June 30, 2013

ஒரு விடியோ செய்த மாயம்



 நான் டில்லியில் இருந்த போது வாரத்திற்கு மூன்று நாட்களாவது,  என் அலுவலகத்திற்கு வெகுஅருகில் இருந்த பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்குப் போவேன். அங்கு வரும்  PUNCH, TIME and TIDE, Listener, Private Eye  போன்ற  பத்திரிகைகள், தினசரிகள் எல்லாவற்றையும் படிப்பேன். பல பிரிட்டிஷ் எழுத்தாளர்களின்  ரசிகன் ஆனேன். அவர்களில் ஒருவர் ஜான் க்ளீஸ் (JOHN CLEESE)  என்னும் காமெடி எழுத்தாளர்,
ஜான் க்ளீஸ் எழுதிய பி.பி.சி காமெடி  ஷோ MONTY PYHTHON'S FLYING CIRCUS  மிகவும் பிரபலம். பின்னால் அது  டி வி டியாகவும் வெளியாயிற்று. விற்பனை சுமார்தான். காரணம்,  ஏராளமான பேர் அந்த ஷோவின் பல பகுதிகளை  யூ-ட்யூபில் வெளியிட்டு  விட்டார்கள்.
 

இதற்கு என்ன வழி செய்வது என்று ஜான் க்ளீஸும் மற்றவர்களும் மண்டையை  உடைத்துக் கொண்டார்கள். கடைசியில் ஒரு குயுக்தியான ஐடியா  செய்தார்கள்.  YOU TUBE  தளத்தில் MONTY PYTHON CHANNEL   என்ற பெயரில் புதிய ஒளிபரப்புச் சேனல் துவங்கப்போவதாக -ரீல்தான்!- ஒரு அறிவிப்பு விடியோவைச் சேர்த்தார்கள். அதில் “எங்கள் MONTY PYTHON-ன்  பல பகுதிகளைப் பலர் தாங்களாக ரிகார்ட் செய்து யூ-டியூபில் போட்டு வருகிறர்கள். அவற்றில் பல தெளிவான தரத்தில் இல்லை.  இனி கவலை வேண்டாம். துல்லியமான  தரத்துடன்  இந்த சேனலில் தொடர்ந்து இலவசமாக ஒளிபரப்பப் போகிறோம்.
 

பதிலுக்கு நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும்.  உங்கள் அபத்தமான, போரடிக்கும் கருத்துகளைக் கேட்கவில்லை. இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு ஏற்பட்ட வலிக்கும் மன உளைச்சலுக்கும் இதம் அளிக்க, இங்குள்ள சுட்டியில் கிளிக் செய்து டிவிடியை வாங்குங்கள். 

June 24, 2013

ஒரு உரை செய்த மாயம்!. -கடுகு


 No man's abilities are so remarkably shining as not  to stand in need of a proper opportunity, a patron, and even the praises of a friend to recommend them to the notice of the world! - Pliny 
   (Dictionary of Thoughts - 1908)
 

உங்களில் பலர்  KING'S SPEECH  திரைப்படத்தை பார்த்து ரசித்து இருப்பீர்கள். அது ஆறாம் ஜார்ஜ் மன்னரைப் பற்றிய திரைப்படம். மன்னருக்கு வாய் திக்கும் என்பதால் அவருக்கு உரை நிகழ்த்தவே தயக்கம். ஆண்டுதோறும் கிருஸ்துமஸின் போது  மன்னரின் வாழ்த்துரை ரேடியோவில் ஒலிபரப்பப்படும். அதன்படி, யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டமான 1939-ம் ஆண்டு கிருஸ்துமஸ் வாழ்த்துரை நிகழ்த்தவேண்டி வந்தபோது, மன்னர் உரையைத் தயாரித்து, வாய் திக்காமல் இருக்க  திரும்பப் திரும்பப் படித்துப் பார்த்தார். 
மன்னரின் உரை ஒலிபரப்பப் பட்டது.  உரையின் முடிவில் ஒரு புத்தாண்டுக் கவிதை வரிகளைச் சொன்னார். (இயற்றியவரின் பெயரைக் குறிப்பிடவில்லை.)

