September 01, 2016

’கோல்ட்’வின்னின் பொன்/பென் மொழிகள்


ஹாலிவுட் தயாரிப்பாளர் SAMUEL GOLDWYN (1882-1974) நிறைய ஜோக் அடிப்பார். சிரிப்புப் பொன்மொழிகளை உதிர்ப்பார். (இவற்றைத் தயார் பண்ணிக் கொடுக்கச் சிலரை வேலையில் வைத்திருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.)அவர் பல வருஷங்களுக்கு முன் STELLA DALLAS என்று ஒரு படம் எடுத்தார். அதில் BARBARA STANWYCK என்பவர் கதாநாயகியாக நடித்தார். 

ஒரு முக்கியமான காட்சியில் கதாநாயகி கண்ணீர் விட்டு அழுதபடியே பேசி நடித்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த கோல்ட்வின்னுக்கும் கண்களில் நீர் கசிந்துவிட்டது. அந்த ஸீன் படப்பிடிப்பு முடிந்ததும் கதாநாயகியிடம் “நீங்கள் அழுதுகொண்டே நடித்தது மிகவும் நன்றாக இருந்தது. இதே காட்சியைத் திரும்பவும் எடுக்க விரும்புகிறேன். இப்போது அழக்கூடாது; ஆனால் பொங்கி வரும் அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்குவதுபோல் நடித்து வசனங்களைப் பேசுங்கள். பிரமாதமான காட்சியாக அமைந்து விடும்.” என்றார்.
கதாநாயகியும் அப்படியே நடித்தார். அதைப் பார்த்த கோல்ட்வின்னுக்கும் அழுகை பீறிட்டு வந்தது.


இந்தக் காட்சியைப் பற்றிப் பின்னால் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தான் அழுததைச் சொல்லிவிட்டு “இவைதான் என் வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான கணங்கள்” என்றாராம்.
இது எப்படி இருக்கு?
+++++++++
பிடித்த பொன்மொழி  
அவருக்குப் பிடித்த ஒரு பொன்மொழியும் அதைப் பற்றி அவர் எழுதிய சிறிய கட்டுரையையும் இங்கு தருகிறேன்.

உன்னைப் பொறுத்தவரை நீ உனக்கு
உண்மையாக இரு” - ஷேக்ஸ்பியர் .

நான் ஹார்வர்ட் பல்கலை கழகத்திலோ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலோ படிக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்.
நான் ஒரு தொழிற்சாலை ஊழியராக இருந்தபோது, இரவுப் பள்ளியில் படித்து கற்றுக்கொண்ட சிறிதளவு கல்விதான் என் படிப்பின் அளவு, நான் ஷேக்ஸ்பியரைக் கற்றுணர்ந்த பெரிய மேதை அல்ல.  இருப்பினும்,மேலே குறிப்பிட்டுள்ள அவரது  பொன்மொழியை வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியமான வழிகாட்டி என்று நான் கருதி வந்துள்ளேன். ‘வெற்றிகரமான’ என்று நான் கூறுவதை அந்த வார்த்தை தரும் அர்த்தத்தை நூறு சதவிகிதம் நம்புகிறேன்.
ஹாலிவுட்டில் நான் இருந்த வருடங்களில், நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் நான் கூறிவந்த புத்திமதி ஒன்றே ஒன்றுதான். நடிகை, நடிகர்கள் அவர்களுடைய கால கட்டத்தில் பிரபலமாக இருந்தவர்களைப் போல தாங்களும் இருக்க விரும்புவது, வேறொருவருடைய டைரக் ஷன் பாணியைப் பின்பற்ற டைரக்டர்கள் முயற்சி செய்வது, மிகவும் வெற்றிகரமாக இருக்கும் கதை வசனகர்த்தாக்களைப் போல் எழுத திரையுலக எழுத்தாளர்கள் பிரயத்தனம் செய்வது ஆகிய யாவற்றையும் ஒதுக்கச் சொல்வேன். அவர்களிடம் நான் கூறுவதுண்டு: “நீங்கள் நீங்களாகவே இருங்கள்”
“உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்” என்பதுதான் என் புத்திமதியின் அடிப்படைக் கருத்து. ஒரு கலைஞன் தனது கலைத்திறமையை அப்பழுக்கில்லாமல் நேர்மையாக வெளிக்கொணர இப்படி இருப்பதுதான் மிகவும் முக்கியம். இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். தனிநபர் நேர்மையை அப்போதுதான் காப்பாற்ற முடியும்.
உங்களுக்கு நீங்களே உண்மையானவராக இருப்பது என்பது நீங்கள் வேறு ஒருவராக நடிப்பது அல்லது பாசாங்கு செய்வது.  இது நாணயமற்ற நடவடிக்கை. உங்களுக்கு உள்ளே என்ன திறமை இருக்கிறதோ அதற்கு நீங்கள் உண்மையாக இருங்கள். எது சரி என்று தோன்றுகிறதோ அதற்கு உண்மையாக இருங்கள்.
என்ன செய்யவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். அதற்கு ஆகும் செலவைப் பற்றியோ இழப்புகளைப் பற்றியோ சிந்திக்காதீர்கள்.
உங்கள் முடிவுகள், உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் உங்கள் முழு வாழ்க்கைக்காகவும் எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும். எது சிறந்தது என்பதுதான் முக்கியம். எது சாதகங்களை அளிக்கும் என்று எண்ணாதீர்கள்.
எல்லா சமயங்களிலும் நேர்மையுடன் இருப்பதுடன் சீர்மையற்றதை விலக்கவும் தெரியவேண்டும்.
இது நடைமுறையில் அனேக நன்மைகளைத் தரும். நேர்மை இல்லாமல் எந்த மனிதனும் முழுமை பெற முடியாது. நேர்மை இல்லாவிடில், எந்த புத்தகமும், எந்த விளையாட்டும், எழுதப்பட்ட எந்த கருத்தும், எந்த மனிதன் செய்த சாதனையும் உண்மையான மதிப்புடையதாக இருக்காது.                            *                   *                  *
சில கோல்ட்வின் ‘பென்’ மொழிகள்.
 *Anybody who goes to a psychiatrist ought to have his head examined.
*In two words : Im-possible.
 *I read part of it all the way through.
 *I’ll write to you a blanket cheque.
 *I don’t think anybody should write his autobiography until after he’s dead.
 * When someone does something good, applaud! You will make two people happy. 
*That’s the trouble with direction. Always biting the hand that lays the golden egg.
 *Include me out.
 * If I look confused it is because I am thinking. 
 *A wide screen just makes a bad film twice as bad. 
  *A bachelor's life is no life for a single man. 
  *When I want your opinion, I will give it to you. 

