November 28, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் - பாகம்-2


    நம்பியார் “அடுத்து ஒரு சின்ன விஷயம்.. உங்கள் வீட்டு பால்கனியில் துணியை உலரப் போடும்போது நீளமான  துணியைப் போடாதீங்க..”
     “என்ன அப்படி ஏதாவது வாஸ்து சாஸ்திரம் இருக்கிறதா?.. .புரியலையே…”
     “ஒண்ணுமில்லை, சார். நீளமானத் துணியைப் போட்டால், அதன் நிழல் எங்கள் பால்கனியில் விழுகிறது. எங்கள் துணி உலராது… இதுக்கு முன்னே இருந்த முத்துராமனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட கைகலப்பே  ஏற்படற மாதிரி ஆகிவிட்டது… ஆனால் அந்த ஆளு மகா மோசம்… வேண்டுமென்றே ஜமக்காளம்,, பெட்ஷீட்  என்று, ஈரம் சொட்ட சொட்ட உலர்த்துவான்…. நான் என்ன லேசுப்பட்டவனா என்ன? அப்படியே இழுத்து, கீழே ஓடற சாக்கடையில் போட்டுவிடுவேன்… நான் நல்லவனுக்கு நல்லவன் 
வில்லனுக்கு  வில்லன்” என்றார்.
 ”நல்லவனாக இருக்கும்போது ‘நம்பியார்’ என்ற உங்கள் பெயரை ‘எம்ஜியார்’ என்று மாற்றிக் கொண்டு விடுவீர்களா?” என்று கேட்டு நானே ‘ஓ’ என்று சிரித்தேன்.

     நம்பியார், ஒரு மில்லி செகண்ட் சிரித்துவிட்டு, “நம்ப மாட்டீர்கள்.. உங்கள் வீட்டின் முன்னாள் சொந்தக்காரரின் மைத்துனன் பெயர் ராமச்சந்திரன். சரியான உதவாக்கரை. தினமும் அவனோட சண்டைதான்; நான் வில்லனாக இருக்கலாம்; அவன் வில்லனுக்கு வில்லன்.… வர்றேன் சார்… ஸ்கூட்டரை இப்பவே எடுத்துடுங்கோ, என்று சொல்லிவிட்டுப் போனார்.
     “என்ன தொச்சு…கேட்டியா, நம்பியார் சொன்னதை?” என்று லேசான கேலிக் குரலில் கேட்டேன்…
      நான் எதற்கு ’ரூட்’ போடுகிறேன் என்று கமலா (கற்பூர நாயகி!) ஊகித்துக் கொண்டே, “ஏதாவது ஆரம்பிக்காதீங்க. வாய் செத்தவன், தொச்சு… நீங்க எவ்வளவு முட்டினாலும் சரி, தேள் மாதிரி கொட்டினாலும் சரி, அத்திம்பேர் என்று வந்து வேலை செய்வான்…..சரி.. சரி. போய் ஸ்கூட்டரை எடுத்து வெச்சுட்டு வாங்க”என்றாள்.
     கீழே போனேன். வாட்ச்மேனைத் தேடினேன். காணவில்லை. அப்போது ஒரு வேலைக்காரி வாசலைப் பெருக்க வந்தாள்.
     “ஏம்மா இங்கே ஸ்கூட்டரை நிறுத்தறதுக்கு இடம் எங்கே இருக்குன்னு தெரியுமா?
     “இடம் இருந்தாதானே சொல்றதுக்கு. இங்கே நிறுத்தாதே, அங்கே நிறுத்தாதே என்று தெனமும் ஒரு சண்டை நடக்குது… புதுசா வந்திருக்கியா?.. இந்த ஏரியாவில் ஒரு அங்குல இடம் கூட இல்லை. எல்லாரும் ’பட்டா’ போட்டுக்கிட்டாங்க அவங்க ‘பட்டா’ போட்டுக்கிட்ட இடத்திலே செருப்பை விட்டாக்கூட ’பட்டா’ கத்தி எடுக்காத குறையாகச் சண்டைக்கு வந்துடுவாங்க… ஒண்ணு செய்யுங்க.. இப்படியே போய், காம்பவுண்ட் மூலையிலே நாலு குப்பைத் தொட்டி வெச்சிருக்கிற இடத்துல ஒரு பக்கமாக விட்டுடுங்க.. அங்கே யாரும் சொந்தம் கொண்டாட மாட்டாங்க.” என்றாள்.

