நகைச்சுவை எழுத்தாளர் ஜே, எஸ். ராகவன், அண்ணா நகர் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் போன்ற வார வெளீயீடுகளில் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். 500 வாரங்கள் தொடர்ந்து - அதாவது பத்து வருஷங்கள்- எழுதி வருகிறார். இது ஒரு சாதனைதான், இந்த கட்டுரைகளுக்கு ஓவியர் நடனம் ஒவ்வொரு வாரமும படம் போட்டு வருகிறார்!
நகைச்சுவை நேரம்
ஜே.எஸ்.ராகவன்
பைனான்ஸ் கம்பெனி நடத்திப் பலரை ஏமாற்றுவதில் 'அனுபவம்' நிறைந்த ஒரு பெரிய மனிதர், அக்கெளண்டண்ட் போஸ்டிற்கு இன்டர்வியூ செய்து கொண்டிருந்தார்.
முதலில் வந்தவனிடம் ''இரண்டும் இரண்டும் எவ்வளவு?'' என்று கேட்டார். ''நாலு'' என்று சொல்லிவிட்டு 'இதுகூடவா தெரியாது' என்று பார்வையிலேயே கேட்டான். அவனை அனுப்பிவிட்டு இரண்டாவது Candidate இடம் அதே கேள்வியைக் கேட்டார். அவனும் நாலு என்று சொன்னான். அவனையும் அனுப்பிவிட்டு மூன்றாவது Candidtate இடம் ''இரண்டும் இரண்டும் எவ்வளவுய்யா?'' என்று கேட்டார். அதற்கு அந்த புத்திசாலி, ''சார் நீங்க எவ்வளவு வரணும்னு கணக்கிலே எழுதச் சொல்றீங்களோ, அதான்'' என்றான். அவனுக்கு வேலை கிடைத்தது என்றும் வேலை கிடைத்த நாளிலிருந்து தினம் ஓட்டப்பயிற்சி செய்யத் தொடங்கினான் என்றும் நான் சொல்லத் தேவையில்லை!
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்-ஆங்கிலத்தில் நகைச்சுவைக் கட்டுரைகள் நான் எழுத ஆரம்பிக்குமுன் Humour என்றால் என்ன? என்று அறிந்துகொள்ளப் புத்தகங்களைப் புரட்டிய போது திடுக்கிட்டேன். Middle ages மற்றும் renaissance periodகளில் humours என்ற பன்மை வார்த்தைக்கு மனித உடலில் உள்ள நான்கு திரவப் பொருள்களாகிய - ரத்தம், கபம், மஞ்சள் பித்த நீர் மற்றும் கறுப்பு பித்த நீர் - அதாவது Blood, Phlegm, Yellow Bile, Black Bile என்று பொருள் என்று அறிந்தேன். மனித உடலில் காணப்படும் உபாதைகளும், இருதயம் - மூளை சம்பந்தப்பட்ட imbalanceகளும் இந்த நான்கு திரவங்களின் கூட்டணி தங்களுக்குள் கொண்டுள்ள உறவு முறையைப் பொறுத்து இருக்கிறது என்று கருதினர்.
16ஆம் நூற்றாண்டில் humour is a disorder of the blood என்று கருதினார்கள். அந்தக் காலக் கட்டத்தில் நகைச்சுவை எழுத்தாளர்களுக்கு பேட்டி எதுவும் வைக்காமல் blood test செய்து பரிசு கொடுத்தார்களோ என்னமோ தெரியவில்லை. இந்த நூற்றாண்டிலும் நகைச்சுவையாக எழுதுபவர்களை அறிவி ஜீவிகள் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. நகைச்சுவை எழுத்துக்களை இலக்கியமாக எடுத்துக் கொள்ளாமல் சர்க்கஸில் உள்ள ஒரு பஃபூனின் சாகசங்களாகக் கருதுகிறார்கள். சர்க்கஸ் பஃபூனிற்கு அநேகமாக எல்லா வித்தைகளும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்.




