March 07, 2010

உதிரிப்பூ - கல்கியும் சின்ன அண்ணாமலையும்

உங்களில் பலர் சின்ன அண்ணாமலை என்ற பெயரை  கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஐம்பதுகளில் காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர். ராஜாஜயின் சீடர். கல்கியின் பக்தர். நகைச்சுவை மன்னன். புத்தகப் பிரசுரகர்த்தர். 
அவரது தமிழ்ப் பண்ணைப் புத்தகங்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கும். பனகல் பார்க் எதிரில் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தார், அந்த லைப்ரரியில் நான் உறுப்பினனாகி நிறையப் புத்தகங்களைப் படித்தேன். நுழைவாயிலில் ஒரு போர்ட் வைத்து அதில் பொன்மொழிகளை எழுதி வைப்பார். அதைப் படிக்கவே பலர் அங்கு வருவார்கள்.  பொன்மொழிகளை எழுதிக் கொள்வேன். பின்னால் அவைகளை என் கதைகளில் உபயோகி த்து இருக்கிறேன்.
அவருடைய பொதுக்கூட்ட உரைகளைக் கேட்டுகொண்டே இருக்கலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். கண்டறியாதன கண்டேன், சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்று பல புத்தகங்களை எழுதியுள்ளார். அண்ணாமலை என்ற இவர் பெயருக்கு முன்னால்” சின்ன” என்று வார்த்தையைச் சேர்த்து அவர் பெயரை மாற்றியவர்: கல்கி.
=============================

தேவகோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ராஜாஜியை அழைத்திருந்தார்கள். ராஜாஜி வரும் கூட்டத்தில் அவ்ர் முன்னிலையில் பேச வேண்டும் என்று சின்ன அண்ணாமலைக்குப் பயங்கர வேகம்.  யார் யாரையோ பார்த்துக் கெஞ்சி அனுமதி வாங்கி கொண்டார்.துரதிர்ஷடம், ராஜாஜி வருவதற்கு முன்னமேயே பேசச் சொல்லிவிட்டார்கள்.
      ராஜாஜியை பற்றிய ஒரு கட்டுரை ஆனந்த விகடனில் வந்திருந்தது, அதைச் சின்ன அண்ணாமலை மனப்பாடம் செய்து வைத்து இருந்தார் இவர் பேச ஆரம்பித்ததும் நல்ல வேளையாக ராஜாஜி வந்து விட்டார்.  .மனப்பாடம் செய்ததை சின்ன அண்ணாமலை உற்சாகத்துடன்  பேசினார். கிட்டதட்ட வார்த்தைக்கு வார்த்தை,  கூட்டம் கரகோஷம் செய்தது. பேசி முடிந்ததும் ராஜாஜியின் பாதம் தொட்டு வணங்கினார். சின்ன அண்ணாமலையின் தலையைத் தொட்டு “ நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்று சொல்லி  ராஜாஜி ஆசி கூறினார்!

               அசடு வழிந்தபடியே சின்ன அண்ணாமலை அவருக்குப் பின்புறம் போய் உட்கார்ந்து கொண்டார்.. பக்கத்தில் உட்கார்ந்த ஒருவர் இவரை பார்த்து “ரொம்ப நன்றகப் பேசினீர்கள். இதை எல்லாம் எதில் படித்தீர்கள்?” என்று நைஸாகக் கேட்டார்.
             .மென்று முழுங்கி “ ஏன்” என்று .இவர் கேட்டதும், அவர் “ இல்லை. இதை எங்கோ படித்த மாதிரி இருந்தது” என்றார்.

இனிமேல் மறைக்கக்கூடாது என்று “ ஆனந்த விகடன்னில் படித்தேன்: என்று உண்மையைச் சொல்லிவிட்டார் சின்ன அண்ணாமலை.
“ அப்படியா? அதை எழுதியது யார் தெரியுமா?” என்று அவர் கேட்டார்.
“ கல்கி எழுதியது.” - .சி,அ, சொன்னார்,
“உனக்கு கல்கியைத் தெரியுமா” - இது அவர்.
“ தெரியாது. நான் பார்த்தில்லை: - சி.அ.
” சரி.. பார்த்தால் என்ன செய்வீர்கள்?”
”பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து  நமஸ்காரம் பண்ணுவேன்” என்றார் சின்ன அண்ணாமலை/
“ அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணு” எனறார் மற்றவர்.
சின்ன அண்ணாமலைக்குப் புரியவில்லை. “ஏன்?” என்று கேட்டார்.
” ஏன் என்றால், நான்தான் அந்தக்  கல்கி” என்றார் அவர்.
           ஆம். அவர் கல்கியேதான்!