     “நல்லா இரும்மா” என்று சொல்லியபடியே, ஸ்கூட்டரை ஸ்டாண்டிலிருந்து எடுத்து தள்ளிக் கொண்டுப் போனேன்.  குப்பைத் தொட்டி இருந்த இடத்தைக் என் கண்ணால் கண்டுபிடிப்பதற்குள், என் மூக்கு கண்டுபிடித்துவிட்டது. கூவம் தான் அபார்ட்மெண்டிற்கு வந்துவிட்டதோ, என்று  எண்ணும்படி தூக்கி அடித்தது துர்நாற்றம்.
     மூச்சு அடக்கிக் கொண்டு, ஸ்கூட்டரை அந்த இடத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து, மூச்சு பிளஸ் பெருமூச்சு விட்டேன்.

November 21, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மெண்ட்? -பாகம் 1

"அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென் ட்?"
‘ என்  மைத்துனன் தொச்சு  ஏதோ எவரெஸ்ட் சிகரத்தில் கொடியேற்றியது மாதிரி, பயங்கர  உற்சாகத்துடன் தன் அருமை அக்காவைப் பார்த்துக் கேட்டான்.
 கமலா, அதற்கு பதில் சொல்வதற்குள், பாலும் தெளிதேனும், பாகும் கலந்த குரலில் தொச்சுவின் அம்மாவும் என் மாமியாருமான பாசத்திலகம், “எப்படி இருக்குன்னு கேட்கணுமாடா?… இந்த  அபார்ட்மெண்ட்டை உங்க அத்திம்பேருக்காக, ஓடி ஓடி நீ தேடிக் கண்டுபிடிச்சிக் கொடுத்திருக்கியே. எப்படிடா அதில் குறை இருக்கும்? ரொம்ப நன்னா இருக்குடா… பாத்து பாத்து கட்டியிருக்காண்டா இந்த பில்டர். காற்றும் வெளிச்சமும் அபாரம். இரண்டெட்டில் கடை, கண்ணி, கொஞ்சம் தள்ளிப் போனால், பால் டிப்போ, பஸ் ஸ்டாப். போஸ்ட் ஆபீஸ் இருக்கு. சாதாரணமாக நீ யாருக்கு எது செய்தாலும் உயிரைவிட்டுச் செய்வே... அத்திம்பேருக்குன்னா கேட்கணுமா?”  என்று  பாராட்டுப் பத்திரம் படித்தார்.
     இந்த கடைசி வாக்கியத்தைச் சற்று உரக்கச் சொன்னாள் என் மாமியார்- எனக்கு தெளிவாகக், ’கேட்கணும்’ என்று. 
     மிருதங்கம் விட்டதும், கஞ்சிரக்காரர்  துவக்குவது மாதிரி, மாமியார் நிறுத்தியதும்,  தொச்சுவின் அருமை அக்கா ’தனி’யைத் தொடர்ந்தார். தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி பாயும்  என்பதை நிதர்சனமாக்கியது அவளது ஆவர்த்தனம்..
     நான் உள் அறையில் அட்டைப் பெட்டிகளைத் திறந்து, என்னுடைய துணிகளையெல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தேன்.
     காலிங் பெல் அடித்தது. அப்படியே தூக்கிவாரிப் போட்டது. தீயணைப்பு வண்டிதான் வீட்டுக்குள் வந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன். காரணம், அந்த காலிங்பெல்லின் ஓசை  சாதரண ஓசையில்லை.   தீயணைப்பு வண்டி மணியின் ஓசை கெட்டது என்று சொல்லலாம்!
     ”என்னப்பா தொச்சு?” என்று அலறி  அடித்துக் கொண்டு வந்தேன்
“அத்திம்பேர், பயந்துட்டீங்களா? பெல்லை முதல்லே மாத்திடலாம்… இல்லை அத்திம்பேர். வீட்டை நமக்கு வித்தவரின் மனைவிக்குப் பாவம்  காது கேட்காது. அதுக்காக, ஓசை அதிகமாக இருக்கிற மணியை வெச்சிருக்கிறார்.. போகட்டும்.” என்றான், என்னை சமாதானப் படுத்தும் எண்ணத்துடன்
     “ தொச்சு, என்னவோ  ‘போகட்டும்’னு அசால்ட்டா சொல்றே?.. என் காது டிரம் கிழிஞ்சு போயிடும் போல் இருக்கு.. அப்படியே வயத்தைக் கலக்கிடுச்சு.. இவ்வளவு உரக்க அடிக்கிற மணியையா வெச்சுப்பாங்க..   மனு நீதிச் சோழன் மணியா இது? ஆளையே  அடிச்சுடும் போல இருக்கு…..இப்படி பயங்கரமா, நாலு ஜெட் பிளேன் வீட்டுக்குள்ளேயே பறக்கிற மாதிரி சப்தம் போட்டால், அவனவன் நம் மேல பாய்வாங்க., அபார்ட்மெண்ட்ல இருக்கிற குழந்தைகள் பயந்து அழுதாங்கன்னா என்ன ஆகிறது” என்றேன்,
“அதுவும் ராத்திரியிலே, அகால வேளையிலே அடிச்சா என்ன ஆகிறது?” என்று கேட்டார் என் மாமியார். இது ‘ நோகாமல் அடிக்கிறேன்;  ஓயாமல் அழு” பாணி தந்திர மந்திரம்!
 
