December 13, 2009

சுப்புடுவும் நானும் - கடுகு

முன் குறிப்பு: இட்லி வடையில்.  “.............நானும்” என்ற தலைப்பில் ஒரு சில கட்டுரைகளை எழுதுவேன் என்று நான் தெரியாத்தனமாக முன்பு  குறிப்பிட்டு இருந்தேன்..அப்போது  கடுகு BLOG   ஆரம்பிக்கப்படவில்லை  சும்மா பார்வைக்கு “ சுப்புடுவும் நானும்” கட்டுரையை. அனுப்பிருந்தேன்  உடனே போட்டு விட்டார்கள். அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் மோத  என்னால் முடியாது..அதை விட சுலபமான காரியம், பின்-லேடனைக் கண்டு பிடிப்பது. ஆகவே சரண்டர் ஆகி விட்டேன்! அப்புறம் அவர்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் ஹிட்.ஆகவே நான் கொடுக்கும் ஹிட்,
ஒரு Flea Bite தான்!)
சுப்புடுவும் நானும் - கடுகு
சுப்புடுவுக்கு சங்கீதத்தில் எவ்வளவு ஆர்வமோ அவ்வளவு ஆர்வம் தமிழ் பத்திரிகைகளின் மீதும் உண்டு. அதிலும்,குமுதம் இதழின் மீது அபார மோகம்.

நான் 1963’ல் டில்லி சென்ற பிறகு குமுதத்தில் தொடர்ந்து கட்டுரைகள், பேட்டிகள் என்று எழுத ஆரம்பித்தேன்.  நான் டில்லிக்குப் புதுசு. என்பதால் அவரைச் சந்திக்கக் கூட சந்தர்ப்பம் வரவில்லை. சுப்புடுவைப் பற்றி யாரிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை.ஆனால் அவர் என்னைக் "கண்டுபிடிக்க" முயற்சி செய்திருக்கிறார்,. அவருடைய உறவினர் சென்னை கிருஷ்ணகான சபா துணைச் செயலர்  வெங்கடேஸ்வரனை விசாரித்திருக்கிறார் என்பது பின்னால் தெரிந்தது.. நான் டில்லி செல்லுமுன்  வெங்கடேஸ்வரனும் நானும் சென்னை ஜி.பி.ஓ.வில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
அவர் சுப்புடுவிடம் பேச்சுவாக்கில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ”அப்படியா? நல்லதாப் போச்சு, அவருக்குக் கடிதம் எழுது. என்னை வந்து பார்க்கச் சொல்,” என்று கேட்டுக் கொண்டார்.
வெங்கடேஸ்வரனிடமிருந்து எனக்குக் கடிதம் வந்ததும் சுப்புடுவிற்கு ஃபோன் செய்து விட்டுப் போய்ப் பார்த்தேன். வேடிக்கை என்ன தெரியுமா? அவர் அலுவலகமும் (நிதி அமைச்சகம்) என் அலுவலகமும் (பி. அண்டி. டைரக்டரேட்) வெகு அருகில் இருந்தன. நடுவே ஒரே ஒரு கட்டடம் தான்!

