October 06, 2014

தொச்சு பகவான்



தொச்சுவை பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பல சமயம் -ஏன் ஒவ்வொரு சமயமும் என் மைத்துனன் தொச்சுவைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போடுவது சகஜம்தான். லேசான அதிர்ச்சி, கூடுதலான அதிர்ச்சி, அதிக அதிர்ச்சி என்று அதிர்ச்சியின் அளவில் மாறுதல் இருக்குமே தவிர, அதிர்ச்சி இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயம் அவனைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி சற்று அதிகமானது.

    தொச்சு காவி உடையில் இருந்தான்! காவி வேட்டி, கிட்டத் தட்ட கணுக்கால் வரை நீண்ட ஜிப்பா, ஆயிரம் தான் அங்கச்சியைத் திட்டிக்கொண்டே இருந்தாலும், துறவியாக மாறக்கூடியவன் அவன் அல்லவே!

அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக்கொண்டு, “என்னப்பா இது புதிய கோலம்? உன்னை தொச்சுன்னு கூப்பிடவேண்டுமா அல்லது தொச்சு பகவான்னு கூப்பிட வேண்டுமா ....?  கமலா!  பார், யார் வந்திருக்கான்னு .... தொச்சு பகவான் வந்திருக்கிறார், பாத பூஜை பண்ணி உள்ளே “ஏள” பண்ணு என்றேன்.
    என் அருமை மாமியார் பின் தொடர, என் அருமை மனைவி கமலா, “தொச்சுவை பாதகன்னு சொல்லிக்கொண்டே இருப்பீங்க, திடீர்னு அவன் மேல் என்ன கரிசனம்? பகவான்னு சொல்றீங்க!'' என்று கேட்டுக் கொண்டே வந்தாள். தொச்சுவின் உடை அலங்காரத்தைப் பார்த்து, “என்னடா தொச்சு?.... இது என்ன வேஷம்? என்று கேட்டாள்.
    ”வேஷமும் இல்லே, கோஷமும் இல்லே. இது சும்மா ஒரு இது தான்.''
    ”என்னப்பா தொச்சு. டி வி. பேட்டியில் பதில் சொல்பவர்கள் போல், ஒரே இதுவா பேசறே?''
    ”உள்ளே வாடா, வந்தவனை வாசலிலேயே நிக்க வச்சுண்டு பேசற வழக்கத்தை எத்தனை வருஷமானாலும் விடமாட்டீங்களே!'' என்று கமலா தொச்சுவை வரவேற்றபடியே என்னையும் தூற்றினாள். சந்தடிசாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் கெட்டிக்காரி.
    ”அத்திம்பேர், இந்த டிரஸ்ஸைக் காவியாகப் பார்க்காதீங்க. இது கதர் துணி. சுதந்திரம் வந்து ஐம்பது வருஷம் ஆச்சு. காந்திஜி கதர் உடுத்தச் சொன்னார். ஆனால் நாம் காந்தியை மறந்து விட்டமாதிரி கதரையையும் மறக்க ஆரம்பிச்சுட்டோம் .... அதனாலே ....?''
    ”என்னப்பா, அதனால்'னு சொல்லி நிறுத்திட்டே? விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடருமா'' என்று கேட்டேன். 
 “இடைவேளை இல்லை, அத்திம்பேர். அடை வேளைக்குப் பிறகு. அதோ பாருங்கோ .... அக்கா அடையும் கையுமா வர்றதை.... '' என்றான். தொடர்ந்து. “என்ன சொல்லிண்டிருந்தேன்'' .... அதனால் இனிமேல் கதர்தான் கட்டுவது என்று நாங்க சில பேர் தீர்மானிச்சிருக்கோம்''
    ”நாங்க என்றால்?''
    ”நாங்க சில பேர் ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். தேசபக்தி சேவா சங்கம்னு ஆரம்பிச்சிருக்கோம். எங்க சங்கத்திலே ஒருத்தர் பாதிவிலைக்குத் துணி வாங்கிக் கொடுத்தார்.''
