January 10, 2018

ஆசிரியர் சாவியுடன் சில நாட்கள்

முன் குறிப்பு. இது சில வருஷங்களுக்கு முன்புஎழு தப்பட்டது,

சகோதரி ஷ்யாமா அவர்கள் எழுதியுள்ள சாவியுடன் சில நாட்கள் புத்தகத்திற்கு ஒரு சிறுகுறிப்பு எழுதித் தரவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன்.

ஷ்யாமாவின் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தேன். படிக்கும்போது சாவி அவர்களைப் பற்றிய பற்பல சம்பவங்கள் எனக்குத் தோன்றியது. அவற்றை ஓரளவு இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

ஷ்யாமாவின் புத்தகத்தில் நான் நிறைய பக்கங்களை எடுத்துக் கொள்வது தவறு. அவர்தான் என்னை முகவுரை எழுதிக் கொடுங்கள் என்று என்னைக் கேட்ட தவறைச் செய்தார் என்றால் நானும் பதிலுக்குத் தவறு செய்வது சரியில்லை
 ஆகவே சுமார் 10- 15 பக்கங்களுக்குள் சுருக்கமாக எழுத எண்ணியுள்ளேன்.

வாஷிங்டனில் திருமணம் போன்ற பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நாவலைப் போல் இன்னும் யாராலும் எழுதப்படவில்லை. அந்த நாவலைப் படித்த நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனானது வியப்பானதல்ல. கல்கியின் எழுத்தைப் படித்து அவரது பக்தனானேன். எனக்கு எழுத்து மோகம் பிடித்ததற்குக் காரணம் கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன் மற்றும் ஆர்.கே.நாராயணன் ஆகியோரின் படைப்புகள்!

தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பை சாவி  ஏற்றதும், முன்பின் அறிமுகம் இல்லாத எனக்கு.கதிருக்குக்   கதை எழுதித்தர முடியுமா என்று   கடிதம் எழுதினார்ஈகோ என்பது முற்றிலும் இல்லாத மிகப்பெரிய ரசிகர். நான் எழுதாத நகைச்சுவையா? நான் எழுதாத கதைகளா? நாவல்களா?’ என்று தனக்குத்தானே மார்பில் மெடல்களைக் குத்திக் கொள்பவர் அல்ல அவர்.

ஷ்யாமா அவர்கள், இப்புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி, குமுதம் இதழின் மீது அவருக்கு அபார மதிப்பு உண்டு. அதன் காரணமாக குமுதத்தில் எழுதும் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர் மகா ரசிகர். அதனால்தான் எனக்கு அவர் கடிதம் எழுதினார். (இப்படியே அவர் பலருக்கும் எழுதியிருப்பார்.)  நகைச்சுவை கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். எனக்குத் தலைகால் புரியவில்லை. நமக்கும் நகைச்சுவை எழுதும் திறமை இருக்கிறது என்று, எனக்கே நான் ஷொட்டு கொடுத்துக் கொண்டு எழுதி அனுப்பினேன். மிஸ்டர் பஞ்சு என்ற தலைப்பில் ஒரு கதையைஇதழின் அட்டையிலேயே அகஸ்தியன் எழுதிய மிஸ்டர் பஞ்சு ம் பக்கம் என்றும் போட்டு விட்டார். இதுதான் சாவி. இப்படித்தான் தகுதி உள்ளவர்களையும், என்னைப்போல் தகுதி குறைந்தவர்களையும் தூக்கி விடுவார். இத்தனைக்கும் அப்போது என்னை நேரில் பார்த்தது கூடக் கிடையாது.

இன்னொரு சம்பவம். டில்லியிலிருந்து சென்னைக்கு லீவில் வருகிறேன். இன்னதேதி, இன்னரயில் என்று எழுதியிருந்தேன். சென்ட்ரலில் இறங்குகிறேன் வாங்கோவாங்கோ என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றவர் சாவி. கூட உதவி ஆசிரியரும் இருந்தார்! எனக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்து விட்டார்.. அவ்வளவுதான்! சாவியின் அன்பு வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.