குமுதம் எழுத்தாளன் என்பதால் எனக்கு தடபுடல் வரவேற்பு. நிறைய பேசினார். "இதோ பாருமய்யா.... உமக்கு மேட்டருக்கு நிறைய ஆலோசனைகளைத் தருகிறேன். உசிதமானவற்றை நீர் எழுதும்" என்றார். கிட்டதட்ட தினந்தோறும் அவரைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டேன்.
டில்லியில் பல முக்கியப் பிரமுகர்களை அவருக்கு நன்றாகத் தெரியும். பல கிசு கிசுக்களும் தெரியும்!. அவரைச் சந்திக்கப் பலர்  அடிக்கடி வருவார்கள். அவர்கள் பேசுவதை நான் கேட்டுக் கோண்டிருப்பேன்.
    .
ஒரு நாள், "அதிருக்கட்டும் ,,, உங்களுக்கு நாடகம் நடிப்பதில் ஆர்வமுண்டா" என்றார்.
”உண்டு சார். .. டைரக்டர் ஸ்ரீதர் என் கிளாஸ்மேட். பள்ளிக்கூட நாட்களில்  நான் ஸ்ரீதரின் குரூப். பிறகு ஜி பி.ஓ.-விலும் நிறைய நாடகங்கள் நடித்திருக்கிறேன். சோ, கே.பாலச்சந்தர் எழுதிய நாடகங்களைப் போட்டிருக்கிறேன் என்று சொன்னதும், என் ரேட்டிங் ரொம்ப உயர்ந்து போய்விட்டது. காரணம் சுப்புடுவின் அபிமானம் மிக்க கலைஞர்கள் அவர்கள்!

டில்லி சௌத் இந்தியன் தியேட்டர்  நாடகங்களை சுப்புடு தான் டைரக்ட் செய்வார். தியேட்டர் நண்பர்களிடம்  ’ஆஹா ஓஹோ’ என்று என்னை அறிமுகம் செய்து வைத்ததுடன் நாடகத்தில் ஒரு நகைச்சுவை கதா பாத்திரத்தையும் கொடுத்தார். சௌத் இந்தியன் தியேட்டர் மூலமாக எனக்கு கிடைத்த நண்பர்கள், டில்லி கணேஷ், விமல் பாலு, டில்லி குமார், பாரதி மணி,, டி.டி. சுந்தரராஜன், ஆடிட்டர்  கிருஷ்ணகுமார் ( பின்னால் மத்திய நிதி அமைச்சகத்தின் ஸ்டேட் மினிஸ்டர் ஆனவர் இவர்) என்று பலர். பின்னால் “பணம் பேசுகிற்து” என்ற தலைப்பில் நான் எழுதிய நாடகத்தை அவர் டைரக்ட் செய்தார்; சௌத் இந்தியன் தியேட்டர் மேடை ஏற்றியது

சுப்புடு அவ்வப்போது "ஏன்யா இவரைப் பற்றி எழுதேன், அவரைப் பற்றி எழுதேன்" என்பார். சிலவற்றில் தாட்சிண்யம் லேசாக இருக்கும். தாட்சிண்யத்துக்கு எழுத எனக்குப் பிடிக்காது. மேலும் குமுதம்  எஸ்.ஏ.பி.அவர்களின் கூர்ந்த  அறிவுத்திறன் எப்படியாவது கண்டுபிடித்துவிடும். என்பது மட்டுமல்ல, அத்துடன் எனக்குப் பெரிதாக ஒரு "வணக்கம்" போட்டு விடுவார் என்பதும் தெரியும். இருந்தாலும் பல நல்ல ஆலோசனைகளை சுப்புடு எனக்குச் சொல்லியிருக்கிறார். பல சமயங்களில் எனக்குப் பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.   

சுப்புடுவுக்கு கர்நாடக இசையின் மேல் அபார ஈடுபாடு உண்டு. கர்நாடக இசையில் நான் பெரிய பூஜ்யம் (இன்னும் பலவற்றிலும் பூஜ்யம்தான். அதை எல்லாம் விவரித்தால் கட்டுரை திசை மாறிவிடும்.) நான் பூஜ்யம் என்று தெரிந்தும் என்னிடம் அவர் மணிக்கணக்கில் பேசி இருக்கிறார்.  புரியாவிட்டாலும் நான் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

டில்லியில் என் அலுவலகத்தின் பின்பக்கக் கட்டடம் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் அலுவலகம். அங்கு தான் பிரபல யு. என். ஐ. கேன்டீன் இருந்தது. தினந்தோறும் அங்கு சுப்புடு வருவார். சுற்றி 10 , 15 பேர் நின்றுகொண்டு அவருடன் அரட்டை அடிப்போம்.  கலகலப்புக்குக் குறைவே இருக்காது. சென்னையிலிருந்து வரும் கலைஞர்கள் அவரைப் பார்க்க வருவார்கள். மணி இரண்டு ஆனதும் சபை கலையும். என்னிடம் "வாய்யா ... சர்தார் படேல் சிலைக்குக் கீழ் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசலாம்" என்பார்.

