December 25, 2009

திக்குத் தெரியாத டில்லியிலே!


டில்லிக்குப் போன முதல் தினம் குளிர் நடுக்கியது. சாயங்காலம் நாலு மணிக்குச் சூரியன் போர்த்திக் கொண்டு ஓடிவிட்டதால், குளிர் ஒருபடி அதிகமாயிற்று. எழு மணிக்குச் சாப்பிட்டு விட்டு, படுக்கைக்குள் புகுந்தேன். எவ்வளவு போர்த்திக் கொண்டாலும் குளிர் எப்படியோ உள்ளே புகுந்து வந்து தாக்கியது. (இப்படி மனிதர்களைத் தொல்லைப்படுத்தும்   வித்தையை டில்லி குளிருக்குக் கற்றுக் கொடுத்த குரு, சைதாப்பேட்டை கொசுவாகத்தான் இருக்க வேண்டும்!)

குளிர் காரணமாகத் தூக்கம் வரவில்லை. வெளியே வீதியில் சந்தடி அடங்கவில்லை. இந்தக் குளிரில்  வீட்டிற்கு வெளியே போகிறவர்களுக்கு இருப்பது எருமைத் தோலா (டில்லி எருமை) என்று எண்ணிக் கொண்டே ஒரு மாதிரி தூங்கிப் போனேன்.
காலையில் கண் விழித்த போது எனக்கு இரண்டு ஆச்சரியங்கள்! எப்போது நான் மரவட்டை ஆனேன்?

ஆமாம். குளிரில் ஒரு ஸ்பிரிங் போன்று சுருண்டு இருந்தேன். மணியைப் பார்த்தேன். ஒன்பதரை."என்னப்பா இவ்வளவு நாழியாகி விட்டதா? சூரிய வெளிச்சமே வரவில்லையே?'' என்றேன்.வாரி சுருட்டிக் கொண்டு  எழுந்து. கொதிக்கும் வெந்நீரில் குளித்தேன். "வெந்நீர் பட்ட இடமெல்லாம் ஜில்லென்று இருந்ததடி' என்று பாரதியார் பாணியில் எழுதலாம். 

December 17, 2009

அன்புள்ள டில்லி- ஒரு சின்ன முன்னுரை

.    சென்னை ஜி.பி. ஓ.வின்  LIFE AND PART- டாக நான் இருந்த சமயம் - வருஷம் 1962- என் உயர் அதிகாரி என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்: டில்லிக்கு டெபுடேஷனில் அனுப்ப உன் பெயரைச் சிபாரிசு செய்திருக்கிறேன்.”     ’’:என்னது. டில்லியா? என்னால் சமாளிக்க முடியுமா? ” என்ற பயம் தோன்றவில்லை. காரணம், அன்று நான் இளங்கன்று.
   டில்லிக்கு வந்தேன். சுமார் 21 வருஷம் கழித்து அரசாங்க வேலையை உதறி விட்டுச் சென்னைக்கு வந்தேன்.
    டில்லியில் 21 வருடங்களில் எனக்குக் கிடைத்தவை ஏராளமான அனுபவங்கள், அரிய அறிமுகங்கள், நட்புகள், சில ஏமாற்றங்கள், பல புதிய பாடங்கள். இவை யாவும் என்னைச் செதுக்கி, செம்மைப்படுத்தி சில உயரங்களைத் தொடவைத்தன என்பது உண்மை.
    அந்த 21 வருட வாழ்க்கையை ‘சாவி’ இதழில் தொடர் கட்டுரையாக எழுதினேன் .இப்போது படித்தபோதும் அவை சுவையாக இருப்பதுபோல் (!) தோன்றியது. அதிலிருந்து பிட்டு பிட்டு இங்கு  வைக்க நினைத்து இருக்கிறேன். வெல்லப் பிட்டு மாதிரி சுவையாக இருக்கும் என்றும் நம்புகிறேன். ((நம்பிக்கைத்தானே வாழ்க்கை என்று எழுதப் போவதில்லை!!)