 ஒன்றிரண்டு சிறுகதைகளை சுஜாதா குமுதத்தில் எழுதியிருந்தார். நம் பத்திரிகைக்கு ஒரு தொடர்கதை அவரை எழுதச் சொல்லுங்களேன் என்று சாவி எனக்குக் கடிதம் எழுதினார்.சுஜாதாவைக் கேட்டேன். ஒப்புக் கொண்டு கதையை எழுதினார். பெரிய பெரிய படங்களுடன் சுஜாதாவின் கதை வெளியாகியது. ஜெயராஜின் படங்களும் சுஜாதாவின் கதையும் வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தன. சுஜாதாவிற்கு நிறைய வாய்ப்பளித்துத் தூக்கிவிட்டார். சுஜாதாவைச் சந்தியுங்கள் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி அசத்திவிட்டார்.
இப்படித்தான் சுப்புடுவையும் வளைத்துப் போட்டார் சாவி. சங்கீத கச்சேரி விமர்சனங்களை சுப்புடுவிடம் எழுதி வாங்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று எனக்கு அன்புக் கட்டளையிட்டார் சாவி.

              “ஒரு பத்திரிகை எனக்கு ரயில் செலவு, ஹோட்டல்  செலவு என்று பலவிதத்தில் பணம் தருகிறது. அப்படி இருக்கும்போது சாவியில் நான் எழுதுவது தர்மமல்ல என்றார் சுப்புடு.   அப்படியானால், விமர்சனம் வேண்டாம். கச்சேரியில் சந்தித்தவர்களைப் பற்றி, பாடகர்களைப் பற்றி, சுவையாடத் துணுக்குகள் எழுதுங்களேன் என்றேன் நான். அப்படியே எழுதிக் கொடுத்தார். அவர் பெயரைப் போடாமலேயே, கட்டுரையை சாவி  வெளியிட்டார். பிறகு மெள்ள மெள்ள சுப்புடுவை முழுமையாக வளைத்துப் போட்டுக் கொண்டார் சாவி.

குமுதத்தில் நான் எழுதி வந்ததாலும், நான் டில்லியில் இருந்ததாலும் என்மீது அவருக்கு எக்ஸ்ட்ரா மதிப்பு! எத்தனைக் கடிதங்கள் எழுதியிருப்பார் என்பதற்கு கணக்கே கிடையாது! பத்திரிகை பற்றி ஆலோசனை எழுதச் சொல்வார். குடும்ப பிரச்சனைக்கும் ஆலோசனை கேட்பார். திடீரென்று பல சமயங்களில் டில்லி கிளம்பி வந்துவிடுவார். உங்களுடன் பேசி, என்னை  சார்ஜ் பண்ணிக்கொள்ள வந்திருக்கிறேன் என்பார். (அவர் விளையாட்டாகச் சொல்லியிருக்கக்கூடும். ஆனால் அதை மகா பெரிய உண்மையாகக் கருதி பூரித்துப் போனேன் என்பது வேறு விஷயம்)
கதை, கட்டுரைகளுக்கான சன்மான செக்கை அனுப்பும்போது, ‘பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்கிறேன் என்று எழுதி அனுப்புவார். ஆனால் உண்மையிலேயே எழுத்தாளர்களுக்கு நிறையக் கொடுக்க வேண்டும் என்று கருதியவர் சாவி. ஆனால் நிர்வாகம் ஒரு இதழுக்கு இவ்வளவு தொகை என்று நிர்ணயித்து விட்டதால் அவரால் அதிகம் தர இயலவில்லை.