    ”ஏதாவது நன்கொடை, நிதி உதவி என்று...''
    ”அத்திம்பேர், நாங்க தான் மத்தவங்களுக்கு உதவி செய்யப் போகிறோம். அதெல்லாம் சங்கம் நன்றாக வளர்ந்த பின்னால்தான்....எப்போ பாத்தாலும் தொச்சு காசு பிடுங்க வருவான்னு நினைச்சுக்காதீங்கோ.''
    ”ஐயோ தொச்சு..நீ...''
    ”கமலா ஏதாவது தத்துவம் பேச ஆரம்பிச்சுடாதே ....''
    ”ஆரம்பிக்கலை, ஆரம்பிக்கலை. நீங்கதான் வாய்ப் பூட்டு போட்டு வச்சுட்டீங்களே! நீங்களாச்சு, உங்க மச்சினனாச்சு!''
    ”அக்கா கொஞ்சம் நீ சும்மா இரு....அத்திம்பேர், நீலாங்கரைக்கு கிட்ட ஒரு தோப்பு- சின்ன தோட்டம் - வெலைக்கு வர்றது. ரொம்ப மலிவா விற்கிறான், வாங்கிப் போட்டா லாபம்.''
    ”யாருக்கு லாபம்னு சொல்லிவிடு. எனக்கு தோப்பு, சோப்பு எதுவும் வேண்டாம். யார்கிட்டேப்பா பணம் இருக்கு?'' என்று நான் சொன்னபோது, கமலா லேசாகக் கனைத்தாள்.
    அந்த ஒரு கனைப்புக்கு நான் பரிமேலழகராக இருந்தால் பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை, நயவுரை, விளக்கவுரை என்று பத்து பக்கம் எழுதியிருப்பேன். அப்படி நான் இல்லாததால் ஒரு வரியில் அதன் அர்த்தத்தைக் கூறுகிறேன்: “போன வாரம் இன்ஷூரன்ஸ் பாலிஸி ஒன்று முதிர்வடைந்து செக் வந்ததே.'' என்பதுதான்!”
    ”அத்திம்பேர் .... என்கிட்ட மட்டும் பணம் இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு இதை வாங்கிடுவேன். விக்கறவருடைய பிள்ளை அமெரிக்காவில் மூட்டை மூட்டையாக டாலரை சம்பாதிக்கிறான். இவரும் அமெரிக்கா போகிறார். வந்த விலைக்கு விற்கிறார். ஒரு பிசினஸ் விஷயமாக அவரை நாலைந்து வருஷத்துக்கு முன்னே பார்த்திருக்கேன். என் மேலே மதிப்பு வச்சு “தொச்சு முதல் ஆஃபர் உனக்குத் தான்,? என்றார். நானே வாங்கலாம் என்றால் என் பணம் எல்லாம் லாக் அப் ஆகியிருக்கிறது.
    ”பணம் தானே லாக் அப் ஆயிட்டுது? நீ இல்லையே! அது வரைக்கும் சந்தோஷம்.'' என்றேன்.
    ”அத்திம்பேர் ஒரே வருஷத்திலே விலை டபுளாயிடும். பணத்தை பைனான்ஸ் கம்பெனியில் போடறது, பொன், வெள்ளியிலே போடறது, எல்லாத்தையும் மறந்துடுங்க. மண்ணு, பொன்னை விட அதிக லாபம் தருகிறது.''                                                
    ”நீலாங்கரைக்கும் தாண்டி எங்கேயோ இருக்கிற இடத்தை வாங்கிப் போடச் சொல்றே .... எதை வச்சு விலை டபுள் ஆகும் என்று சொல்றே?''                                                     
    ”அப்படிக் கேளுங்க. இந்த மெட்ரோ ரயிலை நீலாங்கரை வரைக்கும் கொண்டு வரப் போறாங்க. ரயில்வே மினிஸ்ட்ரியிலே முடிவு எடுத்துட்டாங்க. இது யாருக்கும் தெரியாது. வெளியிலே தெரிஞ்சா விலை இப்பவே சுர்னு ஏறிடும். அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பாங்க. என்னடா .. இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்னு சந்தேகப் படறீங்களா'' என் பக்கத்து வீட்டுக்காரரின் பிரதர்-இன்-லா டில்லியில்  ரயில்வே மினிஸ்ட்ரியில் இருக்கிறார்.?