7 comments:

  1. ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம். பெரிய அண்ணாமலை யாரு?

    ReplyDelete
  2. பெரிய அண்ணாமலை” ராஜா சர் அண்ணாமலை செட்டியார்!
    சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை நிறுவி 1932-ல் தோற்றுவித்தவர்.
    தமிழிசைச் சங்கத்தை தோற்றுவித்த செட்டிநாட்டரசர்,

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான பதிவு. ரொம்பவே ரசித்து படித்தேன்.

    ReplyDelete
  4. பெரிய அண்ணாமலை” ராஜா சர் அண்ணாமலை செட்டியார்!
    சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினை நிறுவி 1932-ல் தோற்றுவித்தவர்.
    தமிழிசைச் சங்கத்தை தோற்றுவித்த செட்டிநாட்டரசர்,
    -- இது சரியல்ல. பெரிய அண்ணாமலை என்பவர் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை அவர்கள். மற்றொரு ராஜாஜி பக்தர்.

    ReplyDelete
  5. வழிப்போக்கன் அவர்களுக்கு:
    நாமக்கல் கவிஞருக்கு பணமுடிப்பு வழங்கும் விழா சென்னை கோகலே ஹாலில் நடந்தது. மேடையில் ராஜா சர் இருந்தார். அந்த் நிகழ்ச்சியில் சின்ன அண்ணாமலையும் கலந்து கொண்டார், அவரைப் பேசும்படி கல்கி அழைத்தபோது, அவரைச் “சின்ன” அண்ணாமலை” என்று குறிப்பிட்டார்.

    ReplyDelete
  6. http://devakottai.blogspot.com/search/label

    சின்ன அண்ணாமலை' என்று உங்களுக்கு பெயர் வந்தது ஏன்? என்று பலர்
    கேட்டிருக்கிறார்கள், கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலும் நான் சும்மா
    இருந்தால் அந்தப் பலர்' மீண்டும் கேட்காமல் அம்போ' என்று விட்டு விட்டால்
    என்ன செய்வது? ஆகவே அவசர அவசரமாக அந்த மாபெரும் மர்ம'த்தை
    உடைத்து விடுவதென்று முடிவு செய்துவிட்டேன்.

    என்னுடைய முயற்சியினாலும் பல பெரியோர்களின் உழைப்பினாலும் நாமக்கல்
    கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு பணமுடிப்பு வழங்க 1944ல் ஏற்பாடாயிற்று.
    விழா சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது.

    ராஜாஜி விழாவிற்கு தலைமை வகித்து, கவிஞரிடம் பணமுடிப்பு வழங்கிவிட்டு,
    ஒரு தமிழ் கவிஞரை அவருடைய ஜீவிய காலத்திலேயே சிறப்பித்த பெரும்புகழ்
    நம்ம அண்ணாமலையைச் சேரும்,' என்று சொன்னார். உடனே சபையோர்
    மேடையிலிருந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியாரைப் பார்த்துக் கைதட்டினார்கள்.
    வேறுசிலர் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாக இருந்த
    திருவண்ணாமலை அண்ணாமலை பிள்ளையைப் பார்த்து கைதட்டினார்கள்.

    இதைக் கவனித்த ராஜாஜி அவர்கள், அவரது காலடியில் உட்கார்ந்திருந்த என்னைச்
    சுட்டிகாட்டி, நான் பாராட்டியது நம்ம சின்ன அண்ணாமலையை,' என்று கூறினார்.

    இதுதான் சின்ன அண்ணாமலை' என்று பெயர் வந்த கதை.

    ===

    ராஜாஜி சூட்டிய பெயர். கல்கி என்று தவறாகக் குறிப்பிட்டு விட்டேன். தவ்றுக்கு மன்னிக்கவும்..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!