பின்னால் சொந்தமாகப் பத்திரிகை நடத்திய பொது, அவர் எழுதியது, ‘என் சொந்தப் பத்திரிகையில் எழுதுபவர்களுக்கு என் இஷ்டப்படி தாராளமாகச் சன்மானம் வழங்க முடியவில்லை. எவ்வித மூலதனமும் இல்லாமல் துவக்கி நடத்துகிறேன். அதனால்தான் அதே பழைய பல்லவியை பொன் பூ பாடுகிறேன் என்று வருத்தத்துடன் சொல்லுவார்.

         சாவிக்கு பத்திரிகை ஆர்வம் உயிர்மூச்சு போன்றது. வெள்ளிமணி என்கிற பத்திரிகையை, வெறும் கையால் முழம் போட்டு ஆரம்பித்து, வெற்றிகரமாகப் பிரசுரித்தபோது சாவிக்கு வயது 27-தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.   விகடன், தினமணி கதிர் பிறகு குங்குமம் பிறகு சாவி என்று பத்திரிகைத் தொடர்புகளை விடாமல் வைத்திருந்த சாவி இடையில் சில வருஷங்கள் பத்திரிகைத் தொடர்பே இன்றி இருந்தார்   அப்போது அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.      மீண்டும் சாவியை நடத்தப் போகிறேன் உங்கள் கருத்து என்ன என்று என்னைக் கேட்டார்.
  “சார் இந்த வயதில் ஏன் பத்திரிகையை நடத்த விரும்புகிறீர்கள்? டி.வி.யுகத்தில் பத்திரிகைகளின் பாப்புலாரிட்டி குறைந்துவிட்டது. போட்டியும் அதிகமாகி விட்டது. பத்திரிகை என்பது உங்களைப் பொறுத்த வரை 24 மணிநேர வேலை கச்சேரி, நாடகம், இலக்கிய கூட்டம், நண்பர்களுடன் பொழுதுபோக்கு என்று ஹாயாக இருங்களேன் என்றேன்.

என் பேச்சை அப்படியே ஆமோதித்த திருமதி.சாவி, ‘ஆமாம், நீங்க சொன்னதையேதான் நானும் சொன்னேன். கேட்கமாட்டேன் என்கிறார் என்றார்.

 “நீங்க சொல்றதெல்லாம் சரிதான். பத்திரிகை சுமைதான். ஆனால் அது சுகமான சுமை. 24 மணி நேர வேலையாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பிடித்த வேலை என்பதால், 24 மணி நேரப் பொழுது போக்கு என்றார்.

