பல வருஷங்களுக்கு முன்பு.கல்கி தீபாவளி மலரில் ஆண்டாளின் `வாரணமாயிரம்' பாடல்களை அழகான படங்களுடன் (ஓவியர் ரவி என்று நினைவு) 5 பக்கங்களுக்குப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்ததும் தான் திருமணங்களில் பாடப்படும் இந்தப் பாடல்கள் ஆண்டாள் இயற்றியவை என்று அறிந்ததுடன் அவற்றின் அழகுத் தமிழில் மனதைப் பறி கொடுத்தேன். (திருமணங்களில் வாரணமாயிரம் பாடல்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் புரோகிதர்கள் சொல்வார்கள். ஆகவே பாடலே பாதி புரியாது.)
அதுவரை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஓரளவே ஈடுபாடு இருந்தது. அதன்பின் அதன் மேல் மிகுந்த ஈடுபாடு எனக்கு ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் `மர்ரே' ராஜம் மலிவு பதிப்பாக பல இலக்கியங்களை வெளியிட்டார். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை 4 பாகங்களாக ஒரு மாதம் வெளியிட்டார். நாலு புத்தகங்களின் மொத்த விலை ரூ.4/- (ஆம். அவர் வெளியிட்ட எல்லா புத்தகங்களுக்கும் ஒரே விலை ஒரு ரூபாய் என்று நிர்ணயித்திருந்தார்.) நாலு புத்தகத்தையும் வாங்கினேன்.. படிக்கப் படிக்க தமிழ் மொழியின் அழகும், வீச்சும், ஆழ்வார்களின் கற்பனைத் திறனும், பக்திப் பெருக்கும் என்னை ஆட்கொண்டது. இதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் எங்கள் வீட்டு புத்தக அலமாரியைப் பார்த்துக் கொண்டிருந்த போது நாலாயிரத்தின் ஒரு பாகம் என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்தேன். லேசான மகிழ்ச்சிகரமான அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்த புஸ்தகத்தில் என் அப்பா தன் கையெழுத்தையும் வாங்கிய தேதியையும் போட்டிருந்தார். அந்த தேதி நான் பிறந்த தேதிக்கு அடுத்த நாள்! அத்துடன் இன்னொரு பதிப்பும் இருந்தது. அது 1913ல் பிரசுரிக்கப்பட்டது. கிட்டதட்ட 100 வருஷத்திற்கு முன் பிரசுரிக்கப்பட்ட அதைக் குடும்ப பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறேன்.
. அதன் பிறகு யார் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிரசுரித்தாலும் வாங்க ஆரம்பித்தேன்.
* * *
திருமணம் ஆன பிறகு என் மனைவியும் நானும் நாலாயிரம் படித்தோம் எல்லாப் பாசுரங்களையும் ஒரு தரம் படித்தேன். பிறகு 4000 பாடல்களையும் நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன். (அந்த கால கட்டத்தில் நான் அரசு ஊழியர். ஆதலால் நேரத்திற்குப் பஞ்சமில்லை!) உத்தமூர், அண்ணங்கராச்சாரியார் புத்தகங்களைப் பார்த்து, `ராஜம்' பதிப்பு புத்தகங்களில் பள்ளி பாட புத்தகங்களில் செய்வது போல் கடினமான பதங்களுக்குக் கோடிட்டு அர்த்தமும் எழுதினேன். பிறகு நாங்கள் இருவரும் 4000 பாசுரங்களையும் படித்தோம். எங்கள் குழந்தைக்கு இரண்டு வயது ஆனதுமே திருப்பாவை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம்.
அவளுக்கு இரண்டரை வயது ஆன சமயம் .செங்கல்பட்டிற்கு வந்திருந்த கதாகாலட்சேப விற்பன்னர் எம்பார் விஜயராகவாச்சாரியாரை. என் குழந்தை ஆனந்தியுடன் என் மனைவியும் நானும் அவர் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்று சந்தித்தோம்.
``இவள் எங்கள் பெண்.. திருப்பாவையில் முதல் பத்து பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறோம். அவள் சொல்வதைக் கேட்டு நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்'' என்றோம்.
அப்படியா ? சீமானுக்கு வாழ்த்துகள்!
7 hours ago

