    ”பேஷா இருக்கட்டும். எனக்கு என்னவோ...''
    ”இதெல்லாம் ஏன் இன்ட்ரஸ்ட் இருக்கப் போகிறது உங்களுக்கு? போகட்டும்டா தொச்சு, நாலு மணியார்டர் பாரம் வாங்கிக் கொண்டு வந்து கொடு. அம்மா, அக்கா, அத்தை, சித்தி, பெரியம்மான்னு பணம் அனுப்ப, மனுஷங்களா அவருக்கு இல்லை. போடா போடா பைத்தியக்காரா ..?” என்று கமலா தொச்சுவிடம் சொன்னாள். வார்த்தைகள் ஒவ்வொன்றையும் பாகற்காய் ஜூஸில் தோய்த்து எடுத்துச் சொன்னாள்.
    ”கமலா .. நீ ஒண்ணும் அலுத்துக்க வேண்டாம். அந்த இடத்தை வாங்கிடறேன். முதல்ல போய் இடத்தைப் பார்த்துவிட்டு வரலாம், வா.” என்றேன்.
    ”பார்க்காமலா வாங்கச் சொல்றான், தொச்சு .... கமலா, இந்த தொச்சுவுக்கு எவ்வளவு குட்டு பட்டாலும் புத்தி வராது?” என்றாள் என் மாமியார் திலகம்.

    நீலாங்கரையிலிருந்து மிக அருகில் ஏழு மலை, ஏழு குகை, ஏழு காடுகள், ஏழு கூவம் நதிகள், ஏழு சமுத்திரம் தாண்டிய இடத்தில் அந்தத் தோப்பு இருந்தது. அங்கு நிறைய மரங்கள், செடிகள், புதர்கள் என்று மண்டிக் கிடந்தன.
    அவை யாவற்றுக்கும் பொதுவான அம்சம். எல்லாவற்றிலும் முட்கள், நாட்டில் லஞ்சம் போல் நீக்கமற நிறைந்திருந்தன.
    ”விலை என்னவாம், தொச்சு?''
    ”ஜாஸ்தி இல்லை... நாப்பது ரூபாய் தான்.''
    ”போப்பா, ஷாக் குடுக்காதே! ஒரு ரூபாய் என்றால் இப்ப பல கோடின்னு அர்த்தம் வந்துடுத்து .. நாப்பது லட்சம் ஜாஸ்தியாக இருக்கும் போல படறது. வெளி நாட்டில முள்ளுக்கு டிமாண்ட் இருந்தால், இந்த தோப்பிலிருந்து அனுப்பி டாலர் டாலராகக் குவிக்கலாம்.''
    ”குதர்க்கமாக பேசறது, வம்சத்துலே வந்தது தானே ....இடம் என்னமோ நல்லாத்தான் இருக்கு. நாளைக்கு மெட்ரோ ரயில் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, இந்த இடத்தில் விலை ஏறும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.'' என்றாள் கமலா. எந்த ஆதாரத்தில் அவள் அப்படிச் சொல்கிறாள் என்று எனக்கு மட்டுமல்ல, அவளுக்கும் தெரியாது!
