிப்பேன்… நீங்கள் எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய வேண்டும்” என்றாள்.
     “என்ன உதவி? சொல்லு” என்றேன்.
     நீங்கள் எனக்கு உதவி செய்யாமல் இருந்தால், அதுவே எனக்கு பெரிய உதவி என்றாள். அதே மூச்சில், எறும்பு வரிசையின் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கினாள்.
     எறும்பு வரிசை எதிர் வீட்டுப் பக்கம் போய், வலதுபக்கம் திரும்பி, நேராக வாயிற்பக்கம் சென்று, அங்கு காம்பவுண்ட் சுவற்றில் இருந்த பொந்துக்குள் சென்றது.
     என் மனைவியிடம் “அந்த பொந்துக்குள் உன்னால் போக முடிகிறதா என்று பார்என்று சொல்ல வாயில் வார்த்தைகள் வந்தன. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
     “மை டியர் மேடம்!.. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி எங்கே போகிறது இந்த எறும்பு அணிவகுப்பு என்று பார்க்கலாம், வாஎன்றேன்.
     “நீங்கள் சுவர் ஓரமாக, வலது பக்கமாகக் கவனமாகப் பார்த்துக் கொண்டே போய்ப் பாருங்கள்.. நான் இடது பக்கமாகப் போய்ப் பார்க்கிறேன்என்றாள். (அவளுடைய அப்பா ராணுவ அதிகாரியாக இருந்தவர். போர் வியூகங்களைக் கரைத்துக் குடித்தவர். அது ரத்தமாக மாறி அவருடைய வம்சத்தில் எல்லாரையும் யுத்த நிபுணர்களாக ஆக்கிவிட்டது!
  “அது சரி, மேடம், ஒரு சின்ன பிரச்னை. இப்போது இந்தப் பக்கம் போகிறேன். பத்தடி தூரத்திற்கு அப்புறம் ஒரு பேரணி சுவற்றிற்குள் போது  கண்ணில் படுகிறது என்று வைத்துக் கொள். அந்த பேரணிதான் நம் வீட்டிற்குள்  செல்லும் அணிவகுப்பைச் சேர்ந்த தொண்டர்கள் என்பது எப்படித் தெரிந்து  கொள்வது? இது வேறு ஒரு வீட்டிற்குப் போகும் வரிசை என்றால், இந்த அணிவகுப்பை நாம் கலைத்துவிட்ட பிறகும், நம் வீட்டிற்கு வடிக்கையாக வரும் எறும்புகள் வராமல் இருக்காதே!  இந்த எறும்புக் குழுக்கள், எந்த குழுவுக்கு எந்த வீடு என்று பட்டா போட்டுக் கொண்டு இருக்கலாம். இந்த எறும்புகள் ஏதாவது  கொடி வைத்திருந்தாலோ அல்லது யூனிஃபார்ம்  போட்டு இருந்தாலோ நமக்கு அடையாளம்  தெரியும் “ என்று நான் சொல்லி முடிக்குமுன், என் மனைவி  அவளே எறும்பாய் மாறிக் கடித்தாள். – சொல்லால்! நல்லவேளை கோபத்தில் அவள் தேளாக மாறவில்லையே  என்று சந்தோஷப்பட்டதால், எனக்கு இந்த மனித (மனைவி) எறும்புக்கடி அவ்வளவாக உறைக்கவில்லை!