4 comments:

  1. "இவைதான் என் வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான கணங்கள்” - அப்படின்னா அவர் அவருடைய வேலையை எவ்வளவு அனுபவித்து செஞ்சிருக்கணும்?

    "உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு உண்மையாக இரு" - அருமையான பழமொழி. நம்மைப் பற்றிப் பிறர் தவறாக எண்ணினாலும், நான் எனக்கு உண்மையாக இருந்தேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியைத்தரும். ரொம்ப வருடமா, மற்றவர்கள் என்னுடைய கோணத்தில் சிந்திக்காமல், 'நான் செய்வதைத் தவறாக எடுத்துக்கொள்கிறார்களே என்ற வருத்தம் மட்டும் இருந்தது/இருக்கிறது. ஆனாலும் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

    அவர் பென் மொழிகள் புன்னகையைத் தந்தது.

    வாழ்க்கைதான் ஒவ்வொருவரையும் எங்கெங்கோ எப்படி இழுத்துச்செல்கிறது. நீங்கள் பிறந்த ஊர் தெரியாது. ஆனால், நிச்சயம் நம் வாழ்க்கை இப்படி இருக்கும், இவ்வளவு புத்தகங்களைப் படிப்போம், இவ்வளவு இடங்களுக்கும் பயணப்படும்படியாக நம் வாழ்க்கை இருக்கும் என்று 10 வது படிக்கும்போது உங்களுக்குத் தோன்றியிருக்குமா?

    ReplyDelete
  2. Informative as always. I think you also didn't study at Oxford or Harvard, else you would have mentioned it in some post. But I worry if you have been called by them any time to give guest lectures. You are so well read and eloquent in your expressions.
    Goodwin's advice to artists not to follow others and be themselves is a common advice but meaningful. Otherwise they will only be mimic artists.

    ReplyDelete
  3. Sorry, 'wonder' has come as 'worry' in my last comment.

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    ’நீங்கள் நீங்களாகவே இருங்கள்’

    இன்றைக்கு இது சாத்தியமா, நாம் நாமாகவே இருக்கிறோமா என்று சந்தேகமாகவே இருக்கிறது.

    காரணம் - மற்றவர்கள் எண்ணம் நம்மைப் பற்றி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயேதான் நாம் நடந்து கொள்கிறோம் இப்போதெல்லாம் என்று தோன்றுகிறது.

    இதற்கிடையில், இந்தக் கட்டுரையை படித்ததும், உங்களுடைய ‘கேரக்டர்’ பகுதியை மீண்டும் படிக்க வேண்டும் என்று ஆவல் வந்து விட்டு விட்டது.

    அன்றைய வித விதமான குணச்சித்திரங்கள் - அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொண்ட உலகம் - மீண்டும் படித்து ரசிக்கப் போகிறேன்.

    நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!