February 23, 2015

ஐயோ, வேண்டாம் புகழ்!


 எக்கச்சக்கமாக விலையேறி இருக்கிறதே என்று கூட லட்சியம் பண்ணாமல் யாரோ அரை கிலோ மிளகாய்ப் பொடியை (குண்டூர் ரகம்) அவர் கண்களில் அப்பியது போல இருந்தது. எழுத்தாளர் ஏகாம்பரத்துக்கு! அவருடைய கண் எரிச்சலுக்குக் காரணம் கஞ்சன்-க்டிவிடிஸோ அல்லது வள்ளல் க்டிவிடிஸோ அல்ல. அவருக்கு எதிரே இருந்த பேப்பரில் வந்திருந்த ஒரு சின்னச் செய்தி.
 
  "பிரபல எழுத்தாளர் "மைதா"வின் புதிய நாவல் வெளியீட்டு விழா, ஓட்டல் கீதா கார்டனில் நடைபெற்றது. மாண்புமிகு. உயர்திரு, மேதகு, வணக்கத்துக்குரிய, தவத்திரு என்று பல புள்ளிகள் "மைதா"வின் எழுத்து வன்மையை வன்மையாகப் புகழ்ந்து பாடியிருந்தார்கள் --- தம்புரா சுருதிகூட இல்லாமல்!

இதைப்
படிக்கப் படிக்க, அவருக்குப் படிப்படியாக எரிச்சல் அதிகமாகியது!
  மயிலாப்பூர் தாமோதரன் என்னும் "மைதா' சிறந்த எழுத்தாளர். நான்கு வருஷத்துக்கு முன் இவருடைய முதல் கதை பிரசுரமாயிற்று. ஆனால் பத்து வருஷமாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஏகாம்பரத்தை விட, அவருக்குப் பிரபலம் ஏற்பட்டுவிட்டது. எங்கே பார்த்தாலும் மைதாவின் கதைகளுக்கு வரவேற்பு.
  ஏகாம்பரம் தம்முடைய எட்டுக் கதைகள் திரும்பி வந்தால் கூட வருத்தப்பட மாட்டார். ஆனால் "மைதா"வின் கதை ஒரு பத்திரிகையில் வந்து விட்டால் அவ்வளவுதான். மிதந்து கொண்டிருக்கும் கப்பலையும் கவிழ்த்து விட்டு, கன்னத்தில் கையுடன் உட்கார்ந்து விடுவார்.
 "மைதா"வின் படங்கள் பல பத்திரிகைகளில் வந்துள்ளன. அவருடைய ரசிகர்கள் "மீட் மிஸ்டர் மைதா' என்ற நிகழ்ச்சியைப் பலத்த விளம்பரத்துடன் நடத்தினார்கள். மைதாவின் நாவலைப் படமாக்க யாரோ முன் வந்தார்கள். ரேடியோவில் பேட்டி வேறு கொடுத்தார். இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் இவருடைய சிறுகதையை மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்.
  அதென்னவோ "மைதா"வைக் கண்டால் ஏகாம்பரத்துக்கு எரிச்சல். விரோதம் எதுவும் கிடையாது. தமக்குக் கிடைக்க வேண்டிய புகழை அவர் எடுத்துப் போய் விடுகிறார் என்பது ஏகாம்பரத்தின் எண்ணம்.
  தினசரியை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். "தமிழ் நாவல் உலகிலேயே பெரும் புரட்சியையும் வரவேற்பையும் பெறக்கூடிய கதையை எழுதப் போகிறேன். ஞானபீட விருதை அது பெறப் போகிறது! அப்போது நான் கொடுக்கப் போகும் பேட்டிகளைக் கண்டு "மைதா' அசந்து போக வேண்டாமா!' எதிரே இருந்த பேப்பரில் இவருடைய படம், "மைதா"வின் படத்துக்குப் பதில் பெரிதாகத் தெரிந்தது.