அன்புள்ள டில்லி! ---1 அகஸ்தியன்

1962’ம் வருஷம் டிசம்பர் மாதம் 10’ம் தேதி ஜி.டி.யில் நான் டில்லிக்குப் பயணமானேன் (டிக்கட் 35 ரூபாய்). 1984’ம் வருஷம் டிசம்பர் மாதம் 10’ந் தேதி ஜி.டி.யில் சென்னைக்குப் பயணமானேன்  (டிக்கட் முதல் வகுப்புக்கு 450 ரூபாய்). டில்லிக்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்கு வந்துவிட்டேன். அரசாங்கப் பணியிலிருந்து முன்னதாக ஓய்வு பெற்று -- அவர்கள் துரத்துவதற்கு முன்பு நாமாக ஓய்வு பெறுவது நல்லதாயிற்றே - வந்துவிட்டேன். இந்த இடைப்பட்ட 21 வருஷங்களில் டில்லியில் ஏனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பலதரப்பட்டவை. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற பெரிய புள்ளிகள் சிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் ஏதோ அரசாங்க ரகசியங்களையோ கிசுகிசுக்களையோ சொல்லப் போகிறேன் எனறு-÷ ஏதிர்பார்க்காதீர்கள். இவை ஓரளவு எனக்குத் தெரியும் என்றாலும், கூறப் போவதில்லை. பின்னால் எப்போதாவது ஏன் சுயசரிதையில்--(ஆமாம்! சொல்லவில்லை என்று பின்னால் கோபித்துக் கொள்ளாதீர்கள். இப்போதே எச்சரித்து விட்டேன். அப்படியொரு அறுவை உங்களைத் தாக்கக் கூடும்!)--எழுதுவேன்.

சூட் போட்ட போர்ட்டர்
அந்த பயங்கரக் குளிர்காலை வேளையில் டில்லியில் முதன் முதலில் கம்பளி ஸ்வெட்டரோ, போர்வையோ இல்லாமல் வெறும் வேட்டி சட்டையுடன் இறங்கியபோது பல் கிடுகிடு ஏன்று நடுங்கியது. தடபுடலாகக்  கோட்டும் ஸ்வெட்டரும் பாண்ட்டும் போட்ட  ஒரு சர்தார்  போர்ட்டர் அனாயாசமாக ஏன் பெட்டிகளைத் தூக்கி வெளியே கொண்டு வைத்தார். ஒரு ரூபாய் நோட்டை நீட்டினேன். (அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் நோட்டும் இருந்தது. அதற்கு மதிப்பும் இருந்தது.) அவர் என்னவோ சொன்னார். புரியவில்லை. ஆனால் பார்த்த பார்வை புரிந்தது!. நான் பேசாமல் 5  ரூபாயைக் கொடுத்தேன்.

December 14, 2009

சாவியும் நானும் - கடுகு
புது டில்லி ரயில்வே ஸ்டேஷனில் எழுத்தாளர் சுந்தாவும் நானும் ஜி.டி. எக்ஸ்பிரஸை வரவேற்கக் காத்திருக்கிறோம். வருஷம் 1968.. ரயிலில் வரப்போகிறவர் எழுத்தாளர் சாவி. அவரை முதன் முதலாகச் சந்திக்கப் போகிறேன். அப்போது தான் சில மாதங்களுக்கு முன்பிலிருந்து தினமணிக் கதிரில் தொடர்ந்து எழுதத் துவங்கி இருந்தேன். (தினமணி கதிரில் எழுத ஆரம்பித்தது ஓரு தனிக்கதை. அதை விவரித்தால் சுயப்பிரதாபமாக இருக்கும். ஆகவே தவிர்க்கிறேன்.)

ரயிலில் இருந்து சாவி இறங்கியதும், அவரிடம் சுந்தா என்னை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு சகஜமான புன்னகையுடன் "ஹலோ” சொல்லியபடி எனக்குக் கைகொடுத்தார்.



கைகொடுத்தவர்
நாற்பது வருஷம் கழித்து இந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது என் மனதில் நெகிழ்ச்சி எற்படுகிறது. அன்று மட்டுமல்ல, பின்னால் அடுத்த முப்பது வருஷங்களுக்கு மேலாக எனக்குப் பலவிதத்தில் கைகொடுத்து, எழுத்துலகில் என் தகுதிக்கு மீறிய உயரத்தில் என்னை வைத்துவிட்டார்.

