March 30, 2016

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

கடவுள் கை கொடுத்த கணங்கள்!

ஒரு சமயம் புனேவில் பணிபுரிந்து கொண்டிருந்த என் சகோதரன் லீவில் சென்னைக்கு வந்திருந்தான். புனேக்குத் திரும்பிப் போக 3-டியர் டிக்கெட்டை வாங்கி ரிசர்வ் செய்யும்படி அவனுடைய நண்பனிடம் சொல்லியிருந்தான். அவனும் வாங்கி வைத்திருந்து என் சகோதரனிடம் கொடுத்தான்.
  குறிப்பிட்ட தினம் பெட்டி படுக்கையுடன் என் சகோதரனும் அவனை வழியனுப்ப நானும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு மணி முன்னதாக காலை 10 மணி வாக்கில் சென்றோம்  சென்றோம்..
            அவனுடைய டிக்கெட்டில் G-பெட்டியில் 17வது பர்த்’ என்கிற மாதிரி எழுதப்பட்டு இருந்தது. (இது 50 வருஷத்திற்கு முந்திய கதை).
            புனா ரயில் பிளாட்ஃபாரத்துக்கு வந்து நின்றது. அதில், G-பெட்டியைத் தேடிப்போய் வெளியே ஒட்டப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தோம். ஷாக். அதில் என் சகோதரனின் பெயர் இல்லை.
            பிளாட்ஃபாரத்த்தில் இருந்த ஒரு டி.டி.ஆரிடம் டிக்கெட்டைக் காட்டி, விஷயத்தைச் சொன்னோம்.
            அவர் டிக்கெட்டைப் பார்த்து “ என்ன சார்...இது இன்னிக்குக் காலைல புறப்பட்டுப்போன 7 மணி வண்டிக்கு ரிசர்வ் பண்ணியிருக்கிறது... அதைக் கோட்டை விட்டு விட்டீர்களே...” என்றார். அது மெயில்..இது எக்ஸ்பிரஸ் என்ற ரீதியில் ஏதோ சொன்னார். அது எங்கள் காதில் விழவில்லை.
            “சார்...பர்த் ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டோம்.
Image result for no vacancy sign
            “இல்லை சார்...எல்லாம் FULL என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.என் தம்பியிடம், “நீ இங்கேயே பெட்டி படுக்கையுடன் இரு. நான் புக்கிங் ஆபீசில் போய்க் கேட்டுவிட்டு வருகிறேன்.” என்று சொல்லி ஓடினேன். ஒரு ரயில் பெட்டியில் R.M.S என்று போர்டு போட்டிருந்தது. நான் G.P.O -வில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் அதைச் சொல்லி R.M.S.காரரைக் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கே போனேன். 

March 21, 2016

மீண்டும் சர்மாஜி

 சர்மாஜியும் விமான விபத்தும்
பல வருஷங்களுக்கு முன்பு டில்லியில் நடந்த விமான விபத்தைப் பலர் மறந்திருப்பார்கள். தில்லி ராமகிருஷ்ண புரத்தில் ஏற்பட்ட விபத்து. அந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் திரு மோகன் குமாரமங்கலம்.
  விமான விபத்துக்கும் சர்மாஜிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
   சர்மாஜி அந்த கால கட்டத்தில் ராமகிருஷ்ணபுரம் அரசு குடியிருப்பில் இருந்தார். விபத்து நடந்த தகவல் மள மளவென்று பரவியது. அதுவும் சர்மாஜியின் வீட்டிற்கு சற்று அருகில்தான் நடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விமானம் விழுந்ததை ‘வேடிக்கை’ப் பார்க்க ஓடினார்கள்.
  சர்மாஜி முன்யோசனைக்காரர். ஒரு நிமிஷம்தான் யோசித்தார். கீழ் வீட்டிலுள்ள பையன் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தது அவருக்கு நினைவு வந்தது. அவனிடம் ஸ்டெதஸ்கோப்பையும் டாக்டர் கோட்டையும் கேட்டு வாங்கிக் கொண்டார்.  ஸ்டெத்தைக் கழுத்தில் மாலையாக மாட்டிக் கொண்டார். ஸ்கூட்டரை எடுத்து விபத்து நடந்த பகுதிக்குச் சென்றார்.

March 12, 2016

கடவுள் கை கொடுத்த கணங்கள்!-2

சாந்தினி சௌக்கில் ஒரு அற்புதம்.... 
 இது நடந்த வருஷம் தோராயமாக நினைவிருக்கிறது. ஆனால் மாதம், தேதி மறந்து விட்டது. மறக்காதது அந்த அரிய சம்பவம் நிகழ்ந்த கணம். மூன்று குடும்பங்களை அப்படியே மாற்றி எங்கேயோ  எடுத்துக்கொண்டு போனதைக் கூறுகிறேன்.