  புது டில்லி விக்யான் பவனில் ஞானபீட விருதைப் பெற்றுக் கொண்டு அசோகா ஓட்டரில் தம் அறைக்கு ஏகாம்பரம் வந்த போது, அங்கே சுமார் முப்பது பேர் காத்துக் கொண்டிருந்தனர். பத்திரிகை நிருபர்கள், ரேடியோ பேட்டியாளர்கள், டி.வி. நிகழ்ச்சி அமைப்பாளர்கள், புத்தகப் பிரசுரகர்த்தர்கள் இப்படிப் பலர்.
  சளபள என்று ஃப்ளாஷ் பல்புகள் பளீரிட்டன. ஏதோ அபத்தமான கேள்விகளைக் கேட்டார்கள். இவரும் அதைவிட அபத்தமான பதில்களைச் சொன்னார். ""பரிசாகக் கிடைத்த லட்ச ரூபாயை என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று ஒரு நிருபர் கேட்டார். ""முதலில் எண்ணிப் பார்க்கப் போகிறேன். பிறகு தான் என்ன செய்வது என்று எண்ணிப் பார்ப்பேன்!'' என்றார். அறையே இந்த அறுவை சிலேடையைக் கேட்டு "ஆஹாஹ்ஹா' என்று சிரித்தது! ஏகாம்பரம் புகழ் பெற்ற ஆசாமியாகிவிட்டார். இல்லாவிட்டால் இத்தனை மட்டமான ஜோக்குக்கும் இவ்வளவு அதிகம் சிரிப்பார்களா?
  "ஆகா! புகழ் புகழ் என்று அலைந்து கொண்டிருந்தாயே என்னருமை ஏகாம்பரமே, இதோ வந்தேன்!' என்று கூறாமலேயே புகழ்த் தேவதை அவரை அணைத்துக் கொண்டாள்!
 காட்டாங்குளத்தூர் இளைஞர் அறிவு கலாசார அபிவிருத்தி சங்க"த்தில் சொற்பொழிவு நிகழ்த்திய திருவாளர் ஏகாம்பரத்தைப் பலர் சூழ்ந்து கொண்டனர். எல்லாரும் கையெழுத்து வேட்டைக்காரர்கள்.
  ""சார், ஓர் ஆட்டோகிராஃப். நான் உங்கள் ரசிகன்'' என்றான் ஒரு பையன்.
  ""பேனா, நோட் புக் கொடு'' என்றார் ஏகாம்பரம்.
  ""என்ன சார். எழுத்தாளராகிய உங்களிடம் பேனா இல்லையா?''
  (இதைக் கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். ஏகாம்பரம் வழக்கத்தை விட அதிகமாக அசடு வழிந்தார்.)
  ""டேய், பேனா கொடுடா! அதோ கீழே இருக்கிற சினிமா நோட்டீஸை எடு. அதில் கையெழுத்து வாங்கிக் கொள்ளலாம்.''
  ""தம்பி, இது மாதிரி கண்ட கண்ட காகிதத்தில் எல்லாம்...'' என்று கூறிக் கொண்டே பேனாவைத் திறந்தவர் தேள் கொட்டியவர் போல் துள்ளிக் குதித்தார். உண்மையில் கொட்டியது தேள் அல்ல; இங்க்! எது எடுத்தாலும் எட்டணா பேனா! நிப்பைத் தவிர, மற்ற எல்லா வழியாகவும் இங்க் கொட்டும் பேனாவாதலால், இவருடைய சட்டை, வேட்டி யெல்லாம் மைக் கறையாயிற்று.
  இந்த அநுபவத்துக்குப் பிறகு கையெழுத்துக் கேட்டாலும், ""ஆட்டோகிராஃப் கிடையாது'' என்பார்ஒரு பையன், ""ஆட்டோகிராஃப் இல்லாவிட்டால், கால்டாக்ஸிகிராஃப் போடுங்கள்'' என்றான். ""நல்ல அறுவையடா, ஆளைப் பார்த்து அடித்தாய்!'' என்று வேறு ஒருவன் பாராட்டினான்.
  ஏகாம்பரம் இப்படிப் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி வந்தது. அவற்றில் அவருக்கு ஏற்பட்ட அநுபவங்கள் பல.
  1.  ""சார், சார், கையெழுத்து'' என்று மொய்க்கும் பலர், பேனா முனையில் அவர் முகத்தைப் பதம் பார்த்திருக்கிறார்கள். அவருடைய மூக்குக் கண்ணாடிகள் பல, "போய்  வருகிறேன். லெட்டர் போடுங்கள்' என்று கூடச் சொல்லாமல் காணாமற் போயிருக்கின்றன. ஜிப்பா ஜேபிகள் கிழிந்து போயுள்ளன.
  2.  ""மிஸ்டர் ஏகாம்பரம், உங்கள் கதை என்றால் என் பிள்ளைக்கு உயிர். அதனால் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுங்கள். நான் உங்கள் கதையைப் படித்ததில்லை. யாருக்குச் சார் வெட்டியாகக் கதைகளைப் படிக்க நேரம் இருக்கிறது?'' இந்த ரீதியில் பலர் அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.
  3.  ""சார், உங்க கையெழுத்து போட்ட உங்கள் நாவல் வேண்டும்'' என்று எத்தனை பெண்கள் நாசுக்காகக் கேட்டு வாங்கிப் போயிருக்கிறார்கள் என்பது அவருக்கு நினைவில்லை. ஒவ்வொருவரும், "அன்பு ரசிகை...........வுக்கு, எழுத்தாளர் ஏகாம்பரத்தின் ஆசிகளுடன்' என்று எழுதச் சொல்ரி ஓசியில் புத்தகத்தை வாங்கிப் போயிருக்கிறார்கள். இவர் மூர் மார்க்கெட்டில் கதைகளுக்கு ஐடியா தேடப் போன போது, (ஆம், 1920 வாக்கில் பிரசுரமான ஆங்கில நாவல்களைப் படித்து விட்டே ஏகாம்பரம் பல நாவல்களை உருவாக்கியுள்ளார்!) அன்பு ரசிகை அலமேலு மட்டும் அல்ல, பத்மா, ஜானகி, ஆஷா, காமாட்சி, மீனாட்சி, குடியாட்சி, மாநில சுயாட்சி எல்லாரும் இவருடைய நாவல்களை "எடை' போட்டுப் பார்த்துப் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