     “அது வேறு வீட்டிற்குப் போகிற எறும்பு கூட்டமாக இருந்தால் என்ன? அதையும் ஒழித்துக் கட்டினால் அந்த வீட்டுக்காரர்களுக்கு உதவி செய்த மாதிரி இருக்கும். தெரிந்து, யாருக்கும் உதவி செய்யமாட்டீகள். இப்படி தெரியாமல் செய்தால் உங்க குடும்ப கௌரவம் குறைந்து போகாது” என்றாள்.
     ”நான் கேட்டதற்குப் பதிலைக் காணோம். என்னைப் போட்டுக் காய்ச்சறே. .. நம் வீட்டிற்கு வரும் எறும்பு அணியின் ‘வாலை’க் கண்டுபிடிக்க வேண்டியது முக்கியமில்லையா?” என்று கேட்டேன்.
     நான் கேட்டு முடிப்பதற்குள் ‘அம்மாடி ‘ என்று, அவள் குரல் கொடுத்துக் கொண்டே, வலது காலைத் தூக்கி மினி கதக்களி ஆடினாள்.  “ஐயோ…இங்கே பாருங்க..எவ்வளவு எறும்பு…. இந்த நாசமாக போகிற பிசாசுகள்தான் நம் வீட்டுக்குப் போற எறும்பு வரிசை. அம்மாடி என்னமா  ‘சுருக்’கென்று கடிக்கிறதுங்க!” என்றாள்.
      “அடப்பாவமே.. அதிருக்கட்டும், இந்த எறும்புகள்தான் நம் வீட்டிற்குப் படை எடுக்கும் எறும்புகள் என்று எப்படி கண்டுபிடித்தாய்? முக அடையாளம் ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறாயா?  ‘தனி எறும்புக்கு உணவு இல்லையெனில் இந்த வீட்டை அழித்திடுவோம்’ என்கிற ரீதியில் கோஷம் ஏதாவது போடறதுங்களா?” என்று கேட்டேன்.
     என் மனைவி, நான் சொன்னதைக் கண்டு கொள்ளவில்லை. எறும்பு மேல் இருந்த கோபத்தை என் மேல் மாற்றமாட்டாள் என்று எனக்குத் தெரியும்.  ஒருத்தர் மேல் கோபம் வந்தால், அந்தக் கோபம் முழுமையாக அவர் மேல் தீர்ந்த பிறகுதான் இன்னொருத்தர் மேல் கோபப்படுவாள். கோபத்திலும் நல்ல குணத்தை அனுசரிப்பவள் என் அருமை மனைவி!
     சுவரின் மறுபக்கம் எட்டிப் பார்த்தாள்.  ‘கண்டேன்  சீதைபாணியில், “இதோ…இதோ… என்ன அழிச்சாட்டியம் செய்யறதுகள்! காரின்  கீழேயே பத்தடி போய், மூன்றாவது வீட்டிற்கு வாசல் வரைக்கும் போகின்றன. நான் கண்டுபிடிக்க மாட்டேன் என்று குண்டு தைரியம்… ஹும்.. அந்த வீட்டிலிருந்து வரிசை வருகிறது. அந்த வீட்டில் சாப்பிட ஒண்ணும் இல்லையோ.. அல்லது அங்க ஃப்ரிட்ஜ்  ஏதாவது  சொந்தமாக வெச்சிண்டு இருக்குதுங்களோ என்னவோ! அந்த வீட்டுக்காரி அலமேலு மகா அல்பம்… அவ ஒரு மனுஷியா? பாத்திர சீட்டு ஆரம்பிச்சு, எல்லார் பணத்தையும் முழுங்கிவிட்ட பகாசூரி….
        பகாசூரியோ, மகாசூரியோ, எதுவாகவாவது இருந்துவிட்டுப் போகட்டும். ரிஷி மூலம், நதி மூலம்  பார்க்கக் கூடாதுன்னு சொல்வாங்க… அதோடு இந்த எறும்பு அணியின் மூலம்கூட பார்க்கக் கூடாது என்றும் சேர்த்துக்கலாம்  ஏன் என்றால், அது சுலபமாக கண்டுபிடிக்க முடியாத வேலை…என்றேன்.
