August 19, 2018

எங்கள் வீட்டு எறும்பே!


              ஒரு சின்ன முன்னுரை: சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, சுமார் இரண்டரை வருஷங்கள் இருந்துவிட்டு சென்னை திரும்பினேன். விமானத்தில் சில சாக்லேட்டுகளைக் கொடுத்தார்கள். அதை அப்படியே  எடுத்து வந்தேன்.
     சென்னை வந்து, வீட்டைத் திறந்தோம். இரண்டரை வருடங்களாக பூட்டிக் கிடந்த வீடு. ஜன்னல் கதவுகளெல்லாம் நன்றாகத் திறந்து, மின்விசிறிகளை ஓடவிட்டோம். மாடி அறையில் ஒரு அலமாரியைத் திறந்து அதில் எங்கள் கைப்பை முதலியவற்றை வைத்தோம்.  பெட்டிகளைத் திறப்பதில் அரைமணி நேரம் சென்றது. பிறகு உறங்குவதற்குச் சென்றோம். அப்போது அந்த குறிப்பிட்ட அலமாரியிலிருந்து எதோ ஒரு பொருளை எடுக்க அதைத் திறந்தவுடன் -- நம்பமாட்டீர்கள், -- நாங்கள் வைத்த சாக்லெட்டின் மீது எறும்புகள்  ‘நட்பும் சுற்றமும் சூழவிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன!
     இரண்டரை வருடம் ‘பாலைவனமாகஇருந்த வீட்டின் மாடியில், திடீரென்று சாக்லெட்டுகள் வைக்கப்பட்டதை எறும்புகளுக்கு யார் தகவல் கொடுத்திருப்பார்கள்? அலமாரிக்கு வரும் வழியை எந்த Google map-ல் அவை பார்த்திருக்கும்? அதுவும் இரவு 11 மணிக்கு, முதல் மாடி அலமாரிக்குள் இருப்பதை அவைகளுக்கு யார்  whatsup ல் தகவல் கொடுத்திருப்பார்கள்? வியப்புக்குரிய விஷயம்.
     கிட்டத்தட்ட இதேமாதிரி அனுபவம் இஸ்ரேல் எழுத்தாளர் Ephraim Kishon-க்கு ஏற்பட்டிருக்க வேண்டும்  ஒரு அனுபவக் கட்டுரையை எழுதியுள்ளார்.  அதற்கு ‘வேஷ்டிஜிப்பா’ போட்டுத் தமிழ்க் கதையாக்கித் தருகிறேன்.

எங்கள் வீட்டு எறும்பே!
     தரை தளத்தில் வீடு இருப்பது ஒரு விதத்தில் சௌகரியம்தான்  படிக்கட்டு ஏறவேண்டிய தொல்லை இல்லை. நமக்கு மட்டுமல்ல, எறும்புகளுக்கும் படியேறி நம் வீட்டிற்குள் நுழைய வேண்டிய கஷ்டம் இல்லை. ராஜ கம்பீரமாக, ரத,கஜ துக பதாதிகளுடன் வரலாம். 
ஒவ்வொரு நாள் காலையிலும், கறுப்பு சாக்கால் கோடு போட்டது போல் ஒரு எறும்பு வரிசை என் வீட்டிற்குள் நுழையும். தினமும் அவைகளைப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டதால் பல எறும்புகளை பத்தடி தூரத்திலிருந்து பார்த்தாலே பரிச்சயமான எறும்புகள்தான் என்பதைத் தெரிந்துக் கொண்டு விடுவேன். மற்ற மாதங்களை விட கோடைக் காலத்தில் எறும்புகள் அதிகம் வரும். (ஊரிலிருந்து சம்மர்-வெக்கேஷனி’ல் உறவினர்கள் வந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன்!)

August 11, 2018

ரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை!

ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக  ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்?) தகவல் திரட்ட காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்குச் செல்ல, இரண்டு தடவை டெல்லி வந்து என் வீட்டில் தங்கினார். 

அவர் கையுடன் கொண்டு வந்திருந்த  200 பக்க பவுண்ட் நோட் புத்தகத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், மெள்ள அதை எடுத்துப் பார்த்தேன். கிட்டதட்ட 200 பக்கமும் ஒரு நாவல் அளவு குறிப்புகள் வரிந்து தள்ளி இருந்தார்!
  ‘படகு வீடு' நாவலின் கடைசி அத்தியாயத்தில் முத்தாய்ப்பாக அவர் எழுதி முடித்து இருப்பது, ஒரு அற்புத இலக்கிய விருந்து என்பேன்.
*                       *                                  *