  ""மாமா....'' என்று யாரோ கதவைத் தட்டினார்கள். ஏகாம்பரம் திறந்தார். ""நமஸ்காரம். மாமா... நான் அனகாபுத்தூரிரிருந்து வருகிறேன். மாமி சௌக்கியமா? அப்பாதான், "டேய், மாமாவைப் போய்ப் பாருடா. அவராலே முடியாதது ஒன்றுமில்லையாடா' என்றார். அதனால் வந்திருக்கிறேன்'' என்றான் பிள்ளையாண்டான். விஷயம் இதுதான். எம்.பி.பி.எஸ். அட்மிஷனுக்கு இவருடைய சிபாரிசு வேண்டும். இல்லை, எப்படியாவது சீட் வாங்கித் தர வேண்டும். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏகாம்பரத்துக்குத் தெரியாதவர்கள் உண்டா? அதுவும் அவருடைய அத்தையின் மைத்துனரின் ஒன்றுவிட்ட தங்கையின் ஓர்ப்படியின் அத்திம்பேரின் அக்கா பிள்ளையாச்சே இவன்! நெருங்கிய உறவுக்காரர்களுக்கு உதவி செய்யாமல் வேறு யாருக்குச் செய்வார்?
  ""என்னால் நடக்காத காரியம். அப்பு நர்சரி ஸ்கூரில் கூட அட்மிஷன் வாங்க முடியாது'' என்று தம் உண்மை நிலையை எடுத்துச் சொன்னார். பையன், ""உங்களுக்கு இருக்கிற பேருக்கு, நீங்கள் ஒரு நடை மினிஸ்டரைப் பார்த்து விட்டு வந்தால், கட்டாயம் நடக்கும்'' என்று சொன்னான். ஏகாம்பரத்தின் செல்வாக்கைப் பற்றிய அவன் கணிப்பு அது. அப்புவுக்காக ஏழெட்டுப் பேரை நாலைந்து தடவை போய்ப் பார்த்து விட்டு வரவேண்டியதாயிற்று. செலவு, அலைச்சல், நேர விரயம். பலன்? பூஜ்யம்!
  அப்பு மட்டும் அல்ல. குப்பு, சுப்பு, உப்பு என்று பல நெருங்கிய உறவினர்கள் நெருக்கினர். பாவம், எழுத்தாளர் ஏகாம்பரம்! ஒவ்வொருத்தருக்காவும் அலைய முடியுமா? அட்மிஷன் வேண்டி வந்தவர்கள் இவரை அறுத்து எடுத்துவிட்டார்கள். இவரே ஏதாவது ஒரு மருத்துவ மனையில் அட்மிஷன் வாங்கிக் கொண்டு படுத்து விடலாமா என்று யோசித்தார். வாசற் கதவை யார் தட்டினாலும் அவருக்குக் குலைநடுக்கம் ஏற்பட்டது.

