April 03, 2010

பாப்ஜி - கடுகு

எந்த விழாவிலும், கூட்டத்திலும், நிகழ்ச்சியிலும் பாப்ஜியின் தலையைப் பார்க்கலாம். மிகப் பெரிய நிகழ்ச்சியிலும் மேடையில் இருப்பார். சாதாரணமாக நாலே பேர் வரக்கூடிய சின்ன கூட்டத்திலும் அவர் இருப்பார். எல்லா சமயத்திலும் ஒரே ஆர்வத்துடன் இயங்குவார்.
     பாப்ஜியின் வேலை என்ன? வருவாய்க்கு என்ன செய்கிறார்? என்று கேட்காதீர்கள். சங்கங்களை நடத்துவதே அவர் வேலை அகில உலக அறிவு ஜீவி வாக்காளர் மன்றம், டிம்பக்டு ஆசிரியர் போராட்ட ஆதரவு குழு, இந்தியா பராகுவே நேசக் கழகம், உலக வறுமை ஒழிப்புக் கமிட்டி, ஆளுக்கொரு வீடு இயக்கம், விதேசிப் பொருள் விலக்க மன்றம், இந்திய கமர்கட் வியாபாரிகள் சம்மேளனம், தொடர்கதை படிப்போர் குரூப், சினிமாவில் நடிக்கும் பிராணிகள் ரசிகர் மன்றம் என்பன போன்ற பல அமைப்புகளில் அவருக்குத் தொடர்பு உண்டு.
அவரது சின்னக் காரில் பின்சீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கான நோட்டீஸ், போஸ்டர், சாவனீர் என்று நிறைய காகிதங்கள் எப்போதும் இருக்கும். பாப்ஜியிடம் மாட்டிக்கொண்டால் தப்புவது கஷ்டம்.
"உங்களைப் பார்க்கத்தான் வருகிறேன். இந்தாருங்கள் இன்விடேஷன். நாளைக்கு ஈவினிங்க் ஜஸ்டிஸ் ஜகன்னாதன் வீட்டில் டிஸ்கஷன். கட்டாயம் வரணும்'' என்பார்.

