July 11, 2010

புள்ளிகள்: ராஜ் நாராயண்

 வாங்கு 500 பஸ்!
ஜனதா ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜ் நாராயணன். (இந்திரா காந்தியை தேர்தலில் வென்றவர்) ஏறக்குறைய இன்றைய லாலு பிரசாத்தின் அன்றைய(!) பதிப்பு.

இவர் அமைச்சரான சில மாதங்களுக்குப் பிறகு லண்டன் சென்றார். அங்கு பல சுகாதார நிலையங்களையும், மருத்துவமனைகளையும் பார்வையிட்டார். ஒரு மொபைல் மருத்துவமனை என்று சொல்லக் கூடிய அளவு பல வசதிகளைக் கொண்ட பஸ்கள் இருப்பதைப் பார்த்து அவற்றைப் பற்றி விசாரித்தார். மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப் புறங்களுக்கு இத்தகைய பஸ்கள் ஒரு குறிப்பிட்ட அட்டவணைப்படி போய் வந்தால் கிராம மக்கள் பயன் பெறுவார்களே என்று எண்ணி அந்த மாதிரி பஸ்களை நம் நாட்டிற்கு வாங்கலாம் என்று கருதினார். தன்னுடன் வந்த அதிகாரிகளிடம், ``இந்தியாவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.
அதிகாரி தோராயமாக, ``சுமார் 500 மாவட்டங்கள்'' என்று சொன்னார். ``சரி... அப்படியானால் இந்த மாதிரி மருத்துவ சேவை பஸ்கள் 500க்கு ஆர்டர் கொடுத்து விடுங்கள்'' என்றார் ராஜ்நாராயணன்.

``500 பஸ்ஸா? பட்ஜெட்டில் அவ்வளவு நிதி இருக்காதே'' என்கிற ரீதியில் அதிகாரி சொல்ல, ராஜ்நாராயணன், ``அதெல்லாம் எனக்குத் தெரியாது. உடனே ஆர்டர் கொடுங்கள். ஒதுக்கீடு எப்படியாவது செய்து கொள்ளலாம்'' என்றார்.

அதன்படி பஸ்கள் வாங்கப்பட்டன. (எத்தனை என்பது எனக்கு சரியாகத் தெரியாது.)

அந்த பஸ் டில்லியில் உள்ள லேடி ஹார்டின்ஜ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் பணிபுரிந்த ஒரு டாக்டரை தற்செயலாக சந்தித்தபோது அந்த பஸ்ஸில் தினமும் கிராமங்களுக்குப் போய் வருவதாகச் சொன்னதுடன், ``இந்த பஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  கிராம மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்'' என்றார்.

சில சமயங்களில் இப்படிப்பட்ட அதிரடி உத்தரவுகளை அமைச்சர்கள் துணிவுடன் போட வேண்டும்.

1 comment:

  1. அமைச்சர் ஒருவர் தனது‍ வரையறைக்கு‍ட்பட்ட பணியை சற்று‍ கூடுதல் சுறுசுறுப்புடன் செய்தாலே இன்றைய நாளிதழ்க்ள் அமைச்சர் அதிரடி‍ என செய்தியை வெளியிட்டு‍ அவரை கொண்டாட தயாராக இருக்கின்றன. ஆனால் அப்படி‍ வேலை நடக்கிறதா என்பது‍ .........
    ஜெ.பாபு
    கோவை.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!