Gate of the Year என்னும் அந்தக் கவிதை:
I said to the man who stood at the Gate of the Year,
'Give me a light that I may tread safely into the unknown.'
And he replied,
'Go out into the darkness, and put your hand into the Hand of God.
That shall be better than light, and safer than a known way.'

“அந்த சர்வ வல்லமை பொருந்திய கை  நமக்கு வழிகாட்டித் துணை புரியட்டும்"  (May That  Almighty Hand guide and uphold us all" ) என்ற வரிகளுடன் 
உரையைமுடித்தார்.

June 16, 2013

இரண்டு கடிதங்கள்


இரண்டு கடிதங்கள்

1. புத்தகம்  எழுதிய கடிதம்

அமெரிக்காவில் பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிறைய உள்ளன. எல்லாம் ஆன்-லைன் விற்பனைதான். சில  நிறுவனங்கள் 10 லட்சம், 15 லட்சம் என்ற அளவில் புத்தகங்களை வைத்துள்ளன.  ஆன்-லைனில் பார்த்துத் தேடி, புத்தகங்களுக்கு ஆர்டர் செய்யலாம்.  ABE books,Amazon, Alibiris, Half.com, Powell Books, Strand Books, Better World Books என்று பல நிறுவனங்கள் உள்ளன!.
 20, 30 வருஷ பழைய புத்தகங்களாக இருந்தாலும் புதுக்கருக்கு அழியாத புத்தகங்கள் கூட 1 டாலர், 2 டாலருக்குக் கிடைக்கும்.  சில புத்தகங்கள்  ஒரு சென் ட் விலயில் கூட கிடைக்கும்! தபால் கட்டணம் தான் 3, 4 டாலர் இருக்கும்.

 Better World Books என்ற கம்பெனியில் 3, 4 டாலர் விலையில்  புத்தகங்கள் வாங்கலாம். அவர்கள் தபால் கட்டணம் வசூலிப்பதில்லை.  உலகின் எந்த முகவரிக்கும்   தங்கள் செலவில் அனுப்பி வைக்கிறார்கள்.

June 10, 2013

தப்பு பண்ணிட்டேன்


1954 டிசம்பர்   நாலாம் தேதி சனிக்கிழமையன்று நான் ஒரு  தப்பு பண்ணிவிட்டேன். 50 வருஷம் ஆகியும் அந்தத் தப்பு என்னை வருத்தப்படச் செய்து கொண்டிருக்கிறது! இதோ விவரமாகச் சொல்கிறேன்.
சென்னை ஜி.பி.ஓவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அதுவும் ஜி.பி.ஓ. ரிக்ரியேஷன் கிளப்பின் கமிட்டி உறுப்பினர்,  கலைவிழா அமைப்பாளர் என்று சில பதவிகளை என்னுடன் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த காலம்.
4-ம் தேதி ஜி.பி.ஓ விளையாட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  மாநிலக் கல்லூரி மைதானத்தில் பந்தயங்கள் முதலியன பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவித்து இருந்தார்கள். பகல் இரண்டு மணிக்கே விளயாட்டு விழாவிற்குப் போகலாம் என்றும்  ஆபீஸில் அறிவித்து விட்டார்கள்.
எனக்கு ஸ்போர்ட்ஸில் ஈடுபாடு கிடையாது என்பதால் மைதானத்திற்குப் போக ஆர்வமில்லை. ஆனால் மைதானத்திற்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடையாறு காந்திநகர் போகத் திட்டமிட்டேன்.
கல்கி அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்ற தகவல் வந்ததால்,  அவரைப்  பார்க்க  அடையாறு  போகலாம் என்று எண்ணி கிளம்பினேன். அந்த சமயம் பார்த்து, கிளப் காரியதரிசி. “எங்கேப்பா கிளம்பிட்டே... இரு, ஒண்ணா போகலாம்: என்றார்.
” இல்லைப்பா.. அடையாறு போய் கல்கி அவர்களைப் பார்த்துவிட்டு நேரே மைதானத்திற்கு வந்து விடுகிறேன்; என்றேன்.
“அடையாறு போய்விட்டு வருவதற்குள் போட்டிகள் எல்லாம் முடிந்துவிடும்.  நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. லீவுதான். அதனால் நாளைக்குப் போய் பார்த்துக் கொள்...” என்றார்
போதாதற்கு “ நீ  வந்து உற்சாக மூட்டினால்தான் களை கட்டும்” என்று நண்பர்கள் ‘பூ’ சுற்றிவிட்டார்கள். நானும் என் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ‘சரி’ என்று அவர்களுடன் மைதானத்திற்குச் சென்றேன்.