    ”கொஞ்சம் குறைச்சுக் கேட்டுப் பாரு .... எப்படியோ செட்டில் பண்ணிவிடு .... முதலில் சுற்றி முள்கம்பி வேலியாவது போடவேண்டும். மூலையில் ஒரு சின்ன பர்ணசாலைமாதிரி அழகான குடிசை போடணும். தென்னங்கன்றுகளை நட்டுடணும். வேப்பமரம் வெச்சுடணும். சம்மர்ல அப்படியே ஜில்லுனு இருக்கும்.'' என்றேன்.
    ”அத்திம்பேர், இதை வாங்கிப் போட்டு விடுங்க .... எப்படி ஆக்கிடறேன், பாருங்க. உங்க பேருக்கு ஏத்தமாதிரி அகஸ்தியர் ஆசிரமம் இங்கே உருவாக்கிடறேன். ஊட்டி, கொடைக்கானல் மாதிரி சும்மா குளுகுளுன்னு இருக்கும்....நிம்மதியா நீங்க கதை, நாவல்னு எழுதலாம்.''
    அந்த இடத்தை நான் வாங்க சம்மதித்து விட்டேன் என்பதால் ஏற்பட்ட குஷியில் உற்சாகமாகப் பேசினான் தொச்சு. 
*        *       *
    தோப்பை வாங்கிப் போட்ட பிறகு இரண்டு மாதங்களுக்கு தொச்சு தலை காட்டவில்லை. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவன் தலை காட்டினால் தான் எனக்குத் தலைவலி.
    ஆகவே இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொச்சு வந்த போது தொச்சான ந்தா என்று சொல்லும்படி தாடி, மீசையுடன்  இருந்தான். வழக்கத்தைவிட அவசர அவசரமாக கமலாவும் என் மாமியாரும் ஒரு வரவேற்பு கமிட்டி அமைத்து அவனை வரவேற்றார்கள்.
    ”என்னப்பா தொச்சு,. எல்.ஐ. சி. மாதிரி கட்டடம் ஏதாவது சீப்பாக விலைக்கு வருதா ....?'' என்று கேட்டேன்.
    ”கேட்கமாட்டீங்களா!  அத்திம்பேர் .. உங்களுக்கு அந்த தோப்பு வேண்டாம்னா சொல்லுங்க, நாளைக்கே வித்துக் கொடுத்துடறேன் அத்திம்பேர். இந்த தோப்பு மேலே கண்ணா இருந்த சங்கரனுடைய கோபமும் தீர்ந்திடும். அவர் வாங்கப் பார்த்தார். அவர் சொன்ன ரேட்டைவிட நான் அஞ்சாயிரம் ஜாஸ்தி கொடுத்திடவே நமக்குக் கிடைச்சுது. இந்த தோப்பை வாங்கிக் கொடுத்ததிலே நான் சம்பாதித்தது சங்கரனின் விரோதத்தைத் தான். நீங்க என்னடான்னா  எல். ஐ. சி.  கட்டடம்  விலைக்கு வருதான்னு கேலியாக கேட்கறீங்க.”
    ”கேலி என் ஜோலி இல்லைப்பா. சும்மா ஒரு ஜாலிக்குக் கேட்டேன்? என்று அவனைச் சமாதானப் படுத்தினேன்.

   இந்த சமயம் கமலா  ”என்னடா தொச்சு .. தாடி, மீசை எல்லாம்? இந்த காவியும் தாடியும் உன்னை சாமியார் மாதிரி ஆக்கிட்டுது .. இந்தாடா அரையே அரை கப் காப்பி ? என்றாள் அக்கா. (பாசமே! உன் மறு பெயர் கமலாவா?)
    ”ஏம்பா தொச்சு .. தோப்புக்குத் தான் வேலி போட்டாச்சே என்னமோ ஊட்டி, கொடைக்கானல் ஆக்கப் போறேன்னு சொன்னியே ..இன்னும் முள் கொள்முதல் செய்யற தோப்பாத்தான் இருக்கு.?