“மற்ற வீட்டில் இல்லாத சிறப்பு நம் வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த எறும்பு எங்கேயிருந்து வருகிறது என்று பார்க்கலாம் என்றால், எறும்பு  வரிசை, பின் வீட்டுக்குள் போகாமல், ஓரமாகப் போய் புதருக்குக் கீழே வளைக்குள் போய், சற்று தள்ளி வெளியே வந்து, மரப்பொந்திற்குள் போய், மேலே இருக்கும் கிளையில் திடீரென்று அணிவகுப்பைத் தொடருகின்றன. எக்கேடு கெட்டாவது போகட்டும். ‘இதுங்க பின்னால் போகிறது பைத்தியக்காரத்தனம் …. முதலில் எறும்புப் பவுடர் வாங்கிண்டு வாங்க, னம்ப வீட்டிற்குப் போகலாம்” என்றாள் --எறும்பிடம் தன் தோல்வியை அரை மனதுடன் ஒப்புக்கொண்டு! (அந்த முள்புதருக்குக் கீழே எறும்புப் பாதை எங்கே போகிறது என்று பார்த்தபோது, என் மனைவியின் கையை ஏழெட்டு முட்கள் பதம் பார்த்து விட்டன என்பது நமக்குள் இருக்கட்டும்!)     
       நான் கடைக்குப் போய் எறும்பு பவுடர் வாங்கி வந்தேன். ஒரு சின்ன பொட்டலமாக இருந்தது.   “கொஞ்சம் போட்டால் போதும். எறும்பு உங்க வீடு இருக்கிற திசைக்கே வராது” என்று கடைக்காரர்
சொன்னார். அதன் விலையைக் கேட்ட போது, “அது எறும்புப் பவுடரா, சந்தனப் பவுடரா என்று எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இருக்காது- அது சந்தனப் பவுடராக இருந்தால் விலை  இதைவிட குறைவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்!
     “என்னது ஒரு பொட்டலம்தான் வாங்கிக் கொண்டு வந்தீர்களா? இந்த எறும்பு பொட்டலத்திற்கு இது சோளப் பொறிதான்” என்றாள் என் மனைவி. எறும்புக்கடி அவளை அப்படி பேச வைத்தது. கடியினால் ஏற்பட்ட வலி, எறும்பை ஒரு யானை அளவு பெரிதாக்கிவிட்டது.  மறுபடியும் கடைக்குப் போய், எட்டு பொட்டலங்கள் வாங்கி வந்தேன். என் மனைவியின் காலை எறும்புகள்  கடித்தன. இந்த பொட்டலத்திற்குப் பணம் கொடுத்தபோது, அதே எறும்புகள் என் கையைக் கடித்தது போல் எனக்கு இருந்தது.
     பொட்டலங்களை வாங்கிக் கொண்ட என் மனைவி. எறும்புகள் பாதையில் மலர் தூவுவதைப் போல் லேசாகத் தூவிக் கொண்டே போனாள். திடீரென்று “இங்கே வாங்கோ- இதைப் போடுங்கோ என்றாள்.
     “என்ன- என்ன ஆச்சு?… ஆமாம், இது என்ன வரிசையாக வந்துக் கொண்டிருந்த எறும்புகள் இப்படி மாநில மாநாடு நடத்துவது போல் கும்பலாக இருக்கின்றன?” என்று கேட்டேன்.
     ‘சூ’ என்று குரல் கொடுத்து எறும்புக் கூட்டத்தை விரட்டினாள் என் மனைவி. அவை உடனே விலகி, பேரணியைத் தொடர்ந்தன. இப்போதுதான் பிரச்சனை.