  எழுத்தாளர் ஏகாம்பரம் எத்தனையோ கதைகளை எழுதியிருக்கிறார். நகைச்சுவைக் கடல், சிரிப்பு சமுத்திரம் என்றெல்லாம் தம்மை நினைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார். ரெயில் விபத்து, குடும்பமே கொலை, வெள்ளநாசம் என்பது போன்ற விஷயங்களை எழுதும்போது கூட நகைச்சுவையாகவே எழுதுவார். ஆனால் அவருக்கே தெரியாது. இந்த நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், சபதம் செய்த பாஞ்சாரி மாதிரி தலை விரித்துக் கொண்டு ஆடுகிறது என்று! இதில் அவர் நகைச்சுவையைக் காண முடியவில்லை. காரணம், பொழுது விடிந்து பொழுது போனால் பிரபல எழுத்தாளரின் சிபாரிசை நாடி, யாராவது ஒருத்தர் வந்து கொண்டிருந்தார். வருகிற ஒவ்வொருவரும், "" அப்பா இறந்து விட்டார். ஜாயிண்ட் கையெழுத்துப் போட்டதில் சொத்து கோவிந்தா. ஏழு தங்கைகள். அம்மாவுக்கு டி.பி.'' என்று பிலாக்கணங்களாகவே அவருக்கு இசை நிகழ்ச்சிகளைத் தினமும் நடத்திக் கொண்டிருந்தனர். தினமும் இந்த முகாரி ராகம் தானம் பல்லவியைக் கேட்டு அவருக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.
  ""நாலு பேருக்குத் தெரிந்த புகழ் பெற்ற ஆசாமி நீங்கள். உங்களால் முடியாது என்றால் நம்ப மாட்டேன். இஷ்டமில்லை என்று சொல்லிவிடுங்கள், போய் விடுகிறேன்'' என்று சிலரிடம் வாங்கியும் கட்டிக் கொண்டார். கொடுமை! கொடுமை!!
 ""அடியே, எங்கேடி கல்யாணப் பெண் அங்கச்சி! ஏகாம்பரம் மாமா வந்திருக்கிறார். நமஸ்காரம் பண்ணு. பார்த்துக் கொண்டே இரு. உன் கல்யாணத்தை வைத்தே தமாஷ் கதை எழுதிவிடுவார்'' என்று பல் போன பாட்டி சொன்னாள்.
  ""ஏன், சார். நம்ப பாராஞ்சி கிட்டன் பேரன் தொட்டில் போட்டதற்கு வந்தீங்களே, அதை வைத்துக் கொண்டு கதை எழுதவில்லையே, ஏன்?'' என்று ஒருவர் ஏகாம்பரத்தை மடக்கினார்.
  ""என்னமோ எழுதவில்லை.''
  ""இப்பவே எச்சரிக்கை கொடுத்துடறேன். அங்கச்சி கல்யாணத்தைப் பற்றி ஏதாவது தமாஷ் கதை எழுதினால், கிட்டன் சும்மா விடமாட்டான். "என் பேரன் என்ன மட்டமா?' என்று சண்டைக்கு வந்து விடுவான்.''
  ""யார் சொன்னது, அங்கச்சி கல்யாணத்தை வைத்துக் கொண்டு நான் கதை எழுதப் போகிறேன் என்று?'' ஏகாம்பரம் சமத்காரமாகக் கேட்டதாக நினைத்துக் கொண்டார்.
  ""ஏண்டாப்பா, ஏகாம்பரம். எங்க குழந்தையைக் கண்டால் என்ன உனக்கு இவ்வளவு இளக்காரம்? ஆமாம், நாங்கள் óஏதோ சாதாரண குடும்பந்தான். உன்னை மாதிரி பேரும் புகழுமா இருக்கிறோமா? ஒண்ணு சொல்றேன். ஒரு காலத்தில் நீ அழுக்கு வேட்டி, கிழிசல் சட்டையோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தவன்தானே? உங்கப்பன் இருக்கிற சொத்தைச் சீட்டாடி மஞ்சள் கடுதாசி கொடுத்தான். உன் தங்கை ஆனைகவுனிச் சௌகார்ப் பையனோடு போனவள்தானே?'' பாட்டி பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் பல அலை வரிசைகளில் ஒலி பரப்பியது. ஏகாம்பரம் உயிருடன் இறந்து போனார், அவமானத்தால்!
  இது மாதிரி அவர் அவஸ்தைக்குள்ளான நிகழ்ச்சிகள் ஏராளம்.
  ""அடேடே, எழுத்தாளர் ஏகாம்பரம் வந்திருக்காரே. எல்லாரும் சும்மா இருங்க. சார், தமாஷாகப் பேசுவார். கேட்கலாம். பெரிய ஹியூமரிஸ்டாச்சே! சார், ஏதாவது வேடிக்கையாகச் சொல்லுங்கள்'' என்று ஒருத்தர் சொல்ல, எல்லாரும் அவரைச் சூழ்ந்து கொண்டு அவர் சொல்லப் போகும் ஜோக்கை ரசிக்கக் காத்துக் கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி சூழ்நிலையில் சாதாரணமாகத் தொண்டை வறளும். இதில் தமாஷாகப் பேச வேண்டும் என்றால்? ஏகாம்பரம் அசடு வழிவார். உள்ளுக்குள்ளேயே குன்றிப் போவார். மனத்தில் ஒரு ஜோக்கும் நினைவுக்கு வராது. "ஏண்டா நகைச்சுவை எழுத்தாளர் என்ற புகழைப் பெற்றோம்?' என்று வேதனைப்படுவார். நகைச்சுவை என்றாலே அவருக்குத் தலையைச் சுற்றியது.
  இது மட்டுமா, முதியோர் கல்வி மன்றங்கள், பாரததேவி சேவா சங்கங்கள், அழுகும் பொருள் வியாபாரிகள் கூட்டியம், (இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!), பனகல் பார்க் நடைபாதை கோலி விளையாடுவோர் சங்கம் என்று பல அமைப்புகள் இவரைப் பேச அழைத்தன. ஆறு மணிக்குக் கூட்டம் என்றால் இவர் ஆறரைக்குத் தான் போவார். ஆனால் கூட்டம் எட்டு மணிக்கு எட்டுப் பேரோடு ஆரம்பமாகி நான்கு பேரோடு முடிவடையும். "புகழ் பெற்ற எழுத்தாளர் ஏகாம்பரம் அவர்களை நகைச்சுவையாகப் பேசும்படி கேட்டுக் கொள்கிறேன்...' என்று காரியதரிசி சொல்வார். கடைசியில் அவர் கட்டாயம் கேட்பார், சங்கத்துக்கு நன்கொடை! இராவணன் மாதிரி பத்து மூக்குகள் இருந்தால் பத்து மூக்காலும் அழுதுகொண்டே நன்கொடை அழுது விட்டு வருவார்!
  டபுள் நிமோனியா, "அலறு' ஜன்னி, ரத்த அழுத்தம், லேசான ஹார்ட் அட்டாக் இப்படி ஏதாவதொரு வியாதியை ஏகாம்பரத்தின் மீது ஏவி விடவேண்டுமென்றால், "நான். இன்ன மன்றத்தின் காரியதரிசி' என்று ஆரம்பிக்க வேண்டும். போதும்!