    ”அத்திம்பேர் .. எதுக்கு இன்னிக்கு தொச்சு வந்திருக்கான்? தொச்சு ஒண்ணைச் சொல்லி செய்யாதிருந்தான்னு சரித்திரம் உண்டா? தொச்சு சொன்னதைச் செய்வான். செய்வதைச் சொல்வான். அவன் பலனையோ பிரதிபலனையோ எதிர்பார்த்துச் செய்யறவன் இல்லை. கீதையில் பகவான்...''
    ”போறும்பா.. அந்த பகவான் சொன்னதை தொச்சு பகவான் வேறு சொல்ல வேண்டாம்!''                          
    ”சரி அத்திம்பேர் .. நம்ப அகஸ்தியாச்ரமத்தை ஒரு நாள் எங்கள் உபயோகத்திற்கு நீங்கள் கொடுக்க வேண்டும். பர்மிஷன் கேட்கத்தான் வந்திருக்கேன்.''
    ”அது ஆசிரமம் இல்லை. ஆ!  சிரமம். அந்த முள் மலரும் தோட்டத்தை உங்க உபயோகத்திற்குத் தரச் சொல்கிறாய். சரி என்ன செய்யப் போகிறாய்?''
    ”ஒண்ணுமில்லை எங்க சேவா சங்கம் ஒரு நாள் கேம்ப் நடத்தப் போறோம். நம்ப தோட்டத்தில். நம்ப வாலன்டியர்கள் தோப்பை சும்மா கண்ணாடி மாதிரி சுத்தம் பண்ணிடுவாங்க. அது மட்டுமல்ல, பயிலரங்கத்தின் துவக்க விழா உரையை நீங்க தான் நிகழ்த்தணும்.''
    ”இதோ பாரு தொச்சு. துவக்க உரை, துக்க உரை எதுவும் வேண்டாம். ஆளை விடுப்பா.''
    ”தொச்சு, இவரை ஏண்டா கூப்பிடறே? துவக்க உரைக்குப் பதில் தூக்க உரை என்று சொல். ஓ. கே. சொல்லுவார். அது என்னமோ, வாரத்தில் எட்டு நாளும் பகலில் தூங்காவிட்டால் தலை வெடிச்சிடும். அவரைப் பெரிய மனுஷனாக்கணும்னு நீ பாக்கறே. உனக்கு மனுஷாள் மேலே இருக்கிற கரிசனம் ....''
    தொச்சுவிடம் பேசும் போது தேனாகவும், என்னிடம் பேசும் போது தேளாகவும் சட்சட்டென்று மாறுவது கமலாவுக்கு கைவந்த (வாய் வந்த?) கலை!
    ”அக்கா நீ கொஞ்சம் சும்மா இரு. அத்திம்பேர் .. நீங்க வந்து பேசினா எல்லோருக்கும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். நீங்க எந்த சப்ஜெக்டில் வேண்டுமானாலும் பேசலாம். அறிஞர்கள் கருத்துரைகளைக் கேட்கறது எங்க சங்க புரோக்கிராமில் ஒன்று.''
    ”செய்யப்பா'' என்று நான் சொல்லி முடிப்பதற்குள் தொச்சு தலைமறைந்து விட்டான். முதல் முறையாக, தொச்சு வெறுங்கையாக என் வீட்டை விட்டுப் போனான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி!

    சுமார் இருபது இருபத்தைந்து பேர் குழுமி இருந்தனர். தோட்டத்தை ஓரளவு  சுத்தம் செய்திருந்தனர். கிட்டத்தட்ட எல்லாரும் கதர் ஆடையில் இருந்தார்கள். காவி கலர் தான். சேவா சங்க கேம்ப் என்று துணியில் எழுதி மாட்டி யிருந்தார்கள். இதை எல்லாம் பார்க்கப் பார்க்க எனக்குள் ஒரு கேள்வி தான் தோன்றியது. ஆதாயம் இல்லாத காரிய.த்தில் இறங்க மாட்டானே!  இந்த சேவா சங்கத்தில் என்ன புரட்டப் முடியும்? ஏதாவது அரசாங்க நிதி்யுதவி இருக்குமோ!
