February 27, 2014

அமெரிக்கா - இங்கும் அங்கும்

மூன்று பெண்மணிகள்
* உலகின் மிகப் பிரபலமான   இதழ் TIME வாரப்  பத்திரிகை.  சுமார் ஐந்து கோடி வாசகர்களைக் கொண்டது அமெரிக்காவின் புகழ் பெற்ற  இதழ்  அதற்கு 90 வயது  ஆகிறது.   முதன் முறையாக சமீபத்தில் ஒரு பெண்மணி (NANCY GIBBS ) அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1988-முதல்  ஆசிரியர் இலாகாவில் இருந்த அவர் இது வரை 174 அட்டைப்படக் கட்டுரை எழுதியுள்ளார்.

பொறுப்பை ஏற்றதும் அவர் ஒரு ஒரு புதிய துவக்கம் என்ற தலைப்பில் ‘ஆசிரியர் குறிப்பு எழுதியிருந்தார். அதன் அழகான கருத்தும்,  சிநேக பாவத்துடன் எளிமையான ஆங்கில நடையில் எழுதப்பட்டிருந்ததும் என்னைக் கவர்ந்தது. மொழிபெயர்த்துப் போடலாம் என்று நினைத்து முயற்சியில் இறங்கினேன்.சில வரிகளைத் தமிழாக்கம் செய்தேன். திருப்தியாக வரவில்லை.(ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க,மேலே உள்ள
’ஒரு புதிய துவக்கம்’ என்பதைச் சொடுக்கவும்.)


* புகழ் பெற்ற READERS' DIGEST  இதழிற்கும்   ஒரு பெண் தான் ஆசிரியராகி இருக்கிறார்.  LIZ 
VACCARIELLO பல புதிய மாற்றங்களைச் செய்து கலகலப்பாக்கி வருகிறார்.  .

* இதையெல்லாம் மிஞ்சும் தகவல்: நம் நாட்டில்  உள்ள ரிசர்வ் பாங்க் கவர்னர் பதவி போன்றது .அமெரிக்காவில்  ஃபெட்ரல் ரிசர்வ்  சேர்மன் பதவி. முதல் முறையாக   ஜேனட் எல்லன்  என்ற ஒரு பெண்மணி சேர்மனாக பொறுப்பேற்று இருக்கிறார். 
ஜேனட்டின் கணவர்: ஜார்ஜ்  அகெர்லாஃப் 2001-ம்  ஆண்டு பொருளாதாரத் திற்கான  நோபல் நினைவுப் பரிசைப் பெற்றவர்.
பஸ்ஸில் வந்த பிரதமர்.
இது பிரிட்டிஷ் பிரதமர் பற்றிய தகவல். சிலமாதங்ககளுக்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர்   டேவிட் கேமரூன் அமெரிக்கா வந்திருந்தார். தனது பல வேலைகளுக்கிடையே  மன்ஹாட்டனில் (நியூயார்க்)  இங்கிலாந்து  சுற்றுலாதுறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள     இளவரசர் ஹாரியுடன் பஸ்ஸில் வந்திறங்கினார்.

இதற்காக லண்டனிலிருந்து சுற்றுலாதுறையின் டீலக்ஸ் பஸ் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார்கள். “ எங்கள் சுற்றுலாதுறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட  சிறிய முயற்சியாகும்” என்றார் கேமரூன்.

February 14, 2014

சில புத்தகங்கள்: சில வரிகள். கடுகு

சில புத்தகங்கள்: சில வரிகள்.
  புத்தகங்களைப்   படிப்பது  ஒரு சுவையான பொழுதுபோக்கு. அதை விட சுவையான பொழுதுபோக்காக நான் கருதுவது அந்தப் புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப் படிப்பது.  எத்தனை விதமான, வித்தியாசமான. சுவையான, துணுக்குகளும் விமரிசனங்களும், அனுபவங்களும், அவை எழுதப்பட்ட சூழ்நிலைகளும் படிக்கப் படிக்க நம் மனதைக் கொள்ளை கொள்ளும். எழுதியவரின் அனுபவங்கள் மட்டுமல்ல, அச்சிட்டவர், பிரசுரம் செய்தவர், விற்பனை செய்தவர், படித்தவர்களின் அனுபவங்கள் அதிக சுவையுள்ளவைகளாக இருக்கும்.  
 
புத்தகம் என்றால்  அதில் எழுதப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல, புத்தகத்திற்குத் தலைப்பு தேர்ந்தெடுத்தது, சமர்ப்பணம், முகவுரைகள், முன்னுரைகள், விமர்சனங்கள், அட்டை வடிவமைப்பு, அச்சுப் பிழைகள், பாராட்டுகள், பரிசுகள் என்று நிறைய உள்ளன. இந்தக் கட்டுரை இந்த பத்திரிகையில் வந்த கட்டுரையின் காபி’ என்று ‘நக்கீரன்கள்’ கண்டுபிடித்துச் சொன்ன குற்றச்சசாட்டுகள் – எல்லாமே தெவிட்டாத விஷயங்கள்தான்.
BOOKS ON BOOKS என்ற வகை வரிசையில் நிறைய புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன நோபல் பரிசுகள் பின்னனணியில் இர்விங்க் வாலஸ் ’தி பிரைஸ்’ என்ற நாவலை எழுதினார். அது வெகு வரைவில் பிரபலமாகி விட்டது. நோபல் பரிசுகள் பற்றிய பல சுவையான தகவல்கள் அதில் இருந்ததாலும் அது மிகவும் புகழ் பெற்ற நாவலாகவும் ஆகிவிட்டது. 
அவர் அந்த நாவலை எழுத  எடுத்துக்கொண்டப் பிரயாசைகளை விவரித்து  ஒரு புத்தகமாகமே எழுதினார், The Writing of One Novel என்ற தலைப்பில். அதுவும் மிகப் பிரபலமான புத்தகமாக பெயர் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகளை எடுத்து தினமணி கதிரில் நான் எழுதினேன்.
(இடைச்செருகல்: அப்போது ஆசிரியர் சாவியிடம் ஒரு ஐடியா கொடுத்தேன். ”கதிரில் வாசகர்கள் கேள்விக்கு இர்விங்க் வேலஸ் பதில் எழுதினால் வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் இருக்கும்” என்றேன். “எழுதுவதற்கு
இர்விங்க் வேலஸ் சம்மதித்தாலும், சன்மானம், அதுவும் டாலரில் கொடுத்துக் கட்டுப்படி ஆகுமா?”  என்றார். சில வாரங்கள் கழித்து அவர் அமெரிக்க சென்றார். யார் யாரையோ  எப்படியோ பிடித்து  (சன்மானமில்லாமல்?)  வேலஸிடம் சம்மதம் பெற்று வந்து விட்டார்.)