     அந்த எறும்புக் கூட்டம் ஒரு வரிசையில் போகவில்லை. இரண்டு வரிசையாகி, ஒரு வரிசை கிழக்கேயும், மற்றொரு வரிசை தெற்கே போயின.
     ”அடப்பாவமே.. இப்படி போகிறதுங்களே, இதுங்க! இப்ப என்ன செய்யறது?” என்றாள் என் மனைவி.
     “எப்படியாவது போகட்டும். அதனால் உனக்கென்ன பிரச்சனை?” என்று கேட்டேன்.
     “என் பிரச்சனையா? நம் வீட்டிலிருந்து வற்ர எறும்புகள் போகிறது  கிழக்கு வரிசையா, இல்லை தெற்கு வரிசையா என்று தெரியவில்லை சனியன்கள் எல்லா எறும்பும் ஒரே மாதிரி கரி கட்டையாக இருக்கின்றன… வேறு வீட்டுக்குப் போகிற எறும்புகளுக்கெல்லாம் நாம் எறும்புப் பவுடர் போடறது பைத்தியக்காரத்தனம். நம் வீட்டு எறும்பு அணிதான் நமக்கு எதிரி.” 
 “இதோ  பார். எறும்புப் பவுடர் செலவைப் பார்க்காதே… இரண்டு அணியிலும் பவுடரைப் போடு … நீ  ஒரு அணியில் பவுடரைப் போடறே. அது நம் அணி என்று வைத்துக் கொள். தை அழித்தால் இன்னொரு அணி நம் வீட்டிற்கு வராது என்று என்ன உத்தரவாதம்?”
     என் மனைவி, நான் சொன்னபடியே எறும்புப் பவுடரை ஏராளமாகப் போட்டாள். அப்போது எதிர் வீட்டு அம்மாள் வெளியே வந்து, ஆயிரம்வாலா பட்டாசை மிஞ்சுகிற மாதிரி தொடர்ச்சியாகத் தும்மல் போட்டாள்.
     என் மனைவியைப் பார்த்து,  “என்னம்மா பவுடர் போடறே? ஒரே நெடியாக இருக்கிறது. நெடி என் மண்டைக்குள் போகிறது. தும்மல் போட்டு மாளவில்லை. மண்டையே நூறு சுக்கலாகிற அளவுக்கு பயங்கரத் தும்மல் வருகிறது” என்று சொன்னபடியே  ‘சாம்பிளாக’ நாலைந்து ‘ஆட்டம்-பாம்’ தும்மலைப் போட்டாள்.
     ”ஏம்மா.. நீ எறும்புக்கு மருந்தோ விருந்தோ போடு.. எனக்கு ஆட்சேபனையில்லை. எல்லாம் உன் வீட்டிற்குள் வைத்துக்கொள். ஆமாம், அப்புறம் நான் நல்லவளாக இருக்க மாட்டேன்” என்றாள்.
     (அந்த அம்மா எப்போது நல்லவளாக இருந்தாள் என்று எனக்குத் தெரியாது. போன நூற்றாண்டில் இருந்திருக்கலாம்!)
     என் மனைவி, “சரிங்க” என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் வந்துவிட்டாள்.  எறும்பு மேலே இருந்த கோபம், எரிச்சலெல்லாம் அந்த அம்மா மேல் பாய்ந்தது.
     ‘டமால்’ என்று கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே வந்தாள். (அவள் கதவைச் சாத்தியவேகத்தில் எங்கள் ‘பிளாக்’கில் உள்ள 12 வீட்டுக் கதவுகளும் சாத்திக் கொண்டன என்பதை இடைச் செருகலாகக் குறிப்பிடுகிறேன்!)