    ”என்ன அத்திம்பேர் எப்பப் பார்த்தாலும் சிந்தனைதானா'?.... பெரிய எழுத்தாளர், அது தான் ...''
    ”பாரத மாதா கீ ஜெ.ய் ..... மஹாத்மா காந்தீ கீ ஜெய் .... சத்யமேவ ஜயதே .... ஜெய் ஹிந்த் ....'' என்று திடீரென்று கூட்டம் குரல் கொடுத்தது.
    ”இப்போது நமது சங்கத்தின் ஆலோசகரும், பிரபல எழுத்தாளருமான எழுத்துச் செம்மல், எழுத்து வேந்தன், எழுத்து பிரும்மா ....'' என்று தொச்சு ஆரம்பிக்க ....
    ”எழுத்து விஷ்ணு, எழுத்து சிவன்.... போறும்பா .... தொச்சு,  நான் என் உரையை ஆரம்பிக்கிறேன். அன்புள்ள நண்பர்களே .... தேசபக்தி சேவா சங்க உறுப்பினர்களே, உங்கள் சங்கத்தின் கொள்கைகளைப் பற்றி அறிந்த போது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்று சுதந்திர விழா கொண்டாடும் சமயத்தில் நாட்டில் வன்முறையும், லஞ்சமும்...''
    திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தோப்பின் முன்புறம் ஒரு ஜீப் “சர்'' என்று வந்து நின்றதே காரணம். ஜீப்பிலிருந்து நாலைந்து போலீஸ்காரர்கள் இறங்க, பின்னால் சற்று குறைந்த தொந்தியுடன் சப் இன்ஸ்பெக்டரும் இறங்கி வந்தார்.
    ”யார் இங்க தொச்சு? யார் அகஸ்டின்?”- சப் இன்ஸ்பெக்டர் சினிமா, டீவிகளில் வரும் இன்ஸ்பெக்டர்களைப் போல், தலையைத் தூக்கிக் கொண்டு ஸ்டைலாகக் கேட்டார்.
    ”நான் தான் சார் தொச்சு. என்ன சார், என்ன விசேஷம்?'' தொச்சு அவரிடம் போய்க் கேட்டான்.
    ”ஓஹோ .... நீங்கதானா தொச்சு? பார்த்தா ஐயோ பாவம் மாதிரி இருக்கீங்க, ஏன் சார் இந்த வேலை? இவர் யாரு? என்ன புரோகிராம் இங்க நடத்தறீங்க?''
    ”இன்ஸ்பெக்டர், இது எங்க தேசபக்தி சேவா சங்க கேம்ப்! .... இவர் பிரபல எழுத்தாளர் ....''
    ”பேனா வச்சிருக்கிற எல்லாரும் ரைட்டர்தான், பிரபலம்தான்! எங்க போலீஸ் ஸ்டேஷன்ல கூட தான் ரைட்டர் இருக்காரு .... சரி .... முதல்ல நீங்க ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்கு வாங்க. உங்க பேர்ல கம்ப்ளைண்ட் வந்திருக்கு.''
    இந்த சமயத்தில் நான் இன்ஸ்பெக்டரிடம், “இத பாருங்க, நாங்க ஒண்ணும் பிக் பாகெட், ரவுடி இல்லை. ஸ்டேஷனுக்கு எதுக்காக வரணும்? வாரண்ட் இருக்குதா?'' என்று கேட்டேன்
    ”ஏம்பா, த்ரீ நாட் போர் .... ஸார் .. படிச்சவராக இருப்பார் போல இருக்குது. வாரண்ட் கேக்கறார்.'' என்று நக்கலாகச் சொன்னார்.