பார்லிமென்ட் வீதியில் சர்தார் படேல் சிலை இருக்குமிடம் ஒரு பெரிய டிராபிக் ஐலண்ட்.. அதன் பீடத்தில், உட்கார வசதியாக மேடைகள் உண்டு. அதில்  சுப்புடுவும் நானும் உட்கார்ந்து கொண்டு (”அரே பைய்யா , பசாஸ் பைஸேகோ மூங்க்பலீ தே தோ” என்று கூப்பிட்டு வேர்க்கடலை வாங்குவார்.) வேர்க்கடலையோடு சேர்த்து, பல இசைக் கலைஞர்களையும் டில்லி பிரமுகர்களையும் 10,20 நிமிஷங்கள் மெல்லுவோம்.  சுமார் 15 வருஷம் அரட்டை விவர்ங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை!

இந்த காலகட்டத்தில் அவர் சென்னைக்கு டிசம்பர் சீசனில் வந்து விமரிசனங்கள் எழுத ஆரம்பித்தார். விகடனிலும் எழுதினார்.

குமுதத்தில் தன் பெயர் வரவேண்டும், தன் படம் வரவேண்டும் தன்னைப் பற்றி ஒரு குறிப்பாவது வரவேண்டும் என்ற பேரவா அவருக்கு உண்டு. எல்லாவற்றிற்கு மேலும் எஸ்.ஏ.பி  அவர்களைப் பார்த்துப் பேசவும் பயங்கர ஆசை. (நான் சென்னை வந்தபோதெல்லாம் எஸ் ஏ. பி  அவர்களைப் பார்த்துவிட்டுப் போவேன். அந்த சந்திப்பைப் பற்றிய விவரங்களை அவ்ரிடம் சொல்வதுண்டு.) பின்னால் அவர் படம், கட்டுரை எல்லாம் குமுத்தில் வந்தன.

ஒரு சமயம் டிசம்பரில் அவர் சென்னை வந்த சமயம் நானும் சென்னை வந்திருந்தேன்.. "சுப்புடுவைக் கதிருக்கு எழுதச் சொல்லுங்களேன்" என்றார் சாவி.

”ஏற்கனவே விகடனில் எழுதுகிறார். கதிரிலும் எழுதுவது சரியாக இருக்காது. என்பார். கச்சேரிகளின் ஹைலைட்ஸ்களை துணுக்காக எழுதச் சொல்லலாம் விமரிசனங்களாக எழுதினால் சில சமயம் மிக மிக நீண்ட கட்டுரைகளாக எழுதி விடுகிறார்” என்றேன். “ நீங்களே அவரைக் கேட்டு எழுதி விடுங்களேன்” என்று சாவி சொன்னார். சுப்புடு டில்லி திரும்பியதும் அவர் சொன்ன தகவல்களை எழுதி அனுப்பினேன். யார் பெயரும் போடாமல் கட்டுரைகள் பிரசுரமாயின. அவைகளுக்கு நல்ல வரவேற்பு. கிடைத்தது.

பின்னால் சாவி அவரை முழுமையாகக் கபளீகரம் செய்து கொண்டார்.  கதிரில் அவரே எழுதினார். டில்லியிலிருந்து கட்டுரைகளை அனுப்புமுன் எனக்குக் காட்டுவார். ஏதாவது திருத்தம் சொன்னால் “நீயே அதை எழுதி விடு: என்பார்.(ஏதோ சுப்புடுவுக்காக நான்தான் விமரிசன்ம் எழுதினேன் என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். என் பங்கு ஒரு விழுக்காடு தான்!)