   ”தொச்சு, இது அலாரம் மணி இல்லை. அலறும் மணி!” என்றேன்.
     சாதாரணமாக நான் சொல்லும் ஜோக்குகளைப் புரிந்து கொண்டு சிரிக்க தொச்சுவிற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரம் தேவைப்படும். அப்படி புரிந்து கொண்டால் , விளக்கெண்ணெய், வேப்பம்பூவும், பாகற்காயும் சேர்த்து அரைத்த துவையல் சாப்பிட்ட மாதிரி முகபாவத்துடன் சிரிப்பான். ஆனால், இந்த  ‘அலறும் மணி’ ஜோக்கிற்கு தொச்சு சிரித்த சிரிப்பு, அலாரத்தின் ஓசையைவிட சற்று அதிகமாகத்தான் இருந்தது!
     தொச்சு சொல்லித்தான் இந்த அடுக்குமாடி குடி இருப்பை  வாங்கினேன். ஆகவே அதில் குற்றம் கண்டுபிடிக்கமாட்டான். அதுமட்டுமல்ல, ‘எல்லாம் பிரமாதம்’ ‘அபாரம்’ ‘சூப்பர்’ என்று நாங்கள் சொல்லவேண்டும். என்றும் எதிர்பார்ப்பான்..
     “அத்திம்பேர்.. இந்த வீட்டுக்காரர் ரொம்ப முன் யோசனக்காரர் மட்டுமல்ல; ஒவ்வொன்றையும் யோசிச்சு யோசிச்சு செய்றவர்… இதோ பாருங்க, இங்க ஒரு கொக்கியை கதவருகில் போட்டு வைத்திருக்கிறார். எதுக்குத் தெரியுமா? பால் பாக்கெட் போட சின்ன பிளாஸ்டிக் கூடையை மாட்டறதுக்கு. கதவு கிரில்லில் பையைக் கட்டித் தொங்கவிடலாம்..பார்க்க சகிக்காது. அதுவும் போஸ்டாபீஸில், கோந்து போட்டு ஒட்டினப்புறம் கையைத் துடைச்சிக்க ஒரு துண்டு துணியை வைச்சிருப்பாங்க… அதுமாதிரி இருக்கும்.”
     “தொச்சு, வாப்பா, சமையல் அறையை கொஞ்சம் நிதானமாகப் பார்க்கலாம். வீடு வாங்கறதுக்கு முன்னே நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நம்ம வீடு, நாம்ப சமையலறைன்னு பார்க்கறது வேறு அனுபவம் இல்லையா?” என்றேன்.