     பத்து நிமிஷம் ஆகியிருக்கும். காலிங்பெல் அடித்தது. திறந்தேன். பக்கத்து வீட்டு அம்மாள்,  கையில் தட்டுடன்!
     “வாங்க” வாங்க… இத பாரு யாரு வந்திருக்காங்க” - என் மனைவிக்குக் குரல் கொடுத்தேன்.
     என் மனைவி வந்து, “வாங்க அம்மா… வாங்க.. என்ன கையில் தட்டு? ஏதாவது விசேஷமா? கம்மென்று வெல்ல வாசனை வருகிறதே” என்றாள்.
     “ நல்ல விசேஷம்தான். என் பிள்ளை ஒரு புது பிசினஸ் ஆரம்பிச்சிருக்கான். ‘கம்மர்கட்’ மொத்த வியாபாரம். தினமும் 20,30 கிலோவுக்கு ஆர்டர் ‘புக்’ பண்ணி இருக்கிறான். அடுத்த வாரம் சப்ளை ஆரம்பிக்கிறான். கமர்கட் செய்யறதுக்கு மூணு பேரை வேலைக்கு வெச்சிருக்கிறான்….என்றாள்.
     “அப்படியா… ரொம்ப சந்தோஷம். ஊர்ல எங்கப்பா தேங்காய் மண்டி வெச்சிருக்கிறார்..” 
  என் மனைவி  சொல்லி முடிப்பதற்குள், “அப்படியா., பருத்தி  . துணியா காய்ச்ச மாதிரி ஆயிட்டுது… உங்கப்பா கிட்டேயே  நூறு, இருநூறு தேங்காய் வாங்கிக்கொண்டால் போச்சுஎன்றாள் அந்த அம்மா.
·            *      *
     அடுத்த நாள் முதல் வெல்லப்பாகு மணம் எங்கள் பேட்டையை மணக்கச் செய்தது. அதன் மணம், நாக்கில் நீர் ஊறச் செய்தது.
     “வெல்லப்பாகு வாசனை என்னமோ பண்றது. சர்க்கரை ஆலை பக்கம் போனா வருமே, அது மாதிரி இருக்கிறது. ஆனால் வயிற்றைப் புரட்டலை… எல்லாம் ஒரு பத்து நாள் ஆனால் பழகிப் போயிடும்என்றாள் என் மனைவி.
      ‘அப்பாவின் கடையில் வாரத்திற்கு 200,300 தேங்காய் ஆர்டர் கிடைக்கும்என்பதே சகல ரோக நிவாரணியாக இருந்தது என் மனைவிக்கு.
     இரண்டு நாள் போயிருக்கும். என் மனைவி சமையல் கட்டிலிருந்து குரல் கொடுத்தாள்.. “ஒரு நிமிஷம் வாங்கோ… ஒரு அதிசயம்.. ஆச்சரியமான விஷயம்.. வாங்கோ… என்று குரல் கொடுத்தாள். அது அபாயக்குரலும் இல்லை அபயக்குரலும் இல்லை. மகிழ்ச்சி கொப்பளித்த குரல்!
     “என்ன.. என்ன. ஆச்சரியம்என்று மாடியிலிருந்து கேட்டபடியே ஓடிப் போய்ப் பார்த்தேன்.
     “இதோ பாருங்கோ.. இது என்னது?” என்றாள்.
     “இதுவா.. சர்க்கரை கொஞ்சம் வெச்சிருக்கிறது ஒரு ஸ்பூனில். இதில் என்ன அதிசயமிருக்கிறது?என்று கேட்டேன்.
     “சொல்றேன்.. இரண்டு நாளைக்கு முன்னே வெச்சேன். இரண்டு நாளாச்சு.. ஒரு எறும்பு கூட வரவில்லை. மருந்துக்குக் கூட ஒரு எறும்பும் வரலைஎன்றாள்.
     “ஆமாம்.. எறும்பையே காணோமே.? அதிருக்கட்டும். மருந்துக்கு கூட எறும்பு இல்லை என்கிறாயே, எறும்பை வைத்து என்ன மருந்து தயாரிக்கிறார்கள்?என்று கேட்டேன்.
     இந்த மாதிரி ஜோக்குகளை நான் சொன்னால் என் மனைவி எரிச்சலடைவாள். ஆனால் அன்று அவள் வாய் விட்டு சிரித்தாள். (அதைப் பார்த்து நான் ச்சரியப்பட்டேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும்!)
     “என்ன ஆச்சு தெரியுமா? எறும்புப் பட்டாளம்  ‘கம்மர்கட்வாசனையைப் பிடிச்சுண்டு பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டதுங்க என்று நினைக்கிறேன்.. உம்,..  பக்கத்து வீட்டுக்குப் போகாமல் எதிர் வீட்டுக்குப் போயிருந்தால், எனக்கு இன்னும் சந்தோஷமாயிருக்கும்என்றாள்.
     ”இந்த எறும்புகளுக்கு நான் ANTI  இல்லை. இனிமேல் AUNTIE”  என்றாள் என் மனைவி.
     “அட்டகாசம்,  போ!என்றேன்! (இந்த ‘கடிஜோக்கைவிட எறும்புக்கடியே தேவலைஎன்று தோன்றியது. ஆனால் 
சொல்லவில்லை!)