மற்றுமொரு நெகிழ்ச்சியான சம்பவம் தினமணிகதிரின் ஆசிரியராக இருந்தபோது ஒரு சமயம் அமெரிக்கச் சுற்றுப் பயணம் சென்றார். சுமார் 5, 6 வாரங்கள் கழித்து அங்கிருந்து டில்லிக்கு வந்தார். விடிகாலை 5 மணி என் வீட்டிற்கு வந்தார்.
          அவர் திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். வயது அறுபதைக் கடந்து விட்டதால் அவர் தொடர்ந்து ஆசிரியராக இருக்க முடியாது என்று நிர்வாகம் கூறிவிட்டது. திருமதி சாவி அவர்கள் எனக்குப் ஃபோன் செய்து, தகவலைச் சொல்லிவிட்டு,  “அவருக்கு நாங்கள் தெரிவிக்கவில்லை. ஷாக் ஆகி விடுவார். நீங்களே சற்று நிதானமாக சொல்லுங்கள் என்று சொன்னார்.
           சாவி  அவர்களோ வீட்டுக்குள் நுழைந்ததும். என் மனைவி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு  5, 6 வார தினமணி கதிர் இதழ்களைக் கொடுங்கள் எப்படி வந்திருக்கின்றது என்று பார்க்க வேண்டும்என்றார்.
திருமதி.சாவியின் வேண்டுகோளை ஒதுக்கிவிட்டுச் சொன்னேன்,  “தினமணி கதிர் இதழ்களை ஏன் பார்க்கத் துடிக்கிறீங்க உங்களுக்கும் கதிருக்கும் இனி சம்பந்தம் இல்லை என்றேன்.
சாவிக்கு பயங்கர அதிர்ச்சி  என்ன என்ன சொல்றீங்க என்ன சமாச்சாரம்?” என்று பரபரப்பாகக் கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். அப்படியே இடி விழுந்ததுபோல் உட்கார்ந்து விட்டார்கதிர் என் குழந்தைமாதிரி அதை யார் எப்படி நடத்தப் போகிறார்களோ? எனக்கு வேலை போனதைப் பற்றிக் கவலையில்லை. கதிரின் எதிர்காலத்தைப் பற்றித்தான் என் கவலையெல்லாம் என்று கூற  ஆரம்பித்தவர்  விடாமல்  தினமணி கதிர் அனுபவங்களையும், கிடைத்த வெற்றிகளையும், தவிர்க்க முடியாத சில ஏமாற்றங்களையும் பேசிக்கொண்டே இருந்தார். நானும் குறுக்கீடு செய்யாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். மணி ஒன்பது ஆகியிருக்கும். அப்போதுதான் பார்த்தேன். மேஜை மேல் என் மனைவி அவருக்கு வைத்திருந்த காபி ஏடு படிந்து ஆறிப் போயிருந்தது!
நான் ஒரு ஆசிரியன் புகழ் பெற்ற எழுத்தாளன் எனக்கு ஈடாக நகைச்சுவை எழுத யார் இருக்கிறார்கள் ?’ என்றெல்லாம் அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. அவர் மகா ரசிகர். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்  கொண்டவர். அதனால்தான் அவர் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கினார். ஊக்கம் கொடுத்து வளர்த்தார். தான் ரசித்த கதையையோ, கட்டுரையையோ அவர் விவரிப்பதை கேட்பதே சுவையான அனுபவம். என்னமாய் எழுதியிருக்கிறான்! எப்படி வார்த்தைகள் வந்திருக்கின்றன! கேள்வி-பதில் என்றால் இப்படித்தான் இருக்கணும்! அடடா அந்தக் கதையில் அந்த மாதிரி முடியும்படிக் கதையைக் கொண்டுபோவது லேசான காரியமில்லை என்று பல பாராட்டுக்களை மனம் விட்டுச் சொல்வார்.
ஷ்யாமாவும், மற்றவர்களும் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் எல்லோருமே உள்ளது உள்ளபடி சொல்லி யிருக்கிறார்கள். சாவியிடம் உள்ள நிறைகுறைகளை அப்படியே சிறப்பாகக் கூறியிருக்கிறார்கள். சாவியுடனேயே இருந்ததுபோல் ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம். என் மனமார்ந்த பாராட்டுக்கள்

எனக்கும் இந்தப் புத்தகத்தில் ஒரு இடம் அளித்ததற்கு ஷ்யாமாவுக்கு மிக்க நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுளேன்.
என் கட்டுரையில் அதிகம் இடம் பெற்றுள்ள வார்த்தை நான் எனும் சொல். என்னைப்பற்றி பெருமையடித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக நினைக்க வேண்டாம். நான் அறிந்த சாவியைப் பற்றி எழுதும்போது நான் வருவதை எப்படித் தவிர்க்க முடியும்?