*                                       *                     *
x

படகு வீடு

பிரபஞ்சத்தினும் பெரிதானாற் போலவும் சொல்லிற்கு அப்பாற்பட்ட உணர்விலே ஒன்றுகிறது அவர் சிந்தை.
     அவர் குறளடிகளைத் தியானிக்கிறார்:"யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் பெறும்."
     அவர் கீதையின் திருவாசகத்தைத் தியானிக்கிறார்.; அவ்வுயிர்களிடத்தும் பகைமை இல்லாதவனாய், சினேகம், பூண்டவனாய், கருணையே உடையவனாய், எனது, நான் என்னும் எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும், சமமாய்க் கருதுபவனாய், பொறுமையுடையவனாய், எப்போதும் சந்தோஷமுடையவனாய் யோகத்தில் நாட்டமுடையவனாய் அடங்கிய  மனத்தினனாய், திடமான நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும்  புத்தியையும் அர்ப்பணம் செய்தவனாய் எவன் இருக்கிறானோ அவன் என் பக்தன்; எனக்கு பிரியமானவன்.
     அவர் பகவான் அரவிந்தரின் பொன் மொழிகளை தியானிக்கிறார்: “வாள் தன்னை ஆக்கச் சொல்லவில்லை. தன்னை உபயோகிப்பவனை தடுக்கவில்லை. நான் உடைந்து போனாலும், ஒதுக்கி வைக்கப்பட்டாலும் வருந்தவில்லை; ஆக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு; உபயோகப்படுவதிலும் ஆனந்தமுண்டு; ஒதுக்கி வைக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு அந்த சமமான ஆனந்தத்தை நீ கண்டுகொள்.”
     அவர் திருநாவுக்கரசரின் பாடலை தியானிக்கிறார்:”மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி, சினமெனும் சரக்கை ஏற்றிச் செருகடல் ஓடும்போது மதமெனும் பாறை தாக்கி மறியும்போது அறிவவொண்ணாது உனையுன்னும் உணர்வை நல்காய். தான் என்பது அடங்கினால் சகலமும் அடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கே இருந்தாலும்  இருக்கலாம்.”
     
அவர் தியானித்துக் கொண்டே இருக்கிறார்.
விமானம் உயர உயர எழும்பிக்கொண்டே இருக்கிறது

===================
ரா.கி.ரங்கராஜனைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை முன்பே எழுதியுள்ளேன். பார்க்க விரும்புபவர்களுக்கு இதோ சுட்டி:  ரா.கி.ரங்கராஜன்

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி  

August 01, 2018

கல்கி, என் கணவர்



 கல்கி அவர்களின் துணைவியார் திருமதி ருக்மிணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பல வருஷங்களுக்கு முன்பு ’குமுதம்’ 8-12-1966 இதழில், குடும்ப நிகழ்ச்சிகள் சிலவற்றை  நினைவு கூர்ந்தார்.
  
1924 ல் எங்கள் கல்யாணம் நடைபெற்றது. சம்பிரதாயமாகப் ’பெண்’ பார்ப்பதற்குஇவர்’ வரவில்லை. இவருடைய அண்ணாதான் நிச்சயதார்த்தம் செய்துவிட்டுப் போனார். கல்கியைப் பொறுத்தவரை இதை அவரது இரண்டாவது கல்யாணம் என்று வேடிக்கையாகச் சொல்லலாம். 

முதலில் இவருக்கு ஓரிடத்தில் கல்யாணம் நிச்சயமாகி,.... நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டது. ஆனால் கல்யாணம் நின்றுபோய்விட்டது… அந்தப் பெண்ணின் அப்பா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். மாப்பிள்ளையைப் பற்றி விவரமாக விசாரித்ததில், இவர் காந்திக் கட்சியை சேர்ந்தவர் என்று அறிந்ததும், பெண்ணைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை ......
     *                           *                          *
     நவசக்தி பத்திரிகையில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரிடம அப்போது இவர் வேலை பார்த்து வந்தார். சம்பளம் ஐம்பது ரூபாய். பழைய மாம்பலத்தில் முதன் முதலில் தனிக் குடித்தனம் வைத்தோம். ரொம்பவும் சிக்கனமாகவே இருப்பார். ராயப்பேட்டையிலுள்ள காரியாலயத்திற்கு மாம்பலத்திலிருந்து நடந்தே செல்வார். அப்போது  அவருடைய லட்சியம் எப்படியேனும் பாடுபட்டு உழைத்து 100 ரூபாய் சம்பளத்திற்கு உயர்ந்துவிட வேண்டும் என்பதே. திரு.வி.க.விடம் இவர் பக்தி விசுவாசம் உடையவர். நவசக்தியை விட்டு விலகும் போது, இவரைப் பிரிய திரு.வி.க.வுக்கு மனமே இல்லை. “எப்போது வேண்டுமானாலும் நீ திரும்பி வரலாம். உன்னுடைய இடம் காலியாகவே இருக்கும்,என்று பெருந்தன்மையுடனும், அன்புடனும் விடை கொடுத்தார்.
     நவசக்தியில் இருக்கும்போதே இவர் சம்பளத்தை ரூபாய் அறுபதாக உயர்த்தினார்கள். வேறு சிலர் இவரை வைத்துத் தனியாகப் பத்திரிகை  ஆரம்பிக்க வேண்டுமென்று முன்வந்தனர். இன்னும் பத்து ரூபாய் அதிகச் சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். என்னிடம் இந்த விவரங்களைச் சொன்னார் கல்கி. நான் இதற்கு சம்மதிக்கவில்லை. திரு.வி.க விடமே வேலையில் நீடிக்க வேண்டுமென்று சொன்னேன். அப்போது, “வயதில் சிறியவளாக இருந்தாலும் நீ விவேகத்துடன் பேசுகிறாய்.  சாதாரணமாகப் பெண் பிள்ளைகள் பத்து ரூபாய் அதிகம் வருவதென்றால், அதையே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அப்படி இல்லாமல் நீ நல்ல யோசனையே வெளியிடுகிறாய். உன்னுடைய எண்ணம் என்ன என்று அறியக் கேட்டேனே தவிர நானும் விலகப் போவதில்லை,என்றார்.................
    *                              *                                     *