  ’தொப்"பென்று ஏதோ விழுந்த சத்தம். எழுத்தாளர் ஏகாம்பரம் கண் விழித்தார்.
  அட! இதுவரை கனவுதானா கண்டு கொண்டிருந்தோம்! அப்பாடா! தப்பித்தோம். பிழைத்தோம். ஏதோ சின்ன ஆசாமியாக இருந்து ஓர் அகப்பை அளவு புகழுடன் இருந்தால் போதும். அந்த "மைதா"வுடன் போய் நமக்கு எதற்குப் போட்டி? அவர் புகழ் ஏணியில் ஏறட்டும். கீழே விழுந்து காலை உடைத்துக் கொள்ளட்டும். நமக்கு வேண்டாமடா சாமி, புகழ்.
  "தொப்"பென்று மறுபடியும் ஏதோ சத்தம் கேட்கவே எழுந்து வாயிற்பக்கம் போனார். தபால்காரர் கடிதங்களைப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்.
  கதைகள் ஏதாவது திரும்பி வந்திருக்கும். பரவாயில்லை. முன்பாவது கதை திரும்பி வந்தால், மனம் இடிந்து போவார். கனவுலகப் பயணத்துக்குப் பிறகு அவர் புதிய மனிதராகிவிட்டார்.
  வந்திருந்த கடிதங்களைச் சுவாரசியமின்றி எடுத்தார். கவரைப் பிரித்தார். அதில் இருந்த கடிதம் :  தங்கள் நாவலான "பாலைவனைச் சோலை' என்ற புத்தகத்துக்குப் பரிசு  ஒரு கொடுப்பதென, தேர்வுக் குழு நிச்சயித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன்.......

  ஐயோ நமக்குப் பரிசா? புகழா?  ஏகாம்பரம் மூர்ச்சையானார்.

3 comments:

  1. கட்டுப்பாடு அனைத்திற்கும் தேவைதான்.

    ReplyDelete
  2. அதிகம் ஆனால் எதுவும் பிரச்சனை தான்!

    சுவையான பகிர்வு.

    ReplyDelete
  3. Lovely Maitha and Ekambaram.Humorus touch and full of comedy.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!