70’களில் நடந்தது. 
ஒரு ஞாயிற்றுக்கிழமை என் மனைவியும் நானும் தில்லி சாந்தினி சௌக்கின் 'சண்டே மார்க்கெட்'டுக்கு போனோம், ஞாயிற்றுக்கிழமைகளில் சாந்தினி சௌக்கில் வீதியில் பாதிக்கு மேல் நடைபாதைக் கடைகள் வந்து விடும். நடைபாதையிலும் பல நல்ல பொருள்கள் மலிவாகக் கிடைக்கும். சரியான அடாஸ்  பொருள்களும் இருக்கும்.

அந்தக் காலத்தில் சற்று பிரபலமாக இருந்தது ஃபோம் சில்க்  என்ற ஜப்பான் துணி. உண்மையிலேயே மிருதுவாகவும் நல்ல டிஸைன்களிலும் கிடைக்கும். என் பெண்ணுக்கு ஒரு frock தைக்கலாம் என்று துணி வாங்கப் போனோம். வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடம் சென்றோம். எங்களுக்குப் பிடித்த துணிக்கு வழக்கத்தை விட அதிக விலை சொன்னார். எட்டணா விலை வித்தியாசத்தால் விலை படியவில்லை. வேண்டாம் என்று சொல்லித் திரும்பி விட்டோம். பாதி தூரம் வந்திருப்போம்  எட்டணாவிற்காக நல்ல டிசைனை விட்டு விடுவதா என்று வழக்கம்போல்  பின்புத்தியில் தோன்றவே, மறுபடியும் அந்த கடைக்குச் சென்று துணியை வாங்கி வரலாம் என்று தீர்மானித்தோம். 

March 03, 2016

ரஜனிஹாசனும் ராசம்மாவும்

பாரதிராஜா பார்த்திருந்தால் கொத்திக் கொண்டிருப்பார்.  
பாக்யராஜ் சபலப்பட்டிருப்பார். பாலசந்தரும் கிறங்கியிருப்பார். மணிரத்னம் மயங்கியிருப்பார்.
 அவ்வளவு அழகான, சினிமாவுக்கு ஏற்ற முகவெட்டு உடைய
கிராமம் அது!
ஊருக்கு நடுவே இருக்கும் தெருவில், மங்களூர் ஓடு போட்ட சின்ன வீட்டு வாசலில், நன்றாக மெழுகப்பட்ட மண் தரையில் உட்கார்ந்து கொண்டு அரிசி நோம்பிக் கொண்டிருக்கிறார் ஒரு வயதான மூதாட்டி.
அன்புள்ள வாசகர்களே, மூதாட்டி என்று அலட்சியமாகக் கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள்.
இந்தப் பெண்மணி  ராசம்மா தான்  நமது ஹீரோயின்!

ஏழு அபஸ்வரங்களையும் கலந்து அவள் பாடிக் கொண்டே அரிசியில் கல்லைப்பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டை சினிமா இசை அமைப்பாளர் கேட்டிருந்தால், இத்தனை நாள் ஏதாவது ஒரு திரைப் படத்தில் போட்டிருப்பார்.
ராசம்மாவுக்கு அறுபது வயதிருக்கும். நடுத்தரக் குடும்பப் பாங்கு அவளுடைய நூல் புடவையிலும் கழுத்தில் உள்ள காப்பிக் கொட்டைச் சங்கிலியிலும், காது கம்மலிலும், நெற்றியில் உள்ள கம்பீரமான பொட்டிலும் வெளிப்படுகிறது.
பாட்டுப் பாடிக் கொண்டிருந்தாலும் கல்லைப் பொறுக்கிக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை மட்டும் அவ்வப்போது தெருக்கோடிக்கே போய்க் கொண்டிருந்தது.
“என்ன ராசம்மா... இன்னும் தபால்காரன் வரலியா?” என்று வீட்டினுள்ளிருந்து ஒரு குரல் வந்தது.
“அதுதானே குந்திக்கினு பார்த்துக்கிட்டு இருக்கேன். புதன்கிழமைன்னா நம்ம குமார் லெட்டர் வருமே... அதோ தெருக் கோடியிலே தபால்காரர் சைக்கிள் தெரியுது...”
அடுத்த இரண்டு நிமிடத்துக்குள் தபால்காரர் ராசம்மாவிடம் ஒரு கவரைக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.