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி. சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி  

13 comments:

  1. மிக அருமையான கட்டுரை. இங்கேயும் எறும்புகளை ஒழிக்க நான் படும் பாட்டை நினைச்சால் இந்தக் கதை தான். இத்தனைக்கும் நாங்க இருப்பது நான்காம் மாடி! எல்லாவிதமான எறும்புகளும் வருகின்றன. ஒரு இடத்தில் மருந்து போட்டால் மறுநாள் இன்னொரு இடம்! அடுத்த நாள் வேறொரு இடம்! :))))) அவற்றோடு வாழக் கத்துக்கோ என என்னவர் சொல்கிறார். :)

    ReplyDelete
  2. இஸ்ரேல் எழுத்தாளரின் கட்டுரையைத் தமிழ்ப்படுத்தியவிதம் அருமை. ரொம்ப இயற்கையா நடை அமைந்திருக்கு. அதாவது மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை என்பதை நீங்கள் சொன்னால்தான் தெரியும் என்பதுபோல. (பூண்டு, கம்மர்கட் என்று பல உதாரணங்கள் கொடுக்கலாம் ("என்று குண்டு தைரியம்…" - இது மட்டும் வித்தியாசமா இருக்கு. இதன் அர்த்தம் எனக்குத் தெரியலை. அசட்டு தைரியமா?)

    இதைப் படித்தபோது நான் விகடனில் வாங்கிய ஒரு புத்தகம் (அவங்க பப்ளிகேஷன்ஸ். ஒரு தமிழக எம்பி, நேரு சம்பந்தமான ஒரு பத்தகத்தைத் தமிழ்ப்படுத்தியிருந்தார். ரொம்பக் கொடுமையான மொழிபெயர்ப்பு. அவர் காங்கிரஸ் எம்பி. கொஞ்சம்கூட புத்தகத்தில் ஒட்ட முடியவில்லை. ரொம்ப அந்நியமாக இருந்தது. எப்படி மொழிபெயர்க்கக்கூடாது என்பதற்கு அந்தப் பெரிய புத்தகம் ஒரு உதாரணம்). நிறையபேர், மொழி பெயர்க்கறேன்னு அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தமிழ்ப்படுத்தி, படிக்கறவங்களை படுத்துவாங்க. நம்மால் கதையுடனோ அல்லது கட்டுரையுடனோ ஒன்ற முடியாது. இதுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கு. ராகிர அவர்கள் மொழிபெயர்த்த பட்டாம்பூச்சி, ஒரிஜனலைப் படித்தபின்பு-நான் 3-4 முறை ஒரிஜனலைப் படித்த பிறகு, படித்தேன். ரொம்ப சுவாரசியமா எழுதியிருப்பார். அந்தத் திறமை இல்லாதவர்கள், தாங்களும் மொழிபெயர்க்கறேன்னு ஆரம்பிச்சிடறாங்க. கண்ணதாசன் பதிப்பகத்துல நிறைய மொழிபெயர்த்த புத்தகங்கள்ல இந்தத் தவறைக் காண்கிறேன். உதாரணமா, ஒரு புத்தகத்துல, Terasa என்ற பெண்ணை, துறவி, Tree என்று அழைக்கிறார். அதை தமிழ்ப்படுத்தியவர், 'விருட்சமே' என்று எழுதியிருக்கிறார். அதாவது தெரசாவை, அந்தத் துறவி இராமா, விருட்சமே என்று அழைத்தாராம். நல்லவேளை, அதே ஆசிரியர் தமிழ்லிருந்து ஆங்கிலத்தில், -கிருஷ்ணனை அவன் அப்பா கிச்சு என்று கூப்பிடுவார். ஒரு நாள் ஏய் கிச்சு, கிச்சு ஏன் சாப்பிடவரலை - இந்தப் பகுதியை, tickle tickle என்று மொழிபெயர்த்திருப்பாரோ?)

    ReplyDelete
  3. உங்கள் 'சாக்லேட்' கதையைப் படித்தபின்பு, எனக்கு நான் இங்கு செய்வது (சென்னை) நினைவுக்கு வந்தது. நான் நிறைய இனிப்புகளை வாங்கி அங்க அங்க வைத்துவிடுவேன். அதுமேல துணி, புத்தகம்னு போட்டு, எங்க இருக்குன்னே தெரியாது. அப்புறம் சில நாட்களில் பிள்ளையார் எறும்பு ஊர்வலம் விடும். அது எங்க போகுதுன்னு பார்த்து அப்புறம் இனிப்பு இருக்கற இடத்தைக் கண்டுபிடித்து ஒழுங்கான இடத்தில் பத்திரமா வைத்துவிடுவேன்.

