June 22, 2018

ஒரு கல்லறை வாசகத்தின் கதை

ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறந்து போனவரை நல்லடக்கம் செய்த இடத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட கல்லை நிறுத்திவைத்து அதில் அடக்கம் செய்யப்பட்டவரைப் பற்றி ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார்கள். (சமீப காலங்களில் இந்தப் பழக்கம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.)
இந்த வாசகங்களைத் தொகுத்துப் பல புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் உள்ளவை எல்லாம் உண்மையா, கற்பனையா என்றெல்லாம் கூற முடியாது.
ஆனால் சில பிரபல அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களின் கல்லறை வாசகங்கள் சிறப்பாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.

இப்படி சிறந்த கல்லறை வாசகங்களைப் பற்றியும் கல்லறையில் நீண்ட உறக்கத்தில் இருப்பவர்களைப் பற்றியும் எழுதலாம் என்றெண்ணி, பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். புவி ஈர்ப்புச் சக்தியை (அது மட்டுமல்ல இன்னும் பல நூறு விஷயங்களை) கண்டுபிடித்த) சர் ஐசக் நியூட்டனைப் பற்றிப் படித்தபோது ஐசக் நியூட்டன் தனது வழிகாட்டியாக சர் கிரிஸ்டபர் ரென் என்பவரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரென் புகழ்பெற்ற கட்டட நிபுணர். லண்டனில் உள்ள, அபாரமாக வடிவமைக்கப்பட்ட செயின்ட் பால்’ஸ் கதீட்ரலை உருவாக்கியவர்.