"என்ன விசேஷம்?''
இதைக் கேட்டு ஹொஹ்ஹோ என்று சிரித்துவிட்டு, "நீர் எந்த உலகில் இருக்கிறீர்கள்? வீடு பற்றி எரிந்தால்கூடக் கவலைப்படாத ஜன்மமா நீங்கள்? கைராளி கப்பல் காணாமல்போய் நாலு மாசம் ஆகிறது. `கைராளி கப்பல் கண்டு பிடிப்புக்குழு' அமைக்கிறோம்.''
"கப்பலைத்தான் கண்டுபிடிக்க முடியலை என்று கவர்மென்டே கைவிரித்துவிட்டதே. நாம் என்ன செய்யமுடியும்?''
"இந்த மாதிரி கேள்வி கேட்டே தான் நம்ம நாடு நாசமாப் போச்சு, குழு அமைக்கிறது தீர்மானம் போட்டுஎல்லா நாட்டு பிரைம் மினிஸ்டர், பிரிசிடெண்ட், ஐ. நா. அதிகாரிகள் எல்லாருக்கும் காபி அனுப்பறது. அபஸ்வரம் ராம்ஜி புரோகிராம் வெச்சு நிதி திரட்டறது''
"வந்து....''
"வந்துமாச்சு, பொந்துமாச்சு.... ஏன்யா பொதுநலச் சேவை என்றால் ஓடறீங்க? நான் வரேன்,'' என்று ஓடிவிடுவார். பாப்ஜியின் கூட்டங்களுக்குப் பத்து பேர் கூட வரமாட்டார்கள். இருந்தாலும் அவர் உற்சாகம் குறையாமல் பேசுவார்!
"வாக்காளர் மன்றத்தை நாம்தான் அமைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள வாக்காளர்களை நாம் தான் எஜுகேட் பண்ணணும். இது நம்முடைய பொறுப்பு... பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது. நம்ப மன்றத்தை ரிஜிஸ்டர் பண்ணிடலாம். இப்போது வந்திருக்கிற ஒன்பது பேரையும் கமிட்டியில் போட்டுடறேன். இன்னும் இரண்டு பேரையும் போட்டு ரிஜிஸ்டர் பண்ணிடலாம். வோட்டர்ஸ் கௌன்சில் ஆஃப் அமெரிக்காவுடன் நாம் இணைந்து கொள்ளலாம். வோட் என்பது விலைமதிப்பற்றது... துவக்க விழாவை தாஜில் அல்லது சோழாவில் வைத்துக்கொள்ளலாம். நூறு ரூபாய் ஒவ்வொருவரும் கொடுக்கவேண்டும். டின்னரும் வைத்துக்கொள்ளலாம்,'' என்றெல்லாம் பேசுவார்.
இவரது அகில இந்திய வாக்காளர் மன்றம்தான் ஏதோ இந்திய வாக்காளர்களை உத்தாரணம் பண்ணப்போவது போல் பேசுவார்.
இப்படித்தான் அகில உலக புதுக்கவிதை ரசிகர் மாநாடு நடத்தினார். மகாநாட்டுப் பந்தலில் சுமார் இரண்டாயிரம் நாற்காலிகள் போட்டார். பத்து இருபதைத் தவிர மற்றவை காலி நாற்காலிகள் தான்! எந்த மகாநாட்டுச் செலவையும் எப்படியாவது சமாளித்து விடுவார். அதில் கொஞ்சம் மிச்சமும் பிடித்துவிடுவார்! இந்த மாதிரி பணத்தில்தான் அவரது வாழ்க்கையும் (காரும்!) ஓடிக் கொண்டிருக்கின்றன.
திடீர் என்று சில வாரங்கள் காணாமல் போய்விட்டு தலையைக் காட்டுவார்.
"கலிபோர்னியா போயிருந்தேன். அமெரிக்கன் வோட்டர்ஸ் கவுன்சில் இன்விடேஷன் அனுப்பியிருந்தாங்க. செலவுக்குப் பணமும் கூடத்தான். போய் வந்தேன்,'' என்பார். இவர் நடத்தும் சங்க்ங்களால் யாருக்கு லாபம் உண்டோ இல்லையோ, இவருக்கு நிச்சயம் உண்டு!
முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் இப்படி யாரையாவது நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டு "கலா ரசிக ரத்தினம்'', "பொதுநலத் தொண்டு சிகரம்'' "தர்ம பரிபாலன திலகம்'' என்பன போன்ற பட்டங்களைக் கொடுத்துக் கௌரவிப்பார். கையோடு புகைப்படத்தையும் செய்திக் குறிப்பையும் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவார்.
மனிதன் ஸ்தாபனங்களை உருவாக்குகிறான் என்பது பாப்ஜியை பொறுத்தவரை பொருந்தாது. ஸ்தாபனங்கள்தான் பாப்ஜியை (பெரிய) மனிதனாக உருவாக்கி  உள்ளன!

4 comments:

  1. நன்னா இருக்கு! உங்கள் எழுத்துக்களை படிக்கும் ஆர்வம் ஒவ்வொரு (கட்டுரை, கதை எப்படி சொல்லணும்னு கூட எனக்கு தெரியலை) அதிகமாகிக் கொண்டே இருக்கு! எப்பவும் என்னால கருத்து சொல்ல முடியலைன்னாலும் படிக்காம இருக்கவே மாட்டேன்! புத்துணர்ச்சி தரும் எழுத்து உங்களோடது! நமஸ்காரங்கள்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி. பாராட்டுகளுக்கு தகுதி உடைவனாக ஆக்கிக் கொள்ள முற்சிக்கிறேன் - கடுகு

    ReplyDelete
  3. சிலர் பிழைப்பு இப்படி

    ReplyDelete
  4. <<>>>
    SNKM அவர்களுக்கு, எல்லா பாராட்டுகளுக்கும் உரியவர்‘கல்கி’ அவர்கள் தான்..அவரது பாதார விந்தங்களில் உங்கள் பாராட்டு மலர்களை சமர்பிக்கிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!