    அது எப்படி எறும்பு கண்டுபிடிக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், சுக்குக் கருப்பட்டிப் பாக்கெட்டை என் மேசையின் ஓரத்தில் சில நாட்களாக வைத்திருக்கிறேன். இன்னும் கண்டுபிடித்து அவை வரலை.

    ReplyDelete
  4. கலகல நகச்சுவை நடை. கம்மர்கட்டை விட ருசி!- “எறும்பு”

    ReplyDelete
  5. அனைத்து அணி எறும்புகளும் கமர்கட் சாப்பிட சென்று விட்டனவே!!!


    "என் மனைவிக்கு எறும்புகள் வருவது பிடிக்கவில்லை. அவைகளை என் உறவினராகக் கருதினாளோ என்னவோ!" - அருமை

    ReplyDelete
  6. இளங்கோ அவர்களுக்கு,
    Quotable Quotes மாதிரி இரண்டு வரிகளை எடுத்துப் போட்டிருக்கிறீற்கள்.
    மிக்க நன்றி.
    -கடுகு

    ReplyDelete
  7. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு,
    நன்றி. தங்கள் பாராட்டுகள் கிரியா ஊக்கிகள்!
    -கடுகு

    ReplyDelete
  8. சகோதரி கீதா அவர்களுக்கு, நன்றி...நன்றி
    -கடுகு

    ReplyDelete
  9. எறும்புக்கடி கூட சிரிப்பை வரவழைக்கிறது. இதுமதிரி ‘அடிக்கடி’ போடுங்கள்- “கொ.சு.”

    ReplyDelete
  10. பிரமாதமான மொழி பெயர்ப்பு.
    இதற்கு நேர் மாறான ஒரு அனுபவம் எனக்கு உண்டு. நான் மஸ்கட்டில் வசித்த பொழுது கரப்பான் பூச்சியால் மிகவும் அவஸ்தைப் பட்டேன். அதை ஒழிக்க அடித்த ஹிட் எல்லாம் வீண். "ஒரு கரப்பான் பூச்சியின் ஆயுள் காலம் ஏழு நாட்கள்தானாம், அது பாட்டுக்கு ஏழு நாட்கள் வாழ்ந்து விட்டு போகட்டுமே அதை ஏன் கொல்ல வேண்டும்?" என்றார் என் கணவர். அந்த ஏழு நாட்களுக்குள் ஒவ்வொரு கரப்பான் பூச்சியும் ஏழாயிரமாக பெருகி விடுகிறதே. அதை எப்படி தடுப்பது?
    என் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் காலி செய்து கொண்டு போனதும் சட்டென்று குறைந்தது க.பூ. முதலில் குடி இருந்தவர்களுக்கு சுத்தம்
    போதாது, அதனால் ட்ரைனேஜ் வழியாக கரப்பு விஜயம். புதிதாக குடி வந்தவர்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள ஆரம்பித்ததும் எனக்கு ஹிட் வாங்கும் செலவு குறைந்தது.

    ReplyDelete
  11. நெ.த.அவர்களுக்கு, விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. குண்டு தைரியம் என்பதற்கு அர்த்தம்: OVERCONFIDENCE! எறும்பு கட்டுரை கிட்டத்தட்ட என் சரக்குதான். உங்கள் பாராட்டைப் படித்ததும் ‘சரக்கு’ போட்டது போலாகிவிட்டது. (அனுபவம் இல்லாவிட்டலும், நாலு பேர் அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன்!)-கடுகு

    ReplyDelete
  12. Bhanumathy Venkateswaran அவர்களுக்கு, மிக்க நன்றி. சிறு துரும்பும் பல் குத்த் உத்வும் என்பார்கள். சிறு எறும்பும் நகைச்சுவை கட்டுரை எழுத உதவும் என்று தெரிந்து கொண்டேன்!-கடுகு

    ReplyDelete
  13. உங்கள் எற்ம்பு கடிக்கவில்லை: சிரிக்க வைத்தன.- ’மூட்டைப்பூச்சி’

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!