November 09, 2017

டார்ஜான்

எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு ஒரு டார்ஜான் திரைப் பத்தைப் பார்த்தேன். காட்டுப்பகுதியில் டார்ஜான், அவன் காதலி, அவர்களுடன் ஒரு சிம்பன்ஸி இது  மட்டும்தான்  என் நினவில் உள்ளன. ஒரு ரத்தின் விழுதைப் பிடித்துக் கொண்டு, பயங்கரமான குரலில் கத்திக் கொண்டே (ஊளையிட்டுக் கொண்டே என்று சொன்னாலும் சரி!) டார்ஜான் தாவியதுதான் பெரிய ஸ்டன்ட் வித்தையாக எல்லாரையும் கட்டி போட்ட.து.

 கதை, வசனம், இசை, நடிப்பு எதுவும் ஞாபகத்தில் இல்லை. இந்த அம்சங்களைப் பற்றித் தயாரிப்பாளர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.  படம் பார்த்த்வர்களுக்கு அவை ஊறுகாய் போன்றுதான் இருந்திருக்க வேண்டும்.
சமீபத்தில் இந்த படத்தைப் பற்றி சில குட்டித் தகவல்கள் கண்ணில் பட்டன. அவை டார்ஜான் நினைவை எனக்குக் கொண்டு வந்துவிட்டன.  டார்ஜானைப் பற்றி விவரங்களைத் திரட்டும் ஆவலை உண்டாக்கின. ஒரு சில கட்டுரைகளையும் புத்தகங்களயும் கண்டு பிடித்தேன்.  அவற்றில் நிறையத் தகவல்கள் கிடைத்தன.
   *                      *                        *
முதல் டார்ஜான் படம் 1918-ம் ஆண்டு திரையிடப்  பட்டது. ஆம், கிட்த்தட்ட 100 வருஷத்திற்கு முன்பு!

 டார்ஜான் கதைகளை  எழுதியவர் EDGAR RICE BURROUGHS பற்றிய விவரங்களும் மிகவும் சுவாரசியமானவை.

    பர்ரோஸ் (1875-1950). ஒரு பென்சில் மொத்த வியாபார ஷாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தார். என்ன வேலை? கட்டுக் கட்டாக வரும் பென்சில்கள் எல்லாவற்றையும் சீவி வைப்பதுதான் அவர் தினமும்  செய்த வேலை. ஓய்வு கிடைத்த சமயங்களில், சரியான அடாஸ்’ நாவல்களை அவர்  படிப்பது உண்டு. (PULP FICTION என்று கூறுவார்கள் இம்மாதிரி நாவல்களை..)
      ‘இவ்வளவு  குப்பையாக எழுத எனக்குக் கூட வருமே’ என்று அவருக்குத் தோன்றியது.
     அவரது 54-வது வயதில்,  அவர் ஒரு நாவலை எழுதினார். அவருடைய பிள்ளைக்கு சிறிது ஓவியம் வரையத் தெரியும் அவன் படங்கள் போட்டான்.
         1912-ம் ஆண்டு, அவர் எழுதிய TARJAN OF THE APES என்ற நாவல் பிரசுரமாயிற்று. 
     புத்தகம் அதிகம் விற்காவிட்டாலும்சற்று வித்தியாசமான கதைக்களம் என்று இருந்ததால் திரைப்படம் எடுக்க சில 'உப்புமா’ கம்பெனிகள்’  முன் வந்தனர். 
அதைத் திரைப்படமாக விற்பதற்கு ஒரு ஏஜன் டை நியமித்தார்.
ஹிரோ காட்டுவாசி, அரைகுறை ஆடை, இதெல்லாம் மைனஸ் பாயிண்டாக அமைந்தன. சுமார் 4 வருஷம் கழித்து, ஒரு சிகாகோ இன்ஷூரன்ஸ் ஏஜெண்டிற்கு -  சினிமாத்துறை அனுபவமோ, பணவசதியோ சற்றும் இல்லாத BILL PARSONS  என்பவருக்கு- விற்றுவிட்டார்.
BILL PARSONS படத்தைத் தயாரிக்க முற்பட்டார்.  ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்த என்ஜினியர் ஒருவரை ஹீரோவாகப் போட்டு படம் எடுக்க ஏற்பாடுகள் செய்தார். அந்த என்ஜினியர் காட்டுவாசிபோல் இருந்து தான் அவருடைய ஒரே தகுதி!