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி  

4 comments:

  1. //நான் ஒரு ஆசிரியன்… புகழ் பெற்ற எழுத்தாளன்… எனக்கு ஈடாக நகைச்சுவை எழுத யார் இருக்கிறார்கள் ?’ என்றெல்லாம் அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. // பெரிய மனிதர்... இந்தக் காலத்தில் அடுத்தவரை மனம் விட்டுப் பாராட்டுபவர்கள் மிகச் சொல்பமே. அதற்கு மனமே வருவதில்லை...
    உங்கள் அனுபவங்களின் பகிர்வு ரசிக்க வைத்தது. நிச்சயம் இதில் 'நான்' வருவதைத் தவிர்க்க முடியாது :)

    ReplyDelete
  2. உங்களின் இடுகைகளில் இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் இன்னும் விரிவாகப் படித்திருக்கிறேன். அதுவும் தவிர சாவி-85, நவகாளி யாத்திரை மற்றும் சாவி தன்னைப் பற்றி எழுதியது, விகடன் ரவி பிரகாஷ் எழுதியது போன்றவற்றைப் படித்து அவரது குணாதிசயங்கள் என் மனதில் படிந்துபோய்விட்டது.

    அவர் did not reinvent the wheel என்று தோன்றுகிறது. மக்கள் மத்தியில் பாபுலராக குமுதம் இருக்கும்போது, அந்த ஆசிரியர் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்கள் மணி மணியானவர்கள் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்கவேண்டும். அதுவே அவர், முன் பின் தெரியாவிட்டாலும் மற்றவர்களை எழுதச் சொல்லியிருக்கவேண்டும்.

    உங்கள் 'காரக்டர்' டைப் கட்டுரைகளை அவர், ஒரு சமயத்தில் நிறுத்திவிட்டார் (நான் எழுதிய கட்டுரைகளை, எண்களில் இது மிஞ்சக்கூடாது என்று) என நான் படித்திருக்கிறேன்.

    "எப்படி வார்த்தைகள் வந்திருக்கின்றன! " - அவர் சொல்வது 'கல கலவென்று வார்த்தைகள் வந்திருக்கின்றன' என நினைக்கிறேன் (அப்படித்தான் படித்த ஞாபகம் இருக்கிறது).

    ஒன்றுமில்லாத இடத்திலிருந்து புறப்பட்டு, தான் எடுத்துக்கொண்ட இன்டஸ்டிரியில் பலர் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி வாழ்ந்திருப்பதே அவரது சிறப்பு. நீங்களும் சுருக்கமாகச் சொல்லியிருந்தாலும் பலவற்றை ஞாபகத்தில் மீட்டெடுக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.

    எங்களுக்கெல்லாம் 1978-1982 பொற்காலம். அப்போதுதான் பதின்ம வயதிலிருந்த எங்களுக்கு ஏகப்பட்ட பத்திரிகைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது (விகடன், குமுதம், கல்கி, துக்ளக், சாவி, இதயம் பேசுகிறது, மயன் போன்ற பல பத்திரிகைகள்).

    ReplyDelete
  3. சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம் தொடர் வந்தப்போ நான் பள்ளி மாணவி. விடாமல் படிச்சுட்டு மதியம் சாப்பாடு நேரத்தில் அதைக் குறித்துப் பேசுவோம். எழுதுவது யார் என்பதைக் கடைசிவரை ரகசியமாகவே வைத்திருந்தார் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். சாவியின் குணாதிசயங்களைப் பற்றி நிறையப் படித்திருக்கிறேன். உங்கள் மூலமும் இப்போது படிக்கக் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கடுகு, சாவி, கல்கி பெயர்களெல்லாம் என் பள்ளிப்பருவத்தில் அறிமுகமானவை. கிட்டதட்ட அப்பொழுது வாராந்தரிகளை படிக்க வீட்டுக்குள் சண்டையே நடக்கும். 30 வருடங்கள் ஓடியபின்பு நேற்று கடுகு blog எழுதுவது தற்செயலாக தெரியவந்தது. பல வருடங்களுக்குப்பிறகு சொந்த ஊருக்கு போகும்பொது வழியில் பரிச்சயமான இடங்களை பார்க்கும்போது ஏற்படும் பரவசம் கடுகு என்ற பெயரை கேட்க்கும்போது . நினைவோடையில் எறியப்படும் கல்...

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!