மறுநாள் காலை ஏழு மணி ரேடியோ தமிழ்ச்  செய்தியில்  ‘ கல்கி அவர்கள் காலமாகி விட்டார்’ என்ற செய்தி வந்தது.  எனக்கு அளவில்லாத   துயரம்.  முன் தினம் அவர் வீட்டுக்குப் போக இருந்த திட்டத்தைக் கைவிட்ட முட்டாள்தனம்  அதை மேலும் அதிகமாக்கியது.

பின்னால் ஒரு தகவல் தெரிந்தது. கல்கி அவர்கள் காலமாவதற்கு முன் தினம் “ எனக்கு செங்கல்பட்டு பாலாறு தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருக்கிறது” என்று சொன்னராம், உடனே திரு சதாசிவம் அவர்கள், ஒரு திருகு மூடி போட்ட குடத்தை வாங்கி வரச் சொன்னாராம்.  மறு நாள் காலை ( 5ம் தேதி)  திரு வரதப்பனை ( திருமதி சரோஜினி வரதப்பனின் கணவர்) செங்கற்பட்டிற்கு அனுப்பினார்.  துரதிர்ஷ்டம், திரு வரதப்பன் தண்ணீருடன் வருவதற்குள் கல்கி அவர்கள் காலமாகி விட்டார். எங்கள் ஊர் தண்ணீரும் என்னைப் போல்  கொடுத்து வைக்கவில்லை.

முன் தினம் அவரைப் பார்க்கப் போகாத என் தப்பு இன்னும் என்னை வருத்தப்படச்செய்து கொண்டிருக்கிறது. 

June 05, 2013

அம்மாவுக்கு அட்வைஸ்

அம்மாவுக்கு அட்வைஸ் - கொடுத்தவர்  கென்னடி

சமீபத்தில் சென்னையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழக்கம்போல் ‘அன்னையர் தின விழாவை’ச் சிறப்பாகக் கொண்டாடியது, பெரிய அரங்கில் பிரபலங்களின் அன்னையரைக் கௌரவித்தது.
இந்த வருடம் அப்படி கௌரவிக்கப்பட்ட ஒரு அன்னையும் அவரது மகனும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள். அந்த பிரபலமான மகனைப் பற்றி ஒரு பதிவு போடலாம் என்றால், அவர் அதெல்லாம் கூடாது என்று ‘144’ போட்டு விடுவார். என்பது எனக்குத் தெரியும். ஆகவே ஏதாவது ஒரு அன்னையைப்பற்றி எழுதலாம் என்று எண்ணியபோதுஅமெரிக்க  அதிபராக இருந்த  ஜான் கென்னடியின் அம்மா திருமதி ரோஸ் கென்னடியை பற்றிப் படித்த ஒரு சுவையான தகவல் நினைவுக்கு வந்தது. அவரும் சிறந்த அன்னைதான். இந்த பதிவின் மூலம்  ரோஸ் கென்னடியைக் கௌரவிக்க விரும்புகிறேன்!
+   +      +
 அதிபர் கென்னடியின்  அம்மா   ரோஸ் கென்னடிக்கு 1962 வாக்கில் ஒரு பொழுதுபோக்கு ( ஹாபி)  இருந்தது.  அந்த  ஹாபி:  பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரமுகர்கள்,  கலைஞர்கள் ஆகியவர்களின் ஆட்டோகிராஃப் சேர்ப்பதுதான்.
ஒரு சமயம் சோவியத் பிரதமர் குருஷ்சேவின் கையெழுத்தைத் தன் தொகுப்பில் சேர்க்க ரோஸ் விரும்பினார்.  
குருஷ்சேவிற்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார்.

 குருஷ்சேவும் ரோஸ் கென்னடிக்குத்  தன் கையெழுத்திட்டப் புகைப்படத்தை அனுப்பிவைத்தார்.