எனக்கு வாழ்க்கையில் புரியாத புதிர், போலீஸ்காரர்கள் தங்கள் நம்பரை எப்போதும் இங்கிலீஷில் சொல்வது ஏன்?  (யாராவது தமிழ் அறிஞரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்.)
 .    போலீஸ் வந்ததனால் கூட்டத்தில் ஒரு லேசான பீதி ஏற்பட்டது. திவாலாகிப் போன பைனான்ஸ் அதிபர்களைப் பார்ப்பது போல் எங்களைப் பார்த்தார்கள்.
    ”எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் வரத் தயார் .... அத்திம்பேர், வாங்க போகலாம். மற்ற எல்லாரும் இங்கேயே இருங்க....?” என்றான் தொச்சு.
    ”என்னப்பா தொச்சு? இது வரைக்கும் உன்னால் எத்தனையோ தொந்திரவு ஏற்பட்டிருக்கிறது என்றாலும் இதுமாதிரி போலீஸ், கீலீஸ் ஏதுவும் இல்லை. .. சரி ..''
    தொச்சுவும் நானும் ஜீப்பில் ஏறி உட்கார, ஜீப் கிளம்பியது.
    ”இன்ஸ்பெக்டர் சார், கம்ப்ளைன்ட் யார் கொடுத்தாங்க?''
    ”சார், யார் கொடுத்தது இன்னா, ஏதுன்னு எல்லாம் கேட்காதீங்க. அதெல்லாம் ரகசிய தகவல்'' என்றார் இன்ஸ்பெக்டர். சி. பி. ஐ. முன்னாள் டைரக்டர் என்று தன்னை நினைத்துக் கொண்டார் போலும்!
    ”இதெல்லாம் மாமூலா சொல்றது தான்.''
    ”என்ன சொன்னீங்க? ..என்ன சொன்னீங்க? மாமூலுக்காகச் சொல்றதுன்னு என்றா?  மாமூல், கீமூல்னு இந்த கஜபதிகிட்டே பேசாதீங்க சார். இந்த மாதிரி காவி டிரஸ் போட்டுக்கிட்டு, தியானம், கூட்டம்னு போட்டு தில்லுமுல்லு செய்யறது இன்னிக்கு ஒரு பெரிய தொழிலாப் போச்சு. ஊருக்கு வெளியே பசங்களை வரவழிச்சு, யோகம், தியானம், பஜனை என்று பண்ணி வசியம் பண்றீங்கன்னு தகவல் வந்திருக்கு.''
    ”கஜபதி சார், அதெல்லாம் ஒண்ணுமில்லை. உங்களுக்குக் கம்ப்ளைன்ட்  கொடுத்தது யார்னு எனக்குத் தெரியும். அவர் பேர் சங்கரனா?''
    ”அட, அவர்தான். கரெக்டா எப்படி சொன்னீங்க?  அவர் பிள்ளையை நீங்க மனசு மாத்தி  சாமியாரா பண்ணப் போறீங்கன்னு...''
    ”கஜபதி பிரதர்... (தொச்சுவுக்கு ஆட்களை வசியம் பண்ணத் தெரியும். கஜபதி சார் என்றவன் இப்போது கஜபதி பிரதர் என்கிறான்!) விஷயத்தைச் சொல்லட்டுமா? இந்த தோப்பை நான்தான் ஏற்பாடு பண்ணி இவருக்கு வாங்கிக் கொடுத்தேன். சங்கரனுக்கு இது மேலே கண்ணு. தனக்கு தோப்பு கிடைக்கவில்லைன்னு கொஞ்சம் ஏமாற்றம், நிறைய கோபம். அது இல்லாமல்  அவருடைய சம்சாரத்திற்கும் என் சம்சாரத்திற்கும் தகராறு. இத்தனைக்கும் என் ஒய்ஃப் தங்கக் கம்பி .. நாங்க ஒரு சேவா சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். கதர் ஆபீஸில் இருக்கிற ஒருத்தர் பாதி விலைக்குத் துணி வாங்கிக் கொடுத்தார். நாங்க சாமியாரும் இல்லை, பகவானும் இல்லை. எந்த முனிவரும் இல்லை.''