ஹார்மோனியம் வாசிப்பதில் அவர் மன்னன். டில்லியில் பல நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் ஹார்மோனியம் வாசித்திருக்கிறார்.  யார் வெளிநாடு போனாலும் “ யமஹா கீ போர்ட் வாங்கி வரும்படி கேட்பார். அந்த காலத்தில் வாங்கி வருவது சற்று கஷ்டமான் காரியம். டாலர் பஞ்சம். கஸ்டம்ஸ் கெடுபிடி. ஆகவே எல்லாரும் சாக்லேட்தான் வாங்கி வருவார்கள். அவர் காலமாவதற்குச் சில வருஷங்களுக்கு முன்பு ஒன்றை வாங்கி விட்டார்.
*   *      *     *         *             *
அவர் நோய்வாய்ப் பட்டிருந்த சமயம். ஏதோ ஒரு பத்திரிகையில் சுப்புடுவின் உடல் நிலை பற்றி செய்தி வந்திருந்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்கள், செய்தியைப் பார்த்தும், சுப்புடுவைப் பார்க்க அவர் வீட்டுக்கே போய் விட்டார். காலனிவாசிகளுக்கு ஒரே வியப்பு!

கலாமிடம் சுப்புடு சொன்னாரம்:”நீங்கள் என்னை வந்து பார்த்ததுக்கு மிக்க நனறி... உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். நான் காலமானதும். ராஷ்டிரபதி பவன் மொகல் கார்டனிலிருந்து ஒரு ரோஜாப்பூவை எடுத்து வந்து என் உடல் மீது நீங்கள் வைக்க வேண்டும்.”

அதன்படியே, சுப்புடு காலமானத் தகவல் கிடைத்தும், கலாம் அவர்கள் ரோஜாப் பூவுடன் வந்தார்.

சந்தேகமில்லாமல் சுப்புடு ஒரு அசாதாரண விமரிசகர்தான்!
சந்தேகமில்லாமல் கலாம் அவர்கள் ஒரு அசாதாரண குடியரசுத் தலவர்தான்!

6 comments:

  1. இந்த மாதிரி விஷயங்கள் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், சுவையாகவும், பிரமிப்பாகவும் இருக்கு.

    virutcham

    ReplyDelete
  2. திரு விருட்சம்: என் பதிவுகளில் இது மாதிரி தகவல்களைத் தொடர்ந்து தர எண்ணியுள்ளேன். அதிருக்கட்டும், டிசம்பரில் போட்ட பதிவை இவ்வளவு நாள் கழித்துதானா பார்த்தீர்கள்?

    ReplyDelete
  3. நான் சில நாட்களாகத் தான் உங்கள் பதிவுகள் பக்கம் வர ஆரம்பித்து இருக்கிறேன். இப்போதெல்லாம் தின ஒரு கடுகு என்று உள்ளே வந்து ஏதாவது படித்து விட்டு முடிந்த வரை பின்னூட்டம் இடவும்முயல்கிறேன்.

    http://www.virutcham.com

    ReplyDelete
  4. நன்றி. பின்னூட்டங்களில் பாராட்டுகள் மட்டும் போடவேண்டும் என்று நான் எதிர் பார்க்கவில்லை.
    எனகக்குப் பல நூறு விஷய்னககளில் ஆர்வம் உண்டு. எனக்குப் பிடித்தது எல்லாம் உங்களுக்குப் பிடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆகவே உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. அன்புள்ள பாலகுருநாதன் அவர்களுக்கு,
    மிக்க நன்றி.உங்கள் மனமுவந்த பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தந்தது. முடிந்தால் உங்கள் ஈ மெயில் விவரங்கல் எனக்குத் தெரிவியுங்கள். அதை நான் பிரசுரிக்க மாட்டேன். நீங்கள் ஆர்ட்டிஸ்ட் என்பதால் கேட்கிறேன். நான் ஒரு அரை குறை ஓவியன். - கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!