சாவி நல்ல நகைச் சுவை எழுத்தாளர். அதைவிட நல்ல நகைச்சுவைப் பேச்சாளர். அதைவிட மிக நல்ல நகைச்சுவை ரசிகர்.

"அடடா.... என்னமாய் எழுதி இருக்கிறார் சும்மா கல கல என்று! எப்படி ஓடுகின்றது நடை!” என்று பாராட்டி ரசிப்பார்.

அவர் புதுமை விரும்பி. அதனால் குமுதம் செய்யும் புதுமைகளை ரசிப்பதுடன், அதுமாதிரி புதுமைகளைக் கதிரிலும் செய்ய விரும்பினார். நானும் ஏராளமான புதுமைகளுக்கு ஐடியா கொடுத்தேன். அவற்றை அவர் உடனுக்குடன் செயல்படுத்தி வந்தார். (என் புதுமைகளில் எண்பது பங்கு உமியும், இருபது பங்கு அவலும் இருந்தன என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறேன்.)

குமுதத்தில் ஒருத்தர் எழுதிவிட்டால் போதும், அவரை எப்படியாவது கதிரில் பிடித்துப் போடவேண்டும் என்று பரபரப்பார். நானும் 1963-லிருந்து குமுதத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்ததால் 1968-ல் என்னை தினமணி கதிரில் வளைத்துப் போட்டார்.

December 13, 2009

சுப்புடுவும் நானும் - கடுகு

முன் குறிப்பு: இட்லி வடையில்.  “.............நானும்” என்ற தலைப்பில் ஒரு சில கட்டுரைகளை எழுதுவேன் என்று நான் தெரியாத்தனமாக முன்பு  குறிப்பிட்டு இருந்தேன்..அப்போது  கடுகு BLOG   ஆரம்பிக்கப்படவில்லை  சும்மா பார்வைக்கு “ சுப்புடுவும் நானும்” கட்டுரையை. அனுப்பிருந்தேன்  உடனே போட்டு விட்டார்கள். அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் மோத  என்னால் முடியாது..அதை விட சுலபமான காரியம், பின்-லேடனைக் கண்டு பிடிப்பது. ஆகவே சரண்டர் ஆகி விட்டேன்! அப்புறம் அவர்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் ஹிட்.ஆகவே நான் கொடுக்கும் ஹிட்,
ஒரு Flea Bite தான்!)
சுப்புடுவும் நானும் - கடுகு
சுப்புடுவுக்கு சங்கீதத்தில் எவ்வளவு ஆர்வமோ அவ்வளவு ஆர்வம் தமிழ் பத்திரிகைகளின் மீதும் உண்டு. அதிலும்,குமுதம் இதழின் மீது அபார மோகம்.

நான் 1963’ல் டில்லி சென்ற பிறகு குமுதத்தில் தொடர்ந்து கட்டுரைகள், பேட்டிகள் என்று எழுத ஆரம்பித்தேன்.  நான் டில்லிக்குப் புதுசு. என்பதால் அவரைச் சந்திக்கக் கூட சந்தர்ப்பம் வரவில்லை. சுப்புடுவைப் பற்றி யாரிடம் கேட்பது என்று கூட தெரியவில்லை.ஆனால் அவர் என்னைக் "கண்டுபிடிக்க" முயற்சி செய்திருக்கிறார்,. அவருடைய உறவினர் சென்னை கிருஷ்ணகான சபா துணைச் செயலர்  வெங்கடேஸ்வரனை விசாரித்திருக்கிறார் என்பது பின்னால் தெரிந்தது.. நான் டில்லி செல்லுமுன்  வெங்கடேஸ்வரனும் நானும் சென்னை ஜி.பி.ஓ.வில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.
அவர் சுப்புடுவிடம் பேச்சுவாக்கில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ”அப்படியா? நல்லதாப் போச்சு, அவருக்குக் கடிதம் எழுது. என்னை வந்து பார்க்கச் சொல்,” என்று கேட்டுக் கொண்டார்.

December 12, 2009

அத்தை -- கடுகு

வக்கீல் வேதாந்தத்தின் வீடும் குடும்பமும் வாழ்க்கையும் ஒரு சின்ன உலகம் என்றால் அந்த உலகத்தை சுழல வைக்கும் அச்சு: அத்தை!