    ”அப்பாடி ... நெனைச்சேன், கம்ப்ளைன்ட் கொடுக்கச்சே 50 ரூபாய் நோட்டையும் நீட்டினார். லஞ்சம் வாங்கறவன் நான் இல்லை. இப்பத் தெரியுது. போவட்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டு, கையெழுத்து போட்டுவிட்டுப் போயிடுங்க. சார். பெரிய, எழுத்தாளர்னு சொன்னீங்க. நானும் ’ரம்பாவுடன் வம்பா” என்ற தலைப்பிலே ஒரு நாவல் எழுதணும்னு நினைக்கிறது உண்டு. நிறைய ஐடியா இருக்குது. நேரம் தான் கிடைக்கலை. ஸார் கிட்டே நம்ம ஐடியாவைச் சொல்றேன். அவர் நாவலா எழுதிடட்டும்.''
    ”அத்திம்பேர் நம்ப(!) கஜபதி சொல்ற ஐடியாவில் நீங்க பத்து நாவல் கூட எழுதலாம்.''
    ஸ்டேட்மென்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, விடை பெறும்போது இன்ஸ்பெக்டர் லேசாகத் தலையைச் சொறிந்தார்.
    ”சார் .. ஒண்ணுமில்லை .. இப்ப  சுதந்திர தின விழாவையும் காந்திஜியின் பிறந்த தினத்தையும் எங்க டிபார்ட்மென்ட் பிரமாதமா கொண்டாடப் போகிறது. ஏதோ உங்களுக்கு இஷ்டமானதை, ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ அல்லது....''
    ”நிறுத்துங்க, பிரதர். நீங்க "அல்லது, அல்லதுன்னு'ப் போடப் போட அமௌன்ட்டும் ஏறுதே! அத்திம்பேர், நம்ப கஜா(!) கிட்ட ஒரு தௌஸண்ட் கொடுத்துடுங்க.''  என்றான் தொச்சு. தொச்சுவும் ஒரு விதத்தில் வள்ளல் தான்- அடுத்தவர் பணத்தை எடுத்துக் கொடுப்பதில்!
    காந்திஜியின் பெயரை யார் யாரோ எப்படி எப்படியோ பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கஜபதிதான் புதிய பாதை அமைத்திருக்கிறார்!  மகாத்மா காந்தி பெயரைச் சொல்லி லஞ்சமே வாங்கி இருக்கிறார்! ஒழிக லஞ்சம்!  வாழ்க மகாத்மா காந்தி!
     *       *       *
”கமலா உன் தம்பியை வீட்டுக்குள்ளேயே நுழைய விடாதே. அவன் போன ஜன்மத்தில் ஆமையாகவோ, அமீனாவாகவோ அல்லது அமீனா உத்தியோகம் பார்த்த ஆமையாகவோ பிறந்திருக்கவேண்டும்.?
    ”சரி, ஏன் இப்படி தொண்டை கிழியக் கத்தறீங்க?''
    ”ஆயிரம் ரூபாய் அழுதுவிட்டு வந்த பிறகு கத்தாமல், ’மாத்தாடு மாத்தாடு மல்லிகே’ன்னு பாடணுமா?''
    கமலா பேசாமலிருந்தாள்.
   *                                   *              *
 
தொச்சுவின் சங்கத்தில் போடப்பட்ட பொன்னாடை (காவித் துண்டு) ஈஸிசேரிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்தது! .

2 comments:

  1. அருமை.

    ReplyDelete
  2. அவன் போன ஜன்மத்தில் ஆமையாகவோ, அமீனாவாகவோ அல்லது அமீனா உத்தியோகம் பார்த்த ஆமையாகவோ பிறந்திருக்கவேண்டும்.
    outstanding humour !! Thanks

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!