வக்கீலின்குடும்ப த்தோடு ஒன்றிவிட்ட இத்மா அத்தை. வக்கீலின் வீட்டில் புரளும் லட்சங்களும் மிதமிஞ்சிக் கிடக்கும் சொகுசுப் பொருள்களும் அத்தைக்கு லட்சியமில்லை. அந்த குடும்ப த்தில் உள்ள ஒவ்வொரு வருடைய சந்தோஷமும் மனசந்துஷ்டியும் தான் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பொம்மைக் கலியாணம் மாதிரிஏழாவது வயதில் அத்தைக்கு (அந்த வயதில் அலமேலு) கலியாணம் நடந்து ஒன்பதாவது வயதில் தாலியை இழந்தாள். அதற்கு  முன்பு பெற்றோர்களையும் இழந்தாள். எதிர் காலம் இருண்டு போய் விட்டது என்று உணரக் கூடத் தெரியாத வயதில் வெகு தூரத்து உறவினரான வேதாந்தத்தின் தந்தை அவளை வீட்டோடு  சகோதரி மாதிரி  வைத்துக் கொண்டார்.
வேதாந்தம் வளர்ந்து பெரிய வக்கீலாகி குடியும் குடித்தனமாக வசதியுடன் வாழத் துவங்கியபோதும் அலமேலுவைத் தன் வீட்டோடு வைத்துக் கொண்டார். விதவைக்கோலம் என்கிற அலங்கோலம் எதையும் செய்துகொள்ள விடவில்லை!

December 09, 2009

இது என் ராஜ்ஜியம்!

நான் கடுகு. இது என் ராஜ்ஜியம்.

எனக்கு 77 வயது ஆகிறது ( ஆஹா, இது பெரிய சாதனைதான் என்று நீங்கள்
கேலியாகச் சொல்வது கேட்கிறது.)
குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என்று பல பத்திரிகைகளில் அகஸ்தியன், கடுகு என்ற பெயர்களிலும், வேறு பல புனைப் பெயர்களிலும் 40 ப்ளஸ் வருஷங்களாக எழுதி வ்ருகிறேன்.

அமரர் கல்கி அவர்களின் பக்தன்.
எழுத்தாளர் தேவன் அறக்கட்டளை எனக்கு விருது தந்து என்னைக் கௌரவப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய விளம்பர நிறுவனத்தில் காப்பிரைட்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.
என் எழுத்துகள் எட்டு புத்தகங்களாக வந்துள்ளன. கைவசம் இன்னும் மேட்டர் இருக்கிறது. பார்க்கலாம், யாராவது ஐயோ பாவம் பப்ளிஷர் அகப்படாமலா போவார்! நம்பிக்கைதானே வாழ்க்கை!
என் மனைவி கமலாவும், நானும் சுமார் ஒரு வருஷம் உழைத்து, நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பதம் பிரித்து, பெரிய எழுத்தில் 848 பக்க புத்தகமாக கணினியில் அடித்து, பேஜ்மேக்கரில் வடிவமைத்து 2006’ல் போட்டோம். (கமலாவும் கணினியில் புகுந்து விளையாடுவார்!) இப்போது -2009ல்- நான்காவது பதிப்பு வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)

தொடர்ந்து படியுங்கள். இன்சோம்னியா இருந்தால் பறந்து போய்விடும்!)

நண்பர் கடுகு

 எழுதியவர்: ரா.கி. ரங்கராஜன் (குமுதம் ஜாம்பவான்!)
                   சுவையாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் இன்று நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் ‘கடுகு’ என்ற என் நண்பர் பி.எஸ். ரங்கநாதன். இவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாளையொட்டி எல்லா நண்பர்களுமாக சேர்ந்து விழா நடத்தினார்கள் சென்ற வாரம்.
சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிருந்து தமிழ் நாட்டின் மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டு பிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன்.
டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. ‘அரே டெல்லி வாலா’ என்ற தலைப்பில் சின்னஞ்சிறு துணுக்குகளை முதலில் எழுதத் தொடங்கினார். அமெரிக்க ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது.